Wednesday, October 26, 2011

அறிய வேண்டிய அரிய செய்தி


பூமியில் இன்றைக்கு 6.8 பில்லியன் பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக் கிறார்கள். 2050 ஆம் ஆண்டில் 9.5 பில்லியன் பேர்களுக்கு சோறு போட வேண்டிவரும். அதற்கு பிரேசில் நாடு அளவுக்குப் புதிதாக வேளாண்மை நிலம் நமக்குத் தேவைப்படும். ஏற்கனவே குடிநீரில் 70 சதவிகிதமும் எரிபொருளில் 20 சதவிகிதமும் உணவு உற்பத்திக்காகவே செலவாகிறது. மேலும் ஒரு 3 பில்லியன் மனிதர்களுக்குத் தேவையான நிலத்திற்கும் நீருக்கும் எரிசக்திக்கும் என்ன செய்வது? எங்கே போவது? இதற்கு கலப்பையில்லாத கட்டட விவசாயம்தான் ஒரே பதில். நிலத்தை உழுது, பாசனம் செய்து, உர மிட்டதால் பூமி நொந்துபோய் மலட்டுத் தன்மை அடைந்துவிட்டன. வேண்டிய அளவுக்குக் காடுகளையும் வெட்டி நாசம் செய்து அவற்றை விவசாய நிலங் களாக்கி விட்டோம். அதன் காரணமாக புவியின் சூடும் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் எதையாவது புதிதாகச் செய்தால்தான் இந்தச் சிக்கலிலிருந்து விடுபடமுடியும். மண் படாத வேர்கள்
முப்பது மாடிக் கட்டடத்தில் ஒவ் வொரு தளத்திலும் மண்ணைப் பயன் படுத்தாமல், பயிர்களை வளர்க்கும் உள்ளரங்க பயிரியல் முறைதான் கட்டட வேளாண்மை.
வில்லியம் எஃப் பெரிக் என்பவர் 1929 இல் மண்ணில்லாமல் தொட்டியில் தண்ணீர் நிரப்பி, அதில் ஊட்டச்சத்து உப்புகளைக் கரைத்து, செடிகளை வளர்த்துக் காட்டினார். ஹைட்ரோ போனிக்ஸ் என்பது இந்த முறையின் பெயர் _  இரண்டாம் உலகப் போரின் போது 8 மில்லியன் கிலோ காய்கறிகளை பசுபிக் தீவுகளில், நேட்டோ நாடுகளின் சார்பில் நிலமில்லாமல் நேரடியாக நீர்த் தொட்டிகளில் வளர்த்துப் பெறப்பட்டது.
வேர்கள் கெட்டியாக மண்ணைப் பிடித்துக் கொண்டுதான் வளரும் என்று பலகாலம் நாம் நம்பிவந்திருக்கிறோம். உண்மையில் மண்ணிலுள்ள தாதுக்கள் தான் அவற்றிற்குத் தேவை. தண்ணீர்த் தொட்டியில் செடியினால் நிற்க இயலாது என்று கருதினால் வெரிமிகுலைட் என்ற ஜடப் பொருளை, (தக்கைபோல இருக்கும்) துருவி தூளாக்கிப் போட்டு பல ஆண்டுகளுக்கு மண்போலவே திரும்பத் திரும்பப் பயன் படுத்தலாம். இது பயிரின் வேர்களுக்குத்  தேவையான பிடி மானத்தை மட்டும் வழங்கும்; மற்றபடி இதற்கு வேறு வேலை ஏதும் கிடையாது.
ஏரோபோனிக்ஸ் என்கிற இன்னொரு முறையில் செடிகள் நூலில் கட்டப்பட்டு காற்றில் தொங்கியபடி வளரும். காற்றில் குறைவில்லாத ஈரம் நிரம்பியிருந்தால் போதும். மார்கழிப் பனிபோல அறை முழு வதும் நீர்த் திவளைகளால் நிரப்பி அதில் ஊட்டத் தாதுக்களையும் கரைத்து கலந்து விட்டால் செடிகள் ஜோராக வளரும்.
யூரோஃபிரெஷ் எனும் காய்கறி நிறு வனம் அரிசோனா பாலைவனத்தில் 318 ஏக்கர் நிலபரப்புக்குச் சமமான விவசா யத்தை அடுக்கு மாடி கட்டடத்தில் செய்து கொண்டு வருகிறது. தக்காளி, வெள்ளிரிக் காய், மிளகு ஆகியவற்றை ஹைட்ரோ போனிக்ஸ் முறையில் பயிர்செய்தது.
செங்குத்து வேளாண்மை அடுக்குமாடி கட்டடத்தில் ஒவ்வொரு தளத்திலும் பல அடுக்குகளில் வரிசையாக தொட்டிகளை நிறுத்தி அவற்றில் பயிர் செய்வது செங்குத்து வேளாண்மை. செங்குத்து வேளாண்மைக்கு பல ஏக்கர் நிலம் வேண்டியதில்லை. எங்கெல்லாம் காய்கறிகள் வேண்டுமோ அங்காங்கே பயிர் செய்து கொள்ளலாம். கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில், விமான தளத்திற்கு பக்கத்தில், என நகரங்களின் நட்ட நடுவே வேளாண்மை செய்யலாம். காடு, கழனிகள் ஓரிடத்திலும், விற்பனை சந்தைகள் ஓரிடத்திலும் இருந்த காலம் போய்விடும்.  அறுவடையான அரிசி யையும் கரும்பையும் ஊர் ஊராக அனுப்பிக்கொண்டு தேவை யில்லாமல் போக்குவரத்துக்கு செலவிட வேண்டியதில்லை. விளைபொருள்களை பதனிட்டு பாது காக்கவும் தேவையில்லை. அவரவர்களுக்கு வேண்டியவற்றை அவர்களிடத்திலேயே விளைவித்து, பறித்த காய்கறிகளைத் தரலாம். மூடிய கட்டடத்தில் சுத்தமான முறையில் பயிர் செய்வதால் காய்கறிகளில் பூச்சி அண்டாது, மண் மூலமாக பயிர்களில் பரவும் கிருமிகளும் இருக்காது. இதனால் பூச்சிக்கொல்லி மருந்து, நோய்க்கிருமிகள் இல்லாத காய்கறி, தானியங்கள் கிடைக்கும்.
பருவகாலம், மழைபொழிவு, புயல், வெள்ளம் என்ற பிரச்சினைகள் ஏது மில்லாமல் ஆண்டு முழுவதும் பயிர் செய்து கொண்டேயிருக்கலாம். தேவை யான மின்சக்தியை பயிர்களின் காய்ந்த குப்பைக் கூளங்களை எரித்து அனல் சக்தியாக்கிப் பெறலாம். சூரிய ஒளிப் பலகைகளிலிருந்தும் காற்றாடிகளி லிருந்தும் பெறலாம்.
நகரத்துக்குள்ளேயே அடுக்கு மாடிகளில் பயிரிடுவதால், உள்ளூர் இளைஞர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மண்ணில் இறங்கி வேலை செய்வதை கேவலமாக நினைத்து பட்டணத்துக்கு வரும் பட்டிக்காட்டு இளைஞர்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். படிப்படியாக மண்ணுக்கு ஓய்வு கிடைக்கும். மீண்டும் அவை பழைய இயல்புநிலையை அடையும். விரும்பினால் அவற்றை அப்படியே விட்டுவிடலாம். இதன் மூலம் இழந்த காடுகளைத் திரும்பப் பெறலாம். அமைதிக்கான நோபெல் பரிசு பெற்ற வங்காரி மாத்தய்  சொன்னது போல் நிலங்களை சும்மாவிட்டு விட்டால் போதும் உலகம் வெப்பமயமாதல் தானா  சரியாகிவிடும். சோற்றுக்கு என்ன செய்வது என்றால், அதற்குத்தான் செங்குத்து வேளாண்மை இருக்கிறதே!
சமன்பாடுகள்
முப்பது அடுக்கு மாடியில் செய்யப் படும் மொத்த விளைச்சலானது, 150 ஏக்கர் நிலப்பரப்பில் செய்யப்படும் வேளாண் மைக்குச் சமம். குட்டை ரக பயிர்களாக இருந்தால், ஒரே தளத்தில் மூன்று, நான்கு அடுக்குகளாக அவற்றைப் பயிர் செய்து, 2400 ஏக்கர் நிலத்திற்குச் சமமான விளைச்சலைப் பெறலாம். கிராமப்புறங்களில் நிலங்களை விட்டுவிட்டு புறநகர் பகுதியிலேயே கட்டடங்கள் கட்டி அவற்றில் அதற்குச் சமமான விளைச்சலை பெறமுடியும். பள்ளிக்கூடங்கள், பெரிய மருத்துவமனைகளின் மேல்தளங்கள் போன்றவற்றில்கூட கூண்டு கட்டி அவற்றில் அவசியமான அளவுக்குக் காய்கறி பயிர் செய்யலாம். நான்கைந்து வாரங்களில் கீரை கிடைத்துவிடும்; கம்பு, சோளம் போன்ற தானியங்கள் 4 மாதங் களில் கிடைக்கும். முயன்றால் எல்லா பயிர்களையும் கட்டடத்திற்குள்ளேயே வளர்த்துக் கொள்ளலாம்.
முப்பது அடுக்குகள் ஒவ்வொன் றிலும் பல வித முறைகளில் பயிர்கள் வளர்க்கப்படும். முனிசிபல் கழிவு நீரே சுத்தம் செய்யப்பட்ட பிறகு பாசனத்திற்கு பயன்படுத்தப்படும். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறப்படும். செயற்கை ஒளி தரும் குழல்விளக்குகள் பயிர்களை வளர்க்கும். குப்பைகள் வெளியேற தனியாக செங்குத்து சாக்கடைகள் இருக்கும். கழிவுகளிலிருந்து வெப்பம் கிடைக்கும். அங்கேயே காய்கறி கடையும் இருக்கும்.
செங்குத்து வேளாண்மை கட்ட டங்களின் ஒவ்வொரு தளத்திலும் பயிர்கள் இப்படித்தான் வளர்க்கப்படும். ஒரு முனையில் நாற்றுகள் உருவாக்கப்படும்; கன்வேயர் பெல்ட் நகர்ந்த படியே இருக்கும், மறுமுனைக்கு வரும் போது அவை கனிந்து அறுவடைக்குத் தயாராகிவிடும். தளத்தின் ஒளி அளவு, ஈரப்பதம் ஆகியவை கட்டுப்படுத்தப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக, யூரோ ஃப்ரெஷ் என்ற கம்பெனி (அரிசோனா, வில்காக்ஸ்) 318 ஏக்கர் பரப்பில் தக்காளி மற்றும் மிளகாய்களை உள் அரங்கத்திலேயே நீர்த்தொட்டிகளில் பெருமளவில் வளர்த்துவருகிறது. இது ஹைட்ரோபோனிக்ஸ் வேளாண்மையின் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு.
- (சுற்றுச்சூழல் புதிய கல்வி அக்டோபர் 2011)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...