Friday, October 21, 2011

2012இல் நுழைவுத் தேர்வா?


2012இல் நுழைவுத் தேர்வா?


மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு இவ் வாண்டு கிடையாது. ஆனால் அடுத்த ஆண்டு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நுழைவுத் தேர்வுக்கான கட்டமைப்பு இவ்வாண்டு இதுவரை செய்யப்படாததால்  இவ்வாண்டு இல்லை என்று தெரிவிக்கிறது மத்திய அரசு.

இவ்வாண்டு மட்டுமல்ல எவ்வாண்டும் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பதுதான் ஒட்டு மொத்த மான தமிழ்நாட்டின் கருத்தாகும்.

இதனைக் கடந்த ஆண்டே மத்திய  அரசுக்குக் கலைஞர் தலைமையிலான அரசு கறாராகவே அறி வித்து விட்டது. வேறு சில மாநிலங்களும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அத்தேர்வு விஷயத்தில் மத்திய அரசு பின் வாங்கியது.

இதில் தேவையில்லாமல் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் மூக்கை நுழைக்கிறது; தொடக்கத்தில் இந்தப் பிரச்சினையில் தெளிவாக இருந்த மத்திய அரசு இப்பொழுது பின் வாங்குவது ஏன் என்று தெரியவில்லை.

சமூக நீதியில் கை வைத்து அதன் மூலம் வெகு மக்களின் வெறுப்பை, எதிர்ப்பை வாங்கிக் கட்டிக் கொள்ளத் துடிக்கிறதே மத்திய அரசு.

இப்படித் தான் ஒவ்வொன்றிலும் மக்கள் விரோத அரசாக நடந்து கொள்கிறது மத்திய அரசு.

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு அறவே கிடையாது. உச்சநீதிமன்றம் வரை சென்று கலைஞர் அரசு இதனை சாதித்திருக்கிறது.

இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு ஏன்  கருத்துத் தெரிவிக்கவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை மூலம் (30.7.2011) கேட்டதற்குப்பின் இன்றைய தமிழக முதல் அமைச்சரும் நுழைவுத் தேர்வைத் தமிழகம் ஏற்காது என்று மத்திய அரசுக்கு தெளிவாகப் பதில் கூறிவிட்டார்.

இந்த நிலையில் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது என்று ஒரு கதை சொல்லுவார்களே, அதே போல மத்திய அரசு வீண் வம்பை விலைக்கு வாங்க ஆசைப்படுவது தேவையில்லாத வேலை.

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வைத் திணித்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும் என்று எச்சரிக்கிறோம்.

சமூகநீதியையும், கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்தையும் ஒழிப்பதுதான் இந்த நுழைவுத் தேர்வு என்ற பார்ப்பன உயர்ஜாதிக் கூட்டத்தின் கருவி.

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இன்றி தொழிற் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வ தால் என்ன கேடு நேர்ந்து விட்டது?

மத்திய அரசின் உயர்நிலைக் கல்வியில் பிற்படுத் தப்பட்டோருக்கு இப்பொழுதுதான் கதவு திறக்கப்பட் டுள்ளது. அதுவும் 27 சதவிகிதம் முழுமையாக அல்ல; ஆண்டு ஒன்றுக்கு ஒன்பது விழுக்காடு என்கிற அளவில்தான்; இந்த நிலையில் இவர்களின் தலையில் இடியைப் போட வேண்டுமா?

நுழைவுத் தேர்வு தான் தகுதியின் அளவுகோலா? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் நுழைவுத் தேர்வுக்கான வழக்கில் மிகச் சிறப்பான தீர்ப்பினை வழங்கியுள் ளனர். (27.4.2007).

நுழைவுத் தேர்வை நடத்தினாலும் முழு சம நிலை என்பதும் கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் போல அனுமானத்தின் அடிப்படை யில் விடைகள் டிக் செய்யும் வாய்ப்புள்ளது என்று எவ்வளவு அழகாக, துல்லியமாகக் கூறியுள்ளனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலைசிறந்த வழக்குரைஞராக இருந்தவர் தானே? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் - சொன்ன கருத்துகளை அவர் புரிந்து கொள்ளவில்லையா? அல்லது புரிந்து கொள்ளும் நிலையில் இல்லையா?

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மாநாடு நடத்தியதற்கான காரணங்களுள் இந்த நுழைவுத் தேர்வு என்கிற முட்டுக் கட்டையும் ஒன்றே!

இப்பொழுதுகூட பொதுப் பட்டியலில்தான் கல்வி உள்ளது. அப்படி இருக்கும்போது மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்காமல் மத்திய அரசு தானடித்த மூப்பாக முடிவு செய்யக் கூடாதல்லவா?

மாநில அரசு - மத்திய அரசுக்களுக்கிடையே இந்த நுழைவுத் தேர்வு என்பது கடும் மோதலை ஏற்படுத்தும் என்பதை மத்திய அமைச்சர் கபில்சிபல் அவர்கள் அறிவாராக!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...