Friday, October 21, 2011

சவாலான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களை வரைய உள்ளேன்


உண்மை: உங்களைக் குறித்தும் உங்கள் குடும்பப் பின்னணி குறித்தும்...

கன்வால்: பஞ்சாபின் தெற்கு மூலையில் அமைந்த கிராமம் ஒன்றில் 1960-ஆம் ஆண்டு பிறந்த நான் வளர்ந்ததெல்லாம் அதற்குப் பெருந்தொலைவில் இல்லாத மாலவுட் என்ற சிறு நகரொன்றில்தான். பெரும் பணம் படைத்தவர்கள் இல்லையாயினும், என் கனவுகளை நிறைவு செய்வதற்கு முயன்ற நல்ல பெற்றோர்களைப் பெற்றிருந்தேன். இரு குழந்தைகள் உள்ள சிறிய குடும்பம் எங்களுடையது. எனது தந்தை உஜாகர் சிங் தாலிவால் கற்றவராகவும், சமூகத்தில் முன்னேற்றம் கண்ட அறிவியல் மனப்பான்மை கொண்டவராகவும் இருந்ததால், ஒப்பீட்டளவில் ஆரம்ப காலம் முதலே முன்னேறிய சமூகச் சூழலில் தான் நாங்கள் வளர்க்கப்பட்டோம். அவ்வப்போது பஞ்சாபிப் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்படும் அளவு, அரசியல் மேடைகளில் நையாண்டியுடன் உரையாற்றக்கூடிய புகழ்வாய்ந்த பேச்சாளர் என் தந்தை.

உண்மை: ஓவியத்துறையில் உங்களுக்கு எப்படி ஈடுபாடு ஏற்பட்டது? உங்களுக்கான தெளிவான பார்வையை இத்துறையில் எப்படி அமைத்துக் கொண்டீர்கள்?

கன்வால்: சிறுவயது முதலே வரைவதிலும், ஓவியம் தீட்டுவதிலும் நான் மிகுந்த மகிழ்வோடு இருந்திருக்கிறேன். என்னுடைய குடும்பத்தினரும், ஆசிரியர்களும் அதைப் பாராட்டி வந்திருக்கிறார்கள். இவை என்னுடைய மேற்படிப்பாக ஓவியத்துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணமாயிருந்தன. எனவே பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும், 1978-ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள ஓவியக் கல்லூரியில் அய்ந்தாண்டு படிப்புக்காக இணைந்தேன். ஓவிய உலகின் பரந்தவெளியை நான் அங்கே உணர முடிந்தது.
எனது கல்லூரி நாட்களிலேயே இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வமும் ஏற்பட்டது.
அவ்வாறு, பஞ்சாபி மற்றும் இந்தி இலக்கியங்களையும், இம்மொழிகளில் கிடைத்த பிற மொழி இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளையும் விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன்.
ரஷ்ய இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளும் அந்நாளில் மொழிபெயர்க்கப்பட்டுக் கிடைத்தன. அதில் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக, பகலில் ஓவியம் பயின்ற அதே நாட்களில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மாலைநேரத்தில் ரஷ்ய மொழி படிக்க ஆரம்பித்தேன். உலக கலை, இலக்கியங்கள் பற்றிய பரந்த பார்வையும், பகுத்தறிவுள்ள சான்றோர் பெருமக்களின் நட்பும் நல்ல சிந்தனையுடையவனாக என்னை உருவாக்கின.

உண்மை: உங்கள் ஓவியங்கள், சிற்பங்களுக்கான கரு எது? பெரியாரை வரையும் எண்ணம் எப்படி, ஏன் தோன்றியது?
கன்வால்: 1980-ஆம் ஆண்டு முதலே ஓவியம் வரைதல், சித்திரம் தீட்டுதல், சிற்பம் செதுக்குதல் ஆகியவற்றில் பணியாற்றி வருகிறேன். நான் முக்கியம் என்று கருதிய வேறுபட்ட பல விடயங்களை எடுத்துக் கொண்டு செயல்பட்டுள்ளேன்.
தொடக்கத்தில் கிராமம் என்பதைக் கருவாகக் கொண்டு பஞ்சாபின் கிராமப்புற முகங்கள், நிலங்கள், நில அமைவுகள், கட்டடக் கலை ஆகியவற்றை முன்னிறுத்திப் பணியாற்றினேன். பின்னர் பஞ்சாபின் வழக்குமன்றங்களைத் தலைப்பாகக் கொண்டு அங்குள்ள வழக்குரைஞர்கள் போன்றோரின் முகங்களைப் பதிவு செய்துவந்தேன். பின்னர் இங்கிலாந்தில் வாழும் இந்தியர்களின் இரட்டை வாழ்க்கையை இரட்டை நிலை  (The Dilemma) என்ற தலைப்பில் பதிவு செய்தேன். தங்கள் கலாச்சார வேர்களிலிருந்து விலகி வாழ்வோரின் சூழல்களை அடையாளப்படுத்தும் விதமாக, மரங்களையும் வேர்களையும் கொண்டு ஒரு தொடர் பணியாற்றி வருகிறேன். அதே நேரத்தில் போர்ட்ரைட் ஓவியங்கள் வரையும் தொடரையும் தொடங்கியுள்ளேன். இவற்றில் சமூகம் அல்லது அரசின் மனிதநேயத்திற்கு எதிரான தன்மைக்கு சவால் விட்ட துணிச்சலும், ஆளுமையும் நிறைந்த பெருமக்களை என் தூரிகையால் தீட்டிவருகிறேன். அதனால்தான் அந்த வரிசையில் பெரியாரை நான் வரையத் தீர்மானித்தேன்.
உண்மை: ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கி சாகடித்த பெருமை கைத்தடிக்கே உண்டு என்று தந்தை பெரியாரைப் பற்றிய கவிஞர் கண்ணதாசனின் கவிதை ஒன்றுண்டு. அந்த வகையில் பெரியாரையும், அவரது கைத்தடியையும், பாம்பையும் கொண்டு நீங்கள் என்ன சொல்ல முனைந்திருக்கிறீர்கள்?

கன்வால்: இந்த Defender என்கின்ற பெரியார் ஓவியத்தில் அவர் ஒரு பாம்பைத் தனது தடியால் தாக்கிக் கொல்ல முயல்வது போல் வரைந்திருக்கிறேன். பெரியார் பற்றி நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கவிதையை நான் அறிந்திருக்கவில்லை. இப்படம் முழுக்க எனது சொந்தச் சிந்தனையில் உருவானதே. இந்த ஓவியத்தில் இன்னும் பல முக்கியக்கூறுகள் உள்ளன. இந்திய தீபகற்பத்தின் தென் கடல் எல்லைகள், பெருங்கடல், மீன்கள், வட எல்லை, மலைப்பகுதிகள் இன்னும் பல.
இந்தியாவின் வரைபடம் தெற்கிலிருந்து வடக்காக வரையப்பட்டிருக்கும்.
(வழக்கமான நமது பார்வைக்குத் தலைகீழாக) கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் பாம்பின் தோலில் ஸ்வஸ்திக் சின்னங்களும், தலைப்பகுதியில் திரிசூலமும் இருக்கும். இது மனிதத்திற்கு எதிரான பார்ப்பனியச் சிந்தனையை பாம்பாக உருவகப்படுத்துவதற்காக! அந்தப் பாம்பு உள்நுழைகிற நிலப்பரப்பும் முக்கியமானது. அது ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த வழித்தடத்தைக் குறிக்கிறது. இந்திய வரைபடம் இந்நிகழ்வின் அமைவிடத்தைக் குறிப்பதைப் போல, பண்டைய திராவிடக் கலாச்சாரத்தின் அடையாளமாக மீன் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
உண்மை: அண்மைக்காலத்தில் உங்கள் ஓவியங்கள் தலைவர்களையும், பிரபலமான ஆளுமைகளையும் பற்றியதாக இருக்கிறது. இன்னும் யாரையெல்லாம் உங்கள் தூரிகையால் தொட இருக்கிறீர்கள்?
கன்வால்: நான் இதற்கு முன்பு, கெஹல் சிங் சஜ்ஜல்வாடி, சதத் ஹசன் மண்ட்டோ, அம்ரிதா ப்ரீதம், ஷாகித் உத்தம் சிங், ராகுல் சாங்கிருதித்யாயன் மற்றும் கான் அப்துல் கபார் கான் போன்ற சிறந்த மனிதநேயர்களை வரைந்துள்ளேன். இந்தத் தொடரில் அண்மையில் நான் வரைந்தது தான் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் ஓவியம். இந்தத் தொடர் வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் பல சான்றோர்கள், போராளிகள், சவாலான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களை வரைய உள்ளேன். இந்த வரிசையில் அடுத்து ஆபிரகாம் தாமஸ் கோவூர் படத்தைத் தீட்ட எண்ணியுள்ளேன்.
உண்மை : தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்களா?
கன்வால் : 1980களின் தொடக்கத்தில் என்னுடைய கல்லூரி நாட்களில் நான் தமிழகத்திற்கு, குறிப்பாக அப்போது மதராஸ் என்று அறியப்பட்ட சென்னைக்கும் அதைச் சூழ்ந்த பகுதிகளுக்கும் வந்துள்ளேன். என்னுடைய 22 வயதில் முதல் முறையாக பெருங்கடலையும், கடற்கரைகளையும் நேரில் கண்ட அந்த அனுபவம் மறக்க முடியாதது. வடநாட்டு நகரவாசிகளுக்கும், தென்னாட்டவர்களுக்குமான பொதுவான பழக்கவழக்கம், நடவடிக்கைகளில் இருக்கும் வேறுபாட்டை என்னால் தெளிவாக உணரமுடிந்தது. வெளியிலிருந்து வருவோருடன் கனிவுடனும் உதவும் பாங்குடனும் பழகும் மக்களின் தன்மை என்னை வெகுவாக ஈர்த்தது. தெற்கு தந்த இந்த ஈர்ப்பு இன்னும் அப்படியே இருக்கிறது. எப்படியிருப்பினும், மதத்தின் பேரால் ஏழ்மை நிலையிலும், தாழ்ந்த நிலையிலும் வைக்கப்பட்டிருந்த மக்களின் நிலை மோசமாகவும், கவலையளிப்பதாகவும் இருக்கிறது. இந்நாட்டின் பாரம்பரியச் சின்னங்களாகக் கருதப்படும் பெரும்பெரும் இந்துக் கோயில்கள்தான் மனித உரிமை மீறல்களுக்கான திறந்த களமாகவும், கடவுள் என்று கருதப்படும் சிலைகளின் முன்னும், புனிதர்கள் என்று கூறப்படுவோர் முன்னும் இந்நாட்டுக் குடிமகன்களைக் குனிந்து நிற்கக் கட்டாயப்படுத்தும் இடங்களாகவும் இருக்கின்றன.
சுருக்கமாக, அதனால்தான் நமக்கு இன்னும் பல பெரியார்களும், கோவூர்களும் தேவைப்படுகிறார்கள்.
- செவ்வி: சமா.இளவரசன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...