Thursday, October 27, 2011

ஆனந்தவிகட தர்பார்?


கேள்வி: என்னதான் அறிவியல் முன்னேற்றம் கண்டாலும் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லையே?
பதில்: தீண்டாமை பிறப்பால் வருவது அல்ல. சுமார் 100 குழந்தைகளை, பிறந்தவுடன் சமூகத்திலிருந்து பிரித்து எடுத்துச் சென்று, ஒரு தீவில் வளருங்கள். தீண்டாமை என்றால் என்ன என்றே தெரியாமல் வளருவார்கள். தீண்டாமை என்பது பரம்பரையாகப் புகட்டப்படும் உணர்வு அறிவியல் முன்னேற்றத்தால் தீண்டாமை ஒழியாது. அரிச்சுவடியில் இருந்து கற்றுத்தர வேண்டிய விஷயம் அது.
- ஆனந்தவிகடன், 26.10.2011
சபாஷ், நல்ல அறிவுரைதான். பரம்பரையாகப் புகட்டப்படும் உணர்வு. தொடக்கத்திலேயே இடிக்கிறதே! தீண்டாமை பிறப்பால் வருவதல்ல என்பது தொடக்கம். அடுத்து தீண்டாமை பரம்பரையாகப் புகட்டப்படும் உணர்வு என்பது இடிக்கிறதே! அது சரி. பரம்பரையாகப் புகட்டியவர்கள் யார்? அதைக் கொஞ்சம் விளக்கி இருக்கக் கூடாதா?
இந்து மத சாஸ்திரங்களும், சங்கராச்சாரியார்களும் தீண்டாமை குறித்து என்ன கூறுகிறார்கள்?
தீண்டாமை க்ஷேமகரமானது என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறி இருக்கவில்லையா? (ஸ்ரீ ஜெகத்குருவின் உபதேசங்கள் - இரண்டாம் பாகம்).
அவர் வாக்கைத் தெய்வத்தின் குரல் என்பவர்கள் இந்த ஆனந்தவிகடன் பரபம்பரையினர்தானே!
பஞ்சமர்கள் கிட்டே வரக்கூடாது என்று சொல்லப்படுவதற்குக் காரணம் பரம்பரைப் பரம்பரையாக பிறப்பின் அடிப்படையில் வந்த புனிதமற்ற தன்மையை (Impurity) உலகத்தில் உயர்ந்த வகை சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும் அணிமணிகளால் நவீன காலத்திற்கேற்பப் பூட்டினாலும், மிக ஆழமாகப் பதிந்து போன (Originated from the Deep Rooted Contamination) பரம்பரையாக வந்த அந்தத் தீண்டாமையை ஒழிக்கவே முடியாது.
(‘‘The Hindu Ideal’’ -  சிருங்கேரி சங்கராச்சாரியார்)
ஞானபீடம் எனும் நாடகத்தை மாலி என்ற பார்ப்பனர் நடத்தினார்.
அந்த நாடகம்பற்றி கல்கி (9.11.2003) ஜெயேந்திரர் போட்ட தடை என்ற தலைப்பில் எழுதியது என்ன?
இதோ!
ஞானபீடம் என்ற ஒரு நாடகம்.
வெகு நாள்களுக்குப் பிறகு கொஞ்சம் சீரியஸான மேடை நாடகம் பார்த்த மகிழ்ச்சி, ஞானபீடம் பார்த்தபோது! சாதிக் கொடுமைக்கு ஆளாகும் நந்தன். இவரது மனைவிக்குப் பிரசவமாகிறது. அதே நேரத்தில் கொடுமைக்கார மிராசுதாரருக்கும் குழந்தை பிறக்கிறது. மருத்துவமனையில் குழந்தைகளை மாற்றி விடுகிறார் நந்தன்!
மாறுபட்ட சூழ்நிலையில் வளர்ந்து, நந்தனின் உண்மையான பிள்ளை வேத வித்வானான சங்கரனாகவும், மிராசுதாரரின் உண்மையான பிள்ளை ராஜா அய்.ஏ.எஸ். அதிகாரியாகவும் ஆகிவிடுகின்றனர். ராஜா, தான் காதலிக்கும் கிறிஸ்தவ மேலதிகாரியின் பெண்ணை மணப்பதற்காக, மதம் மாறக்கூடத் தயங்குவதில்லை. இந்தப் பின்னணியில் கிராமத்துக்கு விஜயம் செய்கிற ஒரு மடத்தின் தலைவர், வேதம், சாத்திரம் எல்லாம் படித்து ஞானப்பழமாக இருக்கிற சங்கரனைத் தம் மடத்தின் அடுத்த வாரிசாக எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார். நந்தன் இதைக் கேள்விப்பட்டுச் சுவாமிகளிடம் உண்மையைச் சொல்லி விடுகிறார். பிறப்பால் மட்டுமே ஒருவன் அந்தணன் ஆகிவிடுவதில்லை. அவரவர்க்குரிய அனுஷ்டானங்களை அனுசரித்தே ஆகிறார் என்று சொல்லி, தமது முடிவில் மாற்றமில்லை என்கிறார் சுவாமிகள்.
இதுதான் கல்கி கூறும் தகவல்:
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த பையனாக இருந்தாலும் வேதம் சாத்திரம் எல்லாம் படித்து ஞானப் பழமாக இருக்கிறான் சங்கரன். அவனை மடத்தின் அடுத்த வாரிசாக நியமித்தது. உள்ளபடியே புரட்சிதான், வரவேற்கத்தக்கது தான், நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டும் இருப்பதுதான்! சங்கர மடத்தில் அடுத்த வாரிசாக ஒரு தாழ்த்தப்பட்டவர் வரவேண்டும் என்று அழுத்தமாகக் குரல் கொடுத்துக் கொண்டும் வருகிறோம். ஜாதிப் பிரச்சினைப்பற்றி எங்கு சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பினாலும், இந்தக் கருத்தும் வெடித்துக் கிளம்புவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது! அதனுடைய தாக்கமாகக் கூட இருக்கலாம். ஞானபீடம் நாடகம்.
இப்பொழுதுதான் உச்சகட்டமான முக்கிய காட்சி. இந்த நாடகத்தை நடத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளாராம் காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி.
நாடக உலகில் பழுத்த அனுபவம் வாய்ந்த நாடக ஆசிரியர் - இயக்குநர் மாலியும் அவரது குழுவினரும் ஜெயேந்திரரைச் சந்தித்து மன்றாடியுள்ளனர்.
பத்தொன்பது தேதிகள் வாங்கிவிட்டேன்! இனிமேல்தான் செலவழித்த பணத்தை எல்லாம் சம்பாதித்தாக வேண்டும். சபாக்களிடம் நான் எதைச் சொல்லி கேன்சல் பண்ண முடியும் என்றெல்லாம் கெஞ்சி இருக்கிறார் மாலி.
நீங்கள் தொடர்ந்து நாடகத்தை நடத்துவோம் என்று முடிவு எடுத்தால் யாராவது ஸ்டே வாங்க வேண்டி வரும் என்றாராம் ஜெயேந்திரர். கல்கிதான் இதையெல்லாம் சொல்லுகிறது.
தீண்டாமை பிறப்பால் வருவதல்ல என்று வாய் நீளம் காட்டும்  ஆனந்தவிகடன் இதற்கு என்ன கூறப்போகிறது?
இந்து மதத்தின் தொழுநோயாக இருக்கக் கூடிய இந்தத் தீண்டாமை குறித்த கருத்து இந்து மதத்தின் மேல் மட்டத்திலிருந்து தொடங்கப்படவேண்டும். மூலத்தைவிட்டு விட்டு நிழலோடு விளையாடிப் பார்க்கிறது ஆனந்தவிகடன்கள்.
நாளைக்கே ஒரே ஒரு வரியை விகடன்களும், கல்கிகளும் எழுதட்டுமே பார்க்கலாம் -
மாலி நாடகக் கருத்தை வலியுறுத்தி எழுதுவார்களா?
இந்து மதத்தைச் சேர்ந்த, எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்து சாஸ்திரங்கள், வேதங்களைக் கற்றுத் தேர்ந்து, நல்ல பயிற்சி பெற்று ஒழுக்கமுடன் வளரும் எவரும் சங்கராச்சாரியார் ஆகலாம், இந்துக் கோயில்களில் அர்ச்சகராகலாம் என்று ஒரு வரி எழுதுவார்களா?
எழுதமாட்டார்கள் - காரணம் ஆனந்தவிகடனானாலும், கல்கியானாலும், துக்ளக் ஆனாலும் அவர்களுக்கு இருக்கும் பிறவி ஆதிக்கத் திமிரை விட்டுக் கொடுக்க மனசு வராது - வரவே வராது.
ஆனாலும், அதிமுற்போக்குத்தனத்தின் உச்சத்தில் ஊஞ்சலாடுவதுபோலக் காட்டிக் கொள்வார்கள் - ஆனந்தவிகடன் கேள்வி - பதில் அதனைத்தான் காட்டுகிறது.
ஆனால், அவர்கள் உள்ளத்தில் மட்டும் அந்த ஆரிய சனாதனத்தின் அப்பட்டமான ஆக்கிரமிப்பு!
வைதீகப் பார்ப்பனர்களைக் காட்டிலும், இந்த லவுகீகப் பார்ப்பனர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று தந்தை பெரியார் மட்டுமல்ல அண்ணல் அம்பேத்கரும் கூறியிருக்கிறாரே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...