Saturday, October 15, 2011

தெனாலிராமன் கதையில் பார்பரும் - பார்ப்பனரும்


தெனாலிராமன் கதையில் பார்பரும் - பார்ப்பனரும்


- மு.வி.சோமசுந்தரம்
மக்கும் குப்பைத்தொட்டியில் போடத் தகுதிபெற்ற ஒரு கழித்துக் கட்ட வேண்டிய ஒரு பொருளாக மதம் மாறி வருகிறது. உலகில் அய்ந்து நாட்டு மக்கள் மதம் என்ற ஒன்று இல்லாமல் வாழலாம் என்ற மனநிலையில் உள்ளனர் என்ற செய்தி மனித இனம் தெளிவு பெற்று வருகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. எழு ஞாயிற்றின் ஒளி மேலும் வீசட்டும்.
மதம் ஒன்று இருப்பதால், கூடு விட்டு கூடு தாவுதல் விளையாட்டும் நடந்து வருகிறது. மேலை நாட்டவர் காலனி ஆதிக்கத்தை விரிவுபடுத்த முனைந்தபோது மதமாற்றம் நடை பெற்றது வழக்கமான ஒன்றாக இருந்தது.
இந்தியாவுக்கு என்று சொந்தம் கொண்டாடப்படும் இந்து மதம் தனிவிதமான அச்சில் வார்க்கப் பட்டது. சிலந்திக்கூடு கட்டுவதுபோல் ஒரு சுரண்டல் வழி வகுத்துக் கொண்ட மதம் இந்து மதம். சுரண்டப்படுபவர்கள், வாழ்வில் சுகம் என்ன என்பதை எண்ணிப்பார்க்க முடியாத ஒரு கட்டமைப்பு சமூகத்தை வளர்த்துவிட்டது இந்து மதம். காலச்சக்கரம் சுழலச் சுழல, புதுப்புது சூழ்ச்சி முறைகளைக் கையாண்டார் கள் என்பது வரலாறு, இந்த வர லாற்று உண்மைகளை, எளிய மொழியில் வீழ்ந்துபட்ட சமுதாய மக்களிடையே எடுத்து வைத்தார் தந்தைபெரியார். அவர் தம் கருத் துகள் நத்தை வேகத்தில் மக்களைச் சென்றடையத் தொடங்கியது. சிலர் விழித்துக் கொண்டனர். விழித்த கண்களையும் கட்டுக்கதைகள் கூறி மூடவைத்தனர். கட்டுக் கதைகளுக்கு கட்டுப்படாமல் கண் விழித்துக் கொண்டே, வஞ்சகர் வலைக்கு பலியாகாமல், தனிப்பாதையில் செல்ல துணிவைப் பெற்று வருவது கண்கூடு.
சிலந்திக்கூடு சதியில், ஜாதிப் பிரிவுப் பசை நன்றாகவே வேலை செய்கிறது. இதனைத் தெளிவுபடுத் தும் வகையில் கருநாடக மாநிலத்துச் செய்தி ஒன்று 21.8.2011 தேதி தி இந்து இதழில் வந்துள்ளது. சந்தன்கவுடா என்பவர் தன்னுடைய கட்டுரையில் இதனைத் தெரிவித்தார்.
ஊழல் புழலில் நீந்தி பதவி இழந்து மூழ்கிப்போன கருநாடக அரசு முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா, அவர் பதவி விலகுவதற்கு ஒரு வாரத்துக்கு முன் கருநாடக சாவித்த சமாஜ உறுப்பினர்கள், அந்த மாநிலத் தின் பாரம்பரிய முடிதிருத்துவோர் (BARBER) ஜாதியைச் சேர்ந்தவர்கள். புராணக்கதைப்படி, கடவுள்களுக்கு முடிவெட்டும் வேலை (இருபால ருக்கும் முடிவெட்டும் வேலையோ? தெரியாது. இப்படி ஒரு துறை கடவுள்களுக்கு உண்டு என்பதும், அதற்கு ஒரு முனிவர் உண்டு என்பதும், எனக்கு புதிய செய்தி), பார்பர் என்ற சொல் பாரசீகச் சொல், (பார்பர், நாவிதர் என்ற சொற்கள் பயன்படுத் தப்பட்டதுண்டு, தமிழ்நாட்டில்). எடியூரப்பா, அந்த சமாஜ் கூட்டத்தில், ஒரு உறுதிமொழி வழங்கினார். இந்த பார்பர் சாதி மக்களை ஹஜ்ஜம் (HAJJAM) என்று அழைப்பது வழக்கத்தில் உள்ளது. இந்த சொல் அந்த ஜாதி மக்களை, கேவலப்படுத்தவும், இழித்து கூறவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவரை திட்டுவதாக இருந்தால் இந்த ஹஜ்ஜம் என்ற சொல்லை கருநாடக மக்கள் பயன்படுத்துவது சர்வ சாதாரணம். நான் என்ன வெட்டி வேலையா செய்கிறேன்? என்று எரிச்சல் பட்டு கூறுவதற்கு இந்த சொல்லை பயன்படுத்துகின்றனர். (AMI DOING HAJJAMAT HERE) தமிழ் நாட்டிலும் இதற்கு இணையான சொற்றொடர் உண்டு. இந்த  வகையில் பயன்படுத்தப்படும் ஹஜ்ஜம் என்ற சொல்லை மக்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஏற்பாட்டை செய்வதாக உறுதி அளித்தார் எடியூரப்பா. மேலும், அந்த சொல் சட்ட விரோதமானது, தண்டனைக்குள்ளானது என்று சட்டம் செய்வதாகக் கூறினார்.
இந்து மதத்தின் ஒரு பிரிவு சாதி மக்கள் இன்றைய நிலையிலும், தங் களுக்கு உள்ள இழிவை நீக்க அமைப்பை வைத்து முதலமைச்சரின் உறுதி மொழியை எதிர்ப்பார்த்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். புத்தர் காலம் துவங்கி, டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் காலம் வரை, சமூக இழிவை, வர்ணாஸ்ரம அடக்கு முறையை, பார்ப்பன ஆணவத்தை ஒடுக்க, களைய குரல் கொடுக்கவேண்டிய சமூக அமைப்பாகத் தான் இந்து மத அமைப்பு உள்ளது என்று கூறுவது தலைகுனிவே. தலைநிமிர, தளை நீங்க உழைக்க வேண்டிய படை பெரியாரின் கருஞ்சட்டைப்படையே.
இனி, இந்த பார்பர் என்ற பிரிவு ஜாதி, சமூக அமைப்பு முறையில் எத்தகைய கீழ்நிலையில் வைக்கப்பட்டி ருந்தது என்பதைக் காண்போம். புத்தரின் வாழ்க்கையை விவரிக்கும் நூல் ஜாதகா கதைகள் என்பது கி.மு.நாலாம் நூற்றாண்டில் வைத்து எண்ணப்படும் நூல். கி.பி. D. Rouse 1895 இல், இந்த நூலை மொழிபெயர்த்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ள ஒரு கதை, பார் பருடைய மகன் ஒருவன் உயர்குல விச்சாவி ஜாதிப் பெண்ணைக் காதலித் தான். தாங்கள் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் அதனால் அவன் காதல் சரியானதல்ல என்பதைத் தந்தை மகனுக்குத் தெளிவுபடுத்தினார். அத் துடன், அவர்கள் தகுதிக்கும், ஜாதிக்கும் ஏற்ற பெண்ணைப் பார்த்து மண முடித்து வைப்பதாகக் கூறினார். தந்தையின் முயற்சி பலனளிக்கவில்லை. மகன் காதல் இறந்துவிடுகிறான். பார்பர் ஜாதி மக்கள் எந்த அளவு சமூகத்தில் அவமானப்படுத்தப்பட்டார்கள் என்ற வேதனையும் சுவையும் கலந்த நிகழ்ச்சி விளக்கப்படுகிறது.
இந்துமத வளர்ச்சி அதன் பாது காப்பு என்ற போர்வையில், பார்ப் பனியம் நல்ல ஒரு வசந்த காலத்தை அனுபவித்தது, விசயநகர ஆட்சி காலத் தில் என்று கூறினால் மிகையாகாது. 16,17 ஆம் நூற்றாண்டிலிருந்த இந்த ஆட்சி காலத்தில் தான், தீண்டப்படாத வர் என்ற  பிரிவினர் பட்டியல் பெருகியது-. தமிழ் நாட்டில் சக்கிலியர் என்ற பெயரில் ஒரு மனிதப் பிரிவை இறக்குமதி செய்த புகழ் பெற்ற ஆட்சி விசயநகர ஆட்சி. அதே நேரத்தில் வரலாற்றுத்துறை அறிஞர் சத்யநாத அய்யர், இந்த ஆட்சி காலத்தில் (விசயநகர ஆட்சி) பார்ப்பனர்கள் தனிச்சிறப்புச் சலுகைகளைப் பெற்று வாழ்ந்தனர். அவர்கள் துதிக்கத்தக்க உயர்நிலையில் இருந்தனர். என்று குறிப்பிட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட ஆட்சியின் முதன்மை அரசனாக விளங்கியவர் கிருஷ்ணதேவராயர். அவருடைய அரசவைப்புலவராகவும், நகைச்சுவை ஊட்ட நியமிக்கப்பட்டவராகவும் விளங்கியவன் தெனாலிராமன். இவனை முன்வைத்து பல வேடிக்கைக் கதைகள் என்ற பெயரில் சமூக பாதிப்புக் கதைகளை மிதக்க வைத்துள்ளனர். அந்த வகையில் ஒன்று:
கிருஷ்ணதேவராயர் தூங்கிக் கொண்டுள்ளார். அந்த நேரத்தில், அரசரின் பார்பர் அவருக்கு, சிறப்பான முறையில் முகச்சவரத்தை செய்து முடித்தார். அரசர் விழித்தார். முகம் பளபளப்பாக, வழவழப்பாக இருப்பதை உணர்ந்தார். மகிழ்ச்சியடைந்தார். பார்பரை அழைத்தார். உனக்கு வேண்டியதைக் கேள் என்றார் அரசர். என்னை ஒரு பார்ப்பனராக்க வேண் டும் என்றார். (அடங்கிக் கிடந்த உணர்வா? பேராசையா?) அரசன் கிருஷ்ணதேவராயர், சிறிதும் தயக்கமின்றி, பார்ப்பன புரோகிதர்களை அழைத்தார். அரசனுடைய பார்பருக்கு, பார்ப்பன அந்தஸ்தை வழங்க ஏற்பாடு செய்ய கட்டளையிட்டார். இந்த ஏற்பாட்டை செய்வதற்காக, அவர்கள் வரிகட்டுவதிலிருந்து விலக்கு பெறுவார்கள் என்றும் மன்னர் அறிவித் தார். (பறிப்பிலிருந்தே சலுகையும், சுகமும் கண்ட சவுண்டி பார்ப்பன கூட்டம், அரச கட்டளைக்கும் சலுகை,  வெகுமதி தேவைப்படுகிறது) ஒரு பார்பரை பார்பனராக்க சாஸ்திர சம்பிரதாய வழிமுறை  தெரியாது புரோகிதர்கள் தவித்தனர். புத்திசாலி என்று நம்பி வந்த தெனாலிராமனிடம் சென்று அவர்கள் அடைந்துள்ள குழப்பத்தைக் கூறினார்கள். வழிமுறை கூறி உதவும் படி கேட்டார்கள். 
அடுத்த நாள், பார்ப்பன கூட்டத்தை, ஆற்றங் கரைக்கு, சாஸ்திர முறைப்படி பூசை சடங்கு பொருள்களுடன் வந்து சேரும்படி, தெனாலிராமன் கூறினான்.  பார்ப்பனக் கூட்டம் கூடிவிட்டது. பூசைப்பொருள்கள், மற்ற செயற்பாடு கள் தயாராக இருந்தன. தெனாலிராமன் வந்தான். ஒரு கருப்பு நாயையும் தன்னுடன் அழைத்து வந்தான். அதை ஆற்றில் குளிக்க வைத்து, பூசை ஏற்பாட்டு இடத்தில் சுற்றிவரச் செய் தான். சடங்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த கிருஷ்ணதேவராயர், இந்த சடங்கின் தத்துவத்தைப்பற்றி விளக்கம் கேட்டார். கருப்பு நாயை, வெள்ளை நாயாக மாற்றுவதற்காக இந்த பூசை ஏற்பாடு கள் நடைபெறுவதாக தெனாலிராமன் கூறினான். இது நடக்கக்கூடிய காரியமல்ல என்று அரசர் கூறினார். புத்திசாலி தெனாலிராமன், ஒரு பார்பர் பார்ப்பனராக முடியும் என்று நம்பும்போது ஒரு நாயின் நிறம் ஏன் மாறாது? என்று கேட்டான். உடனே அரசனுக்கு தெளிவு ஏற்பட்டது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் அவர் அவர்தம் நிலையிலிருந்து மாறுவது இயலாது, என்ற உண்மையை அரசன் உணர்ந் தார்.
இப்படிப்பட்ட, புத்திசாலி தெனாலிராமன் பற்றியும், உண்மை உணர்ந்த கிருஷ்ணதேவராயர் போன்ற மன்னர்  பற்றியுமான கதைகளைத்தான் ஆரியம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் கதைவழி குழந்தை களைக் குட்டிச்சுவராக்கி விட்டது. இப்படிப்பட்ட, பித்தலாட்ட சூழ்ச்சி சூழ்ந்த கதைகளின் பின்னணியை விளக்க வந்த பெரியார் கொள்கை களைப் பற்றி பாடப்புத்தகங்கள் பேசக்கூடாது என்று கூறுவதும், புத்திசாலி தெனாலிராமன் போன்றவர் அரச கோமாளிகளாக (Court jester) .சிலர் அரசை ஆட்டிப்படைப்பதே காரணமாக இருக்கலாம்.
பார்பர் தொழிலுடன் தொடர் புடைய மயிரைப்பற்றி, வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டிருப்பதைப் பற்றி,  சமஸ்கிருத புலமைபெற்ற பேட்ரிக் ஓரிங் என்ற அறிஞர் கூறுவது: ஆரிய சடங்குபற்றிய நூல்களின் கருத்தில் மயிர் ஒரு தூய்மையற்ற ஒரு பொருளாக தொடர்ந்து கூறிவருவ தால், இந்த மயிர்  தொடர்புடைய சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் சமூகத்தில் இழிந்தவர்களாகக் கருத வேண்டிய நிலையில் உள்ளதாகக் கருதலாம் என்பதாகும். புனிதமற்றது என்று சாஸ்திரத்தால் தள்ளிவைக்கப் பட்டுள்ள மயிர்தான், புண்ணியம் தேட, காணிக்கையாக ஏழுமலையானுக்கும், பழனி மலையானுக்கும் நம் மொட் டையர்கள் அளித்து வருகிறார்கள். அந்த காணிக்கை மயிர்தானே, இந்த கல்சாமி தரகர்களுக்கு, ஏற்றுமதி மூலமாக பல கோடி வருமானத்தையும் ஈட்டி வருகிறது--.
தேவ பாஷை சாஸ்திரத்தால், தள்ளி வைத்து, இழித்துக் கூறப்படும் பார் பர்கள் தான் கிராமத்து வைத்தியர் களாகவும், இசைக்கருவி வாசிப்பவர் களாகவும்,  சேவை செய்து வருகின் றனர். அவ்வினத்து குடும்ப மகளிர் கிராமத்து பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் தொண்டினை செய்கின்றனர். பார்ப்பன நச்சுக்களிலிருந்து விடுபட்டு இஸ்லாம் மதத்துக்கு மாறிய பார் பர்கள், முகமது கஜினி, முகமது பின் துக்ளக் ஆட்சியில் படை அதிகாரி களாகவும், நிருவாக அதிகாரிகளாகவும் பணயாற்றியுள்ளார்கள்.
சதுர்வர்ண ஆரிய சதித்திட்டத்தால் இந்து சமூகத்தின் 90 விழுக்காட்டிற்கு மேலான மனித இனம் நசுக்கப்பட்ட இனமாக வைக்கப்பட்டுள்ளதை இதன்மூலம் அறிந்து கொள்வோமாக இத்தன்மையதாக மனுநீதி சமூக அமைப்பை நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் கண்டிக்கும் வகையில் ஜாதி, மதம் போன்றவற்றை பரவலாக்கக்கூடிய ஆண்டான் அடிமை என்ற காலா வதியான சமூக கட்டமைப்பை எதிர்த்து போரிட வேண்டும் புதுமை சிந்தனைகளை நாம் வரவேற்க வேண்டும். (We should try to comlat archaie systems and fendal interests which perpetuate caste. religion etc. and defend modern ideas.) The Hindu 28.8.2011 சென்னை நிகழ்ச்சியொன்றில், வலியுறுத்திய கருத்து, காலத்தின் கட் டாயத்தை வெளிப்படுத்துவதாக விளங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.
குறிப்பு : நீதிபதி கட்ஜு உரையை வெளியிட்ட தினமணி தர்பைப்புல் அய்யர், தனது வசதிக்கேற்ப இச்செய் தியை ஸ்வாகா செய்துவிட்டார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...