காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் அரசியல் வேண்டாம் அரசு எடுக்கும் நல்முயற்சிக்கு ஒத்துழைப்போம்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் அரசியல் பிரச்சினைகளை நுழைக் காமல், தமிழக அரசு எடுக்கும் நல் முயற்சிகளுக்கு திராவிடர் கழகம் ஒத்துழைக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
காவிரி நதி நீர்ப் பங்கீடுபற்றி நாம் போராடிப் பெற்ற உரிமைகளில் ஒன்று காவிரி நடுவர் மன்றம் (Tribunal). சமூகநீதிக்காவலர் வி.பி. சிங் அவர்கள் ஆணையிட்டு, தமிழ்நாட் டிற்குள்ள உரிமைக் கதவினைத் திறக்க வழி செய்தார்கள்.
தமிழ்நாடு - கருநாடகத்துக்கு வடிகால்
பல ஆண்டுகளுக்குப் பிறகு - கருநாடகத் தின் ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளின் ஏகோபித்த எதிர்ப்பையும் தாண்டி, நாம் நமது உரிமையில் பெரும் பகுதியைப் பெற வாய்ப்புக் கான இறுதித் தீர்ப்பினை காவிரி நதிநீர் நடுவர் மன்றம் நமக்கு வழங்கியது (2007இல்)
அதன்படி நமக்கு ஆண்டுதோறும் கரு நாடக அரசு வழங்க வேண்டிய நீர்ப் பங்கீடு, சில, பல ஆண்டுகளில் தவறுவதும், கிருஷ்ண சாகரம், கபினி போன்ற நீர்த்தேக்க அணை கள் நிரம்பி வழியும் அளவுக்குப் பருவ மழை அதிகமாக கருநாடகத்தில் பெய்தபோது அவர்களின் அணைகளைப் பாதுகாக்க, தமிழ் நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்து விடுவதும் அதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்புவதும் அந்த கணக்கினையும் காட்டி, தர வேண்டிய பாக்கி நீரைக் கணக்கிட்டு கரு நாடகம் கூறுவதும் வழமையான வாடிக்கை ஆகி விட்டது!
நமக்கு - அதாவது தமிழ்நாட்டுக்கு காவிரி நதி நீர் வரத்து என்பது (கருநாடகத்தைக் காப்பாற்றிக் கொள்ள) ஏதோ ஒரு வடிகால் வெளிப்பாடுபோல் ஆகிவிட்டது. (Drainage outlet).
நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடாதது -ஏன்?
2007-இல் வெளியிட்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை மத்திய அரசு தனது அரசு அறிக்கை - அரசிதழில் (Gazette) வெளியிடாமல் இருப்பது மிகவும் வியப்பையும், வேதனையையும் நமக்கு அளிக்கிறது!
இதற்குமுன் பலமுறை நாமே இதனை வற்புறுத்தி திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியும், பொதுக்
கூட்டங்கள் நடத்தி வற்புறுத்தியும் வந்துள்ளோம்!
மத்திய அரசு இதில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து, கடந்த 4 ஆண்டு காலம் காலதாமதம் செய்துவருவது ஏன் என்று புரியவில்லை. தமிழ்நாட்டிற்கு நாம் சலுகை கேட்கவில்லை. நீதிமன்ற ஆணையை சட்டப்படி அரசிதழில் வெளியிட வேண்டிய கடமையை ஏன் செய்யவில்லை என்றுதான் மத்திய அரசிடம் நமக்குள்ள உரிமையை வற்புறுத்துகிறோம். (தண்ணீர் தரப்பட வேண்டிய விவரம் தனியே தரப்பட்டுள்ளது).
முதல் அமைச்சர் எழதியுள்ள கடிதம்
நமது தமிழ்நாட்டு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இதுபற்றி மத்திய அரசுக்கு பிரதமருக்குக் கடிதம் எழுதி வற்புறுத்தியிருப்பதற்கு, அரசியல் கட்சிக் கண்ணோட்டமின்றி, தமிழ்நாட்டு விவசாயி களின் ஒட்டு மொத்த நலனைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து நம் ஒன்றுபட்ட ஒருமித்த குரலை எழுப்பிடத் தவறக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.
கருநாடகத்தைப் பாருங்கள்.
அங்கே எல்லோரும் - அரசியலில் எவ்வளவு எலியும் பூனையுமாக இருந்தாலும், போராட்டங்களை ஒரு கட்சியை எதிர்த்து மற்றொரு கட்சி நடத்தினாலும், காவிரி நதி நீர்ப் பிரச்சினை போன்ற அவர்களது மாநிலப் பிரச்சினைகளில் ஒரே அணியில் நின்று அல்லவா ஒரே குரல் கொடுக்கின்றனர்!
தமிழ்நாட்டில் மாத்திரம், இது போன்ற பொது உரிமைப் பிரச்சினைகளில் ஏன் ஒற்றுமை இல்லை? அரசியல் பார்வைகளால் தேவையற்று ஒருவரை மற்றொருவர் விமர்சிப்பது - அந்த பதில்கள், வாதங்கள் - எதிர்வாதங்களுக்கே நமது நேரம் செலவழிக்கப்பட்டு, ஒற்றுமையே காணாமற் போய்விடும் வேதனையான நிலை - இனி மேலாவது இருக்கக் கூடாது.
ஒத்துழைக்கத் தயார்!
ஆளுங் கட்சியும் முதல்வரும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவினையும் திரட்ட முயற்சிக்க வேண்டுமே தவிர, கடந்த கால குற்றச்சாட்டுகளைப் புதுப்பித்து, பொது எதிரிகள் மகிழும் வண்ணம் நமது நதிகள் உரிமை பறிபோக இடமளிக்காது சிறப்பாக செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள் கிறோம். அரசு எடுக்கும் நல் முயற்சிகளை திராவிடர் கழகம் (மற்ற பல நிலைப்பாட்டில் மாறுபடினும்கூட) வரவேற்று, விரைந்து செயலாக்க துணை நிற்கும் என்பதையும் தெரி வித்துக் கொள்கிறோம்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment