Sunday, October 16, 2011

வீரமணியாருக்கு துணைநின்று கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீட்போம்!

பெரியார் இடஒதுக்கீடு உரிமையை மீட்டது போல்
தலைவர் வீரமணியாருக்கு துணைநின்று கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீட்போம்!
பேராசிரியர் மு.நாகநாதன் ஆற்றிய விளக்க உரை
சென்னை, அக்.16-தந்தை பெரியார் இட ஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்தது போல் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வீரமணியார் களம் அமைத் திருக்கிறார். அந்த முயற்சிக்கு நாம் துணை நிற்போம் என்று பேராசிரியர் மு.நாகநாதன் கூறி விளக்க வுரையாற்றினார்.
கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலில் கொண்டு  வரக்கோரும் மாபெரும் மாநாடு கருத் தரங்கம் 25.9.2011 அன்று சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது. பேராசிரியர் மு.நாகநாதன் இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆற்றிய உரை வருமாறு:
கல்வி மானுடத்தின் அடிப்படை உரிமை. பண்பாட்டு விழுமியங்கள், மொழி ஆளுமை ஆகியன கல்வி எனும் அடித்தளத்தில்தான் செம்மையுறுகின்றன. பல்வேறு இன மக்களைக் கொண்டுள்ள இந்தியா ஒரு நாடன்று, ஒரு துணைக்கண்டம், மொழி, சமய, பண்பாட்டு கல்வி முறைகள் பரந்து விரிந்த வேறுபாடுகளுக்கு இடையில்தான் இந்தியாவினுடைய ஒற்றுமை உறுதிப்படும். எனவேதான், இந்திய அரசமைப்புச் சட்டம் உருவான போது கல்வியை மாநிலப்பட்டியலில் இணைத்தார்கள். 1976ஆம் ஆண்டு நெருக்கடி நிலையின் போது, மாநிலப்பட்டியலில் இருந்துதான் பொதுப்பட்டியலுக்குக் கல்வியை மாற்றினார்கள். இந்த அரசமைப்புச் சட்டத்திருத்தத்தால் மாநில அரசுகள் கல்வி வளர்ச்சிக்கான உரிய திட்டங்களை, உருவாக்குவதற்கும் நிறைவேற்றுவதற்கும், தாய் மொழிக் கல்வி வளர்ச்சிக்கான மேன்மைக்கும் பல தடைகள் ஏற்பட்டுள்ளன. இக்காலக்கட்டத்தில் தமிழர் தலைவர் வீரமணியார், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைப்பதற்காகத் திராவி டர் கழகத்தின் சார்பில் இந்தக் கருத்தரங்கையும், மாநாட்டினையும் நடத்துவது சாலப்பொருத்த மாகும்.
தந்தை பெரியாரின் இயக்கம்தான்
தந்தை பெரியாரின் தலைமையில் சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் தமிழர்களின் கல்வி, மொழி, இடஒதுக்கீட்டு உரிமைகளுக்காக, பல களங்களை அமைத்து பல வெற்றிகளை ஈட்டியுள்ளன. இவ்வரிசையில் நீதிக்கட்சி காலத்தில் 1927ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டு கொள்கையை 1951ஆம் ஆண்டு உயர், உச்ச நீதிமன்றங்களின் வழியாக ஆதிக்க ஜாதியினர் தட்டிப்பறித்த போது தந்தை பெரியாரின் தலைமையில் இடஒதுக்கீடு உரிமையை மீட்டெடுத்தது மாபெரும் வரலாற்று சாதனை யாகும்.
வீரமணியார் களம் அமைத்திருக்கிறார்
சமூகத்தில் கல்வியில் பின்தங்கிய அனைத்து ஜாதியினருக்கும் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும் என்ற அரசமைப்புச்சட்டத்தின் 1951இல் நிறை வேற்றப்பட்ட முதல் சட்டத்திருத்தம்தான் பல மாநிலங்களில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டது. திராவிட இயக்கம் பெற்றுத் தந்த இடஒதுக்கீட்டு உரிமையால்தான் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியிலிருந்து பல்கலைக் கழக ஆய்வுக் கல்வி வரை ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர் களும் இடம்பெறும் நல்வாய்ப்பைப் பெற்றனர். சமூகநீதியும், கல்வி உரிமையும், வளர்ச்சியும் கைகோர்த்தன. இதன் விளைவாக தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியே அரங்கேறி வருகிறது. 1951இல் பெரியார் இடஒதுக்கீட்டு உரிமையை மீட் டெடுத்ததுபோல கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இடம்பெறச் செய்வதற்குத் தமிழர் தலைவர் வீரமணியார் இக்காலக்கட்டத்தில் களம் அமைத்திருக்கிறார். இவரின் முயற்சிக்கு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் அனை வரும் ஒன்றிணைந்து உறுதுணை புரிய வேண்டும்.
குறைகள் மலிந்த அரசியல் சட்டம்
1950இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரச மைப்புச் சட்டம் குறைபாடுகள் மலிந்த, மாநிலங் களின் உரிமைகளைத் தட்டிப்பறிக்கிற அரச மைப்புச் சட்டமாகத்தான் உருவாயிற்று. எனவே தான், இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஆய்வு செய்த அரசியல் அறிஞர் கே.சி.வியர் கூட்டாட்சி அரசு (Federal Government) என்ற தனது புத்தகத்தில் இந்தியாவை அரைக் கூட்டாட்சி நாடு என்று உருவகப்படுத்தினார். ஆனால், கடந்த 61 ஆண்டுகளாக மத்திய அரசால் இயற்றப்படுகின்ற சட்டங்களும், சட்டத் திருத்தங்களும், ஏற்கெனவே குறைந்து வருகிற மாநில அரசுகளின் அதிகாரங்களை மேலும், மேலும் குறைப்பதாகவே உள்ளன. அரைக் கூட்டாட்சி முறையிலிருந்து விலகி, மத்திய அரசு அதிகார குவிப்பின் மய்யமாகவே தற்போது உருவெடுத்து வருகிறது.
இப்போக்கு, இந்திய ஒற்றுமைக்கு அறைகூவல் விடுவது போன்று அமைந்து வருகிறது. இக்கருத்தரங்கில் எனக்கு முன்பு சிறந்ததொரு உரையை நிகழ்த்திய நீதியரசர் ஏ.கே.ராசன், அரசமைப்புச்சட்ட விதிகளையும், மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்குக் கல்வி மாற்றப்பட்டதால் ஏற்பட்டு வருகிற தீமை களையும், ஏற்பட இருக்கிற ஆபத்துக்களையும் துல்லியமான முறையில் விளக்கினார். 1950லிருந்து 1976ஆம் ஆண்டு வரை கல்வி மாநிலப்பட்டியலில் இருந்த போது மத்திய அரசு கடைப்பிடித்த அணுகுமுறைகளையும், பொதுப்பட்டியலுக்கு மாற்றிய பிறகு கல்வித் துறையில் நடைபெற்று வருகின்ற செயல்பாடுகளையும் அதன் விளைவு களையும் எனது உரையில் எடுத்துரைக்க விழை கிறேன்.
கோத்தாரி ஆணையம்
மத்திய அரசு 1966ஆம் ஆண்டு பேராசிரியர் களையும், கல்வி வல்லுநர்களையும் கொண்ட ஒரு குழுவினைக் கல்வி வல்லுநர் கோத்தாரி  தலை மையில் அமைத்தது. இக்கல்விக் குழுவின் பரிந்துரைகள் மிகச்சிறந்தவைகளாகக் கல்வி யாளர்களால் இன்றளவும் போற்றப்படுகின்றன. இக்கல்விக் குழுவில் ஹார்வர்ட் பல்கலைக் கழகம், ரஷ்யப் பல்கலைக் கழகம், லண்டன் பல்கலைக் கழகம், அய்க்கிய நாடுகள் கல்வி அமைப்பு (UNESCO) ஆகியவற்றில் பணியாற்றிய 16 வல்லுநர்கள் இடம்பெற்றிருந்தார்கள். கோத்தாரிக் குழுவின் அறிக்கை 1966இல் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை கல்வியின் பல்வேறு கூறுகளை மிக நுட்பமாக ஆய்ந்தது. உலகில் கல்வி வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஏற்பட்ட மாறுதல்களையும், கல்விக்காக அந்த நாடுகள் அதிகப் பொதுச்செலவினை மேற்கொண்டு வருவதையும் சுட்டிக்காட்டி, இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் (Gross Domestic Product) குறைந்தது 6 விழுக்காடாவது கல்விக்கான பொதுச்செலவை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையை வழங்கியது. இக்குழுவில் இடம் பெற்ற அறிஞர்கள் ஒருமித்த கருத்துடன் சில முதன்மையான கருத்துகளை வலியுறுத்தினார்கள்.
ஒரு புரட்சியே தேவை!
அறிக்கையின் முன்னுரையில், இந்தியாவி னுடைய பண்பாடு, அதன் மதிப்போடு இணைந்த அறிவியல் சார்ந்த கல்வி முறை ஒன்றுதான் இந்தியாவினுடைய வளர்ச்சிக்கும், பாதுகாப் பிற்கும், நலத்திற்கும் அடித்தளமாகவும், கருவியாக வும் அமையும் என்ற கருத்தில் எவ்வித அய்யப் பாடோ, தயக்கமோ கிடையாது. இந்தியக் கல்வி முறைக்குத் தீவிரமான மறுகட்டமைப்பும், கிட்டத்தட்ட ஒரு புரட்சியே தேவைப்படுகிறது. என்று சுட்டப்பட்டது. (There is of course one thing about which we feel no doubt or hesitation: Education, science-based and in coherence with Indian culture and values, can alone provide the foundation-as also the instrument-for the nation’s progress, security and welfare. Indian education needs a drastic reconstruction, almost a revolution- Ref: Education and National Development, Report of the Education Commissions, D.S.Kothari, 1964-66, NCERT 1970, P.ix)
பொதுப்பட்டியலில் கல்வியை இணைப்பதால்...
மேலும், கல்வித்திட்டங்கள் சிறப்புற வெற்றி பெறுவதற்கு தனிப் பணித்துறையை உருவாக்க வேண்டும் என்று இக்குழு குறிப்பிட்டது. இந்தியக் கல்விப் பணி (Indian Educational Service), இந்திய ஆட்சிப்பணி (Indian Administrative Service, Indian Foreign Service, Indian Police Service etc.,) இதர மத்திய அரசின் பணிகள் போன்று அமையாமல், கல்வி நிருவாகம் என்பது கற்பித்தல்-ஆய்வு அடிப் படையில் பணி சார்ந்த அமைப்பாக இருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தொடக்க, நடுநிலைக் கல்வியை வழங்க வேண்டும். கல்வி பொதுப் பட்டியலில் இருக்க வேண்டுமா அல்லது மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டுமா என்ற கருத்தையும் கோத்தாரி குழு நுட்பமாக ஆய்ந்து ஒரு தெளிந்த முடிவை எடுத்தது.
தனது அறிக்கையில், இந்தப் பிரச்சினையை மிகக் கவனத்துடன் நாங்கள் ஆய்வு செய்தோம். கல்வியைப் பிரித்து ஒரு பகுதியைப் பொதுப் பட்டியலிலும், மற்றொன்றை மாநிலப் பட்டிய லிலும் சேர்ப்பதற்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை. கல்வி எந்தச் சூழ்நிலையிலும் ஒட்டு மொத்தமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். எங்களுடன் பணிபுரிந்த சில உறுப்பினர்களுடைய (2 உறுப் பினர்கள்) கருத்தை நாங்கள் ஒப்புக் கொள்ள வில்லை.
கல்வி மாநில பட்டியலில்தான்
இந்தியா போன்ற பரந்த நாட்டில் கல்வி அரசமைப்புச் சட்டத்தில் உள்ளதைப் போன்று மாநிலப் பட்டியலில் இருப்பது சிறந்த ஒன்றாகும். ஏனென்றால், கட்டாயத்திற்கு உள்ளாக்காமல், ஒரு தூண்டும் சக்தியாக மத்திய தலைமை இருப்பதற்கு வாய்ப்பளிக்கிறது. பொதுப்பட்டியலில் கல்வியை இணைப்பதனால் விரும்பத்தகாத அதிகாரக் குவியலும், சில நேரங்களில் பெரிய அளவில் விட்டுக் கொடுக்காத அதிகாரக் குவியலும், சில நேரங்களில் பெரிய அளவில் விட்டுக் கொடுக்காத தன்மையும் ஏற்பட்டு சுதந்திரமாகவும் தேவைக் கேற்ப விட்டுக் கொடுக்கும் நெகிழ்வுத் தன்மையும் இல்லாமல் போய்விடும். தற்போதுள்ள அரசமைப்புச்சட்டப் பிரிவுகளில் மத்திய-மாநில அரசுகள் கூட்டாகக் கல்வித் துறையில் இணைந்து பணியாற்றக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிக அளவில் இருப்பதாலும், அதனை முழு அளவில் பயன்படுத்தாமல் இருப்பதாகவும் நாங்கள் கருதுகிறோம்.(We have examined this problem very carefully. We are not in favour of gragmenting education and putting one part in the concurrent and the other in the State list; education should, under any circumstances, be treated as a whole. We also do not agree with our collegues and are of the view that in a vast country like ours, the position given to education in the Constitution is probably the best because it provides for a Central Leadership of a stimulating but noncoercive character. The inclusion of education in the concurrent list may lead to undesirable centralization and greater rigidity in a situation where the greatest need is for elasticity and freedom to experiment. We are convinced that there is plenty of scope, within the present constitutional arrangement to evolve a workable Centre-State partnership in education and that this has not yet been exploited to the full. (Ref: Education and National Development, Report of the Education Commission (D.S.Kothari,) 1964-66, NCERT, 1970, p829 & 830) 
என்று ஆணித்தரமாகக் குறிப் பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஏற்கவில்லை
கோத்தாரி வல்லுநர் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவில்லை. இக்குழுவின் உணர்வுகளுக்கு எதிராக பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும் தொடர்ந்து பல முரண்பாடுகளை மத்திய அரசு உருவாக்கிக் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் தீங்கினை விளைவித்து வருகிறது. குறிப் பாக, உயர்கல்வியில் அந்தந்த மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கல்வி மேம்பாட்டு திட்டங் களை வகுத்து, சிறந்த முறையில் நிறைவேற்று வதற்குப் பல நேர்முக மறைமுகத் தடைகளை மத்திய அரசு உருவாக்கியது. கல்வி ஆய்வு அமைப்புகள் வழியாக கல்வித்துறையில் தனது மேலாதிக்கத்தினை மத்திய அரசு நிறுவியது. குறிப்பாக, மத்திய அரசின் சில முதன்மையான கல்வி-ஆய்வு நிறுவனங்களின் செயல்பாட்டினை இங்கு ஆய்வு செய்வது தேவையாகிறது.
அறிவியல் - தொழில் ஆய்வுக் கழகம்
1. அறிவியல் தொழில் ஆய்வுக் கழகம் (Council for Scientific and Industrial Research, 1942-CSIR) இந்த அமைப்பு வெள்ளையர் ஆட்சி காலத்தில் அறிவியல் தொழில்துறை வளர்ச்சிக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. 1947க்கு பிறகு மத்திய அரசு இவ்வமைப்பையும் தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தது.
2. இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (Council for Scientific and Industrial Research, 1942-CSIR) இந்த அமைப்பு 1949இல் உருவாக்கப் பட்டாலும் ஏற்கெனவே வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் 1911இல் அமைக்கப்பட்டு இயங்கி வந்த இந்திய ஆய்வு நிதி அமைப்பின் (Indian Research Fund Assocation, 1911-IFRA) மறுவடிவமாகும். 1911ஆம் ஆண்டிலிருந்து 1949ஆம் ஆண்டு வரை இந்த நிதி அமைப்பு, மிக நேர்மையான முறையில் செயல்பட்டு உயர்கல்வி நிறுவனங்கள் ஆய்வில் வெற்றி பெற உதவியது. ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவில் இந்த அமைப்பின் பெயரை இந்திய மருத்துவக் கழகம் என மாற்றியதுதான் மத்திய அரசின் முதல் கல்வி சாதனையாகும்.
கேதான் தேசாயிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
மேலும், மேலும் அதிகாரங்களைப் பெற்றதன் விளைவாக ஊழலும், திறமையின்மையும் உச்சத் திற்குச் சென்றுள்ளன. இந்நிறுவனத்தின் தலைவராக இருந்த கேத்தன் தேசாயின் வீட்டில் சில குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் மத்தியப் புலனாய்த் துறையும், வருவாய் துறையும் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது 1500 கோடி ரூபாய் ரொக்கமும், 1.5 டன் தங்கமும் கைப்பற்றப்பட்டன. இந்தியாவின் ஆண்டு தங்க உற்பத்தி 2 டன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏறக்குறைய ஒரு ஆண்டின் நாட்டின் உற்பத்தி அளவு தங்கத்தையே தன் வீட்டில் வைத்திருந்தார் என்பதுதான் உயர்கல்வி ஆய்வுத்துறையிலும் மத்திய அரசு படைத்த இரண்டாவது சாதனையாகும்.
அன்றே பி.சி.அலெக்சாண்டர் சொன்னார்
முன்னாள் ஆளுநர் மறைந்த பி.சி.அலெக் சாண்டர் உயர் கல்வியில் மத்திய அரசு ஏற்படுத்தி வரும் குழப்பங்களைப் பற்றியும், இந்திய மருத்துவக் கழகத்தின் செயல்பாடுகள் பற்றியும் 2010ஆம் ஆண்டு குறிப்பிட்ட கருத்து இக்காலக்கட்டத்திலும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். இந்திய மருத் துவக் கவுன்சில் எவ்வாறு மோசமாக செயல்பட்டது என்பது அண்மையில் வெளிப்படுத்தப்பட்ட பின்னர், தேசிய அளவில் அமைக்கப்படும் அனைத்து கவுனிசில்களின் திறமை, நேர்மை மீது மக்கள் சந்தேகமற்ற நம்பிக்கை  வைப்பார்கள் என்ற மாயத்தோற்றத்தை மத்திய அரசு கொண்டிருத்தல் கூடாது. இப்போது தேவைப்படுவது என்ன வென்றால், மாநில அரசுகள் தங்களின் சொந்த சட்டங்களில் உள்ள விதிகளின்படி உயர்கல்வி நிறுவனங்களை நிருவகிக்க அனுமதிப்பதும், மத்திய நிருவாகக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் எந்த விதியையோ சட்டத்தையோ அவர்கள் மீது திணிக்காமல் இருப்பதும்தான் கல்வி வளர்ச்சிக்கு உதவும் என்று பி.சி.அலெக்சாண்டர் குறிப்பிட்டார். (டெக்கான் கிரானிக்கிள் 16.6.2010 தமிழில் த.க.பாலகிருட்டிணன்,விடுதலை இதழ் 26.6.2011)
பல்கலைக் கழக மானியக்குழு
3. பல்கலைக் கழக மானியக் குழு  (University Grants Commission 1953-UGC) பல்கலைக் கழக மானியக்கு ழுவின் மேலாண்மையால் உயர்கல்வியில் விளைந்த குழப்பங்களை நாடே அறிந்துள்ளது. ஆதிக்க ஜாதியினர் ஏற்றம் பெறவே தனது முழு வீச்சையும் இந்த அமைப்பு பயன்படுத்தியதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. 1970ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் வறுமையின் அளவை-வறுமைக் கோட்டினை கணக்கீடு செய்த இரு பொருளாதார மேதைகளில் (Prof. V.M.Dandekar and Prof. Rath)  ஒருவரான பேராசியர் தன்டேகர் இந்த அமைப்பு தேவையற்ற அமைப்பு என்று மும்பையில் இருந்து வெளிவரும் பொருளாதார அரசியல் வார இதழில் (Economic and political weekly) கட்டுரை தீட்டினார். மாநிலங்களுக்கு முழு அளவில் அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்று அறிஞர் அண்ணா குறிப்பிட்ட கருத்தை இக்கட்டுரையில் மேற் கோளாகக் குறிப்பிட்டார். அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்திற்கும், பல்கலைக் கழக மானியக் குழுவிற்கும் உயர்கல்வி தொடர்பாகத் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் தனியார் துறையில் உயர்கல்வி அமைப்புகளை உருவாக்குபவர்கள் இரண்டு அமைப்புகளுக்கும் இடையே அனுமதிக்காக அலைகழிக்கப்படுகிறார்கள். இங்கு, நடைபெறும் ஊழல்களுக்கு அளவே இல்லை. எனவேதான் இக்குழுவைத் தேவையற்ற மானியக்குழு (Unnecessary Grants Commission) என்று கூட்டாட்சி இயல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பல வகையான கழகங்கள்
தேசிய செயல்முறை பொருளாதார ஆய்வுக் கழகம் (National Council for Applied Economic Research, 1956-NCAER) 5.தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சிக் கழகம்(National Council for Educational Research and Training, 1961-NCERT), 6. இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் (Indian Council of social Science Research, 1969-ICSSR)  7.இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் (Indian Council of Historical Research, 1972-ICHR), 8.இந்திய தத்துவ இயல் ஆய்வுக் கழகம் (Indian Council of Philosophical Research, 1977-ICPR,)  9.அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (All India Council for Technical Education 1987-AICTE,)  10. தேசிய ஆசிரியர் பயிற்சிக் கழகம் (National Council Teachers Education 1993-NCTE).
-(தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...