Saturday, October 15, 2011

அலெக்சாண்டர்களை, அரிஸ்ட்டாட்டில்களை தேடுவோம்!


அலெக்சாண்டர்களை, அரிஸ்ட்டாட்டில்களை தேடுவோம்!


குரலற்றவர்களின் குரலாக நடத் தப்பட்டு வரும் மாத  ஏடு - இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் பிரதிநிதி களாய் இலக்கிய மணத்துடனும், சமூகநீதிக் கண்ணோட்டத்தோடும் நடத்தப்பட்டு வரும் சமநிலைச் சமுதாயம் (2011) செப்டம்பர் மாத இதழில், நாடறிந்த நயத்தக்க சொல் வன்மை பெற்றவரும், சீரியமொழி உணர்வாளரும் சிறந்த மனிதநேயரு மான பேராசிரியர் தி.மு. அப்துல்காதர்  அவர்கள் எழுதிய கிரணவாசல் தொடரில், சுண்ணமெழுகுவர்த்தி கள் என்ற தலைப்பில், ஆசிரியர் - மாணாக்கர் உறவுபற்றிய மிக அருமையான கட்டுரையை படித்துச் சுவைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர் களைப் போல வாணியம்பாடி இஸ்லா மிய கலைக் கல்லூரி பேராசிரியராக உள்ள அப்துல்காதர் அவர்களும் சொல்லாழத்தோடும் கருத்தோடும் பேசும் கொள்கையுள்ள இனிய நண்பர்.

அவரது கட்டுரையில் ஒரு பகுதி இதோ:

கிரேக்க மன்னன் ஃபிலிப்ஸ் அரச வையில் இருக்கிறான். அந்தப்புரத் திலிருந்து வந்த காவலன் ஒருவன் அரசனுக்கு மகன் பிறந்த செய்தியை அறிவிக்கிறான். மனமெல்லாம் மகிழ்ச்சி ததும்புகிறது. அருகிருந்த அமைச்சன், அரசே! தங்கட்குப்பின் தங்கள் தங்க ஆட்சியைத் தாங்கித் தொடர்ந்திட வாரிசு கிடைத்து விட் டதே என்று மகிழ்கிறீர்களா? அந்திவானச் செந்தழல் துண்டு போன்ற தங்கள் உதட்டில் பௌர்ண மிப் பிறை பளிச்சிடுகிறதே என்றான்.

அதற்கு ஃபிலிப்ஸ்,

அமைச்சரே! மரணம் தாகம் தணித்திடும்

ஓடை போன்ற
என் வாளைத் தூக்கவும்
மக்களுக்கு
வாழ்வின் தாகத்தை
வளர்க்கும்
வெண்கொற்றக் குடைக்கோலாம்
செங்கோலைத் தாங்கவும்
மகன் பிறந்தது
மகிழ்ச்சிதான்
இருந்தாலும்
அறிவில் பழுத்த என்
ஆசான்
அரிஸ்டாட்டில்
வாழும்போது
வாரிசாக அலெக்சாண்டர்
வம்சவிளக்கேற்ற வந்ததே
என் களிப்பை
இரட்டிப்பாக்குகிறது

என்றான். அலெக்சாண்டருக்கு அனைத்துக் கலைகளையும் அரிஸ் டாட்டில் பயிற்றுவிக்கிறார். ஆளுக்கு ஒரு சின்னப் பாறையைக் காட்டி, அதனை ஒரு மாதத்திற்குள் மறைந்து போக வேண்டும் என்ற நிபந்தனையோடு அரிஸ்டாட்டில் தன் மாணவர்களுக்குத் தேர்வு வைத்தார். ஒரு மாணவன் அப் பாறையைப் புதைக்க பள்ளம் தோண்டத் தொடங்கினான். மற்றொரு மாணவன் பாறையை மறைக்க வைக்கோல் போர் வாங்கச் சென்றான். மற்றொரு மாணவன் பாறையை மறைக்க விடியாத இருளுக்காகப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினான்.

ஆனால், அலெக்சாண்டர் அந்தப் பாறையில் சிற்றுளி கொண்டு சிலை வடிக்கத் தொடங்கினான். மாத முடிவில் ஆசிரியர் வந்து பார்த்தார். பள்ளத்தில் பாறையைத் தள்ள முடியாமல், புதைக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மாணவனையும், காற்று கலைத்துப் போட, வைக்கோலால் மூட முடியாமல் வருந்திக் கொண்டிருந்த மாணவனையும், இருளைப் பெற்று மறைக்க முடியாமல் கலங்கிக் கொண்டிருந்த மாணவனையும் பார்த்துச் சலித்த அரிஸ்டாட்டில், அலெக் சாண்டரைப் பார்த்தார். அவனுக்காக ஒப்படைக்கப்பட்டிருந்த இடத்தில் பாறைக்குப் பதில் அழகிய சிலை ஒன்று வடிக்கப்பட்டிருந்தது கண்டு மகிழ்ந்தார். பாறை சிலையில் மறைந்துவிட்டது.

அலெக்சாண்டரைப் பார்த்து, என்ன செய்தாய்? என்று வினவினார். அலெக் சாண்டர், தாங்கள் பாறையைக் காட்டிய வுடன் எனக்கு அந்தப் பாறை கல்என்று சொல்லுவதாகப்பட்டது. கற்றுக் கொண்டேன். பாறைக்குப் பதிலாகப் பாறைக்குள் இருக்கும் சிலை எனக்குத் தென்பட்டது. பாறையிலிருந்து நான் ஒரு புதிய உருவத்தைப் படைக்கவில்லை. அதி லிருந்து வேண்டாதவற்றை வெளியேற்றத் தொடங்கினேன். சிலை வெளிப்பட்டு விட்டது. பாறை மறைந்து விட்டது என் றான். அரிஸ்டாட்டில் மாணவர்களைப் பார்த்து, கல்வி என்பது, வெளியிலிருந்து உள்ளே திணிக்கப்படுவது அன்று. வேண்டாதது நீங்க, உமக்குள் இருந்து வெளிப்படுவது என்றார்.

இதை எழுதிவிட்டு, மேலும் மற்றொரு சம்பவத் தையும் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் அப்துல் காதர்.

இளவரசு பட்டம்  சூடிய அலெக்சாண்ட ரும், அவர் ஆசிரியர் அரிஸ்டாட்டிலும் ஒருமுறை ஒரு கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது. அதுவரை ஆசிரியரைப் பின் தொடர்ந்த அலெக்சாண்டர், ஆறு நெருங்கும் சமயம், முன்னே சென்று, ஆற்றினுள் இறங்கி, ஆசிரியரைக் கரையில் இருக்குமாறு சைகை செய்தான். ஆசிரியர் அலெக்சாண்டரைத் திரும்பி வருமாறு அழைத்தார். அலெக்சாண்டர் மெல்ல மெல்ல ஆற்றைக் கடந்து சென்று, பின்னர் அதே பாதையில் திரும்பி வந்து ஆசிரியரின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு அக் கரைக்குச் சென்றான். வாழ்வில் தன்னைக் கரையேற்றிய ஆசானை மாணவன் கரை ஏற்றி விட்டான். ஆசிரியர் அரிஸ்டாட்டில்

ஆற்றின் ஆழம் எவ்வளவு? நீரின் வேகம் என்ன? எங்கே பாறை? எங்கே பள்ளம்? எங்கே மேடு? என்று அறியாது உடனே எனக்கு முன்னே ஆற்றில் இறங்கி விட்டாயே? நாளை பட்டம் சூடவிருக்கும் உன்னை ஆற்றுக்குப் பலி தந்துவிட்டு, எங்ஙனம் உன் தந்தையின் முகத்தில் விழிப்பேன்? இப்படி முந்திச் செல்லலாமா? என கேட்டார். மாணவன் அலெக்சாண்டர்.

ஏதேனும் அசம்பாவிதம் எனக்கு நிகழ்ந்தால் ஆசிரியர் எச்சரிக்கையாக கரையில் இருக்கட்டும். சாவூருக்கு முந்திச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டட்டும். வாழ்வூரில் என் ஆசிரியர் பாதுகாப்பாக இருக்கட்டும். ஓர் அரசன் இறந்துபோனால், ஆயிரம் அரசர்களை என் ஆசான் உருவாக்கிவிடுவார்.

ஆனால், தங்களைப் போன்ற ஆசிரியரை இழந்தால் மீண்டும் ஓர் அரசனால் அப்படிப்பட்ட ஆசிரியரை உருவாக்க முடியுமா? என்றான். ஆசிரியரின் ஆனந்தக் கண்ணீர்த்துளி களே அலெக்சாண்டருக்கு அட்சதைத் துளிகள் ஆயிற்று, பூமத்திய ரேகையை யும், அட்சரேகையையும், தீர்க்க ரேகை யையும் தனது காலடிகளால் பூமியின் தேகத்தில் பதித்த ஒரு வீரனின் வெற் றிக்கு விதை, அவனது ஆசிரியர் அல்லவா!

ஆசிரியர்கள் எப்படி மாணவர்களைப்  பக்குவப்படுத்தி பாசமழை பொழிந்து, அவர்களுள், கல்விப் பயிர் வளர வழி வகை செய்தனர் என்பதும், மாணவர்கள் ஆசிரியர்கள் பால் எத்தகைய மரியாதை கலந்த உறவு முறையை உயிரினும் மேலானதாக மதித்தனர் என்பதும் இதன்மூலம் விளங்குகிறது.

இன்றுள்ள நிலையில், இந்த இரு பிரிவினர்களும் ஒருவரை ஒருவர் அறிந்த வர்களாகவோ, புரிந்து கொள்பவர்களா கவோ கூட இல்லாது. ஏனோதானோ என்று ஆண்டுகள் ஓடின. மதிப்பெண்கள் கூடின  என்ற அளவில்தான் உள்ளது!

தொண்டாக இருக்க வேண்டியது தொழிலாகக் கருதப்பட்டு, தொழிற் சங்கப் போராட்டத்தில் வரும் வேலை நிறுத்தம், கூலி உயர்வு - இந்த நிலைக்கு அல்லவா தாழ்ந்துவிட்டது என்று எண்ணும் போது நமக்கு மிஞ்சுவது வேதனைதான்!

அலெக்சாண்டர்களையும் அரிஸ்ட் டாட்டில்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிற நிலைதானே! என்றா லும் நம்பிக்கை இழக்காமல் அவர்களைத் தேடுவோம்; வெற்றியும் பெறுவோம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...