Monday, October 31, 2011

இதே நாளில் - 46 ஆண்டுகளுக்கு முன்


தலைவர் பெரியார் அவர்கள்தான் துணிந்து நாட்டில் நல்ல கருத்துக் களைத் தோற்றுவிக்க விடுதலை யைத் தொடங்கினார்கள். விடுதலை யின் புரட்சிக் கருத்துக்களை வர வேற்க மேல்மட்டத்தில் உள்ளவர்கள் விரும்புவது இல்லை. அடி மட்டத்தில் உள்ளவர்களாவது வரவேற்கிறார் களா என்றால், அச்சத்தின் காரணமாக மறுக்கிறார்கள். மேல் மட்டத்திற்கும் அடித் தளத்திற்கும்  இடையே உள்ள நடுத்தர மக்களாவது வரவேற்கின்றார் களா என்றால், இப்போதுதான் அவர்கள் கைக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் நலன் கருதி நடத்தக்கூடிய விடுதலை யினை தமிழர்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க வேண்டும். விடுதலை வாங்கிப் படிப்பது தமிழர்கள் ஒவ் வொருவரின் கடமையாகக் கருத வேண்டும்.

தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகைபோல், விடுதலை தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும்.

- இவ்வாறு கூறியவர் தந்தை பெரியார் அவர்களால் மகா சந்நிதானம் என்று போற்றப் பட்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆவார்கள் (விடுதலை  2-11-1965)
 
இதே நாளில் இன்றைக்கு 46 ஆண்டு களுக்கு முன் (31-10-1965) புதுப் பொலி வோடு மிகக் கம்பீரமாக காலத்தின் குரலாய் எழுந்து நிற்கும் விடுதலைப் பணிமனை, தவத்திரு அடிகளார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இத்தகைய இனஉணர்வு செப்பேடான நற்செய்தியும் அருளப்பட்டது.

தந்தை பெரியார் தலைமை வகிக்க கொழுத்த இராகு காலத்தில் தவத்திரு அடிகளார் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட விடுதலை பணிமனை திறப்பு விழாவில் வரவேற்புரை ஆற்றியவர் விடுதலை ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆவார்.

2012ஆம் ஆண்டில் விடுதலைக்கு அகவை 77 ஆண்டுகள் என்றால் விடுதலை ஆசிரியர் என்ற நிலையில் நமது தமிழர் தலைவரின் அகவை 50 ஆண்டுகளாகும்.

நீதிக்கட்சியின் வாரம் இரு முறை ஏடாக 1-6-1935 முதல் (வருட சந்தா ரூ 3-10-0 மூன்று ரூபாய் பத்தணா) 14, மவுண்ட் ரோடு மதராஸ் என்ற முகவரியிலிருந்து விடுதலை வெளியானது. அப்பொழுது அதன் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன்.

1937 முதல் பண்டித எஸ்.முத்துசுவாமி பிள்ளை அவர்களை ஆசிரிய ராகக் கொண்ட நாளேடாக வெளிவந்தது.

19 மாதங்கள் நீதிக்கட்சியின் வார இருமுறை ஏடாக வெளிவந்த விடுதலை தந்தை பெரியார் அவர்கள் கரங்களில் 1937 ஜூலை ஒன்று முதல் ஈரோட்டிலிருந்து நாளேடாக வெளி வந்தது.

அதன்பின் 20-9-1943 முதல் விடுதலை சென்னை சிந்தாதிரிப்பேட்டை (2, பால கிருஷ்ணபிள்ளைத் தெரு)யிலிருந்து வெளி யாயிற்று. அங்கிருந்து இதே நாளில்தான் 1965இல் சென்னைப் பெரியார் திடல் புது மனையில் தன் புகழ் மணக்கும் அத்தியா யத்தைத் தொடர்ந்தது விடுதலை.

தமிழன் இல்லம் என்பதற்கு அடையாள அறிவிப்புப் பலகையான விடுதலை யினைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க வேண்டும். தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையாகக் கருத வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார் அடிகளார்.

இந்தக்கால கட்டத்தில் மீண்டும் இதனை நினைவு படுத்தி அயராப் பணியில் ஈடுபட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தமிழர் தலைவர் அவர்கள் விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுகள் பயணித்துக் கொண்டுள்ளார் என்பது ஒரு  கின்னஸ் சாதனைதான்.

இந்த வரலாற்றுக் குறிப்பை - ஆக்க ரீதியாக சிந்தனைக்குட்படுத்தி, வெறும் தமிழர்களாக மக்கள் இல்லாமல் உண்மை யான தமிழர்களாக்கிட, உருவாக்கிட நாம் மேற்கொள்ளும் அரிய முயற்சிதான் இது.

விடுதலை இலாப நோக்கில் மேற் கொள்ளப்படும் முயற்சியல்ல. தமிழர் சமுதாயத்தை மேல்நோக்கி அழைத்துச் செல்லும், முற்போக்குத் திசை நோக்கி விரைவுபடுத்தும் ஏற்பாடு இது.

1935இல் விடுதலை வருவது குறித்து  அன்று தந்தை பெரியார் என்ன எழுதினார்?
 
இன்றைக்கும் மறுநினைவுக்கு அழைத்து புது ரத்த ஓட்டத்துடன் செயல்படுவதற்கான உந்துசக்தியின்  வீச்சுகள் அவை.

2, 3 வருடங்களாகவே பரிசுத்த ரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் இரவும் பகலுமாய் தமிழ்ப் பத்திரிகை, தமிழ்ப் பத்திரிகை என்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந்தும், அதை எந்தத் தலைவர் களும் கவனியாமல் அலட்சியமாய் இருந்ததும்.

அதன் பயன்களை சமீபத்தில் ஏற்பட்ட பல தேர்தல்கள் மூலம் அனுபவித்தும், மறுபடியும் புதிய முறையில் முன்னிலும் அதிகமாக இரண்டு பங்கு சப்தத்துடன் தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை!! தமிழ்ப் பத்திரிகை!!! என்று மக்கள் கூப்பாடு போட்டது மான விஷயம் யாவரும் அறியாததல்ல.

அப்படிப்பட்ட நிலையில் விடுதலை என்னும் பேரால் ஒரு பத்திரிகை வெளியாய் இருப்பதைப் பார்த்த எந்தப் பார்ப்பனரல்லா தாரும் தங்களுக்கு ஏதோ ஒரு பாக்கியம் கிடைத்ததாக மகிழ்ச்சியடைவார்கள் (குடிஅரசு, 9-6-1935) என்று தந்தை பெரியார் எழுதியதை இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்வது நல்லது!   நல்லது!! அன்றைக்கு நேர்ந்த தேர்தல் என்றாலும் இன்றைக்கும் பொருந்துவது தானே!

சமுதாய மாற்றமா?

அரசியல் மாற்றமா?

பண்பாட்டு மீட்சியா?

பகுத்தறிவு மறுமலர்ச்சியா?

பெண்ணுரிமையா?

சமூக நீதியா?

இந்தக் கால கட்டத்தில் தேவை,  விடுதலை! விடுதலை!!. விடுதலைப் புதுமனை திறக்கப்பட்ட இந்நாளில் உணர்ச்சி பெறுவோம்!

உழைத்திட முன்வருவோம்!   வெற்றி பெறுவோம்!   வாழ்க பெரியார்!
- மின்சாரம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...