Saturday, October 15, 2011

ஸ்ரீராம்சேனா என்ற தாலிபன் கும்பல்!


உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் பட்டப்பகலில் உச்சநீதிமன்ற வளாகத்திலேயே தாக்கப்பட்டுள்ளார் என்கிற நிலை சாதாரண மானதல்ல இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்த வர்கள் ஸ்ரீராம் சேனாக்காரர்கள் எனப்படுபவர்கள். ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பல் என்பது பல பெயர்களில் நடமாடும் விஷப் பாம்புக் கூட்டம்.

மதக் கலவரத்தைத் தூண்டுதல், சிறுபான்மை மக்களைத் தாக்குதல் என்னும் பாசிச பசியெடுத்த வெறியர்கள்.

கருநாடக மாநிலத்தில் பிரமோத் முத்தாலிக் என்பவர் இந்த அமைப்பின் தலைவர். 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் எங்கு வேண்டுமானாலும் வகுப்புக் கலவரத்தை அரங்கேற்றுவோம் என்று மிக வெளிப் படையாக  சொன்னவர் இவர். இவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உண்டாம் - நடவடிக்கை இல்லை; காரணம் கருநாடகாவில் பி.ஜே.பி. ஆட்சி என்பதுதான்.

தெகல்கா மாத இதழும் ஹெட்லைன்ஸ் டுடே செய்தி தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய இரகசிய கேமிரா ஆபரேசன் மூலம் இந்த உண்மையை வெளியில் கொண்டு வந்தனர். ஓவியக் கண்காட்சி நடத்தி புகழ் பெற முயலும் ஓவியர் எனச் சொல்லிக் கொண்டு முத்தாலிக்கைச் சந்தித்தவர்கள் செய்தியாளர்களிடம்  இந்த உண்மையைக் கக்கினார். ஒரு குண்டர் படைத் தலைவன் போல அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் முத்தாலிக் செய்ததை இரகசிய கேமிரா மூலம் படம் பிடித்துள்ளனர்.

ஓவியக் கண்காட்சி நடந்து கொண்டிருக்கும்போது ஸ்ரீராம்சேனா தொண்டர்கள் திடீரெனத் தாக்குதல் நடத்துவார்கள். பின்னர் அதனை வகுப்புக் கலவரமாக மாற்றுவார்கள். அதன் மூலம் உங்கள் ஓவியங்களைப் பிரபலப்படுத்துவார்கள் என அவர் வாக்குறுதி கொடுத்தார். பெங்களூரில் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் சிவாஜி  நகரிலோ, சிட்டி மார்க்கெட்டிலோ வகுப்புக் கலவரத்தை நடத்திட  50 லட்சம் முதல் 70 லட்சம் ரூபாய் வரை முத்தாலிக் கேட்டுள்ளார். வகுப்புக் கலவரம் நடத்துவதை ஒரு தொழிலாகச் செய்யும் ஸ்ரீராம்சேனா.

2008ஆம் ஆண்டில் கருநாடகாவில் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்றனர். அவர்களுடைய பேருந்து வழிமறிக்கப்பட்டது. மாணவர்களும், மாணவி களும் ஒன்றாகப் பயணிப்பது சமய விரோதம் என்றனர், பிற மத மாணவர்களோடு இந்து சமய மாணவர்கள் எப்படி ஒன்றாகப் பயணம் செய்யலாம் என்று கூறித் தாக்கினார்.

மங்களூர் நகரின் இரவு விடுதிக்குள் புகுந்து அங்கி ருந்த இளம் பெண்களைத் தாக்கினர். சுருக்கமாகப் புரியும் படிச் சொன்னால், இவர்கள் இந்துத்துவா தாலிபன்கள் ஆவார்கள்.

இந்தக் கும்பல் இப்பொழுது இந்தியாவின் தலை நகரமான டில்லியிலே அடைகாத்து குஞ்சு பொரித்துள்ளது. இதனைத் தொடக்க நிலையிலேயே ஒடுக்கவில்லையென்றால் விளைவு விபரீதமாக முற்றி வெடிக்கும்.

நேற்று முதல் நாள் உச்சநீதிமன்ற வளாகத்திலே மூத்த வழக்கறிஞரைத் தாக்கினர் என்றால் நேற்று, கைது செய்யப்பட்ட வன்முறையாளர் களை டில்லியில் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றபோது, அன்னாஹசாரே பிரிவினருக்கும், ஸ்ரீராம்சேனா கும்பலுக்கும் இடையே கலவரம் வெடித்தது.

இந்தியாவின் தலைநகரிலேயே இந்தக் கேவலம்! காஷ்மீர் தொடர்பான ஒரு கருத்தை ஒரு வழக்கறிஞர் கருத்துத் தெரிவித்ததற்காக தண்டனை கொடுக்க இவர்கள் யார்?

அன்னாஹசாரே இப்பொழுது ஒரு முக்கியமான இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. பின்னணியில் ஊழல் ஒழிப்பு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டார். இப்பொழுது அந்த ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களே ஹசாரேக்கு எதிராகத் திரும்பியுள்ளனர்  காஷ்மீர் பிரச்சினையில் ஒரு கருத்துச் சொன்னதற்காக. ஊழலைவிட மதவாத வெறி மிக மோசமானது என்பதை இப்பொழுதாவது ஹசாரேயும் அவரைச் சார்ந்தவர்களும் உணருவதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பமாகும்.

அன்னாஹசாரேயின் நடவடிக்கைகளால் பலன்களை அறுவடை செய்யக்கூடியவர்கள் அரசி யலில் பி.ஜே.பி.யினர் என்று ஊடகங்கள் கணிப்புகளை வெளியிட்டன; அதற்கு நேர்மாறாக நடப்புகள் உள்ளன என்பது டில்லி சம்பவம் நிரூபித்து விட்டது.

சங்பரிவார் கும்பல் விடயத்தில் மத்திய அரசு மயில் தோகையால் வருடுகிறது! பாபர் மசூதி இடிப்பு நடந்து 19 ஆண்டுகள் உருண்டோடி விட்டன இப்படி குற்றவாளிகளுக்கு உரிய நேரத்தில் தண்டனை பெற்றுத் தராவிட்டால் தாலிபன்கள் தலை எடுப்பது தவிர்க்கப்பட முடியாதது - எச்சரிக்கை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...