Monday, November 21, 2011

பெரியார் உழைத்ததெல்லாம் ஒன்றே ஒன்றுக்குத்தான் அதுதான் சமத்துவம் (சிங்கப்பூர், 13.11.2011)



சிங்கப்பூர், நவ. 20- சிங்கப்பூரில் பெரியார் கண்ட வாழ்வியல் விழா 13.11.2011 அன்று நடைபெற்றது. இவ்விழா செய்தியின் முதல் பகுதி நேற்றைய (19.1.2011) விடுதலையில் வெளியானது. அதன் தொடர்ச்சி இன்றைய விடுதலையில் வெளியிடப்படுகிறது. விழாவில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
சுப.வீரபாண்டியன் உரை தொடர்ச்சி
நான் புரட்சிக்கவிஞரின் - நாம் எல்லோரும் அறிந்திருக்கிற பாடலை எண்ணிப் பார்க்கிறேன். பூட்டிய இரும்புக் கூட்டின் கதவுகள் திறந்தன. படிக்கிற போதே எனக்கு சந்தேகம் வந்து பூட்டிய இரும்புக் கூட்டின் கதவை திறந்தால் சிறுத்தை தானாய் வெளியில் வராதா? கவிஞர் போய் வெளியில் நின்று, சிறுத் தையே வெளியில் வா என்று அழைக்க வேண்டுமா? என்று ஒரு சந்தேகம் அழைக்க வேண்டி இருந்தது. காரணம், பிரெஞ்சு புரட்சியை அறிந்தவர்கள். அறிவார்கள். அந்த பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்டு உள்ளே இருந்த கைதிகளையெல்லாம் புரட்சியாளர்கள் வெளியில் அழைத்துக் கொண்டு வந்தார்கள். 10 ஆண்டுகளாய் இருட்டறையில் கிடந்தவர்கள் அவர்கள், அப்படி கை பிடித்து வெளியே அழைத்து வந்த போது அவர்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை உலகத்தை பார்த்தவர். ஆனால்,  ஒரு சில நொடிகளில் அவர்களால் அந்த வெளிச்சத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இருட்டிலேயே பத்தாண்டு காலம் வாழ்ந்த அவர்கள் வெளிச்சத்தை பார்த்து மீண்டும் உள்ளே ஓடினர் என்றுதானே பிரெஞ்சு புரட்சி வரலாறு நமக்கு சொல்லுகிறது. எனவே, கால காலமாக பூட்டப்பட்டு கிடந்த அந்த மக்களை வெளியில் வா என்று அழைக்க வேண்டியிருந்தது. ஏறத்தாழ அப்படி அந்நிய மண்ணின் ஆட்சிலேயே  700 ஆண்டுகாலம் வாழ்ந்து பழகி விட்ட ஒருமண்.  அடிமைத்தனம் ஊறி கிடக்கிறது.
இன்னொரு பக்கம் பார்த்தால், சமூக அடிமைத்தனம் எப்போது தொடங்கிற்று. சங்க காலத்திலேயே அதன் தலை தெரிகிறது. பல்லவர்கள் காலத்தில் முழுக்க முழுக்க இது வேருன்றுகிறது. யுவான்சுவாங் என்று சீன தூதுவர் தன்னுடைய நூலில் எழுதுகிறார், ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்னால் நான் குறிப்பிடுகிறேன். அவர் எழுதுகிறார் நான் இந்தியாவுக்கு போய் அங்கு தமிழ்நாடு என்கிற பகுதிக்கு போகிற போது மூன்று ஊர்களில் ஏறத்தாழ 5000 மாணவர்கள் சமஸ்கிருதம் என்கிற மொழியை அங்கிருந்த மாணவர்கள் கற்றுக் கொண்டிருந்தார்கள். 1500 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மூன்று ஊர்களையும் அவர் குறிப்பிடுகிறார். ஒன்று சென்னையிலே இருக்கிற திருவொற்றியூர், இன்னொன்று காஞ்சிபுரம், மற்றொன்று இன்றைக்கு புதுவையிலே இருக்கின்ற பாகூர். இந்த மூன்று ஊர்களில் மட்டும் 1500 ஆண்டு களுக்கு முன்பு 5000 மாணவர்கள் சமஸ் கிருதம் மொழியை கற்றுக் கொண் டிருந்தார்கள் என்றால், எத்தனை வேகமாக சமஸ்கிருதம் பரவிக் கொண்டிருந்தது என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். பல்லவர்களின் கல்வெட்டுகளில் தொடக்கத்தில் முழுக்க முழுக்க வேறு வேறு மொழிகளிலேயே கிரந்த மொழியிலே, சமஸ்கிருத மொழியிலே இருந்தது. அவர்களுடைய இறுதிக் காலங்களில்தான் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் இருந்தது. எனவே, பல்லவர்களின் ஆட்சி என்பது அந்நிய மொழி என்று மட்டுமில்லாமல் பின்னாலே வந்த பிற்கால சோழர்கள், பிற்கால பாண்டியர்களின் ஆட்சியிலே கூட, அந்நிய பண்பாடுதான் தலை தூக்கி நின்று தமிழ்வேந்தர்களின் ஆட்சி வேண்டுமானால் 14ஆம் நூற்றாண் டின் தொடக்கம் வரை இருந்திருக்கலாம். ஆனால் அவர்களின் ஆட்சியிலும் அந்நிய பண்பாடுதான் தலைதூக்கி நின்றது. ராஜராஜ சோழன் மிகுந்த மதிப்போடு ஒரு தமிழ் வேந்தன் என்று மார்க்சிய பார்வையில் தவறு என்பதும் இல்லை. அன்றைக்கு 60 அடி, 70 அடிக்கு மேல் கோபுரங்கள் இல்லாத நிலையில் 216அடிக்கு ஒரு கோபுரத்தைக் கட்டினான். நாடு முழுவதும் பாதி பகுதி தமிழனின் ஆட்சி என்று அறிவித்தானே, கலைகளை சிற்பத்தை வளர்த்தெடுத்தான், அந்த கோடி சாம்ராஜி யத்தை, பேரரசனை நன்றியோடு நாம் பார்க்கிறோம். ஆனால், அதே ராஜராஜ சோழன் காலத்திலேதான் ஜாதிகள் வேர் பிடித்தன. அதே ராஜராஜசோழன் காலத்தி லேதான் எங்கள் பாட்டிகளுக்கும் பாட்டி களின் கால்களில் சலங்கை கட்டி அங்கே கோவில்களில் தேவதாசிகள் என்று ஏற்ற பட்டனர். எனவே, அந்தக்காலம் என்று அந்நியப் பண்பாடு. எனவே, வெள்ளைக் காரன் வருவதற்கு  முன்பே, அரசியல் மாற்றங்கள் நிகழ்வதற்கு முன்பே, சமூக மாற்றங்கள் வேரூன்றத் தொடங்கி அன் றைக்கே, அரசியல் அடிமைத்தனத்தின் ஆண்டுகள் 700 என்றால், சமூக அடிமைத் தனத்தின் ஆண்டுகள் 1500 மேலாக இருந்தது பெரியார் பிறக்கிறார்.
கவனமாக பெரியாரின் பார்வை
இந்த சூழ்நிலையிலேதான்பெரியார் பார்க்கிறார். இந்த இரண்டு பண்பாடுகளுக் கிடையிலே ஒரு முரண்பாடு இருக்கிறது. அந்த முரண்பாடுகளைத்தான் விடுதலை போராட்டம் என்று உயர்த்திக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கவனமாக பெரி யாரின் பார்வை. யாராவது சுதந்திர நாளை துக்க நாள் என்று சொல்லியிருக்கிறார் களா? எதற்காகச் சொன்னார் என்றால், அவர் சொன்னார். ஜெனரல் டயர் போகிறார். பட்டேல் வருகிறார். என்ன வித்தியாசம் என்று கேட்டார் (கைதட்டல்).
அய்யாவின் பார்வை இது. அண்ணா அவர்கள் சமாதானம் சொன்னார் போகட்டும், இருவரில் ஒருவன் தொலை கிறான் இல்லையா? என்றார். இது அண்ணா வின் சமாதானம். எனவே, யார்  போகிறார். யார் வருகிறார். பெரியார் சொன்னார் சாதி கைமாற்றப்படுவதில் இவ்வளவு சந்தோ சமா? விலங்கு அப்படியே இருக்கிறது.
விலங்குகள் அப்படியே இருக்கின்றன. சாதியை கை மாற்றுவதில், அப்படியென்ன மகிழ்ச்சி உங்களுக்கு என்று கேட்டார். எனவே, அந்த சிந்தனையோடுதான் பெரியார் இந்த போராட்டம் எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்தார். விடுதலைப் போராட்டம் இருக்கட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், புதிய பண்பாட்டை உருவாக்குகிற பண்பாட்டு போராட்டம் தேவை. அதுதான் பெரியாரின் பார்வை. எந்த போராட்டத்தை  முன்னெடுக்க வேண்டும் என்பதை பெரியார் தெளிவாக சிந்தித்தார். ஏனென்றால் இதே அடிமைத் தனத்தை வைத்துக்கொண்டு, இதே மூடநம்பிக்கையை வைத்துக்கொண்டு, இதே சாதியை வைத்துக்கொண்டு, இதே ஆணாதிக்கத்தை வைத்துக்கொண்டு அவர் இருந்தால் என்ன? நாம் இருந்தால் என்ன? இவற்றைக் களையாத வரை நாம் பெறப் போகிற சுதந்திரம் சுதந்திரமாக இருக்காது என்கிற எண்ணத்தில்தான் அந்தக் கோட்பாட்டை பெரியார் முன்னெடுத்தார். அப்போது, அதை எடுக்கிற நேரத்தில் பெரியாரை கலகக்காரர் என்றுதான் சொன்னார்கள். அவரே சொன்னார். நான் அழிவு வேலைக்காரன்தான்.
லெனின் சொன்ன ரகசியம்
காரணம், நேற்று ஆசிரியர் அவர்கள் சொன்னதுபோல, புதர்க்காடுகளை அழிக் காமல் பூங்காக்களை உருவாக்க முடியாது. புதர்க்காடுகளை  அழித்த அழிவு  வேலைக் காரர். நாம் குறித்துக்கொள்ள வேண்டும். என்றைக்கும், இருக்கிற புதர்களை அழிக் காமல் இன்னொன்றை உருவாக்க முடி யாது. ஆகையினாலே முதலில், ஒரு அழிவு வேலைக்காரனாகத்தான் அவர் தொடங் கினார்.
ஆகவே, தந்தை பெரியார் அவர்கள் எல்லோருக்கும் நல்லவராக இல்லை. ஒன்றைக் குறித்துக் கொள்ளுங்கள். லெனின் சொன்னார், யார் எல்லோருக்கும் நல்லவ ராக இருக்க முயல்கிறாரோ எந்த அரசு எல்லோருக்கும் நல்ல அரசாக இருக்க முயலுகிறதோ அது எந்த மக்களுக்கும் உண்மையாக இல்லை. என்ற ரகசியத்தை லெனின்தான் உடைத்துச் சொன்னார். (கைதட்டல்).
நான் எண்ணிப் பார்க்கிறேன். தோரா என்று சுருக்கமாக அறியப்பட்ட, 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்காவில் வாழ்ந்த, கவிஞன், எழுத்தாளன், தத்துவ ஆசிரியர் ஹென்றி டேவிட் தோராவின் ஒரு வரியை மேற்கோளாக சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன். வால்டன் என்ற புத்த கத்தில் அந்த வரியை நான் படித்தபோது, நெடுநாள் சிந்திக்க வைத்த அது.
Be above aim, more than morality. Don’t be a good something என்று அவன் எழுதினான். வெறுமனே நல்லவனாக இருக்காதீர்கள் என்றான். Not be a simply good. Be good for something. சில பேரை நாம் இன்றைக்கும் சொல்லுகிறோம். புகை பிடிக்க மாட்டார், மது அருந்த மாட்டார். நல்லா இருக்கட்டும். அதனால், நாட்டுக்கு என்ன பயன். அவர் நல்லவர்தான் நாம் மறுக்கவில்லை.Aim above morality  என்று அவர் சொன்னபோது, எனக்குப் புரிகிறது. இவர் நல்லவர்தான். அதனால் என்ன பயன் என்று கேட்டார். நாம் இன்னமும் கூட நல்லவர் களை தவறாக அடையாளம் காட்டுகி றோம். பிள்ளைகளுக்கு, இதோ இவர் இருக்கிறாரே இவர் ரொம்பவும் நல்லவர். இவர், தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார். பல இடங்களில் நான் சொல்லி யிருக்கிறேன். அவர்தான் கெட்டவர் என்று.
இனத்திற்காக நல்லவனாக
யார் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறார்களோ, அவர்கள் தன்னலக்கரர்கள் என்று பொருள். தான் உண்டு, தன்மொழி யின்றி தான் உண்டு தன் இனம் உண்டு, தானுண்டு தன்சமூகம் இன்றி என்று எவன் இருக்கிறானோ அவனே நல்லவன். Be not simply good வெறுமனே நல்லவனாக இருக்காதீர்கள். Be good for something ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நல்லவனாக இருங்கள். குறிப்பிட்ட இணத் திற்காக நல்லவனாக இருங்கள். குறிப்பிட்ட நோக்கத்திற்காக நல்லவனாக இருங்கள் என்கிற அந்த தோராவின் வாசகத்திற்கு என்ன பொருள். பெரியாரின் வாழ்க்கையை நாம் படிக்கிற போது அது புரியும்.
அவர் வெறுமனே நல்லவராக இருந்த தில்லை. அவர் பல இடங்களில் பலருக்கு கெட்டவனாகத்தான் இருந்திருக்கிறார். அவரே சொல்கிறார்.
எல்லோரும் தலைவர் அல்ல
எனக்கு அறிவாளிகள் எல்லாம் வேண் டாம். தனியாக நீ சிந்தித்துகொள். நான் சிந்திப்பதை செயல்படுத்துவதற்கு யார் தயாராக இருக்கிறீர்களோ, வாருங்கள். என்னை சர்வாதிகாரி என்று சொல்வார்கள். இது ஓரளவுக்கு சர்வாதிகாரம்தான். அப்படி சர்வாதிகாரம் இல்லாமல் ஒரு இயக்கத்தை நடத்த முடியாது. ஒரு இயக்கத்திற்கு ஒருவர்தான் தலைவராக இருக்க முடியுமே தவிர எல்லோரும் தலைவராக இருக்க முடியாது. எங்கள் ஊரில் பல கட்சிகள் இருக்கின்றன. எல்லோரும் தலைவர்கள் (கைதட்டல்). ஆனால், பெரியார் சொன்ன இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் சொன்னார்.
உள்ளே வருவதற்கு முன் என்னிடம் ஆயிரம் கேள்விகள் கேள். வந்ததற்குப்பிறகு வேலை செய். பல பேர் உள்ளே வந்து கேள்விதான் கேட்கிறான். வேலையை செய்ய மாட்டேங்கிறான். உள்ளே வந்த பிறகு வேலையை செய். அய்யாவைப் போல ஜனநாயகத்தை அனுமதித்தவர் உண்டா? வேறு எந்தக் கூட்டத்திலாவது நேரிடை யாயப் போய், அவர் பேசுவதற்கு எதிராக ஒருவர் கேள்வி கேட்க முடியுமா?  ஆசிரியர் அவர்களுக்கு தெரியும். அவர்கள் எல்லோ ரும் கூடவே இருந்தார்கள். அய்யா பேசுகிற போதே கேள்விகள் வந்து கொண்டு இருக்கும். தாள்களில். சில குதர்க்கமான கேள்விகள் வரும். எல்லா கேள்விகளுக்கும் அவர் பொறுமையாய் விடை சொல்வார். காரணம், மக்களுக்கு விடை சொல்வதற்கா கத்தான் நான் வந்திருக்கிறேன். குழப்பத் திலிருப்பவர்களுக்கு உங்களுக்கு தெளி வூட்டு வதற்குத்தான் அவர் தெருவுக்கு வந்தார்.
என் தந்தையார் காரைக்குடி இராம.சுப் பையா அவர்கள் 1930 லிருந்து பெரியா ருக்குத் தொண்டராக இருந்தவர். அவர் ஒரு நிகழ்ச்சியை எங்களிடம் சொன்னார். புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது. பெரியார் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிற போது கேள்விகள் துண்டுத்தாள்களிலே வரும். அய்யாவிடம் நாங்கள் படித்து விடுவோம். அய்யா, கேள்விகளை படித்து விட்டு, விடை சொல்வார். அந்த கேள்வி களை அய்யா படித்துவிடுவார் என்பது தெரிந்து வேண்டுமென்றே அவரை இழிவு படுத்த வேண்டுமென்று நினைத்து அதில் எந்தக் கேள்வியும் எழுதாமல் நான் ஒரு முட்டாள் என்று மட்டும் எழுதி,  அந்தத் துண்டுத்தாளை கொடுத்திருக்கிறான். இவர்களும், பார்க்காமலேயே அய்யா விடம் கொடுத்துவிட்டார்கள். அவன் என்ன நினைத்தான் என்றால், நான் ஒரு முட்டாள் என்று பெரியார் ஒலிவாங் கியிலே படிப்பார் என்று நினைத்தான். எடுத்தார். அடுத்ததாக ஒலி வாங்கியிலே சொன்னார். யாரோ ஒரு நண்பர் தன் பேரை மட்டும் எழுதியிருக்கிறார். கேள்வி எதுவும் எழுதலே (கைதட்டல்)
எவ்வளவு புத்திக் கூர்மையும், பண் பாடும் என்று பார்த்தீர்களா? பெரியாரின் கட்சி எங்கே இருக்கிறது தெரியுமா? இன் றைக்கும் நான் சொல்வேன். சிங்கப்பூரிலே அல்ல. இந்தியாவிலே நான் சொல்வன். நூற்றுக்கு 99 பேர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். நாங்கள் நாட்டிலும் சிறுபான்மை. பல பேர் வீட்டிலும் சிறு பான்மை. ஆனால் நூற்றுக்கு 99 பேர் ஏற்காத கருத்தைச் சொல்லி நூற்றுக்கு 90 பேருக்கு தலைவராக இருந்தவர் தந்தை பெரியார் ஒருவர்தான். அய்யா திண்ணப்பர் பெரியார் கருத்தை ஏற்றுக்கொண்டவர். மேடைக்கு வந்தார். அவருக்கு கடவுள் பக்தி உண்டு. திண்ணப்பனாரின் முன்னோடி களை நமது அன்பழகனார் அவர்கள் மேடையிலே படித்துக்காட்டினார்.
திரு.வி.கவுக்கும், பெரியாருக்கும் இருந்த நெருக்கத்தை நாம் அறிவோம். நேற்றைக் குத்தான் ஆசிரியர் சொன்னார். சென் னைக்கு வந்தால் பெரியார் திரு.வி.க. வைப் பார்க்காமல் போக மாட்டார். ஈரோட்டில் போய் திரு.வி.க. தங்கியிருக்கிறார். அய்யா, பெரியார் வீட்டில், இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு உண்டு. ஏடுகள் உண்டு. எதிர்தாக்குதல்கள் உண்டு. தன்னுடைய மனைவியார் நாகம்மையார் படத்தைத் திறந்து வைக்க, திரு.வி.க. வைத்தான் அழைக் கிறார். நெருக்கமும் உண்டு. பெரியார் வீட்டில் திரு.வி.க. தங்கியிருக்கிறார்.
அடுத்தநாள் காலையில் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக, திரு.வி.க. போகிறார். குளித்துவிட்டு கரைக்கு வருகிற போது, கரையில் பெரியார் உட்கார்ந்து இருக் கிறார். என்னாங்க காலையில இங்க வந் திருக்கீங்கன்னு கேட்கிறார். அவருக்குத் தெரியும். பெரியார் குளிப்பதற்கு வந்திருக்க மாட்டார் என்று. அய்யா அப்படி யெல்லாம் குளிச்சிட மாட்டாரு. இந்த செய்தியும் எங்களப்பாவின் புத்தகத்தில் இருக்கிறது. எல்லாரும் குற்றாலத்திற்கு போயிருக்கிறார்கள். பெரியார் அப்பாவைக் கூப்பிட்டு, இரா.சுப்பையா ஒரு பலகை எழுதி வைக்கணும்யா என்கிறார். ஏதோ கட்சி சம்பந்தப்பட்டதுன்னு நினைச்சுட்டு அய்யா என்ன எழுதனும் என்று கேட்கிறார். அதற்கு அவர் இங்க வந்து குளிச்சீட்டி களான்னு யாரும் கேட்கக் கூடாதுன்னு எழுதப்பா என்கிறார்.
அப்படிப்பட்ட பெரிய பண்பு
அதுக்கா நாம இங்க வந்தோம்னு கேட்கிறார். எனவே, திரு.வி.க. குளித்து விட்டு திரும்பிய போது, பெரியார் உட்காந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு என்னால் இங்கே உட்காந்திருக்கலையன்று கேட் கிறார். அதற்கு பெரியார் சொல்கிறார். நீங்க இந்த மூட்டையை வீட்டிலேயே விட்டிட்டு வந்தீட்டிங்க. என்கிறார். எந்த மூட்டை தெரியுமா? திரு.வி.க மடியிலே வைத்திருக் கின்ற திருநீற்றுப் பை. உடனே திரு.வி.க. அய்யாவே இதை எடுத்துட்டு நீங்க எதுக்கு வந்தீங்கன்னு, கேட்க, பெரியார் எனக்கு நம்பிக்கையில்லை. குளிச்ச உடனே நீங்க பூசுவீங்களே என்கிறார். அந்தப் பண்பை எப்படி பேணினார்கள் என்பதை நேற் றைக்கு கூட பெரியாரை அடிகளாரும், அடிகளாரைப் பெரியாரும் எப்படி பேணி னார்கள் என்பதை நேற்றைக்கு மும்பை யிலே இருந்து வந்திருந்த, நம்முடைய திராவிடர் கழகத்திலே மிக நெருக்கமாக இருக்கக் கூடிய நண்பர் குமணராசன் அவர்கள், ஒரு செய்தியைச் சொன்னார், குன்றக்குடி அடிகளார் மும்பையிலே இருக்கின்ற தமிழ்ச்சங்கத்திலே உரையாற்ற வந்திருக்கின்றார்.
இரண்டு மூன்று நாள்கள் தொடர்ச்சி யாக நிகழ்ச்சி, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் போய் பார்க்கிறார்கள். அயய் நீங்கள் வருவது திடீரென்று தான் தெரிந்தது. எங்கள் பகுத்தறிவுளார் கழகம் சார்பில் தாராவிலேயே இருக்கின்ற சேரியிலே இருக்கின்ற எங்கள் தோழர்களுக்காக திருக்குறள் பற்றி பெரியார் பற்றி பேச வேண்டும் என்று கேட்கிறார்கள்.
அவங்களை கேட்டிடீங்களான்னு அடி களார் கேட்கிறார். அவங்க நேரமில் லைன்னு சொல்றாங்க, என்று சொன்னதும், சரி பார்க்கலாம், பகுத்தறிவாளர் கழகத் துக்கு நேரம் குடுக்காம நான் வேற எங்க போகப் போறேன். நேரம் தருகிறேன். என்று சொல்லிவிட்டு, அவர்களைக் கேட்கிறார் எத்தனை மணிக்கு முடியும் என்று கேட்கிறார். எட்டு மணிக்கு எல்லாம் முடித்து விடலாம் என்று சொல்கிறார். உடனே குமணராசனை தொடர்பு கொண்டு, 8.30 மணிக்கு உங்க கூட்டத்தை வச்சுகூங்க என்று சொல்லி அப்படியே அடிகளார் பேசினார் என்றால், தந்தை பெரியாரும் வகுப்புரிமை வரலாறும் என்ற தலைப்பில் 10 மணிக்குத் தொடங்கி 12 மணி வரை அடிகளார் பெரியாரைப் பற்றி பேசினார் என்றால், அந்த வரலாற்றை எண்ணிப் பார்க்கின்ற போது அந்த காவிக்குள்ளே ஒளிந்திருந்த ஒரு கருப்புச்சட்டை கருப்புச் சட்டையை மதித்த காவிச்சட்டை அது தான் இரண்டுக்கும் உள்ள நெருக்கம். எதற்காக என்றால், எப்போதுமே, ஒருவ ரைப் பற்றி அல்லது ஒன்றைப் பற்றி அறியா மல் இருப்பதை விட, தவறாக அறிந்து கொண்டிருப்பதுதான் ஆபத்து. தந்தை பெரியார் அளவுக்கு தமிழகத்தில் அறியப் பட்ட தலைவரும் இல்லை, அவர் அளவுக்கு தவறுதலாக அறியப்பட்ட தலைவரும் இல்லை. தந்தை பெரியார் யாரோடோ சண்டை போடுவதற்காக பிறந்தவராக கருதுகிறார்கள். பெரியார் மக்களிடம் சமத்துவம் என்ற ஒன்றைத் தவிர வேறு எதற்காகவும் தன் வாழ்க்கையை அர்ப் பணித்துக் கொள்ளாத மாபெரும் தலைவர்.
பெரியாரைப் பற்றி தவறான செய்திகள்
அவருடைய காலமெலாம் அவர் நெஞ்சில் கனன்றிருந்த கனவு ஒன்றே ஒன்றுதான். சமத்துவம். இப்போது, நாம் தொடங்கிய இடத்துக்கே வருகிறேன். இரண்டு பண்பாடுகளுக்கிடையே ஒரு போராட்டம் கீழ்தளத்தில் நடந்து வந்திருக்கிறது. ஆனால், மேலே பார்த்தால், அது ஒரு விடுதலைப் போராட்டமாக காட்டப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்று பெரியார் நினைத்தாரென்றால், வெள்ளைக் காரனை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைக்கும்கூட தந்தை பெரியாரைப் பற்றி தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. இப்போதும் தமிழ்நாட்டிலே இதற்காகவே சில வார ஏடுகள் நடத்தப்படுகின்றன. ஒரு வார ஏட்டில், இப்போதும், அவதூறுகளை அள்ளி வீசுவதற்காகவே சில கட்டுரைகள் எழுதப்பட்டு வருகின்றன. ஆனால், வெள்ளைக்காரன் இந்த நாட்டைவிட்டு நாளைக்குப் போக வேண்டும் என்று நீங்கள் சொன்னால், இன்றைக்குப் போகவேண்டும் என்று நான் சொல்லுகிறேன். வெள்ளைக் காரன் இங்கு இருக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை. ஆனால், வெள்ளைக் காரனை விட சில கொள் ளைக்காரர்க ளோடு நாம் உடனடியாக போரிட வேண் டியிருக்கிறது. அதற்குக் காரணம் ஆங்கிலேயர்கள் நம் மண்ணைச் சுரண்டியவர்கள். கனிம வளத்தை எடுத்துச் சென்றார்கள். ஆலைகள் தொடங்கப்பட்டபோது முழுக்கமுழுக்க பதிவுபெற்ற இயந்திரங்கள். 16 மணி நேரம் வேலை. 10 வயதிலிருந்து 70 வயது வரைக்கும் வேலைக்கு சேர்க்கப்பட்டார்கள். எனவே, ஒரு கொடூரமான நிருவாகம் அங்கே நடைபெற்றது. ஆனால், அதைத் தாண்டி வெள்ளைக்காரனுக்கு இன்னொரு முகம் இருந்தது.
அவனுக்காகத்தான் அதை செய்தான் என்றாலும், அதில் நமக்கு ஒரு பயன் வந்து சேர்ந்தது. அவன் தொடர் வண்டிகளைக் கொண்டுவந்தான். சாலை களைப் போட்டான் என்பதையும் தாண்டி, மகாத்மா - ஜோதிராவ் பூலே, அண்ணல் அம்பேத்கார், அய்யா பெரியாரும் சொல் வதுபோல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு எல்லாம் அவன் கல்வி தந்தான் என்ற நன்றியுணர்ச்சியை ஒருநாளும் நம்மால் மறுக்கமுடியாது. பள்ளிகளை, மறுபடியும் வெள்ளைக் காரன்தான் தாழ் திறந்தான். யார் இல்லை என்று சொல்லமுடியும். 1936ஆம் ஆண்டு The Public school scheme பொதுக்கல்வி திட்டம் என்ற ஒன்றை உருவாக்கிய நேரத்திலேதான், எல்லோரும் படிக்கலாம் என்ற நிலை வந்தது.  பெரியார் சொன்னார்.நமக்கு அவன் கல்வி தந்திருக் கிறான்.
அவனோடு போர் தொடுப்பதை விட்டுவிட்டு இவனோடு போர்தொடுப் பதுதான் முதலில் தேவை என்று சொன்னார். விடுதலைப்போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த நேரம். சரியாய் சொன்னால், 1885இலே காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டிருந்தாலும்கூட அப்போது விடுதலை கேட்பது காங்கிரஸ் கட்சியின் நோக்கமல்ல. அவர்கள் மும்பை யிலே கூடியபோது நிறைவேற்றிய தீர்மானங் களில் 3ஆவது தீர்மானம், விக்டோரியா மகாராணி நீண்ட நாள் வாழவேண்டும் என்பதும், அதுமட்டுமல்ல இந்தியாவைத் தொடர்ந்து ஆளவேண்டும் என்பதும் 3வது தீர்மானம். எனவே, காங்கிரஸ் கட்சி விடுதலைக்காக எழுந்த இயக்கம் அல்ல. 1905ஆவது, 1906ஆவது ஆண்டுகளுக்கு பிறகு, மெல்ல மெல்ல அந்தப் போராட்டம் கூர்மை பெற்றது. எங்கு பார்த்தாலும், 1857லே நடந்த, சிப்பாய்க் கலகம் என்று எழுதி வைத்த முதல் சுதந்திரப் போர் என்று ஆனால், அதையும் மறுஆய்வு செய்தார்கள். பெரியாரின் சிந்தனையாளர்களும் பெரி யாரும்தான் வரலாற்று ஆசிரியர் கருணா கரன் ஒரு புத்தகத்திலே மிகத் தெளிவாய் கதை எழுதுவார்.
1857 விடுதலைப் போராட்டத்தை மறுபடியும் கவனமாகப் பாருங்கள். அதிலே முக்கியமாக குறிப்பிடப்படுபவர் கள் 2 பேர். ஒருவர் நானா சாகேப், மற் றொருவர் ஜான்சி ராணி, இரண்டு பேரும் எதற்காக அந்தப் போராட்டத்தில் ஈடுபட் டார்கள் அல்லது தங்களை அர்ப்பணித் துக்கொண்டார்கள். அந்த வரலாற்றை கவனமாய்ப் படிக்கிறபோது நமக்குத் தெரியும். நானா சாகிப் பேஷ்வாக்களின் வாரிசுகளிலேயிருந்து வருகிறார்.பேஷ் வாக்கள் மராட்டியத்தில் சிவாஜியை வீழ்த்திவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள். இன்றைக்கும் மும்பைக்குப் போனால், குதிரை மீது அமர்ந்திருக்கும் சிவாஜி சிலைதான் நம்மை வியக்க வைக்கிறது. மராட்டிய சிவாஜி மிகப்பெரிய வியப்பு. சிவாஜியை இன்றைக்கு இருக்கின்ற மதவாத சக்திகள் போற்றுகின்றன. அன்றைக்கு ஜோதிராவ் பூலே போற்றினார். அறிஞர் அண்ணாவும் நாடகத்தின் மூலம் தமிழ கத்திலே அறிமுகப்படுத்தினார். ஆனால், சிவாஜி அறிமுகப்படுத்தியதில் ஒவ்வொரு வருக்கும் ஒரு நோக்கம். அங்கு ஜோதிராவ் பூலே எதற்காக சிவாஜியைப் புகழ்ந்தார் என்றால், இந்த மண்ணின் மைந்தர் அவர், இந்த மராட்டிய மக்களுக்காக வாளெடுத் தவன் என்பதற்காக ஜோதிராவ் பூலே சிவாஜியை முன்னெடுத்தார். அவர் மிகக் கொடூரமான வர்ணாஸ்சிரமத்திற்கு எப்படி உள்ளானான் என்பதை அண்ணாவின் நாடகந்தான் எடுத்துக் கூறியது. சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் இல்லை யென்றால் தமிழகத்தில் இருந்த பலருக்கு மராட்டியத்தின் வரலாறு தெரியாமல் போயிருக்கும். இன்றைக்கும் அந்த நாடகத்தைப் படிக்கிறேன். என்ன வியப்பு தெரியுமா? 10 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த திரைப் படத்தை பார்த்தால் சலிக்கிறது. நான் வியந்து நினைத்தேன். இளங்கோவன் அவர்கள் பேசியபோது அய்யா 80 ஆண்டு களுக்கு முன்னால் பேசிய பேச்சு இன்றைக்கு சலிக்கிறதா?இந்த அரங்கில் இன்றைக்கும், பழைய திரைப்படங்கள் போட்டுக் காட் டினர், இளைய தலைமுறையினர் எத்தனை பேர் பார்ப்பவர்  என்று தெரியாது. ஆனால், வேலைக்காரியும், பராசக்தியும் இன்றைக்கும் இளைஞர்களிடத்தில் போய் சேருகிற ஆற்றல் பெற்ற திரைப்படங்கள். இன் றைக்கு, சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தை இங்கு நடத்தினால் இளை ஞர்கள் முடிகிற வரையில் எழுந்து போக மாட்டார்கள். அப்படிபட்ட வீரியமிக்க உரையாடல்கள். அண்ணா காட்டிய சிவாஜி யார் என்றால் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை வெற்றி பெற்றதற்கு பிறகும்கூட முடிசூட்டிக்கொள்ள முடியா மல் எப்படியெல்லாம் புரோகிதர்களால் தடுக்கப்பட்டான்.
எப்படியெல்லாம் அவமானப்பட்டான். இரண்டு முறை பட்டாபிஷேகம் நடந்தது. அரசின் கஜானா காலியாயிற்று. 1000 பிராமண குடும்பங்களை இந்த நகரத்தில் கொண்டு வந்து ஆறு மாதங் களுக்கு நீ சாப்பாடு போட்டால் உனக்கு பரிகாரம் கிடைக்கும் என்று சொன்னார் கள், என் கதை என்ற புத்தகத்திலே உ.வே.சா. எழுதியிருக்கிறார். வேறு யாரு மல்ல, உ.வே.சாமிநாத அய்யரே எழுதியிருக் கிறார். அவருடைய உத்தமதானபுரம் எப்படி ஏற்பட்டது என்று எழுதியிருக் கிறார். ஒரு பிற்கால சோழ மன்னன் அன்றைக்கு எந்த உணவும் உண்ணக் கூடாது. அவன் உலா வருகிறபோது ஒரு சத்திரத்திலே மதியம் தங்குகிறான். மறதியாக ஒரு வெற்றிலையை மடித்து தாம்பூலம் போட்டு வருகிறார். பக்கத்தில் இருந்து ஒரு புரோகிதர் போடுகிறவரைப் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு, அவர் விழுங்கி முடித்தபிறகு சொல்லுகிறார், இன்று நீ எதையுமே உண்ணக்கூடாது மன்னனே தவறிப்போய்விட்டாயே என்றதும், மன்னன் பதறிப்போகிறான். என்ன செய்வது என்று மன்னன் கேட்கிறான். பரவாயில்லை, பிராயச்சித்தம் இருக்கிறது. 64 பிராமண குடும்பங்களுக்கு நீ இந்தக் கிராமத்தை எழுதிக் கொடுத்துவிட்டால் நீ செய்த பாபம் தீர்ந்துவிடும் என்கிறார்.
ஒரு தாம்பூலத்திற்கு ஒரு ஊரே போச்சு. ஒரு தாம்பூலத்திற்கு ஒரு ஊரை எழுதி வாங்கிச் சென்றான். இதுதான் வரலாறு. எனவே அப்படித்தான் ஆயிரக்கணக்கான குடும்பங்களை கொண்டு வாழவைத்து 6 மாதங்களுக்கு சோறு போடவேண்டும் என்று சொல்லி, கஜானாவெல்லாம் காலியாகி சிவாஜியின் சாம்ராஜ்யம் எப்படி அல்லலுக்குள்ளானது என்பதை அண்ணா காட்டினார். ஆனால், மதவாத சக்திகள் இன்றைக்கும் சிவாஜியை உயர்த்திக் காட்டுவது வேறு நோக்கத்திற்காக, சிவாஜி முகலாய சாம்ராஜ்யத்தை எதிர்த்தார் என்பதற்காக அவரை இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்று காட்டுகிறார்கள்.
ஆளுக்கு ஒரு நோக்கம். ஆனால், அந்த சிவாஜி வீழ்ந்ததற்கு பிறகு, பேஷ்வாக்கள் ஆட்சிக்கு வந்தார்களே? அந்த பேஷ் வாக்கள் எல்லாவற்றையும் இழந்து வெள் ளைக்காரனிடம் சரண் அடைந்தார். அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கப் பட்டது. ஓய்வூதியத்தை வாங்கி வைத்துக் கொண்ட நானாசாகேப் போன்றவர்கள் ஒரு சட்டத்தை எதிர்த்தவர். வெள்ளைக் காரன் ஒரு சட்டத்தை எதிர்த்தார்கள். பிள்ளை இல்லாதவர்கள், வாரிசாக ஒருவரைத் தத்தெடுத்தால், அரசின் அனுமதி பெறாமல் தத்தெடுக்கக் கூடாது. அதில் இவர்கள் செய்ததாலேயே அரசின் சட்டத்தின்படி அனுமதி பெறாமலே தத் தெடுத்தவர்களுக்கு எந்த வாரிசு உரிமையும் கிடையாது என்று அவன் சொன்ன தினாலேயே நானாசாகேப் களத்தில் இறங்கி வெள்ளைக்காரனுக்கு எதிராக நின்றார். இது வரலாறு. இதை யாராலும் மறுக்க முடியாது.
அப்படித்தான் ஜான்சிராணி வயதான ஒருவரை மணந்துகொண்டார். குழந்தை இல்லை. தத்தெடுப்பிற்கு உரிமை கேட்ட போது ஆங்கில அரசாங்கம் கேட்கவில்லை. கோபப்பட்டு ஜான்சி ராசி வெள்ளைக் காரனுக்கு எதிராக வந்தார். இப்போது, நான் மறுபடியும் தோரா சொன்ன வார்த்தையை இன்னொரு விதத்தில் திருப்பி சொல்கிறேன்.
கடந்த 2009ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ஜாமிய இஸ்லாமிய முதியோர் இல்லத்தை பார்வையிட்டு அதன் பணிகளை பாராட்டினார். அதன் தொடர்ச்சியாக 13.11.2011 அன்று நடைபெற்ற பெரியார் கண்ட வாழ்வியல் விழாவில் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் வீ.கலைச்செல்வம் அவர்கள் வழங்கிய 500 சிங்கப்பூர் டாலரை சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் அவர்கள் ஜாமியா இஸ்லாமிய முதியோர் இல்ல நிருவாகி திரு. ஷெரீப் அவர்களிடம் வழங்கினார்.
சமூக நீதிக்காக வீறுகொண்டு எழுங்கள்
வீரம் உயர்ந்தது. ஆனால், வீரம் மட்டுமே தேசப் பற்று ஆகாது. Be not simply brave, Be brave for Social Justice (கைத்தட்டல்) சமூக நீதிக்காக நீங்கள் வீறுகொண்டு எழுங்கள். வெறும் வீரமல்ல. Be not simply brave இது ஒரு வீரம்தான். வீரத்தின் வெளிப்பாடு. ஆனால், வீரத்திற் காக மட்டுமே வீரமல்ல. உங்களின் சொந்த செய்திகளுக்காக வீரமல்ல. ஒரு சமூகநிதிக் காக எவன் ஒருவன் போர்க்களத்தில் வீறுகொண்டு எழுகிறானோ அவனே சரியானவைகளை செய்து முடிக்கிறான். சமூக நீதி என்பது ஒவ்வொருவர் குடும்பத் தில் இருந்தும், ஒவ்வொருவர் வாழ்க்கையில் இருந்தும் வரவேண்டும். சமூக நீதி திடீ ரென்று பொத்தென்று குதித்துவிடாது. வேறு எந்த கட்சியும், எந்த இயக்கமும், செய்யமுடியாத ஒன்றை சுயமரியாதை இயக்கம் செய்தது. மற்ற கட்சிகள் எல்லாம் விலகி வெளியே தெருவில் நின்றன. ஆனால், சுயமரியாதை இயக்கம் ஒவ்வொருவரின் வீட்டிற்குள்ளும் குடும்பத்திற்குள்ளும் வந்து சேர்ந்தது. குழந்தை பிறந்தால் எப்படி பெயர் வைக்க வேண்டும். திருமணம் செய்தால் எப்படி நடத்தவேண்டும். கடைசியாக ஒருவர் இறந்துபோனால் கூட, அவன் நிலையை எப்படி போற்றவேண்டும் என்று வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் சொல்லிக்கொடுத்தது சுயமரியாதை இயக்கம் என்பதினாலேதான்.  அய்யா இறந்துபோய் 38 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த இயக்கம் அசைக்கமுடியாமல் இருக்கிறது. இன்றைக்கும் நீங்கள் பார்க் கலாம். திராவிடர் கழகமும், திராவிடர் இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழ கமும் வளர்ந்து நிற்கிறது என்று சொன் னால், அய்யா அவர்கள் ஒவ்வொரு அசை வையும் குடும்பத்திலிருந்தே நிகழ்த்தினார். நம்முடைய வாழ்கையை செப்பனிட்டார்.
வாழ்வியல் சரிப்படுத்தப்படாமல், வாழ்வியல் நெறிப்படுத்தப்படாமல் சமூக மாற்றம் வந்துவிடாது. சமூகம் என்பது பல்வேறு குடும்பங்களைக் கொண்டது. ஒவ்வொரு குடும்பமும் பல்வேறு மனிதர் களைக் கொண்டது. ஒவ்வொரு மனிதருக் கும் ஒரு வாழ்க்கை முறை இருக்கிறது. அந்த வாழ்க்கை முறையை சரி செய்யாமல் சமூக நீதியை உருவாக்க முடியாது. எனவே, பெரியார் கண்ட வாழ்வியல் என்பது வெறும் வாழ்க்கையில் ஒழுங்கை சொல்லிக்கொடுப்பது அல்ல. ஒழுங்காய் இருப்பது, நல்லவரிடையே இருப்பது சரிதான். ஆனால், நல்லவனாய் இருப்பது; அதற்கு மேலே இன்னொரு சமூக நோக்கத்திற்காக என்பதைச் சொன்னவர் பெரியார். திருமணத்தைப் பற்றிக் கூட அய்யா சொல்லும்போது, இந்த மாதிரி இரண்டு வரியில் வேறு யாரும் சொல்லி யிருக்கிறார்களா என்று தெரியவில்லை. திருமணம் என்பது 2 தனிமனிதர்கள் சம்பந்தப்பட்டது அல்ல. அது ஒரு சமூக வளர்ச்சி சம்பந்தப்பட்டது என்று சொன் னவர் தந்தை பெரியார்தான். எந்த ஒன்றையும் சமூகத்தோடு சேர்த்துப் பார்க்கிற பார்வை பெரியாருக்கு இருந்தது. எனவே, அவர் சொல்லித்தந்த வாழ்வியல் இருக்கிறதே, அது சமூகத்திற்கானது. சமூக நீதிக்கானது, சமூக மேம்பாட்டுக்கானது. அவர் கண்டுபிடித்த வாழ்வியல் கோட் பாடுகள் மிக நுட்பமானவை, தெளிவா னவை, காலத்தை வென்று நிற்பவை. இவ் வாறு சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற் றினார்.
நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். (அவரது உரை முழு மையாக விடுதலை 4ஆம் பக்கத்தில் 17.11.2011 முதல் வெளிவருகிறது). இறுதியாக, பெரியார் சமூக சேவை மன்ற செயலாளர் க.பூபாலன் நன்றி உரையாற்றினார். தமிழர்களின் வரலாற்றை மாற்றியமைத்ததில் தந்தை பெரியாரின் குடிஅரசு, விடுதலை மற்றும் சிங்கப்பூர் தமிழ்முரசு ஆகிய ஏடுகளின் பங்கு முக்கியமானது என்றும், 1940களிலேயே உ.ராமசாமி நாடாரும் (சி.பா.ஆதித்தனாரின் மாமனார்), தமிழவேள் கோ.சாரங்க பாணியும் சிங்கப்பூரிலே விழாக்கள் நடத் தியும், குடிஅரசு, விடுதலை ஏடுகளுக்கு சந்தாக்கள் திரட்டி அளித்துள்ளதையும் குறிப்பிட்டார். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த விடுதலை நாளேட்டிற்கு ஆசிரியராக 50ஆம் ஆண்டில் உலக சாதனை பொறித்து தொண்டாற்றிவரும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
13.11.2011 அன்று சிங்கப்பூரில் நடைபெற்ற பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவரின் உரையை கேட்க திரண்டிருந்தோர் கூட்டத்தின் ஒரு பகுதி

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...