தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
காண்டாமிருகத்தின் கொம்பு எதனால் ஆனது?
சிலர் நினைப்பது போல, காண்டாமிருகத்தின் கொம்பு அதன் மயிர்களால் ஆனது அல்ல.
மேல்தோல் மஞ்சள இழைக் கற்றைகள் இறுக்கமாக இணைக்கப்பட்டதில் இருந்து உருவானதுதான் அதன் கொம்பாகும். மஞ்சளம் என்பது, மனிதர்களின் மயிர், நகக் கண்கள் மற்றும் விலங்குகளின் கொம்புகள் மற்றும் கூர்மையான நகம் கொண்ட பாதங்கள், பறவைகளின் இறகுகள், முள்ளம்பன்றியின் முட்கள், ஆமைகளின் ஓடுகள் ஆகியவற்றில் காணப்படும் ஒரு வகை புரதமாகும்.
முற்றிலும் புரதமஞ்சளத்தினால் ஆன ஒரு கொம்பைப் பெற்றிருக்கும் ஒரே விலங்கு காண்டாமிருகம்தான். கால்நடை, ஆடுகள், மான்கள் மற்றும் ஒட்டைச் சிவிங்கிகளுக்கு இருப்பது போல மய்ய எலும்பு எதுவும் காண்டாமிருகத்துக்கு இல்லை. இறந்துபோன ஒரு காண்டாமிருகத்தின் எலும்புக்கூடு அதற்கு கொம்பு ஒன்று இருந்ததிற்கான எந்த வித அடையாளத்தையும் காட்டுவதில்லை. உயிருடன் இருக்கும்போது அதன் மூக்கு எலும்புக்கு மேல் உள்ள தோலில் உள்ள ஒரு சமதளமற்ற ஒரு வீக்கம் போன்றுதான் அதன் கொம்பு தோற்றமளிக்கும்.
சில நேரங்களில் காண்டாமிருகத்தின் கொம்புக்கு சிதைவு ஏற்பட்டாலோ அல்லது காயம் ஏற்பட்டாலோ, வெட்டப்பட்ட நகம் அல்லது முடி போல அது பிரிந்து போகிறது. ஆனால் இளம் வயது காண்டாமிருகங்களின் கொம்புகள் அழிந்து போனாலும் கூட அவை முற்றிலும் வளர்ந்துவிடுகின்றன. அதன் வேலை என்ன என்பது யாருக்கும் தெரியாது. தங்கள் குட்டிகளை முறையாக பார்த்துக் கொள்ள பெண் காண்டாமிருகங்கள் தடைகளை விலக்கத் தங்கள் கொம்புகளைப் பயன்படுத்துகின்றன.
அவற்றின் கொம்புகளுக்கு அதிக தேவை இருப்பதன் காரணமாக காண்டாமிருகங்கள் வேகமாக அழிந்து வரும் விலங்கினமாக இருக்கிறது. மத்திய கிழக்காசியாவில், குறிப்பாக ஏமன் நாட்டில், மருத்துவத்திற்காகவும், பாரம்பரியமான கத்திகளின் பிடிகளுக்காகவும் ஆப்பிரிக்க காண்டாமிருகத்தின் கொம்புகளுக்கு நீண்ட காலமாகவே கிராக்கி இருந்து வந்துள்ளது. 1970 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 67,050 கிலோ (ஏறக்குறைய 150,000 பவுண்டு) காண்டாமிருகக் கொம்புகள் ஏமன் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஒரு கொம்பின் எடை சராசரியாக 3 கிலோ இருக்கும் என வைத்துக் கொண்டாலும் இதன் அளவின்படி இறக்குமதி செய்யப்பட்ட கொம்புகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 22,350 ஆக இருக்கலாம்.
காண்டாமிருகத்தின் கொம்பு பாலுணர்வைத் தூண்டும் என்ற தவறான கருத்தில் அது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இது உண்மையல்ல என்று சீன மூலிகை இயலாளர்கள் கூறுகின்றனர். அது உடலை வெப்பப் படுத்துவதற்கு மாறாக குளுமைப்படுத்தும் என்பதால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் காய்ச்சல் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அது பயன்படுத்தப்படுகிறது.
கிரேக்க மொழியில் ரினோ (மூக்கு) கெராஸ் (கொம்பு) என்ற சொற்களில் இருந்து வந்தது ரின்கரோ (காண்டாமிருகம்) என்ற சொல் உருவானது. தற்போது வாழ்ந்து வரும் காண்டாமிருகங்களில், கருப்பு, வெள்ளை, இந்தி, ஜாவா மற்றும் சுமத்ரா என்ற அய்ந்து வகைகள் உள்ளன. ஜாவா காண்டாமிருகங்களில் தற்போது 60 மட்டுமே உயிரோடு உள்ளன. இதனால் உலகிலேயே அதிகமாக அழிந்து வரும் உயிரினங்களில் நான்காவதான இடத்தை இது பெற்றுள்ளது. வான்குவார் தீவுகளில் காணப்படும் மார்மோட் எனும் குரங்கினம், சைசில்லீசில் உள்ள உறைபோன்ற வால் கொண்ட கரடி, தெற்கு சீன நாட்டில் உள்ள புலி ஆகியவை வேகமாக அழிந்து வரும் உயிரினங்களில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவை ஆகும்.
வெள்ளை காண்டாமிருகம் எனப்படுவது வெள்ளை நிறமாக இருப்பது அல்ல. அகலமான அந்த விலங்கின் வாயைக் குறிக்கும் விட் எனும் ஆப்பிரிக்கச் சொல்லில் இருந்து உருவானது இந்து வைட் (வெள்ளை) என்ற பெயர். மரக் கிளைகளில் இலைகளை மேய்வதற்கு கருப்பு இன விலங்குக்கு இருப்பது போன்ற வேகமாகச் செயல்படும் உதடுகள் வெள்ளை காண்டா மிருகத்துக்கு இல்லை.
இதற்கு மணத்தை நுகரும் ஆற்றலும், ஒலியைக் கேட்கும் சக்தியும் அதிகமாக உள்ளது. அனைத்தையும் விட அதன் கண்பார்வை ஆற்றல் மிக மிகத் துல்லியமானது. அவை எப்போதுமே தனியாக வாழும் விலங்குகளாகும். உடலுறவுக் காலங்களில் மட்டுமே அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து காணப்படும்.
வியப்படைந்தாலோ, அதிர்ச்சியடைந்தாலோ காண்டாமிருகங்கள் இயற்கையை மீறி சிறுநீரும், மலமும் கழிக்கும் தன்மை கொண்டவை. எவரையேனும் தாக்குவது என்றால் ஆசிய காண்டாமிருகங்கள் வாயினால் கடிக்கும். ஆப்பிரிக்கன் காண்டாமிருகங்கள் கொம்பைக் கொண்டு வேகமாகத் தாக்கும். கால்கள் குட்டையாக இருந்தாலும், ஒரு கருப்பு காண்டாமிருகம் மணிக்கு 44 கிலோமீட்டர் (35 மைல்) வேகத்தில் ஓட முடியும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment