Thursday, October 20, 2011

புறப்படுங்கள், தோழரே! தோழியரே!!


புறப்படுங்கள், தோழரே! தோழியரே!!

இ. திருமகள்

1950-களில் அரசுப் பணியாளர்கள் விடுதலைப் பத்திரிகையை தன் இல்ல முகவரிக்கு வரவழைத்து படிக்கக்கூட முடியாத நிலை இருந்தது. அன்றைய தோழர்கள் எப்படியெப்படியெல்லாம் விடுதலையை தேடி தேடிச் சென்று படித்தார்கள் தெரியுமா?

அப்படிப் படித்ததன் விளைவுதான், மக்களிடம் விழிப்புணர்வை அடையச் செய்ய முடிந்தது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழர் தலைவரும் விடுதலையின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டதன் விளைவாகத்தான் இன்று எட்டுப் பக்கங்களுடன் மிளிர்கின்றது. இதன் விளைவாக அடைந்த பயன்கள்தான் எத்தனை! எத்தனை!!

இன்று நாம் தலைநிமிர்ந்து நடப்ப தற்கும், தன்மானத்துடன் வாழ்வ தற்கும், பொருளாதாரத்தில் உயர்ந் திருப்பதற்கும் அடித்தளமிட்டது எது? விடுதலை நாளேடு தானே?

பத்து வயதுக்குள்ளேயே படிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கச் செய்த மதத்தை மண்வெட்டியால் வெட்டிப் புதைக்கச் செய்தது அய்யாவின் கொள்கைத் தத்துவங்கள் தானே? அதனை அக்கால மக்களிடம் உணர்த்தியது எது? விடுதலை நாளேடு தானே?

சூத்திரனுக்கு படிப்பறிவு கூடாது என்று எழுதிய மனுதர்ம சாத்திர சாக் கடையில் புழுக்களாக நெளிய இருந்த நம்மைக் காப்பாற்றியது எது? விடுதலை நாளேடு அல்லவா?

பெண்ணுரிமை கூடாது, பெண் ஓர் அடிமை. எங்கும் பேசா மடந்தையாகவும், பிறந்த இடத்தில் தகப்பனுக்கு அடிமை, புகுந்த இடத்தில் கணவனுக்கு அடிமை, கணவன் இறந்துவிட்டால் தான் பெற்ற மகனுக்கு அடிமை, என இறுதி மூச்சு அடங்கும் வரை அடிமையாக இருப்பதே மகளிர்க்கு அழகு என்று சொன்ன வேத சாஸ்திரங்களைக் கொளுத்து, உன் மடத்தனத்தை மாற்றிக் கொள் என்று உணர்த்திட்ட நாளேடு விடுதலை யல்லவா?

பெண் பிறந்தவுடன் கண்ணே! கண்மணியே! பொன்னே! என்று பாராட்டி, சீராட்டி வளர்த்தும், பூ வைத்தும், பொட் டிட்டும், பல வண்ணங்களில் ஆடைகட்டி அழகு பார்த்தும் வளர்த்து, தாலி என்று அழைக்கப்படும் ஒரு முழக்கயிற்றால் ஏற்பட்ட பந்தத்தால் வாழ்வரசி என்றழைத்ததை வாய், தாலி கட்டிய கணவனின் மூச்சடங்கினால்,

பொட்டழித்து, பூவைப் பிடுங்கி, அந்த முழக்கயிற்றையும் அறுத்து, வெள்ளைச் சேலையுடுத்தி, முண்டச்சி, மூளி, கம்மனாட்டி  என்ற பட்டங்களைக் கொடுத்து, மூலையில் உட்கார வைத்து முன்னுக்கு வரவிடாமல் தடுத்து வைத் திருந்த சமுதாயத்தில் உனக்கு மூலை தேவை இல்லை, முன்னேற வெளியில் வா என்று அழைத்தது எது? விடுதலை அல்லவா?

அந்த பெண்களை, வீட்டில் உள்ளோர் வெளியில் செல்லும்போது உன் முகத்தைப் பார்க்கக் கூடாது நல்ல காரியங்கள் நடக்கும் போது நடுவில் வரக் கூடாது என்றிருந்த நிலையினை மாற்றி இன்று பாருலகில் பவனி வருமளவு பாதை அமைத்தது எது? விடுதலையல்லவா?

அந்த விதவைப் பெண்களை தரிசு நிலத்திற்கு ஒப்பிட்ட கபட வேடதாரி காஞ்சி காமகே()டியை மகளிரிடம் மன்னிப்பு கேட்கும்படி ஆளாக்கிய ஏடு எது? விடுதலையல்லவா?

வேதம் படிக்க உரிமையில்லை என்று சொன்ன அந்த கேடியின் கொடும் பாவியை எரித்த வீராங்கனைகளை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஏடு விடுதலையல்லவா?

ஆன்மீகத்தின் பெயரால் பெண்களை வன்கொடுமைகளுக்கு ஆளாக்கிய பிரேமானந்தாவை சட்டத்தின் சம்மட்டி யால் அடித்து சிறையில் தள்ள வைத்தது எது? விடுதலை நாளேடல்லவா?

இவ்வாறு இன்று நாம் சுயமரியாதை யுடன் சுகவாழ்வு காண வித்திட்ட வித்தகர் உருவாக்கிய நாளேட்டினை மென்மேலும் வளர்த்து, ஒவ்வொரு தமிழன் கையிலும் மிளரச் செய்து நம் வருங்கால சமுதாயம் விழிப்படையச் செய்ய வேண்டியது நம் கடமையல்லவா?

கயவர் கூட்டம் நம்மை கடமையாற்ற விடாமல் தடுக்கும்போதும், சுற்றிச் சுற்றி சூறாவளியாகச் சுழன்றடித்து, நாம் கொண்ட இலக்கை அடைய அல்லும் பகலும் அயராது உழைத்து நம் தமிழர் தலைவரை ஊக்குவிக்க புறப்படுங்கள் தோழரே! தோழியரே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...