Monday, October 17, 2011

தேனீக்கள் ஏன் ரீங்காரமிடுகின்றன?


தங்களுக்குள் தகவல் தொடர்பு வைத்துக் கொள்ளவே தேனீக்கள் ரீங்காரமிடுகின்றன.
தங்களின் இயக்கம் அல்லது நடனமாடுதலை தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்வது போல் தங்களின் ரீங்காரத்தையும் தேனீக்கள் அதற்காகவே பயன்படுத்திக் கொள்கின்றன. தேனீக்கள் எழுப்பும் பத்து வேறுபட்ட ஒலிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் சில குறிப்பிட்ட செயல்பாடுகளுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பயன்பாடுகளில் மிகவும் முக்கியமானது தேன் கூட்டைக் குளுமையாக வைத்திருக்க விசிறிவிடுவதாகும். வினாடிக்கு 250 முறை ஒலிக்கும் பலத்த, ஒரே மாதிரியான ஒலி அது. இந்த ஒலியை தேன்கூடே பெருக்குகிறது. ஆபத்தைப் பற்றி சுட்டிக்காட்டவும் தேனீக்கள் மிகப் பலமாக ரீங்காமிடுகின்றன. தேன்கூட்டை நெருங்கிச் செல்லும் எவரும் அவற்றின் ரீங்கார ஒலியில் ஒரு மாற்றம் ஏற்படுவதைக் கண்டிருக்கக் கூடும். பின்னர், ஆபத்து நீங்கிவிட்டது என்பதை உணர்த்தி, தேன்கூட்டை அமைதிப்படுத்த, அவை வினாடிக்கு 500 முறை ஒலி எழுப்புகின்றன.
ராணித் தேனீ குறிப்பாக பலவகையான ஒலிகளை எழுப்ப இயன்றதாகும். ஒரு புதிய ராணித்தேனீ முட்டைகளை அடைகாக்கும்போது, உயர்ந்த ஒலியை எழுப்புகின்றன. இது குழலூதுவது அல்லது  எச்சரிக்கை ஒலி எழுப்புவது என்று அழைக்கப்படும். ராணித் தேனீயின் சகோதரிகள் (தங்கள் அறைகளில் இன்னமும் சுருண்டு கொண்டிருப்பவை) குவார்கிங் என்றழைக்கப்படும் மெல்லிய முனகலான ஒலியில்  பதிலளிக்கின்றன. இது அவற்றைப் பொருத்த வரை மாபெரும் தவறாகும். ஒரு தேன் கூட்டில் ஒரே ஒரு ராணித் தேனீ மட்டுமே இருக்க முடியும். இந்த முனகல் ஒலியைக் கொண்டு ஒவ்வொரு சகோதரித் தேனீயையும் ராணித் தேனி கண்டுபிடித்து, அவற்றின் அறைகளைக் கிழித்து அவற்றைக் கொட்டிக் கொட்டியே கொன்றுவிடும் அல்லது அவற்றின் தலைகளைப் பிய்த்துவிடும்.
ஒலியைக் கேட்பதற்குத் தங்கள் கால்களை தேனீக்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. தீவிர அதிர்வுகளின்  மூலம் தேன் கூட்டுக்குள் செய்திகள் பரிமாறிக்கொள்ளப் படுகின்றன. தேனீயின் உணர்வுக் கொம்பு பற்றிய அண்மைக் கால ஆராய்ச்சியின் மூலம், வாசனைகளை நுகர உதவுவதுடன்,  அதன் மீது மூடியுள்ள காதுப் பறை போன்ற உருப்புகள் அதன் காதாகவும் இருக்கக்கூடும் என்று தெரிய வருகிறது.
வாலாட்டும் நடனத்தின்போது நடனமாடும் தேனீக்களின் அடிவயிற்றுப் பகுதியைத் தொடாமல்,  மார்புப்பகுதியைத் தங்களின் உணர்வுக் கொம்பினால் மற்ற பணியாற்றும் தேனீக்கள் ஏன் தொடுகின்றன என்பதை இது விளக்குகிறது. அதாவது அவற்றைக் காண்பதை விட, தேன் இருக்கும் இடத்திற்குச் செல்லும் வழியைக் கேட்பதாகவே அது அமைந்திருக்கிறது. தேன்கூட்டினுள் இருட்டாகத்தானே இருக்கும்.
தேனீக்கள் எவ்வாறு ரீங்காரமிடுகின்றன என்பது மிகவும் முரண்பட்ட செய்தியாக உள்ளது. வாத்தியஇசைக் கலைஞர்  ஒலியைக் கட்டுப்படுத்த தனது உதடுகளைப் பயன்படுத்துவது போல,   தங்கள் உடலின் பக்கவாட்டில் உள்ள, திருகுகள் என்று அழைக்கப்படும், 14  மூச்சுவிடும் ஓட்டைகளை ஒலி எழுப்ப தேனீக் கள் பயன்படுத்துகின்றன என்ற கருத்து அண்மைக் காலம் வரை நிலவி வந்தது. இந்தக் கருத்து பொருத்தமற்றது என்று கலிபோர்னியா பல்கலைக் கழக பூச்சியியல் ஆய்வாளர்கள் தேனீக்களின் இந்த பக்கவாட்டு ஓட்டைகளை அடைத்துவைப்பதன் மூலம் நிராகரித்தனர். அப்படிச் செய்தபிறகும் தேனீக்கள் ரீங்காரம் எழுப்பிக் கொண்டுதானிருந்தன. அண்மைக் காலத்தில் உருவான கருத்து என்னவென்றால், தேனீக்களின் இறக்கைகள் துடிக்கும் அதிர்வினால்  எழக்கூடிய இந்த ரீங்கார ஒலி நெஞ்சுப் பகுதியினால் பெருக்கப்படக் கூடும் என்பதாகும். ஒரு தேனீயின் இறக்கைகளைப் பிய்த்துவிட்டாலும்,  அது ரீங்காரமிடுவதை நிறுத்துவதில்லை. என்றாலும் அந்த ஒலியின் பண்பிலும், தீவிரத்திலும் ஒரு மாற்றம் தெரியத்தான் செய்கிறது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...