Thursday, October 20, 2011

காங்கிரசாக இருந்தாலும், பி.ஜே.பி.யாக இருந்தாலும் கல்வியை அவர்கள் வசமே வைத்துக்கொள்கின்றனர்


காங்கிரசாக இருந்தாலும், பி.ஜே.பி.யாக இருந்தாலும் கல்வியை அவர்கள் வசமே வைத்துக்கொள்கின்றனர்


டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு

சென்னை, அக். 20-கல்வியை எப்பொழுதுமே காங்கிரஸ் அரசாக இருந்தாலும், பி.ஜே.பி. அரசாக இருந்தாலும் தன் வசமே வைத்துக்கொள்கிறது. அதை கூட்டணிக் கட்சிகளிடம் வழங்குவதில்லை என்று தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் கூறி விளக்கவுரையாற்றினார்.
கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலில் கொண்டு வரக்கோரும் மாபெரும் மாநாடு கருத்தரங்கம் 25.9.2011 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இந்கிழ்ச்சியில் கலந்துகொண்டு டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. ஆற்றிய உரை வருமாறு:
பெரியார்கேள! தாய்மார்களே! இங்கே பேசிய நீதியரசர் அவர்கள் பேசும் பொழுது ஒரு கருத்தைச் சொன்னார்கள்.
இன்டர்நெட்டில் ஆசிரியர் பேட்டிதான் முழுமையாக
நான் இந்த மாநாட்டிற்கு என்று குறிப்புகள் தேடும்பொழுது சில நாட்களுக்கு முன்னாலே விடுதலையிலே வந்த தலையங்கத்தைப் படித்தேன். நான் எடுத்து வைத்திருந்த குறிப்புகள் எல்லாம் அதிலே காணப்பட்டது என்று சொன்னார்கள்.
நான் பத்திரிகைகளில் இதற்கான செய்திகளைத் தேடவில்லை. இது நவீன காலம் என்பதினாலே கம்ப்யூட்டருக்குச் சென்றேன். இன்டர் நெட்டை திறந்தேன். Education should be back brought to state list. என்று கூகுளில் டைப் செய்தேன். ஒரு பட்டியல் வந்தது.
இந்த செய்தி இந்து பத்திரிகையில் 2005ஆம் ஆண்டு வந்தது. ஆகா! இதிலே நிறைய செய்திகள் கிடைக்கும் என்று அதைத் திறந்தேன். அதிலே நமது ஆசிரியர் (கி.வீரமணி) அவர்களுடைய பேட்டி தான் முழுமையாக இருந்தது. (கைதட்டல்). எனவே கல்வி மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருபவர். நம்முடைய ஆசிரியர் அவர்கள். அதற்காக இன்றைக்கு மாநாடும் அவர் நடத்து கிறார்.
எனக்கு இப்பொழுதுள்ள சங்கடம் என்ன வென்றால் பட்டியல் மாற்றம் என்பது சட்ட சம்பந்தப்பட்டது என்று நீதியரசர் உரையாற்றி விட்டார்.
பயனற்ற நாடாளுமன்றம்
கல்வியாளர்கள் இரண்டு பேர் உரையாற்றி விட்டார்கள். பேராசிரியர் நாகநாதன் அவர்கள் சொன்னதைப் போல ஒரு பயனற்ற நாடாளு மன்றத்திலே இன்றைக்கு உறுப்பினராக இருப்பவன். என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஒன்றை நாம் நன்றாகப் பார்க்க வேண்டும். மத்திய அரசாங்கத்திலே 1991லே கல்விக்கு என்று ஒரு அமைச்சர் இருந்தார். கல்வி அமைச்சர் என்று ஒருவர் இருப்பார். Education Ministry Education Minister
என்று ஒருவர் கல்வித்துறைக்கு அமைச்சராக இருப்பார்.
மனிதவள மேம்பாட்டுத்துறை
1991இல் ராஜீவ் காந்தி மறைந்த பின்பு. அந்தத் துறையை uman resources development
மனித வள மேம்பாட்டுத்துறை என்று மாறுதல் செய்தார்கள். இந்த மாறுதலுக்கும் 42ஆவது அரசியல் சட்ட திருத்தத்திற்கும் தொடர்பில்லை.
ஆனால் 42ஆவது அரசியல் சட்டத்திருத்தம் வந்து கல்வி மத்திய அரசாங்கத்திற்குப் போனபிறகு இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் 1976-லிருந்து 1989 வரை அதை சும்மாவே வைத்திருந்தது. அதற்குப் பிறகு எப்படி யாவது இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அதை Human resources development  துறையாக மாற்றியிருக் கின்றார்கள் என்று எனக்குப் பட்டது. ஏன் மாற்றினார்கள்? காரணம் தெரியவில்லை.
தரமான ஒரே சீரான...
பேராசிரியர் அவர்கள் சொல்லும்பொழுது Quality- Education, Uniformity-Education என்றெல்லாம் சொன்னார். பேராசிரியர் அ.இராமசாமி ஏதாவது ஒரு நூலிலிருந்து கருத்துகளை எடுத்திருப்பார் என்று கருதுகின்றேன்.
42ஆம் ஆண்டு அரசியல் சட்ட திருத்தம் இருக் கிறதே அது ஒரு மானாவாரி நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 5 வருடங்கள். எமர்ஜென்சி காலத்தில் வருடம் நீட்டிப்பு செய்தார்கள்.
எமர்ஜென்சியில் அரசியல் அமைப்பு சட்டத் தைப் பயன்படுத்தி கால நீட்டிப்பு செய்தார்கள். அப்பொழுது காங்கிரசுக்கு மிகப்பெரிய பெரும் பான்மை. 1971 தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மை. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் எங்கு இருந்தார்கள்? எல்லாம் மிசாவில் சிறையில் இருந்தார்கள்.
அப்பொழுது எதிர்ப்பே இல்லை. எதிர்ப்பே இல்லாமல் அது குறித்து விவாதிக்காமல், அது குறித்து பேசப்படாமல் 42ஆவது அரசியல் சட்டத்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு திருத்தங்களை செய்தார்கள். அதிலே ஒன்று கல்வி. எனவே ஒரே ஒரு திருத்தம் கல்வியை மட்டும் மாற்றியிருந்தார்களேயானால் Quality Education, Uniformity Education என்று சொல்லலாம் எனக்குத் தெரியவில்லை.
கூட்டணி அமைச்சரவைதான்!
இன்னொன்றையும் நீங்கள் பார்க்க வேண்டும். பத்து ஆண்டுகளாக மத்தியில் கூட்டணி அமைச் சரவைதான் இருக்கிறது. 1996லிருந்து தொடங்கி இன்று வரைக்கும். கூட்டணி அமைச்சரவையில் தி.மு.க. இருக்கிறது. நாங்கள் ஒரு 7,8 போர்ட் ஃபோலியோ கேட்டோம். எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். சாலை எடுத்துக்கொள் ளுங்கள், கப்பல் எடுத்துக் கொள்ளுங்கள். அய்.டி.எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன் னார்கள் எதை வேண்டுமானாலும் கொடுத்து விடுவார்கள். துணை அமைச்சர்கள் இருப்பார்கள். ஒரு நான்கு பேர் அவர்களுக்கு எந்தத்துறையில் வேண்டுமானாலும் துணை அமைச்சர் தருவார்கள்.
ஆனால் Human resources development--க்கு மட்டும் காங்கிரஸ்காரர்களைத் தவிர வேறு எவரும் அந்தத் துறைக்கு அமைச்சராக வர முடியாது. அது அவர்களுடைய கையில்தான் இருக்கும்.
பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தாலும் சரி HRD துறைக்கு மட்டும் கூட்டணிக் கட்சியைச் சார்ந்த வரை அமைச்சராகப் போடுவார்களா? என்றால் போட மாட்டார்கள். அது அவர்களிடம் தான் இருக்கும்.
கூட்டணிக் கட்சிக்கு கல்வித்துறை கிடையாது
காரணம் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் பெரும்பாலான கட்சிகள் மாநில கட்சிகள். எங்கே மாநில உரிமையைக் கோரிடப்போகிறார்கள் என்று நினைக்கிறார்களோ என்னவோ தெரிய வில்லை.
தி.மு.க. வையே நாம் எடுத்துக்கொண்டாலும் கூட, நம்முடைய கவலைவேறாக இருந்தது. கல்வி யைப் பற்றிக் கவலைப்படாத குற்றத்திற்கு நாமும் ஆளாகிறோம். என்று நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதனால்தான் இந்த அவஸ்தை.
நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையிலே ஓராண்டுக்கு முன்னாலே கல்விப்பிரச்சினை என்று வரும்பொழுது அமைச்சர் பேசினார். Quality Education தரமான கல்வி வழங்கவேண்டும். அதற்காக சில சட்டங்களை கொண்டு வருவோம்.
கல்விதான் மேம்படுத்தும்
கல்விதான் இந்த நாட்டை வளர்க்கும். கல்வி தான் இந்த நாட்டை மேம்படுத்தும் என்று என் னென்னவோ வியாக்கியானம் விளக்கமெல்லாம் சொன்னார். இத்தனைக்கும் கபில்சிபல் ஒரு வழக்குரைஞர் வேறு. அழகாகப் பேசுவார். அழகாகச் சொன்னார். நான் எழுந்து  கேட்டேன். தரமான கல்வி என்று நீங்கள் எதைச் சொல்லுகின்றீர்கள்? நான் ஒரு வழியைச் சொல்லித்தருகின்றேன்.
நம்முடைய மாநிலங்களில் கல்வி தரவரிசைப் பட்டியல் இருக்கின்றது. முதல் இடத்திலே இருக்கின்ற மாநிலங்கள் எத்தகைய கல்வியைக் கொடுக்கிறார்களோ அந்தக் கல்வியை பின்னாலே வருகின்ற மாநிலங்களில் நீங்கள் சொல்லித்தரச் சொல்லுங்கள். தரம் ஏறிவிடும் என்று சொன்னேன்.
இதற்குப் பொதுவான சட்டம்வேண்டும் என்று சொன்னார்கள். பொதுவான சட்டம் என்று நீங்கள் உருவாக்கினீர்கள் என்று சொன்னால் கல்வித் தரத்தில் முதலில் இருக்கும் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று  சொன்னேன். எது தரமான கல்வி? ஒரு சமுதாயம் முன்னேறியிருக்கிறது. பல புள்ளி விவரங்களை பேராசிரியர் நாகநாதன் அவர்கள் கூடச் சொன்னார்கள்.
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் தமிழ் நாட்டிலே எந்த அளவுக்கு கல்வியைப் பெற்றிருக் கின்றார்கள். School Dropout   தமிழ்நாட்டில் மிகக் குறைவு. மற்ற இடங்களிலே இல்லை என்று சொன்னார்கள். உண்மைதான்.
இந்தியாவிலே 50 விழுக்காட்டு மக்கள் இந்தி பேசுகிற மாநிலங்களிலே குடியிருக்கின்றார்கள். நாற்பத்து ஏழரை சதவிகித மக்கள் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள். அய்ம்பத் திரண்டு விழுக்காட்டு மக்கள் இதர மொழிகளைப் பேசுகின்றவர்கள்.
இந்திக்கு அடுத்து தெலுங்கு
இந்திக்கு அடுத்த இடத்திலே இருப்பது தெலுங்கு.  பிறகு தமிழ், வங்காளம் என்று இப்படி எல்லாம் இருக்கிறது. இந்த நாற்பத்து ஏழரை சதவிகிதம் இந்தி பேசுகிற மக்களுக்கு இந்திய அரசாங்கம் செலவு செய்கிற பணம் 70 சதவிகிதம்.
நாற்பத்து ஏழரை சதவிகித மக்கள் கொண்ட இந்த பகுதிதான் இந்தியாவில் மிகவும் பிற்படுத் தப்பட்ட பகுதி பிற்பட்ட பகுதி வளர்ச்சி இல்லாத பகுதி. எந்த வளர்ச்சியும் கிடையாது. இவர்களுடைய சுமையையும் சேர்த்து சுமக்க வேண்டிய நிலையிலே நாம் இருக்கின்றோம். இந்தி வேண்டாம் என்று சொல்லுவதற்கு இந்த ஒரு காரணமே போதும்.
இந்திபேசும் மாநிலங்கள் பிற்போக்குத்தனம்
இந்தியைப் படித்தால் எங்கே நாமும் வளராமல் போய்விடுவோம் என்ற அந்தக் காரணமே போதும். அந்த அளவுக்கு இந்தி பேசுகின்ற மாநிலங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையிலே இருக் கின்றன. நாடாளுமன்றத்தில் எதை வேண்டுமா னாலும் செய்யலாம். அது எண்ணிக்கையைப் பொறுத்தது அல்ல. எண்ணங்களைப் பொறுத்தது.
ஒன்றைச் சொல்வேன். 1957ஆம் ஆண்டு தேர்தலிலே இரண்டே இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தி.மு.கழகத்தின் சார்பிலே வெற்றி பெற்றுச் சென்றார்கள். தி.மு.க கழகம் சந்தித்த முதல் தேர்தல் அது. அந்தத் தேர்தலிலே ஈ.வெ.கி.சம்பத் பேசினார். இந்தியை விரும்பாத மாநிலங்களில் திணிக்கக் கூடாது என்று பேசினார். நேரு அப் பொழுது பிரதமர்.
அவர் சொன்னார். இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை இந்தி மொழி அந்த மாநில மக்கள் மீது திணிக்கக்கூடாது என்ற உத்தரவாதத்தைத் தந்தது. சம்பத் அவர்கள் உடனே கடிதம் எழுதினார். இதை சட்ட பூர்வமாக ஆக்க வேண்டும். வாய்ச் சொல் மட்டும் போதாது என்று சொன்னார்.
நான் இந்த நாட்டின் பிரதமர்
நேரு அவருக்கு ஒரு கடுமையான கடிதத்தை எழுதினார். அதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நான் இந்த நாட்டின் பிரதமர். நாடாளுமன்றம் இந்த நாட்டையே நிருவகிக்கின்ற ஒரு மன்றம்.
இந்த நாட்டின் பிரதமராக இருக்கின்ற நான். இந்த நாடாளுமன்றத்தில் வழங்கிய உறுதி மொழியை விட ஒரு பெரிய சட்டம் இருக்க முடியாது என்று கடிதம் எழுதினார். அந்த கடிதம் ஈ.வெ.கி.சம்பத் மகனிடம் இன் றைக்கும் இருக்கிறது. அந்த அளவுக்கு மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்றிய பிரதமராக நேரு இருந்தார். இன்றைக்கு என்ன நிலை? நாடாளுமன்றத்திலே ஜாதிவாரி கணகெடுப்பு முறை வேண்டும் என்று வற்புறுத்தினோம்.
2011இல் சென்சஸிலே ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டுமென்று வலியுறுத்தினோம். பலரும் பேசினார்கள். பி.ஜே.பியைச் சேர்ந்த கோபிநாத் முண்டே பேசினார். முலாயம் சிங் யாதவ் பேசினார். சரத்யாதவ் பேசினார். காங்கிரசிலே இருந்த பலர் பேசினார்கள்.
மிகப்பெரிய விவாதம் நடைபெற்றது. பிரதமர் பதில் சொன்னார். இதை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொன்னார். அதன் பிறகு இது குறித்து விவாதம் அமைச்சரவையிலே நடைபெற்றது.
அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். முதலிலே மக்கள் தொகை கணக்கெடுப்பை முடித்துவிடு வோம். ஜாதி வாரி கணக்கெடுப்பதற்கு என்று தனியாக ஆறுமாத காலம் வைத்து செய்வோம் என்றார்கள். அதையும் நாடாளுமன்றத்திலேதான் சொன்னார்கள். இன்றைக்கு என்னவென்றால் வறுமைக்கோட்டிற்கு கீழே Below poverty line கணக்கெடுக்கும் பொழுது ஜாதி வாரி கணக் கெடுப்பையும் எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.
அன்றைக்கு நேரு நாடாளுமன்றத்திலே சொன்ன பொழுது என்ன சொன்னார். ஒரு நாட்டின் பிரதம ராக இருக்கின்ற நான் இந்த நாட்டை நிருவகிக்கின்ற நாடாளுமன்றத்தில் சொல்லுவதை விட மிகப் பெரிய சட்டம் எதுவும் இல்லை என்று சொன்னார்.
இன்றைக்கு நாடாளுமன்றத்திலே வழங்கப் படுகின்ற உறுதிமொழி கூட காற்றிலே பறந்து போகின்ற நிலை, இன்றைக்கு இருக்கிறதென்றால் டாக்டர் நாகநாதன் அவர்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். நானும் நாடாளுமன்றத்தில் பெருத்த நம்பிக்கையோடு சென்றேன்.
வடவருடைய வெறி
அங்கு நடக்கின்ற ஏமாற்று வேலைகள், தில்லு முல்லுகள் வடவருடைய வெறி, அவர்களுடைய ஆதிக்கம் அச்சமாகத் தான் இருக்கிறது. வளர்ந்த வர்களைக் கண்டால் அவர்களுக்குப் பிடிப்ப தில்லை.
தென் மாநிலங்களத்தவர்களைக் கண்டால் அவர் களுக்குப் பிடிப்பதில்லை. ஒரு வேளை அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளுகிறார்கள். என்றால், வேறு மொழி பேசுகிறவர்களாக இருந்தால் இந்தியையும் சேர்த்து படித்தால் அவர்களை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.
இந்தி பிடிக்காது. என்றால் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. எனவே மொழி வெறி இன்னும் அங்கே தலைதூக்கி நிற்கிறது. அவர்களுக்கு சமூகநீதி பற்றி ஆற்றல் இல்லை. அறிவு இல்லை.
அதனாலே பின்னடைந்திருக்கிறோம் என்கிற உணர்வும் அவர்களுக்கு இல்லை. அந்த
நிலை யிலேதான் இது போன்ற கோரிக்கைகளை அறிவிக்கின்றோம்.
அமைச்சர் அழகாகவும், நிதானமாகவும் பேசுகிறார். நாம் கல்வியிலே முன்னேற வேண்டும். கல்வி ஒன்றுதான் நம்மை காப்பாற்றும் இந்த நாட்டைக் காப்பாற்றக் கூடியது கல்வி ஒன்றுதான். தலைசிறந்த கல்வியை வழங்க வேண்டும். அதனால் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கெல்லாம் அனுமதி கொடுக்க வேண்டும். என்று பேசுவார்.
-(தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...