Monday, October 17, 2011

ஊழலைவிட ஆபத்தான மதவாதம்!

 
பிறர்மீது ஊழல் புகாரைப் பெரிதுபடுத்தி - பிரச்சாரம் செய்து அதன்மூலம் கிடைக்கும் அரசியல் லாபத்தை ஈட்டி, மத்தியில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று மனக்கோட்டை கட்டியிருந்த பி.ஜே.பி.யினர்மீது இப்பொழுது இடி விழுந்திருக்கிறது.

அதுதான் கருநாடக மாநில முன்னாள் முதல் அமைச்சரும் பிஜேபியின் முக்கிய தலைவர்களுள் ஒருவருமான எடியூரப்பா, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச் சாலைக்கு அனுப்பப்பட்டதாகும்.

அதுவும் ஊழலை ஒழிப்பதற்காகவே பிஜேபியின் முக்கிய தலைவரான எல்.கே. அத்வானி ரதயாத்திரை புறப்பட்டு இருக்கும் இந்தக் கால கட்டத்தில், பிஜேபியைச் சேர்ந்த முன்னாள் முதல் அமைச்சர் கைது செய்யப்பட்டு இருப்பது மக்கள் மத்தியில் கேலியான சிரிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.

ஊழலை ஒழிக்கப் புறப்பட்டதாகக் கூறப்படும் அன்னாஹசாரே கம்பெனியும் இதன் மூலம் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

வட மாநிலத்தில் சில மாநிலங்களில் நடத்த தேர்தலில் ஊழலை மய்யப்படுத்தி அன்னாஹசாரே பிரச்சாரம் செய்திருக்கிறார். ஊழல் என்பது ஒரு கட்சிக்குச் சொந்தமானது அல்ல என்பது நிருபண மாகிவிட்டது. இந்த நிலையில் அன்னாஹசாரே கேள்விக்கு ஆளாக்கப்படுகிறார்.

வெறும் ஊழல் ஒழிப்பதுதான் அவரது நோக்கம் என்பது உண்மையானால், இடையூரப்பா கைதை வரவேற்று அறிக்கை வெளியிட வேண்டும். இதுவரை அவர் வெளியிடாதது - அவரது நம்பகத் தன்மையைக் கேள்விக்குறியாக்கி விட்டது - அம்பலப்படுத்தி விட்டது.

பி.ஜே.பி.யினர் ஊழலில் ஈடுபட்டாலும் சரி, மதவாத அடிப்படையில் மக்கள் மத்தியில் வன்முறையைக் கிளப்பிவிட்டாலும் சரி  - அதற்கு அரசியல் சாயம் பிஜேபி தரப்பில் பூசப்படுகிறதே தவிர, உண்மையை ஒப்புக்கொள்ளும் அறிவு நாணயம் கிடையவே கிடையாது.

நல்லவர் - உத்தமர் என்று பிரச்சாரம் செய்யப்பட்ட வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, அவருடைய மருமகன்மீது எத்தனையோ குற்றச்சாற்றுகள் எழுப்பப்பட்டன. அவற்றின்மீது எந்த அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டது?

வாஜ்பேயி 13 நாள் பிரதமராக இருந்தபோதே என்ரான் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட உரிமம் தொடர்பாகவே குற்றச்சாற்று எழுந்ததே - மறுக்க முடியுமா?

சவப்பெட்டி ஊழல், கட்சியின் தலைவ ரான பங்காரு லட்சுமணன் வாங்கிய லஞ்சப் பணம் தொலைக்காட்சி வழியாக அம்பலப்படுத்தப்பட்டதே!

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கக்கூட பி.ஜே.பி. உறுப்பினர்கள் பணம் பெற்றுக் கொண்டதும் வெளிச்சத்துக்கு வரவில்லையா?
இந்த நிலையில் ஊழல்  ஒழிக்கப்படுவதற்காக பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொல்லுவது கேலிக்கூத்தும், முரண்பாடும் ஆகும்.

இதற்கு மேலும் கூடுதலாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. ஊழலைப் பூதாகரப்படுத்தி மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை அகற்றி விட்டு, பி.ஜே.பி.யைக் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பது நுனிக் கிளையில் ஏறிக் கொண்டு அடி மரத்தை வெட்டுவதாகும்.

பி.ஜே.பி.யினர் ஆட்சிக்கு  வர நினைப்பது ஊழலை ஒழிப்பதற்காக அல்ல! ஊழலைக் காரணம் காட்டி இன்றைய மத்திய அரசை அகற்றிவிட்டு, ஆட்சியைப் பிடித்து தங்களின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை (அஜண்டா) செயல்படுத்தத்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

குஜராத்தில் அவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டதாக நினைக்கிறார்கள். இந்தியாவையே குஜராத் பாணியில் மத அடிப்படைவாதத்தின் அடிப்படையில்  மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் இரகசியத் திட்டம்!

ஊழலைவிட மிகவும் ஆபத்தானது மதவாதம்! மதவாதம் மக்களைப் பிளவுபடுத்தி, அன்றாட வாழ்க் கையையே வன்முறை ரணகளமாக ஆக்கக் கூடிய தாகும்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...