Saturday, November 19, 2011

90 விழுக்காடு பொழுது போக்கு அம்சங்கள் (2)


ஊடகம் பற்றி பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு

முதலில்  எல்லா ஊடகத்தினரையும் பற்றி நான் அறிக்கை வெளியிடவில்லை. பெரும்பான்மையானவர்களைப் பற்றித்தான் கூறினேன். நான் மிகுந்த மரியாதை வைத்துள்ள ஊடகத்தினர் பலர் உள்ளனர். எனவே, ஊடகத்தினர் அனைவர் மீதும் ஒரே மாதிரி சாயம் பூசவில்லை என்று விளக்கிக் கூற நான் விரும்புகிறேன். இரண்டாவதாக, இந்த பெரும்பான்மையினர் கல்வி அறிவற்ற வர்கள் என்றோ, படிப்பறிவற்றவர்கள் என்றோ நான் கூறவில்லை.

நான் கூறியதை வேண்டுமென்றே திரித்துக் கூறப்பட்டதாகும் இது. கல்வியறிவற்ற என்ற சொல்லை நான் பயன்படுத்தவே இல்லை. பெரும் பான்மையினர் குறைந்த அளவு நுண்ணறிவு படைத்தவர்கள் என்று நான் கூறினேன். ஒருவர் பி.ஏ., அல்லது எம்.ஏ., தேர்ச்சி பெற்றிருந் தாலும், அவர் குறைந்த அளவு நுண் ணறிவு பெற்றிருக் கக்கூடும்.

ஊடகத்தின் மீது கடுமையான நட வடிக்கை எடுப்பதை நான் ஆதரிக்க வில்லை என்பதை எனது கட்டுரை களிலும், பேச்சுக்களிலும், தொலைக் காட்சி நேர்காணல்களிலும் நான் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறேன்.

கலந்து பேசுதல்

ஒரு ஜனநாயக நாட்டில், பிரச்சினை கள் சாதாரணமாக கலந்து பேசுவதன் மூலமும், ஒருவரை ஒருவர் மன நிறை வடையச் செய்வதன் மூலமும் தீர்க்கப் படுகின்றன. கடுமையான நடவடிக்கை களை விட இந்த நடைமுறையைத்தான் நான் ஆதரிக்கிறேன்.  ஒரு தொலைக் காட்சி சேவையோ அல்லது செய்தி யிதழோ ஏதேனும் தவறு செய்தால், அதற்குப் பொறுப்பான நபரை நேரில் அழைத்து அவர்கள் செய்ததில் எது சரியல்ல என்பதை பொறுமையுடன் விளக்குவதையே நான் விரும்புகிறேன்.

90 விழுக்காட்டுக்கும் மேலான வழக்கு களில் இது மட்டுமே போதுமானது என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன். தவறு செய்பவர்களில் 90 விழுக்காட்டினரைத் திருத்தி அவர்களை நல்லவர்களாக ஆக்க முடியும் என்பதை உறுதியாக நான் நம்புகிறேன்.

மிகவும் அசாதாரணமான வழக்கு களில் மட்டும், 5 முதல் 10 விழுக்காட்டு வழக்குகளில், கடுமையான நடவடிக்கை கள் தேவைப்படுவதாக இருக்கும். அதுவும்  திரும்பத் திரும்பப் பயன்படுத் திய ஜனநாயக நடைமுறை தோல்வி யடைந்த பிறகும், தவறு செய்தவர் திருத்த முடியாதவர் என்பது மெய்ப்பிக் கப்பட்ட பிறகும்தான்  இத்தகைய கடுமை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்.

இவ்வாறு நான் கூறியதும் திரித்துக் கூறப்பட்டு, நாட்டில் நெருக்கடி நிலையை அறிவிக்க நான் விரும்புவது போன்ற தவறான எண்ணம் உருவாக்கப்பட்டு விட்டது.  ஒரு சர்வாதிகாரியைப் போன்று என்னைக் காட்டும் கார்டூன்களையும் சில செய்தியிதழ்கள் வெளியிட்டன. சுதந்திரத்துக்காக எப்போதுமே என்னை நானே அர்ப்பணித்துக் கொண் டவன் நான் என்பதுதான் உண்மை.

இதற்குச் சான்றுகளாக விளங்குபவை உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன் றத்திலும் எனது தீர்ப்புகளேயாகும். குடிமக்களின் சுதந்திரத்தைப் பாது காப்பவர்கள்தான் நீதிபதிகள் என் பதையும், இந்த சுதந்திரங்களை அவர்கள் நிலைநாட்டவில்லை என்றால் தங்கள் கடமையிலிருந்து அவர்கள் தவறியவர் களாக ஆகிவிடுவார்கள் என்பதையும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள் ளேன். என்றாலும், சுதந்திரம் என்பது  தான் விரும்புவதை எல்லாம் செய்வதற்கு அளிக்கப்படும் உரிமம் என்று பொருள் அளிப்பது அல்ல. அனைத்து சுதந்திரங் களும், பொதுநலன் மீதான அக்கறை மற்றும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வது என்பது போன்ற  நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவைதான்.

இப்போது சுயகட்டுப்பாடு பற்றி நாம் பேசலாம்.

மின்னணு ஊடகத்தைக் கட்டுப்படுத் தும் அதிகாரம் கொண்ட அமைப்பு எதுவும் இப்போது இல்லை. இந்திய பிரஸ் கவுன்சில் அச்சு ஊடகங்களை மட்டுமே கட்டுப் படுத்தும் அதிகாரம் கொண்டது. பத்திரிகை தர்மத்தை மீறும் சில வழக்குகளில் கூட கண்டனம் அல்லது எச்சரிக்கை என்ற அளவில் மட்டுமே தண்டனை அளிக்க முடியும். (1) மின்னணு ஊடகத்தையும் பிரஸ் கவுன்சிலின் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காகவும், (2) பிரஸ் கவுன்சிலுக்குக் கூடுதல் அதி காரங்கள் அளிக்கவும், பிரஸ் கவுன்சில் சட்டத்திற்கு போதுமான திருத்தங்களைக் கொண்டு வரும்படி கேட்டு பிரதமருக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.

மின்னணு ஊடகங்களில் எதிர்ப்பு

பிரஸ் கவுன்சிலின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் தாங்கள் கொண்டு வரப்படுவதற்கு மின்னணு ஊடகம் பலமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுயகட்டுப்பாட்டுடன் தாங்கள் நடந்து கொள்ள அனுமதிக் கப்பட வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் கூட இது போன்ற முழுமையான உரிமை ஏதுமில்லை. அவர்களின் தவறுகளுக்காக நாடாளு மன்றத்தால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்.

வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வர்கள். அவர்கள் ஒழுக்கக் கேடான செயலுக்கு அவர்களது உரிமத்தை அது ரத்து செய்யலாம் அல்லது இடைநீக்கம் செய்யலாம். இந்திய மருத்துவக் கவுன்சில் கட்டுப்பாட்டின் கீழ் மருத்துவர்கள் வருகின்றனர். அதுவும் அவர்களது உரிமத்தை ரத்து செய்யலாம் அல்லது இடை நீக்கம் செய்யலாம். கணக்குத் தணிக்கையாளர்களின் நிலையும் இதுவே தான்.

அப்படி இருக்கும்போது எந்த ஒரு கட்டுப்பாட்டு அமைப்பின் கீழும் வருவதற்கு மின்னணு ஊடகம் வருவதற்கு தயங்கு கிறது? ஏன் இந்த இரட்டை நிலை? பிரஸ் கவுன்சிலின்  (ஏனென்றால் தற்போதுள்ள அதன் தலைவர் கெட்டநோக்கம் படைத் தவர் அல்லது விரும்பத்தாகதவர் என்ப தால்) கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கு அவர்கள் விரும்பவில்லை என்றால்,  பின் எந்த அதிகார அமைப்பின் கீழ் வருவதற்கு அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை செய்தி ஒளி/ஒலி பரப்பு சங்கமும், ஒளி/ஒலி பரப்பு ஆசிரியர்கள் சங்கமும் தெரிவிக்க வேண்டும்.

உத்தேசிக்கப்பட்டுள்ள லோக் பாலின் கட்டுப்பாட்டின் கீழ் வர அவர்கள் விரும்புகிறார்களா? இந்தக் கேள்வியைத் தொடர்ந்து நான் பல செய்தி இதழ்களிலும் எழுப்பியிருக்கிறேன். ஆனால் என் கேள்விக்குக் கிடைத்த பதில் எல்லாம் ஒளி/ஒலி பரப்பு சங்கமும், ஒளி/ஒலி பரப்பு ஆசிரியர்கள் சங்கமும்  சாதிக்கும் பலத்த  மவுனம் அல்லது பொறுப்பற்ற கேள்வி என்று கூறி அதற்கு பதிலளிக்காமல் ஒதுக்குவதுமே ஆகும்.

செய்திச் சேவைகளும் தொலைக்காட்சிகளும்

நமது பொதுமக்களின் பெரும் பகுதி யினர் மீது மிகுந்த செல்வாக்கை ஏற் படுத்த இயன்றவை தொலைக்காட்சி செய்திச் சேவைகளும், நிகழ்ச்சிகளும். எனவே, பொதுமக்களுக்குப் பதில் சொல்ல தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங் களுக்கும் கடமை உள்ளது என்பதே எனது கருத்து.

சுயகட்டுப்பாடு என்பதை மட்டுமே தொலைக்காட்சி அமைப்புகள் வலியுறுத்து வார்களானால், அதே நியாயத்தின் அடிப்படையில், லோக் பால் அமைப்பின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வரப்படுவ தற்கு பதிலாக அரசியல்வாதிகள், அதி காரிகள், மற்றும் இதரப் பணியாளர்களுக் கும் இத்தகைய சுயகட்டுப்பாட்டு உரிமை வழங்கப்பட வேண்டும்.

தங்களைத் தவிர வேறு எவரும் தங்களைக் கட்டுப்படுத்தக் கூடாத அளவுக்கு தாங்கள் புனிதமான வர்கள் என்று தொலைக்காட்சி ஊடகம் நினைத்துக் கொண்டிருக்கிறதா? அப்படி யானால், ராடியே ஒளிநாடா போன்ற கட்டணம் செலுத்திப் பெறப்பட்ட செய்தி களை என்ன என்று சொல்வது? துறவிகள் செய்யும் வேலையா அது?

உண்மையைக் கூறுவதானால், சுய கட்டுப்பாடு என்று எது ஒன்றுமே இல்லை. அது ஒரு  முரண்பட்ட - துன்பம், இன்பம் - வெற்றி, தோல்வி - என்பது போன்ற சொல்லடுக்கேயாகும். ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்தான். தொலைக்காட்சி ஊடகத்தினரும் அத் தகையவர்களே; விலக்கானவர்கள் அல்ல.

நன்றி: தி ஹிந்து 16.11.2011 தமிழில்: த.க.பாலகிருட்டினன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...