அய்ம்பதாயிரம் விடுதலை ஆண்டு சந்தாக்கள் அய்யா தந்தை பெரியாரின் ஆசையை நிறைவேற்றும்! -2
முனைவர் பேராசிரியர்
ந.க.மங்களமுருகேசன்
ந.க.மங்களமுருகேசன்
வீரமணி அவர்கள் வக்கீல் தொழி லில் ஈடுபட்ட சிறிது நாட்களுக்குள் மாதம் ஒன்றுக்கு ரூ 200, ரூ 300 என்கிற கணக்கில் வருமானமும், அதிகாரிகளின் பாராட்டுதலும், மதிப் பும் பெறத்தக்க நிலையை அடைந்து விட்டார்.
அவரது இயக்க சம்பந்தமில்லாத நண்பர்களும், வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வளவோ ஆசை ஏற் படும்படியான எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லித் தடுத்தும், அதை ஏற்காமல் துணிந்து முழுநேரப் பொதுத் தொண் டுக்கு இசைந்து முன்வந்தது அறிந்து நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்.
மனைவி, குழந்தை, குட்டி இல்லாத வாலிபப் பருவத்தில் பொதுத் தொண்டு உற்சாகம் பலருக்கு ஏற்படுவது இயற்கை. ஆனால், மனைவி, குழந்தை, குடும்பப் பொறுப்பு, நல்ல எதிர்காலம், தொழில் ஆதரவு ஆகிய இவை உள்ள நிலையிலும், நாளைக்கும் அவர் (வீரமணி ஒப்புக் கொள்வதானால், அவர் எம்.ஏ.பி.எல். என்பதனாலும், பரீட்சையில் உயர்ந்த மார்க் வாங்கி இருக்கும் தகுதியாலும், மாதம் ஒன்றுக்கு ரூ 250-க்குக் குறையாத சம்பளமுள்ள அரசாங்க அல்லது ஆசிரிய பதவி அவருக்குக் காத்தி ருந்து ஆசை காட்டிக் கொண்டிருக்கும் போதும், அவைகளைப் பற்றிய கவலை இல்லாமல், முழுநேரப் பொதுத் தொண்டில் இறங்குவது என்றால் இது இயற்கையில் எப்படிப்பட்ட மனிதரிட மும் எளிதில் எதிர்பார்க்க முடியாத விஷயமாகும்.
பெரியார் என்ற மாமனிதர் எப்படி எல்லாம் எடை போட்டுத் துல்லியமாகத் தராசில் நிறுத்திப் பார்த்து, விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுகளுக்கு முன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது வியப்பு. ஏனென்றால் ஆசிரியர் வீரமணி ஈ ஓட்டிக் கொண்டிருக்கிற, ஜாமீன் எடுக்க எவராவது வருவாரா என்று வழக்கு மன்ற வாசலில் நின்று கொண்டிருந்த, ஞாயிற்றுக் கிழமை மட்டும் பெயில் எடுக்கத் தேடப்பட்ட வக்கீல் அல்லர் என்பதைத் தந்தை பெரியார் தெள்ளத் தெளிவாகக் காட்டும் நிலையைக் காண்கிறோம்.
ஆசிரியர் விடுதலையின் பொறுப் பேற்ற இரண்டு ஆண்டுகளில் விடு தலைக்கு வெள்ளிவிழா. அத்தோடு விடுதலைக்கு மூடுவிழாவும் நிகழ்வுற் றிருக்கும். ஆம்! 25 ஆண்டுகள் பெரும் சோதனைகளுக்கு இடையே மாதம் ஒன்றுக்கு சராசரி ரூ 3000 நட்டத்தில் நடத்தப்பட்டு வந்த கொள்கை ஏடு, அதற்கு மேலும் தாக்குப் பிடிக்க இயலாத நிலை. பகுத்தறிவு, ரிவோல்ட், குடிஅரசு ஆகியவற்றிற்கு ஏற்பட்ட அதே நிலை விடுதலை ஏட்டுக்கும் ஏற்பட்டிருக்கும்.
விடுதலை நட்டத்தில் கையைச் சுட்டும் நடைபெற்றதற்கும், நட்டத்திற் கும் காரணம் என்ன? 7.6.64 விடு தலையில் விடுதலை வெள்ளி விழா வும் வேண்டுகோளும் (ஈ.வெ.ரா.) எனப் பெரியார் எழுதியதைப் படித்தால் தான் விடுதலையில் அய்ம்பதாண்டு கால ஆசிரியர் கி.வீரமணியின் ஆசிரியப் பணியின் மகத்துவம், பெருமை, சிறப்பு எல்லாம் விளங்கும்.
நஷ்டத்திற்குக் காரணம் கடவுள், மதம், புராணம், ஜோசியம் முதலிய மூடநம்பிக்கை சம்பந்தமான விளம் பரங்களையும் சினிமா முதலிய ஒழுக்கக் கேடும், மூட நம்பிக்கைக் கதை களையும் கொண்ட விளம்பரங்களையும் பத்திரிகையில் போடாமல் பகிஷ்கரித்து வந்ததேயாகும்.
நஷ்டத்தில் நடந்து வந்த பத்திரிகை யைத் தன் வாழ்வைத் தியாகம் செய்து தோள் கொடுத்துத் தூக்கி நிறுத்த அந்த இளைஞர் வீரமணியைத் தேர்ந்தெடுத்தது பெரியாரின் திறமை. விடுதலையை நிறுத்திவிடலாமா என்று பெரியார் முடிவெடுத்து விடும் சூழல் அது. இதோ தந்தையின் வாக்குமூலம்.
10 ஆண்டுக்கு முன்னதாகவே விடுதலையை நிறுத்திவிட்டு ஒரு வாரப் பத்திரிகையைத் துவக்கி நேரில் நிர்வாகம் வைத்து நடத்தலாம் என்று கருதினேன். பத்திரிகாலய சிப்பந்தி களின் முயற்சி காரணமாய்த் தொடர்ந்து நடத்தப்பட வேண்டியதாய் விட்டது. அதன் பயனாய் இரட்டிப்பு நஷ்டத்தை அனுபவிக்க வேண்டியதாகி விட்டது. விடுதலைக்கு இயக்க மக்கள் ஆதரவு மிகக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். பொதுமக்கள் ஆதரவு மிக மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். பொருள் நஷ்டம் இந்த அளவில் இருந்தாலும் அதன் பலன் அலட்சியப் படுத்தக் கூடியதாய் அல்லாமல் பாராட்டத் தக்கதாய் இருந்து வருகிறது என்பதில் அய்ய மில்லை.
ஆசிரியர் பொறுப்பேற்கா மல் இருந்து, அய்யா விடு தலையை நிறுத்திவிட்டிருந் தால் - என்னைப் போன்ற வரலாற்றாய்வாளர்கள் - சமூக நீதி இயக்க வரலாற்றைப் பார்ப் பனீயத்தின் வால் ஒட்ட நறுக் கப்பட்ட வரலாற்றை- தமிழகத் தின் உண்மையான வர லாற்றை உண்மையிலேயே தெளிவாக அறிந்து இளையதலை முறைக்கு எடுத்துச் சொல்லும் - எதிரிகளின் வாய்மூடச் செய்யும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். இன்று பொய்யான கதையைப் புகுத்தி வரலாற்றை மறைக்கும் துக்ளக் போன்ற சனாதன ஏடுகளின் மண்டையில் நச் என்று போட பெரியாரின் கைத்தடி விடுதலை இல்லாமல் போயிருக்கும். எனவேதான் விடுதலை வாழ வேண்டும் என்று பொறுப்பேற்றுக் கொண்ட ஆசிரியர் அய்யா வழியில் இம்மியும் பிசகாமல் ஒழுக்கக் கேடானதும், மூடநம்பிக்கை களை வளர்க்கக்கூடியதும், தமிழ் மக் களுக்குச் சமுதாயத்திலும், அரசியலிலும், உத்தியோகத் துறையிலும் கேடளிக்கக் கூடியதுமான காரியங்களை வெளியாக்க, அக்கேடுகளைப் போக்குதற்காகப் பாடுபடும் பத்திரிகை விடுதலை ஒன்றே ஆக இருப்பதால் அத்துறைகளில் அது செய்து வந்த பணி நல்ல அளவுக்குப் பயன்பட்டு வந்திருப்பதோடு, விடுதலை பத்திரிகை இல்லாதிருந்தால் மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடுகளை ஏன் என்று கேட்க நாதியே இல்லாமல் போயி ருக்கும்.
விடுதலை ஆசிரியர் பொறுப்பின் கீழ் என்ன செய்தது என்பதற்கும் அய்யாவின் எழுத்தைக் கடன் வாங்கிச் சொல்வோம். விடுதலை பத்திரிகையானது மற்ற பத்திரிகைக்காரர்கள் யாரும் இருட் டடிக்கும் செய்திகளையும், வெளியிடப் பயப்படும் செய்திகளையும் தைரியமாய் வெளியாக்கி மக்கள் கவனத்தையும் அரசாங்கத்தின் கவனத்தையும் திருப்பும் படியாகச் செய்து வந்திருக்கிறது. விடுதலை பத்திரிகையானது மற்ற எல்லாப் பத்திரிகைக்காரர்களையும் ஓர் அளவுக்காவது யோக்கியமாய் நடக் கும்படியாயும், அதிகமான அக்கிரமும் அயோக்கியத்தனமும் செய்ய விடாமல் தடுத்து வந்திருக்கிறது. இவற்றையெல்லாம்விட விடுதலை பத்திரிகையானது பார்ப்பன ஆதிக்கத் தையும் அவர்களது அட்டூழியங்களையும் வளரவிடாமல் செய்வதற்கு நல்ல பாதுகாப்பாய் இருந்து வந்திருக்கிறது.
விடுதலை பத்திரிகை பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது விழிப்புக்கு நல்லதொரு துணைவனாகவே இருந்து வந்திருக் கிறது. இன்னும் பல அதிசயங்கள் செய்தி ருக்கிறது, செய்து வருகிறது. எனவேதான் விடுதலை இன்னும் வாழ வேண்டும்; வளரவேண்டும்; மூலை முடுக்கெல்லாம் பரவவேண்டும். அதற்குத் தான் இந்தச் சந்தா சேர்ப்பு இயக்கம்.
விடுதலையை அய்யா நிறுத்திவிடாமல் தொடரச் செய்த அந்த கி.வீரமணி அவர்களின் தியாகத்திற்குத் திராவிடர் கழகத்தவர் மட்டுமல்லாது, தமிழர்கள் அனைவரும், திராவிடர் கழகத்தினால் பயன்பெற்று வரும் அத்துணை தமிழர் களும் வணக்கம் செலுத்த வேண்டும். அதற்குச் சான்று அய்யா எழுதிய கல் எழுத்துகள்.
இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில் சுய நலமில்லாது எவ்வித பொருள் ஊதியத் தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இது போல மற்றொருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்று உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன் படுத்திக் கொள்ளா விட்டால் அது நம்முடைய அறியாமை யாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரசார கராகவும், நமது விடுதலை ஆசிரியராக வும் பயன்படுத்திக் கொள்ள முன் வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்துவிட்டேன்.
விடுதலைப் பத்திரிகையை நிறுத்தி விடாததற்கு இதுதான் காரணம்
இனி விடுதலைக்கு உண்மையான பிரசுரகர்த்தா வாகவும் ஆசிரியராகவும் வீரமணி அவர்கள்தான் இருந்து வருவார். எந்த நிலையில் வீரமணி அவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்கிறார் என்றால், விடு தலையை நான் நிறுத்திவிடப் போவதை அறிந்த சிலர் விடுதலை பத்திரிகை காரியாலயத்தையும், அச்சு இயந்திரங் களையும் மாதம் ஒன்றுக்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வாடகைக்குக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அதை வாடகைக்குக் கொடுப்பதை விட நிறுத்திவிடுவதே மேல் என்று நம்முடைய நண்பர்கள் எல்லோரும் நமக்கு வேண்டு கோளும் அறிவுரையும் விடுத்துக் கொண் டிருக்கும் நிலையில் இயக்க நலத்தையே குறியாகக் கொண்டு பொறுப்பேற்க முன் வந்தார்.
இப்போது சொல்லுங்கள். இந்த நிலையில் இருந்த விடுதலையை இந்த நிலைக்கு அய்ம்பது ஆண்டுகள் தாங்கிப் பிடித்து நடத்திய கி.வீரமணி அவர்களைத் தூக்கி வைத்து, தாங்கிப் பிடித்துக் கொண்டாட வேண்டாமா?
நாம் கொண்டாடக் கூட வேண்டிய தில்லை. நம் கவிஞர் அவர்களும், பொதுக் குழுவும் நிர்ணயித்த குறியளவான 50,000 சந்தாக்களைத் திரட்டி விடுதலைக் கொடியை உயர்த்திப் பிடிப்பதைத்தான் மூவர்ணக் கொடியை அல்ல; நம் திரா விடர் கழகக் கொடியை உயர்த்திப் பிடிப்பது தான் நம் ஆசிரியரை உளம் மகிழச் செய் யும். ஓய்வின்றி உழைக்கும் அவர் அய்யா போல் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தொண்டாற்றச் செய்யுமல்லவா?
தந்தை பெரியார் பட்டவர்த்தனமாகவே, வெளிப்படையாகவே கூறினார் அந்நாளில்.
இது பதிவு செய்யப்பட்ட பெரியாரின் வாசகம்.
விடுதலையின் 25 ஆவது ஆண்டு துவக்கத்தில் லட்ச ரூபாய்களை விடுதலை நடப்புக்கு ஆகசெலவிட்டு நஷ்டமடைந்த நிலையில் ஏற்க முன் வந்த வீரமணி அவர்களது துணிவையும், தியாகத்தையும், சுயநலமற்ற தன்மையையும் கருதி விடு தலையை வீரமணி அவர்களிடம் ஒப் படைக்கிறேன்.
இதற்குப் பொதுமக்கள் இல்லாவிட் டாலும் ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் நம் மக்களிடம் எந்தக் குணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நன்றி காட்டுகிற குணம் என்பது பெரிதும் கிடையாது; கிடையவே கிடையாது. அது இல்லாவிட்டால் நம்பிக்கைத் துரோகம் செய்யாமலாவது இருப்பது என்பது அரிது; மிகமிக அரிது! ஆதலால் விடுதலைக்கு பொதுமக்கள் ஆதரவு பெரிதும் இருக்காது என்பதோடு, பல தொல்லைகள் வருகிறது என்பதோடு மேலும் வரவும் கூடும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
இது எனக்கு அனுபவம்.
இப்போது 50,000 சந்தா சேர்க்கும் திட்டத்தைப் பெரியாரே வலியுறுத்துவது போல் அவர் அன்று எழுதியவை அமை கின்றன.
இன்று நமது இயக்கம் இதுவரை இருந்த அளவைவிட உச்ச நிலையில் இருக் கிறது. இது உண்மை என்பது மெய்ப்பிக் கப்பட வேண்டுமானால் இதுதான் பரீக்ஷை. இயக்கத் தோழர்கள் இந்த வேண்டுகோளை நிறைவேற்றி எங்களைப் பெருமைப்படுத்தி, விடுதலையை வாழ வைத்து வீரமணி அவர்களையும் உற்சாகப் படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று பெரியார் அன்று எழுதியது இன்றும் பொருந்துகிறது.
இன்று நமது இயக்கம் இதுவரை இருந்த அளவைவிட உச்ச நிலையில் இருக் கிறது. இது உண்மை என்பது மெய்ப்பிக் கப்பட வேண்டுமானால் இதுதான் பரீக்ஷை. இயக்கத் தோழர்கள் இந்த வேண்டுகோளை நிறைவேற்றி எங்களைப் பெருமைப்படுத்தி, விடுதலையை வாழ வைத்து வீரமணி அவர்களையும் உற்சாகப் படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று பெரியார் அன்று எழுதியது இன்றும் பொருந்துகிறது.
அய்யா சந்தா சேர்ப்பதற்கு வழியும் காட்டுகிறார்.
நமது இயக்கம், நமது பத்திரிகை செய்துள்ள பணிகளை மக்களிடம் சொல்லுங்கள். அதிகாரிகளை, அரசாங்க சிறிய உத்தியோகஸ்தர்களை, விவசாயப் பொது மக்களைத் தைரியமாய் அணுகுங் கள். வெட்கப் படாதீர்கள். தமிழ்நாட்டு மக்கள் இன உணர்ச்சியையும், சமுதாய நல உணர்ச்சியையும் பரீட்சித்துப் பார்ப்ப தில் நமக்கு கவுரவக் குறைவு நேர்ந்து விடாது. இரண்டு மாத காலம் 60 நாட் களில் 2500 சந்தா; தினமும் 42 சந்தா; 13 மாவட்டங்களில் 100 வட்டங்கள். (தாலுக் காக்கள்). பொதுவாக ஒரு மாவட்டத்திற்கு 200 சந்தா வீதமாகும். இது கூட நம் கழக முயற்சிக்கு விடுதலை மறுபிறப்புக்குக் கைகூடவில்லை என்றால் நம் நிலை என்ன என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற இந்த வேண்டு கோளை விண்ணப்பமாக தமிழ்நாட்டு மக்களிடம் சமர்ப்பிக்கிறேன்.
அய்யா அவர்களின் வேண்டுகோளை அடுத்து ஆசிரியர் அவர்கள் 9.6.64 விடு தலை தலையங்கத்தில் பணிவான வேண்டுகோள் என அன்று விடுத்ததும் இன்றும் பொருந்துகிறது.
அய்யா அவர்கள் கழகத் தோழர்களி டம் எப்போது எதைக் குறித்து வேண்டு கோள் விடுத்தாலும் மிகவும் குறைத்தே கேட்பது அவர்களது வழக்கமாகும். அத னைப் புரிந்து கொண்டோம் என்பது போலக் கழகத் தோழர்களும் ஆதரவாளர் களும் அவர்கள் கேட்டதற்கு மேல் சாதனை செய்து காட்டி, கழகத்திற்குப் பெருமை தேடித் தரவும் தந்தை அவர்களின் தனி மகிழ்ச்சிப் பெருக்கை உண்டாக்கவுமான முறை யில் இது வரையிலும் ஈடு பட்டே வந்துள்ளனர். வழக் கம் போலவே இந்த இலக்கு களையும் தாண்டிடும் சாத னையைத்தான் தோழர்க ளும், ஆதரவாளர்களான அன்பர்களும் செய்து காட்டு வர் என்றே எதிர்பார்க்கலாம்.
இதைச் சொல்லிவிட்டு ஆசிரியர் அடக்கமாகக் கூறியுள்ள வார்த்தைகள் நம் நெஞ்சை நனைக்கின்றன. இன்று 79 வயது பெரியவர் நிலையை எட்டிய போதும், அன்று காட்டிய அதே தன்னடக் கத்தை, மனிதநேயத்தை, அனைவரையும் மதித்துப் போற்றுகின்ற மாண்பை இன்றும் காண்கிறோம்.
கடைசியாக ஒரு வார்த்தை. என்னைப் பாராட்டும் வகையில் அய்யா அவர்கள் எழுதியுள்ள வார்த்தைகளுக்கு நான் சிறிதும் தகுதி படைத்தவனல்லன்; அய்யாஅவர்கள் இட்ட பணியைச் செய்து முடிக்கும் பல்லாயிரக்கணக்கான கழக ஊழியர்களில் நானும் ஒருவன். அவ் வளவு தான். என் போன்றவர்களை உற் சாகப்படுத்தி இன்னும் நல்ல முறையில் உழைக்கச் செய்யவே இந்த அன்பு வார்த்தைகளைக் கூறியிருக்கிறார்கள். அந்தப்படிக்கு உழைக்க இயக்கத் தோழர் களுடைய பேரன்பினையும், பெரும் ஆற் றலையும் இயக்கத்தின் தினசரியாகிய இவ்வேடு வேண்டி நிற்கிறது.
தோழர்களே!
இந்த முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து உதவுங் கள்! இம்முயற்சி வாகை சூடி நல்ல பலமான அஸ்திவாரத்தை இதற்கேற்படுத்தி என்றென்றும் தங்கு தடையின்றி இயக்கப் பிரச்சாரம் நடைபெறச்செய்வது உங்களின் தனிப் பொறுப்பல் லவா! வசதி படைத்த அன்பர் களிடம் இரண்டாண்டு சந்தா கூடப் பெற்று அனுப்பலாம்.
அய்யாஆசிரியர் அவர்கள்அன்று போல் இன்றும் வேண்டுகோள் அளித்துள்ளார்.
இதனை வெற்றியாக நம் இயக்கத் தோழர்கள் செய்து முடிப்பார்கள். எப்படி? கட்சியின் பொறுப்பாளர்கள் எந்த அமைப்பில் இருந்தாலும் அது கட்சியின் எந்த அமைப்பாயினும் ஒவ்வொருவரும் தங்கள் பெயரில் ஒரு சந்தா. அது போல உறுப்பினர் ஒவ்வொருவரும் தங்கள் பெயரில் ஒரு சந்தா. ஒவ்வொருவரும் ஒரு பத்து ஆண்டுச் சந்தா திரட்டுவது என்று இலக்கு வைத்தால் லட்சிய ஏட்டுக்குத் தங்கள் பங்களிப்பை வெற்றிகரமாக நிகழ்த்திக் குறியீட்டைத் தாண்டிவிடலாம்.
இந்தச் சந்தா ஒன்றும் ஆசிரியர் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் 50 ஆண்டுப் பொறுப்பைச் சிறப்பிப்பது என்றாலும், இதில் வரும் ஒரு சல்லிக் காசும் அவர் மூட்டைகட்டி எடுத்துச் செல்லவோ, அவர் குடும்பம் பெறவோ இல்லை என்பதை கழகத் தோழர்கள் உணர்வர்.
ஏனென்றால் தந்தை பெரியாரின் கைத்தடியாக- சமூக மாற்றத்தின் திறவு கோலாகத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி ஏடாக விடுதலை என்றும் தொடரவே இந்த ஏற்பாடு! இந்த சிறப்பான முயற்சி!!
நம் அய்யா தந்த அருட்கொடையாம் விடுதலைக்கு 50 ஆயிரம் சந்தாக்கள் சேர்க்கும் பகுத்தறிவு பரப்பும் அரிய பணியாளர்களாக மாறித் தீவிரமாகச் சொல்லொணாத ஆர்வத்துடன் உழைத் துக் கொண்டுள்ள உங்களுக்கு எமது தலை தாழ்ந்த நன்றி என்று நன்றி தெரிவிக்கும் ஆசிரியர் 14.10.2011 அன்று விடுதலை சந்தா சேகரிப்பு இயக்கம் குறித்து அறிவிக்கும் தமிழர் தலைவர் இடையில் இரண்டே மாதங்கள் உள் ளன. இமை மூடாமல், இடையறாமல், கடுமையாக உழைத்தால் வெற்றி தானே வந்து சேரும் என்று குறிப்பிடும் குரல் நமது பகுத்தறிவுப் பகலவன் இப்போது உடனடியாக 2500 சந்தா அதிகமாகச் சேர்க்கப்பட்டே ஆகவேண்டும் என்று 7.6.64 இல் விடுத்த வேண்டுகோளின் எதிரொலியாகவே படுகிறது.
இதுவரை மிகப் பொறுப்பாகவே இதைக் குறித்து விவாதித்தோம். வானம் பாடி எனும் திரைப்படத்தில் தேவிகா, கங்கைக் கரைத் தோட்டம் என்று பாடு வார். அங்கேவந்த டி.ஆர். ராஜகுமாரி அவர்கள் பாட்டைக் கேட்டு, அதே குரல், அதே பாடல், நீ பாடும்போது,உமா பாடுவது போலிருக்கிறது என்பார்.
அதைப் போலவே நம் ஆசிரியரின் இடையில் இரண்டே மாதங்கள்! இமை மூடாமல் உழைத்து இலக்கை எட்டுவீர்! எனும் குரல் கேட்டுத் தந்தை பெரியாரின் அதே குரல். அதே வேண்டுகோள் என்று சொல்லத் தோன்றுகிறது. அன்று அய்யா 2500 சந்தா என்றார். இன்று 50,000 சந்தா என்கிறோம். இதுதான் வேறுபாடு. என்றாலும், 50 ஆண்டுக் கடுமையான உழைப்பின் பின், சமூகத் தொண்டின் பின், இக்கோரிக்கை எழுகிறது.
(நிறைவு)
(நிறைவு)
No comments:
Post a Comment