Thursday, October 27, 2011

தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:


இதுவரை உயிர் வாழ்ந்திருந்த விலங்குகளிலேயே மிகவும் ஆபத்தானது எது?

இதுவரை உலகில் இறந்து போன மனிதர்களில் பாதிக்கும் மேற்பட்டோர்,   சுமார் 4500 கோடி மக்கள் பெண் கொசுக்களின் கடியினால் இறந்து போயுள்ளனர். (ஆண் கொசுக்கள் தாவரங்களை மட்டுமே கடிக்கும், மனிதர்களைக் கடிக்காது.)
மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு காய்ச்சல்,  பிளேரியாசிஸ் என்னும் ஒட்டுண்ணி நோய், யானைக்கால் நோய், மூளைக் காய்ச்சல் நோய் உள்ளிட்ட இறப்பைத் தரும்  நூற்றுக்கணக்கான நோய்க் கிருமிகளை இக்கொசுக்கள் எடுத்துச் சென்று பரப்புகின்றன. இன்றும் கூட, பன்னிரண்டு விநாடிகளுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அவை மனிதரைக் கொன்று கொண்டிருக்கிறன.

19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, கொசுக்கள் ஆபத்தானவை என்பதை எவருமே அறிந்திருக்கவில்லை என்பது வியப்பைத் தருவதாகும். கொசு மேன்சன் என்று அழைக்கப்பட்ட ஆங்கிலேய மருத்துவர் சர் பாட்ரிக் மேன்சன் என்பவர் யானைக்கால் நோய் கொசுக்கடியினால் ஏற்படுகிறது என்பதை 1877 இல் மெய்ப்பித்தார்.  மலேரியா காய்ச்சலும் கொசுக்கடியால் ஏற்படுவதாக ஏன் இருக்கக் கூடாது என்பது 16 ஆண்டுகள் கழிந்த பின் 1894 இல்தான் அவருக்குத் தோன்றியது. இந்தக் கருத்து சரியானதுதானா என்பதை சோதித்துப் பார்க்கும்படி தனது மாணவரான, இந்தியாவில் இருந்த  இளம் மருத்துவர் ரொனால்ட் ராஸ் என்பவருக்கு அவர் தூண்டுதல் அளித்தார்.

தங்களின் எச்சில் மூலம் பெண் கொசுக்கள் எவ்வாறு பிளாஸ்மோடியம் என்ற மலேரியாக காய்ச்சல் நோய்க்கிருமியை பரப்புகின்றன என்பதை முதன் முதலாக எடுத்துக் காட்டியவர் இந்த மருத்துவர் ராஸ்தான்.  இக்கோட்பாட்டை அவர் பறவைகளைப் பயன்படுத்தி சோதனை செய்து பார்த்தார்.  மேன்சன் ஒரு படி மேலே சென்றார். இந்தக் கோட்பாட்டின் படி மனிதர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை, ரோமில் இருந்து சுங்கச் சோதனையில் இருந்து தவிர்ப்பு அளிக்கப்பட்டிருந்த ராஜாங்க தபால்கள் வரும் பையில் அனுப்பி வைக்கப்பட்ட  கொசுக்களைக் கொண்டு அவர் தனது சொந்த மகன் மீதே இந்த மலேரியா காய்ச்சல்  பரிசோதனையை மேற் கொண்டார். (நல்ல வேளையாக உடனே கொய்னா மருந்து கொடுத்ததினால், அந்த பையன்  குணமடைந்தான்.)

1902 இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ராசுக்கு வழங்கப்பட்டது. பேரரசரின் அறிவியல் சங்கத்தின் உறுப்பினராகத் (Fellor of Royal Society)  தேர்ந்தெடுக்கப்பட்ட மேன்சனுக்கு நைட் (Knight)  பட்டம் வழங்கப்பட்டது. வெப்பமண்டல நோய்களின் மருந்துக்கான லண்டன் பள்ளியை (London School of Tropical Medicines) அவர் தோற்றுவித்தார்.

நாமறிந்தவரையில் 2,500 வகையான கொசுக்கள் உள்ளன. இவற்றில் 400 கொசுக்கள் அனோபெலிஸ் என்ற குடும்பத்தைச் சார்ந்தவை. இவற்றில் 40 வகை கொசுக்கள் மலேரியா காய்ச்சல் கிருமியைப் பரப்புபவையாகும்.

தங்களின் முட்டைகளைப் பாதுகாக்க தாங்கள் கடித்து உறிஞ்சிய ரத்தத்தைப் பெண் கொசுக்கள் பயன்படுத்துகின்றன. இந்த முட்டைகளில் இருந்து லார்வா புழுக்கள் பொறிக்கப்படுகின்றன. பெரும்பாலான பூச்சிகளைப் போலன்றி, டம்ப்ளர் (Tumbler) என்றழைக்கப்படும் கொசுக்களின் இந்தக் கூட்டுப் புழுக்கள் நீந்தும் செயல்திறன் பெற்றவையாகும்.

பெண் கொசுக்களை விட ஆண் கொசுக்கள் அதிக ஒலியில் ரீங்காரமிடும். இயல்பாக எழுப்பப்படும் இந்த ஒலியின் காரணமாக அவற்றால் பாலியல் தூண்டுதல் பெற இயல்கிறது.

வியர்வையால் உடலில் ஏற்படும் ஈரம், பால், கரிமிலவாயு, உடல் சூடு, இயக்கம் ஆகியவற்றால் கவரப்படும் பெண் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கின்றன. அதிக வியர்வை வெளிப்படுத்துபவர்களையும், கர்ப்பிணிப் பெண்களையும் கொசுக்கள் கடிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

மொஸ்கொடோ (Mosquito) என்ற சொல்லுக்கு ஸ்பானிய மொழியிலும், போர்த்துகீசிய மொழியிலும் சிறிய ஈ என்று பொருள். (நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...