Tuesday, October 25, 2011

கம்ப இராமாயணத்தைத் தடை செய்வார்களா?


கம்ப இராமாயணத்தைத் தடை செய்வார்களா?

அறிஞர் இராமானுஜம் அவர்களால் எழுதப்பட்ட 300 இராமாயணங்கள் - அய்ந்து உதாரணங்கள் - மொழிபெயர்ப்புக் குறித்து மூன்று சிந்தனைகள் என்னும் கட்டுரை டில்லிப் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது என்பது வரலாற்று மோசடியாக என்றென்றும் பேசப்படும்.

வால்மீகி இராமாயணத்தில் அகலிகை வலிய இந்திரனை அழைத்ததாகவும், அதனால்தான் இந்திரனின் உடல் ஆயிரம் பெண்குறிகளாக மாறட்டும் என்று சாபமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது என்று அக்கட்டுரையில் கூறப்பட்டிருப்பதுதான் தடை செய்யப் படுவதற்குக் காரணமாம்.

வால்மீகி இராமாயணத்தில் அவ்வாறு கூறப்பட வில்லை; வரலாற்றுப் பேராசிரியர் இராமானுஜம் தவறாக - கற்பனையாக எழுதியுள்ளார் என்று நிரூபித்து அந்தப் பாடத்தைத் தடை செய்திருந்தால் அதுதான் அறிவு நாணயமாகும். அவ்வாறு அவர்களால் சொல்லப்பட வில்லை - அவ்வாறு சொல்லவும் முடியாது; காரணம் பேராசிரியர் இராமானுஜம் கூறிய மூல நூலாகிய வால்மீகி இராமாயணத்தில் உள்ளதுதான், அதனைத்தான் அவர் கையாண்டுள்ளார்.

பாரதிய ஜனதாவின் மாணவர் பிரிவாகிய ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்தவர்கள் பல்கலைக் கழகத்தில் புகுந்து வன்முறை வெறியாட்டம் நடத்தியதன் காரணமாகவே இத்தகைய தொரு விபரீத முடிவை பல்கலைக் கழகம் மேற்கொண்டுள்ளது. தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை ஒரு பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது - வெட்கக்கேடானதாகும்.

நூலகங்களைக் கொளுத்துவது - பாடத் திட்டங்களை மாற்றுவது - கலாச்சார சின்னங்களைச் சீரழிப்பது என்பது  பாசிஸ்டுகளின் அணுகுமுறையாகும். அதனைத்தான் இந்துத்துவாவின் கும்பல், நாட்டில் செய்து கொண்டி ருக்கிறது.
கவுதம முனிவரின் மனைவி அகலிகை அழகினிற் சிறந்தவள்; அவளை உடல் ரீதியாக அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தவன் தேவர்களுக்கெல்லாம் தலைவனான இந்திரலோகத்து அரசனாகிய தேவநாதன் இந்திரன். (தேவநாதன் என்றால் காஞ்சிபுரம் மச்சேஸ்வர கோயில் குருக்கள் தேவநாதன் நினைவிற்குக் கூட வரலாம் - இவனும் அந்த தேவநாதன்  காட்டிய அந்த வழியைத்தான் கடைப்பிடித்திருக்கிறான்  என்பதை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.)

விடியற்காலையில் எழுந்திருந்து கங்கைக்குச் சென்று நீராடி பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவது கவுதம முனிவரின் அன்றாடப் பணி.

இந்திரன் என்ன செய்தான்? அகால நேரத்தில் சேவல் மாதிரி கூவிட, கவுதமன் வழக்கமாக விடியற் காலம் வந்தது என்று கருதி கங்கைக்குச் சென்றான்.

சென்ற முனிவன் திடுக்கிட்டான். ஏதோ சூது நடந்துள்ளது என்று கூறி வேகமாக தம் ஆசிரமத்துக்குத் திரும்புகிறான். இந்த இடைவெளியில் இந்திரன், கவுதம முனிவன்பேர்ல வடிவம் எடுத்து அகலிகையை அணுகி உடல் இன்பம் அனுபவித்தான்.  அதுசமயம் திரும்பிய கவுதம முனிவன் இந்திரனுக்குச் சாபமிட்டான். எந்த இன்பத்திற்காக இந்த அடாத காரியத்தைச் செய்தாயோ, அதன் அறிகுறியாக உன் உடல் முழுவதும் ஆயிரம் பெண் குறிகள் தோன்றட்டும் என்று சாபமிட்டான். அகலி யையைக் கல்லாகக் கடவது என்றும் சாபமிட்டான். இவை மூல இராமாயணமாகிய வால்மீகியில் உள்ளதுதான்.

இந்த விவரமும் வால்மீகியைத் தழுவி தமிழில் எழுதிய கம்ப இராமாயணத்தில் (பாலகாண்டம்-அகலிகைப் படலம் - பாடல்கள் 545 முதல் 549 வ) விரிவாகக் காணப் படுகிறது.

இந்திரன் கவுதம முனிவரின் ஆசிரமத்திலிருந்து வெளியேறியபோது அவனது உருவத்திலேயே சென்றான் என்கிறார் வால்மீகி. கம்பனோ பூனை வடிவில் வெளியேறினான் இந்திரன் என்று எழுதியிருக்கிறார்.  இந்திரன்-அகலிகை புணர்ச்சியையோ, கவுதம முனிவரின் சாபத்தையோ கம்பனாலேயே மறைக்க முடியவில்லை.

புக்கவ ளோடுங் காமப்புதுமண மதுவின்தேறல்
ஒக்கவுணர்ந் திருத்தலோடு முணர்ந்தனள்
உணர்ந்தபின்னோ
தக்க தன் றென்னத் தேறா டாழ்ந்தனள்
முக்கணனை வாற்றன் முனிவனும்
முடுகி வந்தான்.
(கம்ப இராமாயணனம் - அகலிகைப் படலம், பாடல் 545)

இந்திரன் அகலிகையைப் புணரும்போது, அவன் தன் கணவன் கவுதமன் அல்லன்; வேறு ஆடவன் என்று உணர்ந்து கொண்டாளாம். தவறு நடந்துவிட்டது என்று தெரிந்திருந்தும் அதனின்றும் விடுபடாமல் ஆசை மிகுதியால் உடன்பட்டாள் என்று கம்ப நாட்டாழ்வாரே ஒப்புக் கொண்டுள்ள நிலையில், உண்மையைச் சொன்ன பேராசிரியர் இராமானுஜம் அவர்கள் எழுதிய கட்டுரையை தடை செய்தது - 2011 ஆம் ஆண்டில் இந்தியா சஞ்சரிக்க வில்லை; இன்னும் காட்டுவிலங்காண்டித்தன மதவெறி மனப்பான்மையுடன்தான் இருக்கிறது என்பதற்கான அடையாளம் ஆகும்.  நியாயமாக வால்மீகி இராமாயணத் தையும், கம்ப ராமாயணத்தையும் அல்லவா தடை செய்யக் கோர வேண்டும்.
வெட்கக்கேடு!  மகா மகா வெட்கக்கேடு!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...