Sunday, October 30, 2011

ராமாயணத்தின் வளமையும், டில்லி பல்கலைக் கழகத்தின் வறுமையும்




வரலாற்றாசிரியர் ஏ.கே.இராமானுஜத்தின்  இராமாயணா, முன்னூரு இராமாயணங்கள்: அய்ந்து எடுத்துக்காட்டுகளும், மூன்று சிந்தனைகளும் என்னும் புகழ் பெற்ற கட்டுரையை வரலாற்றுப் பட்டப் படிப்பு டில்லி  பாட திட்டத்திலிருந்து நீக்குவது என்று பல்கலைக் கழகக் கல்வி கவுன்சில் இம்மாத துவக்கத்தில் மேற்கொண்ட முடிவிற்கு எதிராக பல வரலாற்று ஆசிரியர்களும், கல்வியாளர்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டுரையைக் கற்பிப்பதற்கு எதிராக போராட்டம் மேற்கொண்ட அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற இந்துத்துவ மாணவர் பிரிவு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டில்லி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை அலுவலகம் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தியது. மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்தக் கட்டுரையைப் பாட திட்டத்தில் இருந்து நீக்குவது என்ற முடிவு, அரசியல் நிர்ப்பந்தத்திற்காக கல்வியியல் சுதந்திரத்தை சரண் செய்வதேயாகும் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்திய வரலாற்றுக் களத்தில் மற்ற எவரையும் விட மேலான, அதிகாரபூர்வமான ஆய்வாளர் என்னும்  முதன்மை நிலை யில் உள்ள வரலாற்றாசிரியர் ரொமீலா தாபர் இந்த முடிவு பற்றியும், அறிவு மற்றும் பாண்டித்தியம் மீது அது ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்புகளைப் பற்றியும், இந்து கலாச்சார பாரம்பரியம் மற்றும் மதபாரம்பரியம் பற்றிய மற்ற அனைத்துக் கருத்துகளையும், கண்ணோட்டங்களையும் ஒதுக்கி விட்டு  ஒரே ஒரு கருத்தை, கண்ணோட்டத்தை  எடுத்துக் காட்டவேண்டும் என்ற சுயநலவாதி களின் முயற்சிகளைப் பற்றியும்,  பத்திரிகையாளர் பிரிசில்லா ஜெபராஜிடம் பேசினார். 28-10-2011 அன்றைய தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த அவரது பேட்டி இங்கு தமிழில் தரப்படுகிறது.

டில்லி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை மற்றும் கல்வியியல் கவுன்சில் தொடர்பு டையது என்பதால்  இந்தப் பிரச்சினை முற்றிலு மாக வெறும் வரலாறு மற்றும் கல்வியியலுடன்  மட்டும் தொடர்பு உடையதல்ல; அதற்கு மேல்  அரசியல் பின்னணியும் அதற்கு உண்டு என்று நீங்கள் கூறியுள்ளீர்கள்.
2008 இல் அகில பாரதிய வித்யா பரிஷத்தினரால் டில்லி பல்கலைக் கழக வரலாற்றுத் துறை அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது, தாக்குதல் நடக்கும்போது தொலைக்காட்சி காமராக்கள் அவற்றை சரியாகப் பதிவு செய்வதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டது, அவர்களது வன்முறைச் செயல்கள் சரியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பியதைக் காட்டுகிறது. இதன் காரணமாகவே இப் பிரச்சினைக்குப் பின் அரசியல் பின்னணி உள்ளது என்று நான் கருதினேன்.
இக்கட்டுரை இந்து சமூகத்தினரின் உணர்வு களை புண்படுத்துவதாக இருப்பதால் அதனைத் திரும்பப் பெறவேண்டும் என்று அவர்கள் கோரினர். இது கல்வி தொடர்பான ஒரு கோரிக்கையே அல்ல. இந்த வன்முறைத் தாக்குதல் ஏற்பாடு செய்யப்பட்ட விதத்தில் இருந்தே, வரலாற்றுத் துறைக்கும், இக்கட்டுரைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு அரசியல் செயல்பாடுதான் என்பது தெளிவாகத் தெரிகிறது. பல்கலைக் கழகத்தால் ஆய்வு செய்யப்பட நியமிக்கப் பட்ட நான்கு நபர் குழுவின் மூன்று உறுப்பினர்கள் இந்தக் கட்டுரையை நீக்கக்கூடாது என்று ஒருமித்த கருத்துடன் கூறினர்.
பல்கலைக் கழகம் துவக்கத்தில் இதனை ஒரு கல்விப் பிரச்சினையாகவே எடுத்துக் கொண்டு, இந்தக் கட்டுரையை நீக்க வேண்டுமா என்பதனை ஆய்வு செய்ய  நான்கு உறுப்பினர் கொண்ட ஒரு குழுவை நியமித்தது.மூன்று உறுப்பினர்கள் இந்தக் கட்டுரையை நீக்கக்கூடாது என்று ஒருமித்த கருத்துடன் கூறினர். இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக இக்கட்டுரை இருக்கிறது என்று நான்காவது உறுப்பினர் கூறவில்லை; ஆனால், பட்டப் படிப்பு மாணவர்கள் அக்கட்டுரையில் காணப்படும் வேறுபாடுகளையும், சிறு மாறுபாடுகளையும் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும் என்பதால், பட்டப் படிப்புக்கு அது பொருத்தமானதாக இருக்காது என்று கூறியுள்ளார்.  எனவே, இந்தக் கட்டுரையை நீக்க வேண் டிய அவசியம் இருப்பதாக  நிபுணர் குழு கருதவில்லை. இந்த நிபுணர் குழுவின் கருத்துக்கு மாறாக, இந்தப் பிரச்சினை நீதிமன்றத்திற்கு வந்துள்ளது என்ற காரணத்தால், இது கல்வியியல் குழுவிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தப் பிரச்சினை பற்றிய விவாதம் நடத்தப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் அளிக்கப் படவில்லை என்றே எனக்குக் கிடைத்த தகவல்கள் தெரி விக்கின்றன. அதனால் கல்வியியல் குழு உறுப்பினர்கள் அக்கூட்டத்திற்குச் செல்லும்போது இது பற்றி சிந்திக்கத் தயாராகச் செல்லவில்லை. திடீரென்று  ஏதோ ஒரு வழியில் முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. துறை அலுவலகங்களையும், கல்வியாளர் களையும்  தனிப்பட்ட குழுவினர் தாக்குவதன் காரண மாக, பல்கலைக் கழகத்தின் பாடங்களும், பாடதிட்டமும் மாற்றப்பட இயலுமா என்ற கேள்வியை பல்கலைக் கழகத்தின் செயல்பாடுகள் எழுப்பி உள்ளன. வால்மீகி மற்றும் கம்பராமாயணம் உள்ளிட்ட  பல ராமாயணக் கதைகளைப் பற்றி தனது கட்டுரை யில் ராமானுஜன் விவாதித்திருக்கிறார். இந்து மத வெறியர்கள் ஏற்றுக் கொள்ள இயலாத பல விஷ யங்கள் வால்மீகி மற்றும் கம்பராமாயணங்களில் உள்ளன. எந்த ராமாயணத்தைத்தான் அவர்கள் ஆதரிக்கின்றனர்?
வால்மீகி ராமாயணத்தை அவர்களில் எவரும் முழுவதுமாக  படித்திருக்கவே இல்லை என்றே நான் கருதுகிறேன். அவர்களில் பாதிபேர் கம்பராமாய ணத்தைப் பற்றி கேள்விப்பட்டும் இருக்க மாட்டார்கள்.
அவர்கள் எதை ஆதரிக்கிறார்கள்?  வால்மீகி ராமாயணம் என்ன கூறுகிறது என்பதைப் பற்றி அவர்கள் அறிந்திருப்பதெல்லாம் செவி வழியாகக் கேள்விப் பட்டதை அடிப்படையாகக் கொண்டதுதான். எழுந்து நின்று ஒன்றை நீக்க வேண்டும் என்று முழக்கமிடுவதற்கு முன்பு,  அதனைப் படித்துப் பார்த்து, ஆய்வு செய்து, நன்கு புரிந்து கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்ளத் தயாராக இல்லாதவர்களாக அவர்கள் இருக்கின்றனர் என்பதுதான் நம்மைக் கோபப்படுத்துகிறது.
ராமகாதை என்று நாம் அழைக்கும் ராமனின் கதை ஒரு பெரும் வரலாற்றுக் காலத்தைச் சார்ந்தது என்பதை மக்கள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.  வால்மீகி ராமாயணம் முதன் முதலாக எழுதப்பட்ட காலத்திற்கும் கம்பராமாயணம் எழுதப்பட்ட காலத்துக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகள் உள்ளன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு காலத்திலும் வழங்கிய கதைகளும் உள்ளன. அதனால் ராமாயணத்தில் வேறு பாடுகள் இருப்பது தவிர்க்க முடியாதது. ராமன் கதையை புதிதாக எழுத யாரேனும் ஒருவர் முன்வரும்போது, ஒரு குறிப்பிட்ட ராமாயண நூலினை பின்பற்றி அவர் எழுத முனைந்தாலும், அசல் ராமாயணக் கதையில் சேர்க்கப் பட்டவைகளைப் போன்ற சேர்க்கைகள் அவர் கதையிலும் இருக்கும். ஒரு இதிகாசத்தின் கட்டமைப்பில் இது தவிர்க்க முடியாதது.
ஓர் இதிகாசம் மக்களின் மனதைக் கவர்ந்தால், அதனுடன் பிற்சேர்க்கையாக பல துண்டு, துணுக்குச் செய்திகள் சேர்க்கப்படுவதும், சில நீக்கப்படுவதும் இயல்பே. உருண்டு செல்லும் ஒரு கல்லைப் போல் அதன் பயணத்தில் சிலவற்றை அது சேர்த்துக் கொள்ளும்; சிலவற்றை அது விட்டுவிட்டுச் செல்லும்.
ஓர் இதிகாசத்தின் கட்டமைப்புத் தன்மை மாற்றங்களுக்கு இடம் அளிப்பது என்பதால்,  நிச்சயமான கதை என்று பெரும்பாலான மக்களின் மனதில் எந்த ஒரு குறிப்பிட்ட கதையையும் நிலை நாட்டும் ஆபத்து உள்ளதா? இத்தகைய ஆபத்து உள்ளதென, தூர்தர்ஷன்  ராமாயணத் தொடரை ஒளிபரப்பிய போது நீங்கள் கூறியிருந்தீர்களே?
உண்மைதான். ராமாயணக் கதைகளில் மாறுபட்ட கதைகளும் உள்ளன என்பதை நீங்கள் வலியுறுத்திக் கூறவேண்டும். இல்லாவிட்டால் ஒரே ஒரு இராமாயணக் கதைதான் உள்ளது என்றும், அக்கதைதான் உண்மை யான கதை என்றும்  மக்கள் கருதிக் கொள்ள நேரலாம்.  இராமாயணத்தை வால்மீகி எழுதியபோது, வேறு இரண்டு ராமாயணக் கதைகளும் இருந்தன. ஒன்று முற்றிலும் மாறுபட்ட கதை. மற்றொன்று அடிப்படையில் மாறுபட்ட கதை.
ராமனும் சீதையும் உடன் பிறந்தவர்கள் என்றும், அவர்கள் கணவன் மனைவியாக இணைந்து ஆட்சி செய்தனர் என்றும் கூறும் புத்த ஜடாகா, தசரத ஜடாகா என்று அழைக்கப்படும் கதைகளும் இருந்தன. கட்டுக் கதைகளின் தோற்றம் பற்றிய புத்தமத பாரம்பரியத்தில் இவ்வாறு கூறுவது சரியானதுதான் என்பதுடன், ராமன் சீதை பற்றி உண்மையிலேயே மிக உயர்வாகக் கூறப்பட்டு உள்ளது. ஆனால் கல்வியறிவற்றவர்கள் இதனை முழுவதுமாகத் தவறாகக் கருதிக் கொண்டு, தவறான விளக்கம் அளித்துக் கொண்டு, ராமனும் சீதையும் இணையராக ஆட்சி செய்கின்றனர் என்று இந்தக் கதை கூறுகிறது என்று கூறும் நம்மையெல்லாம் பார்த்துக் கூச்சலிடுகின்றனர்.
ராமானுஜம் பேசும் ஜைனமத ராமகாதை மிகுந்த ஆர்வத்தை அளிப்பதாகும்.  அதை எழுதிய விமலசூரி தொடக்கத்திலேயே, இதுவரை நீங்கள் கேள்விப்பட்ட ராம காதை, முட்டாள்களால் எழுதப்பட்ட,  முற்றிலும் தவறான தும் சரியில்லாததும் ஆகும். என்று கூறுகிறார் வரலாற் றுப் புகழ் பெற்ற அரசன் சிறீநிகாவின் அரசவையில் அந்தத் தவறை அவர் கண்டுபிடித்து, ராட்சதர்களை கொடூர குணம் படைத்தவர்கள் என்று கூறுவது முட்டாள் தனம். அவர்களும் இயல்பான சாதாரண மனிதர்கள் தான் என்று கூறுகிறார். வேறு சொற்களில் கூறுவதா னால், வால்மீகியின் கற்பனைக் கதையை மாற்றி நியாயப் படுத்த விமல்சூரி முயல்கிறார் என்றுதான் கூறவேண்டும். அத னால், இந்த இரண்டு விதமான ராமாயணக் கதை களையும் ஒன்றாக வைத்து பார்ப்பது கவர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
அப்படியானால், இந்து கலாச்சாரத்தின் பிரதிபலிப் பாக வால்மீகி இராமாயணம் ஆனது எவ்வாறு?
சமஸ்கிருத இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பாரம்பரியத்திலிருந்து வந்தது இது என்று ஓரளவுக்குக் கருதலாம். நீண்டதொரு காலம் முழுவதிலும் நிலவி வந்த முக்கியமான கலாச்சார பாரம்பரியம் அது என்பதும் அதன் காரணம்.  ஆனால், இவற்றை நிச்சயமான பாடங்கள் என்று ஆங்கிலேய ஆட்சியின் போது கற்றறிந்த வர்களால் நிறுவப்பட்டதும் இதன் காரணங்களில் ஒன்று.
ஆங்கிலேயரின் காலனி ஆதிக்க காலத்திற்குப் பின், அந்தக் கருத்தைப் பற்றிக் கல்வியாளர்கள் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்த நிலையில்,  அகண்ட சமூகத் தின் கண்ணோட்டங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அது போன்ற முயற்சி இருந்துள்ளதா?
இல்லை. அது போன்ற முயற்சி எதுவும் இருக்க வில்லை. இதற்கு நான் தொலைக்காட்சி ஊடகத்தையே குற்றம் சாட்டுவேன்.  நமது கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய கதைகள் ஒவ்வொன்றிலும் ஒரு நிச்சயமான பாடம் இருக்கிறது என்ற கண்ணோட்டத்தை அவை மக்களின் மனதில் விதைத்துவிட்டன. இக்கதைகளில் மாறுபட்ட, வேறுபட்ட கதைகளும் உள்ளன என்ற உண்மையைப் பற்றி தெரிவிக்க வேண்டும் என்பதைப் பற்றி அவை கவலைப்படவே இல்லை.
ஆனால், இது கல்வியாளர்களிடமிருந்துதான் தொடங்கியது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விவாதித்து விட்டு, வாக்கெடுப்பின்போது ராமானுஜனின் கட்டுரைக்கு ஆதரவாக 10 பேரும், எதிராக 90 பேரும் வாக்களித்த உறுப்பினர்களைக் கொண்ட கல்வியியல் குழு நாட்டின் ஒரு முன்னணி பல்கலைக் கழகத்தில் உள்ளது என்பதுதான் இந்த மொத்தக் கதையின் கவலை அளிக்கும் அம்சமாகும். அக்கட்டுரைக்கு எதிராக வாக்களித்த 90 உறுப் பினர்களில்,  எத்தனை பேர் எதிராக வாக்களிக்கு முன் அதனைப் படித்துப் பார்த்தார்கள்? கல்வியியல் குழுவில் இருக்கும் பலரும் இந்தக் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பது பற்றி அறியாதவர்களே ஆவர்; அவர்கள் அதைப் பற்றி தெரிந்து கொண்டிருந்தது எல்லாம் செவிவழிச் செய்திகள்தாம்.
யாரோ ஒருவர் எழுந்து அதனைக் கண்டிக்கிறார். பின்னர் ஒரு குழு திரும்பிப் பார்த்துவிட்டு, நல்லது. அப்படியானால் நாம் அதனைக் கண்டிக்கத்தான் வேண்டும் என்று கூறுகிறது. எனவே நம் நாட்டில்  படிக்கும் பழக்கத்தை நாம் இழந்துவிட்டோம்  என்று தான் கூறவேண்டும். பாடபுத்தகங்களைப் படித்துப் பார்க்க நாம் முயல்வதில்லை. அவற்றை நாம் தொலைக்காட்சியில், கார்ட்டூன்  நிகழ்ச்சிகளில் பார்க்கிறோம்.
டில்லி பல்கலைக் கழகத் துணை வேந்தரின் அரசியல் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ராமானுஜனின் கட்டுரையை நீக்க வேண்டும் என்று வாக்களித்த 90 உறுப்பினர்களின் அரசியல் என்ன என்பதும் எனக்குத் தெரியவில்லை.
ஆனாலும், இதில் உண்மையான ஓர் அரசியல் காரணம் இருக்கிறது. (அ) எனது கட்சிக்கு இதில் ஆட்சேபம் இல்லை. அல்லது (ஆ) இது ஒரு அரசியல் பிரச்னை என்பதால் உண்மையில் அது பற்றி எனக்கு எந்தக் கவலையு மில்லை. கல்வியியல் குழு முடிவெடுக்கட்டும். (அத னால் அக்கூட்டத்திற்கு வராதவர்களும் இருந்தனர் என்று எனக்குத் தெரிய வந்தது.)  அல்லது
(இ) இதில் ஓர் ஆக்க பூர்வமாக பங்கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் நாளை நீங்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் போது உங்கள் உதவிக்கு எவரும் வரமாட்டார்கள் என்று கூறும் அரசியல் காரணம் அதில் இருக்கிறது.
தற்போதுள்ள அறிவைப் பற்றி ஒவ்வொரு கல்வியாளரும் கேள்வி எழுப்பவேண்டும். அறிவு வளர்ச்சி பெறுவதற்கான ஒரே வழி அதுதான் என்று கல்வியியல் குழுவிற்கு நினைவுபடுத்த வேண்டியது அவசியமாகவும் இருக்கக்கூடும்.
இந்தக் கட்டுரை இளங்கலை பட்டப்படிப்புக்குப் பொருத்தமானது அல்ல என்று கூறிய நிபுணர் குழு உறுப்பினர், ஆசிரியரால் இக்கட்டுரையின் பின்னணி பற்றி போதுமான அளவில் விளக்க முடியாது என்று கருதியிருக்கக் கூடும். அக் கட்டுரை எந்த நிலையில் போதிப்பது பொருத்த மானதாக இருக்கும் என்ற கோட்டை நம்மால் வரையமுடியுமா?
சரியாகச் சொன்னீர்கள். எனது கருத்தும் அதுதான். ஆசிரியரால் விளக்கிக் கூறமுடியாது என்று நீங்கள் கூறிக்கொண்டே சென்றால், அந்த ஆசிரியரை நீங்கள் ஏன் நியமித்தீர்கள்? ஒரு பாடத் தின் வேறுபாடுகள், மாறுபாடுகள் என்பது போன்ற எளிய பாடங்களை விளக்க முடியாத ஒருவரை நீங்கள் ஏன் ஆசிரியராகப் பயிற்றுவித்தீர்கள்?
- ஆதாரம்: தி ஹிந்து 28.10.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன் (தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...