Sunday, October 16, 2011

கல்வி மத்திய அரசின் பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு வர ஓர் மாபெரும் இயக்கத்தை இந்திய அளவில் நடத்த வேண்டும்


தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் பேராசிரியர் அ.இராமசாமி பேச்சு
சென்னை, அக்.15-கல்வி மத்திய அரசின் மாநில பட்டியலுக்கு வர இந்திய அளவில் ஒரு மாபெரும் இயக்கத்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் பேராசிரியர் அ.இராமசாமி கூறினார்.
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் கொண்டு வரக்கோரும் மாபெரும் மாநாடு-கருத்தரங்கம் 25.9.2011 ஞாயிறு அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணை தலைவர் பேராசிரியர் அ.இராமசாமி ஆற்றிய உரை வருமாறு:-
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர், தமிழர் தலவர், அன்பிற்குரிய ஆசிரியர் அவர்களே! நீதி அரசர் ஏ.கே.இராசன் அவர்களே! நாடாளுமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே! பேராசிரியர் நாகநாதன் அவர்களே!  பேராசிரியர்களே, நண்பர் களே, தாய்மார்களே அனவருக்கும் வணக்கம்!
ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
அறிவார்ந்த இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்து அதில் நானும் கலந்து கொள்கின்ற அருமை யான வாய்ப்பை வழங்கியமைக்காக ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி களைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
விசித்திரமான வழக்குகள்
இந்த மக்கள் நீதிமன்றம் விசித்திரமான வழக் குகள் பலவற்றை சந்தித்து இருக்கின்றது. அவற்றில் இதுவும் ஒன்று! நீதி அரசர் ஏ.கே. இராசன் அவர்கள் இந்த வழக்கில் சிறப்பான ஒரு தீர்ப்பை, நல்ல தீர்ப்பை வழங்கி இருக்கிறார் என்றே சொல்வேன்! அவர் தந்த தீர்ப்பிற்குப் பின், நாங்கள் விவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். இந்த வகையில் இது ஒரு விசித்திரமான வழக்கு! இன்னும் சொல்லப்போனால், மய்ய அரசு தேவையில்லாமல் வம்புக்கு இழுத்த வகையிலும், இது ஒரு விசித்திரமான வழக்கு!
அரசியல் அமைப்பே தேவையில்லை
இங்கே பேசிய நண்பர்கள் எல்லாம் அரசியல் அமைப்பைப் பற்றி விரிவாக எடுத்துச் சொன் னார்கள். நான் கேட்கின்றேன்; அரசியல் அமைப்பு என்று ஒன்று தேவைதானா? என்னைப் பொறுத்த வரையில் அரசியல் அமைப்பே தேவையில்லை என்றுதான் கூறுவேன்.
அரசியல் அமைப்பு என்றால் என்ன? A set of rules governing and regulating the three wings of the Government namely Executive, Legislature and Judiciary  நிருவாகத்துறை, சட்டமன்றம், நீதித்துறை இவை களின் செயல்பாடுகளை வரயறுக்கின்ற, ஒழுங்கு படுத்துகின்ற விதிகளின் தொகுப்புத்தான் அரசியல் அமைப்பு ஆகும்! இதை எழுதித்தான் வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை!
முதலிரவில்
எடுத்துக்காட்டாக, புதிதாகத் திருமணமான மணமக்களுக்கு அனைவரும் வாழ்த்துரைகளையும், அறிவுரைகளையும் கூறுவார்கள். ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்துப் போங்கள். அப்பொ ழுதுதான் குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்று அறிவுரை கூறுவார்கள். இதற்காக, முதலி ரவில்-கணவன் ஒரு நோட்டை எடுத்து மனைவி விட்டுக் கொடுக்க வேண்டியவை என்று வரிசைப் படுத்தியும்; மனைவி ஒரு நோட்டை எடுத்து கணவன் விட்டுக் கொடுக்க வேண்டியவை என்று வரிசைப்படுத்தியும் எழுதிக் கொண்டிருந்தால்-அதற்கு முடிவே கிடையாது. அதற்குள் முதலிரவு முடிந்துவிடும். குடும்பம் நடத்த முடியாது. எனவே விட்டுக் கொடுப்பவைகளெல்லாம் மரபுப்படியும் சம்பிரதாயப்படியும் அனுபவத்திலும் வருகின்றவை. அவற்றை எழுதிவைக்கவேண்டும் என்று அவசிய மில்லை!
அரசியல் அமைப்பே இல்லாத நாடு
அதைப்போன்றே அரசியல் அமைப்பும்! இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா? அரசியல் அமைப்பு இல்லாமல் அரசு நடைபெறுமா? என்று நீங்கள் கேட்கக்கூடும். அரசியல் அமைப்பே இல்லாத நாடு ஒன்று இருக்கின்றது. சனநாயகத்தின் தொட்டில் என்றும், சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆண்ட நாடு என்றும், வர்ணிக்கப்படுகின்ற இங்கிலாந்து நாட்டில் அரசியல் அமைப்பே இல்லை! அங்கு என்ன கெட்டுப்போய்விட்டது?
ஆனாலும், அரசியல் அமைப்பை எழுதி வைத்துக் கொள்கின்ற வழக்கம் தொன்று தொட்டு இருந்துதான் வருகின்றது. முதல் முதலாக எழுதப்பட்ட அரசியல் அமைப்பு கிரேக்க நாட்டில் ஏதேன்ஸ் நகரில் தான் இருந்தது. அந்த அரசியல் அமைப்பைக் கொடுத்தவர் சோலோன் என்பவ ராவார். He was called the law giver of Athens ரோம் நாட்டிலும், பிரான்சில் புரட்சிக்குப் பின்பு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது குடியரசு களின் போதும் எழுதப்பட்ட அரசியல மைப்பு இருந்தது. ஆனால், அவைகளெல்லாம் அரசிய லமைப்பு அவைகளால் உருவாக்கப்பட்ட வையல்ல.
1787இல் அரசியல் அமைப்பு
அப்படி, அரசியல் அமைப்பு அவையால் தற்காலத்தில் முதலாவதாக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு அமெரிக்காவிலேதான் இருக் கிறது. 1787-இல் பிளடெல்பியாவில், தாமஸ் ஜெபர்சன் தலைமையில் கூடிய அறிஞர் பெரு மக்கள் அரசியல் அமைப்பை உருவாக்கினார்கள். அது ஒரு கூட்டாட்சி அரசியல் அமைப்பு.
சோவியத் ரசியா உடைந்து போனது
உலகில், இன்று உள்ள கூட்டாட்சி நாடுகளில் கல்வி நிலைமை எப்படி உள்ளது? முந்தைய சோவியத் ரசியாவில் கல்வி, மய்ய அரசின் கட்டுப் பாட்டில் இருந்தது. அப்படி இருந்ததால் ரசிய மொழி மற்ற மாநிலங்களின் மீது திணிக்கப்பட்டு சோவியத் ரசியா உடைவதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இதை நான் சொல்லவில்லை. சோவியத் ரசியா உடைந்து போனது பற்றி ஆராய்ச்சி செய்த போலந்து நாட்டுப் பேராசிரியர் பிரிஷ்கி என்பவர்தான் கூறுகின்றார். கனடா, செர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கல்வி மாநிலப்பட்டியலிலேயே இருக்கிறது. மய்ய அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அமெரிக்கா வின் அரசியல் அமைப்பில் கல்வி-Education -என்ற வார்த்தையே இல்லை. என்றாலும், அகில உலகத் திலும் தரமான கல்வியை அமெரிக்காதான் தரு கின்றது. அதனால்தான் அனைத்து நாடுகளில் இருந்தும் மாணவர்கள் அங்கு சென்று படிக் கின்றார்கள்.
அமெரிக்கா-இங்கிலாந்து
ஒன்றை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பே இல்லாத இங்கி லாந்தில்-கல்வி நன்றாக இருக்கிறது! அரசிய லமைப்பு இருந்தாலும், அதில் கல்வி என்ற வார்த்தையே இல்லாத அமெரிக்காவில்-கல்வி நன்றாக இருக்கிறது! மாநிலங்களில் கல்வியை வைத்துள்ள அரசியலைமப்பு உள்ள ஆஸ்திரே லியாவில், செர்மனியில், கனடாவில்-கல்வி நன்றாக இருக்கிறது! ஆனால், கல்வியை மய்ய அரசில் வைத்துக் கொண்டு அதிகார ஆட்டம் போட்ட ரசியா உடைந்து சிதறிப் போய் விட்டது. இது ஒரு எச்சரிக்கை! இது ஒரு பாடம்! என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நேரு அங்கீகரித்ததை இந்திரா மாற்றி விட்டார்
நம்முடய அரைகுறை கூட்டாட்சியில், அதாவது quasi federation என்று கூறப்படுகின்ற நம்முடைய அரசியல் அமைப்பில், கல்வி எப்படி இருக்கின்றது? 1919, 1935 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசு சட்டங்கள் கல்வியை மாநிலப்பட்டி யலிலேயே சேர்த்திருந்தன. 1950-இல் நடைமுறைக்கு வந்த புதிய இந்திய அரசியல் அமைப்பிலும் கல்வி மாநிலப்பட்டியலிலேயே சேர்க்கப்பட்டிருந்தது. 1950 முதல் 26 ஆண்டுகள் காலம் நடைமுறையில் இருந்த இந்த ஏற்பாட்டை, கல்விக் குழுக்கள் அத்தனையும் இது அப்படியே இருக்கவேண்டும்; இந்த நிலை தொடரவேண்டும் என்று கூறியதை பண்டித சவகர்லால் நேரு அங்கீகரித்ததை, அவருடைய மகள் இந்திராகாந்தி மாற்றிவிட்டார். 1976-இல் நெருக்கடி நிலை நாட்டில் இருந்தபோது, கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இரண்டு தவறுகள்
இதிலே இரண்டு தவறுகள் நடந்துவிட்டன. ஒன்று-கல்வியை மாற்றிய முறை தவறானது. இட்லருடைய பாராளுமன்றமும், முசோலினியின் சட்டமன்றமும் எப்படி அடிமைத்தனத்தில் இருந்தனவோ, அதைப்போன்றுதான் நெருக்கடி காலத்தில் இந்திரகாந்தியின் நாடாளுமன்றமும் செயல்பட்டது. எனவே, சனநாயக முறையில் விவாதம் எதுவும் நடத்தப்படாமல், கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இரண்டாவ தாக, இப்படி மாற்றம் செய்வதற்கு முன்னதாக கல்வியாளர்களையோ, அறிஞர் பெருமக்களையோ மய்ய அரசு கலந்தாலோசிக்கவில்லை. இப்படி, மாபெரும் இரண்டு தவறுகளைச் செய்துதான் கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றி விட் டார்கள்.
1976-இல் இந்த மாற்றம் கொண்டுவந்து இன்றைக்கு 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் என்ன நன்மை கிடைத்தது? என்ன தீமை விளைந்தது? நாம் அனுபவத்தில் ஆய்ந்து பார்க்க லாம். அதைப் பற்றிய புத்தகம் ஏதாவது கிடைக் குமா? என்று தேடிப்பார்த்தேன். ஆனால் ஒன்று கூட கிடைக்கவில்லை. இந்திய அரசியல் அமைப்பைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகங்களில், ஒரு சிலவற்றில் மட்டுமே இந்த மாற்றம் பற்றி மேலோட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் இந்த மாற்றத்தை வரவேற்றும்; இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்றும் தான் குறிப்பிட்டுள்ளார்கள். ஒருவர் கூட இதன் குறபாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதவில்லை என்பதை நீங்கள் மனதிலே வைத்துக் கொள்ள வேண்டும்.
டாக்டர் குமரன் புத்தகம்
எனவேதான், சென்னைப் பல்கலைக்கழகத்தின் கல்வித்துறைத் தலைவர் டாக்டர் குமரன் அவர்களிடத்திலே கல்வி மாநிலப் பட்டியலி லிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது குறித்து ஆய்வு செய்து, ஒரு புத்தகம் எழுதித் தருமாறு நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவரும் அந்தப் பணியைத் தொடங்கிவிட்டார். விரைவிலேயே அந்தப் புத்தகம் வெளிவர இருக்கின்றது.
கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றப் பட்டதற்கான காரணங்கள்  To maintain uniformity and to ensure quality of education  என்று கூறப்பட்டது. ஒரே சீரான கல்வி, தரமான கல்வி தருவதுதான் நோக்கம் என்று தெரிவித்தார்கள்; ஆனால், நடந்தது என்ன?
கலைஞரை அழைத்து இதே பெரியார் திடலில்
நாடெங்கும் நவோதயா பள்ளிகளைத் திறந்து இந்தியைத் திணிப்பதற்கான முயற்சிகள்தான் நடைபெற்றன. எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. நவோதயா பள்ளியை எதிர்த்துக் கலைஞரை அழைத்து இதே பெரியார் திடலில் மாநாடு நடத்தி நவோதயா பள்ளியையும், இந்தி திணிப்பையும் தடுத்து நிறுத்தியவர்-நம்முடய ஆசிரியர் அவர்கள் தான்! பாரதிய சனதாக் கட்சி ஆட்சியில், NCERT தயாரித்த வரலாற்றுப் புத்தகத்தில்-ஆரியர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்றும், திராவிடர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் எழுதப்பட்டு, அந்தத் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டன. எனவே, ஒரே சீரான கல்வி என்ற அடிப்படையில் தவறான கருத்துக்களையே பரப்ப முயன்றனர். உயர்கல்வியை பொறுத்தவரையில் ஒரே சீரான கல்வி தேவையும் இல்லை; முடியவும் முடியாது. பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி பெற்றவை. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் தனித்தனியான பாடத்திட்ட குழுக்கள் உள்ளன. அவை தங்களுக்கென்று தனியாகப் பாடத் திட்டங்கள் வகுக்கும் பொழுது, ஒரே சீரான கல்வி எப்படி சாத்தியமாகும்?
தங்கம் பாளம் பாளமாக எடுக்கப்பட்டது
அடுத்தபடியாக, தரமான கல்வியைத் தருவதற் காகத்தான் கல்வியைப்  பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதாகக் கூறினார்கள். ஆனால், நம்முடைய அனுபவம் அப்படி இல்லை. மய்ய அரசால் தரமான கல்வி தரப்பட்டதாகக் கூறமுடியவில்லை. மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுவதற்கு Council of India -விடமும், பொறியியல் கல்லூரி தொடங்கப்படுவதற்குMedical AICTE யிடமும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தொடங்கப்படுவதற்கு   NCTE-யிடமும் அனுமதி வாங்கவேண்டும். இந்த அமைப்பு கள் எல்லாம் மய்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் தகுதி கள் ஆகியவற்றைப் பார்த்துத்தான் இவர்கள் அனுமதி தருகிறார்கள் என்று சொல்ல முடியுமா? எதைப் பார்க்கிறார்கள்? எப்படி அனுமதி தரு கிறார்கள்? என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். Medical Council of India--வின் அதிகாரி ஒருவர் வீட்டில் தங்கம் பாளம், பாளமாக எடுக்கப்பட்டதாக 8 மாதங்களுக்கு முன்னால் செய்தி வந்தது. கோலார் சுரங்கத்தில் இல்லாத தங்கம், அவர் வீட்டில் எப்படி வந்தது? இவையெல்லாம் மய்ய அமைப்புகள் தரமான கல்வியைத் தருவதற்கான அடயாளங்களா?
பல்கலைக் கழகங்கள் என்று கூற முடியுமா?
UGC யும் அந்த அளவில்தான் இருக்கின்றது. நம்முடைய தமிழக அரசுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் தொலைநிலைக் கல்வியை வழங்குவதில் கட்டுப்பாடுகளை UGC விதித்துள்ளது; அவைகளை நடத்தமுடியாத நிலைக்கு நெருக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் மய்ய அரசு அயல்நாட்டு பல் கலைக்கழகங்களுக்குக் கதவைத் திறந்துவிடுகிறது. அது என்ன நியாயம்? மாணவர்களைக் கொள்ளை யடிக்கத் தருகின்ற அனுமதிச்சீட்டுதானே அது? இன்னும் சொல்லப்போனால் அந்த அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் சில அந்தந்த நாடுகளில், வீடுகளிலும் அல்ல ஓட்டல்களிலும்தான் அலுவல கங்களை வைத்து இருக்கிறார்கள். அவைகளைப் பல்கலைக்கழகங்கள் என்று கூறமுடியாது. இதுதான் தரமான கல்வியைத் தர UGC செய்யும் முயற்சியா?
மய்ய அரசின் கீழ் இயங்குகின்ற மய்யக் கல்வி நிறுவனங்களில் தவறுகள் அதிகமாக இருக்கின்றன. அதனால் கல்வியின் தரமும் குறைந்து போனது. இவற்றை மேம்படுத்துவதற்காக சாம் பிட்ரோடோ தலைமையில் அமைக்கப்பெற்ற (National Knowledge Commission)  தேசிய கல்வி ஆணையம், (National Commission for Higher Education)
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய ஆணையம் ஒன்றை நிறுவப் பரிந்துரை செய்தது. துணைவேந்தரை நியமிக்க மற்ற மய்ய அமைப்புகள் தவறுகள் செய்கின்றன என்பதற்காக கொண்டு வரப்படும் இந்தப் புதிய தேசிய ஆணையம், அவ்வாறு தவறு செய்யாது என்பது என்ன நிச்சயம்? இந்த உயர்கல்வி தேசிய ஆணையத்தின் வரைவுச் சட்டத்தில் பல குறை பாடுகள் உள்ளன. அதில் ஒன்றை மட்டும் குறிப் பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன். பல்கலைக் கழகத்து துணைவேந்தராக ஆவதற்கு விரும்புகின்ற தகுதி படைத்தவர்களின் பதிவேடு ஒன்று இந்த ஆணையத்தில் வைக்கப்பட்டிருக்கும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமிக்கப்பட வேண்டும் என்றால், தமிழக அரசு நியமிக்க முடியாது. அதற்குப் பதிலாக தேசிய ஆணயத்திற்கு சென்னைப் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின், தேசிய ஆணையம் அய்ந்து பேர் கொண்ட ஒரு பட்டியலை அனுப்பிவைக்கும். அதிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்க வேண்டும். ஆணையம் அனுப்பும் அந்தப் பட்டிய லில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லாமல் இருக்கலாம். சமூக நீதியும் பாகாக்கப்படாமலும் போய்விடும். எனவே, மொத்தத்தில் நான்கு குற்றசாட்டுகளை நான் கூற விரும்புகிறேன்.
1.மய்ய அரசின் கீழ் இயங்கும் மய்யக் கல்வி நிறுவனங்கள் தவறுக்கும் தவறான தவறுகளச் செய்து கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி நான் விரிவாகக் கூற விரும்பவில்லை.
2.அந்தத் தவறுகளின் காரணமாகத் தகுதியில்லாத கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுக் கல்வித் தரம் குறைந்துபோய்விட்டது.
60 ஆண்டுகளாக உயர் ஜாதிக்காரர்கள்
3.மய்ய அரசு கல்வி நிறுவனங்களில் உள்ள தலைமை பொறுப்புகள் Chairman, Director, Vice Chancellor  போன்ற பதவிகளில் கடந்த 60 ஆண்டுகள் காலத்தில் உயர்  சாதிக்காரர்களே அதிகம் நியமிக்கப் பட்டனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைவான அளவே நியமிக்கப்பட்டனர். எனவே சமூக நீதி மறுக்கப் பட்டுள்ளது.
4.இந்த மய்யக் கல்வி நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகிக்கத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் களுக்கு கடந்த 60 ஆண்டுக் காலத்தில் வாய்ப்புகள் தரப்படவில்லை. எனவே, இந்தக் குறைகள் எல்லாம் களைய வேண்டும் என்றால், கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து எடுத்து மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
டில்லி ஏகாதிபத்தியம்
தமிழ் ஈழப்போரில் நாம் தோற்றுப் போய் விட்டோம். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் ஒரு முக்கியமான காரணம் உணர்ச்சிமயமான அந்தப் பிரச்சினையை தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி நாம் எடுத்துச் செல்ல தவறிவிட்டோம். இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடியில் தமிழர்கள் 7 கோடி மட்டும்தான்; அதாவது நாம் 7 விழுக்காடுதான் இருக்கின்றோம். நம்முடைய கோரிக்கைக்கு எஞ்சியுள்ள 93 விழுக்காடு மக்கள் செவி சாய்க்க வேண்டும். 93 விழுக்காடு இல்லா விட்டாலும், ஒரு 30 அல்லது 35 விழுக்காடு அளவிற் காவது நாம் மக்கள் கருத்தைத் திரட்டவேண்டும். அப்பொழுதுதான் டில்லி ஏகாதிபத்தியம் கேட்கும்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம்
இது இயலுமா, நடக்குமா? என்று நீங்கள் கேட்கலாம். 1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட் டத்தை நாங்கள் தொடங்கியபோது தமிழ்நாட் டோடு நின்றுவிடவில்லை. ஆந்திராவிற்கு ஆட்களை அனுப்பினோம். அஞ்சல் மூலம் செய்திகளை கேரளாவிற்கும், கருநாடகாவிற்கும் அனுப்பினோம். ஏன்? வங்காளத்தில் இருந்து விபின் சக்கரவர்த்தி என்கிற இடதுசாரி மாணவர் எங்களோடு தொடர்பு கொண்டார். எனவே இந்தி எதிர்ப்புப் போராட்டம் தென்னிந்தியா முழுவதிலும் நடைபெற்றதுடன் வங்காளம், ஒரிசா, அசாமிலும் எதிரொலித்தது. அதனால், டில்லி ஏகாதிபத்தியம் கொஞ்சம் அசைந்து கொடுத்தது. ஆட்சி மொழிச் சட்டமும் திருத்தப்பட்டு, ஆங்கிலம் இன்றளவும் துணை ஆட்சி மொழியாக நீடிக்கிறது. மொழிப் போராட்டத்தில் இன்னும் முழு வெற்றியை நாம் பெறவில்லை; எனினும் ஓரளவு பாதுகாப்பைத் தேடிவைத்து இருக்கிறோம்.
மாபெரும் இயக்கம் தேவை எனவே, மற்ற மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளையும் அகில இந்திய அளவில் மாநில சுய ஆட்சி கோரிக்கைக்கு வலு சேர்க்கின்ற இடதுசாரி கட்சிகளையும் இணைத்து ஒரு மாபெரும் இயக்கம் நடத்த வேண்டும். 1980-களில் மாநில சுயாட்சி கோரிகைக்காக காஷ்மீரத்திலும், வங்காளத்திலும் மாநாடுகள் நடத்தப்பட்டது போல மீண்டும் இயக்கம் தொடங்கப்பட வேண்டும். அப்படி யெல்லாம் செய்யவில்லை என்றால் தில்லியில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறினாலும், வசனம் மாற வில்லை; நம் விசனம் தீரவில்லை என்ற நிலைதான் தொடரும். எனவே, நம்முடைய கோரிக்கை நிறைவேற-அகில இந்திய அளவில் ஓர் இயக்கத்தை அன்பிற்குரிய ஆசிரியர் அவர்கள் தொடங்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு என் உரையை நிறைவு செய்கின்றேன். வணக்கம்!           -இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...