Thursday, September 15, 2011

அண்ணா பிறந்த நாளில்...

இன்று அறிஞர் அண்ணா அவர்களின் 103ஆம் ஆண்டு  பிறந்த நாள். அண்ணா அவர்கள் 60 ஆண்டு காலம்கூட வாழ முடியாத நிலை என்பது தமிழ்ச் சமுதாயத்துக்குப் பேரிழப்பாகும்.

அந்தக் கால கட்டத்தில் எம்.ஏ., என்பது பெரிய படிப்பாகும். எம்.ஏ. படித்த அண்ணா, ஏ.பி. ஜனார்த் தனம் போன்றவர்கள் தந்தை பெரியார் அவர்களின் கரம் பிடித்து சமுதாய மாற்ற பணிகளுக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்டது சாதாரணமானதல்ல.

நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் கூறுவ துண்டு எம்.ஏ. படித்த நாங்கள் எல்லாம் நான்காம் வகுப்பே படித்த பெரியாரை பின்பற்றியதற்குக் காரணம் - யாரும் சொல்லிடாத சமுதாயப் புரட்சிக் கருத்துகளை, சிந்தனைகளை அவர் எடுத்து வைத்ததுதான் காரணம் என்றார்.

தந்தை பெரியார் நினைத்திருந்தால் அரசியலில் நுழைந்து பெரும் பதவிச் சிம்மாசனங்களில் அமர்ந் திருக்கலாம்; இரண்டு முறை தமிழகத்தின் முதல் அமைச்சர் பதவி அவரைத் தேடி வந்து கதவைத் தட்டியபோதும்கூட மறுதலித்தவர் அந்த மகத்தான தலைவர்.

பகுத்தறிவு, தன்மான இயக்கக் கொள்கைகளை மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் அண்ணா அவர்களின் உரையும், எழுத்துகளும் பெரும் ஈர்ப்பைப் பெற்றன.

நாடகங்களை அவரே படைத்து, அவரே நடிக்கவும் செய்தார்; அய்யா அவர்களோடு அண்ணா அவர் களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு தமிழர்களின் வளர்ச்சித் திசையில் ஏற்பட்ட இடர்ப்பாடே!

ஆனாலும் அண்ணா அவர்கள் குறைந்த கால அளவு ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு, பகுத்தறிவுத் திசையில் யாரும் அழிக்க முடியாத - கை வைக்க முடியாத முத்திரை களைப் பொறித்துச் சென்றார்.

தருமபுரி மாவட்டம் நாகரசம்பட்டியில் பெரியார் ஈ.வெ. ராமசாமி உயர்நிலைப்பள்ளி விழா ஒன்றில் தந்தை பெரியார் அவர்களுடன் கலந்து கொண்ட முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் அய்யா ஆணை யிட்டால் முதல் அமைச்சர் பதவியை விட்டு மீண்டும் பெரியார் அவர்களுடன் இணைந்து பகுத்தறிவுப் பணியைத் தொடரத் தயார் என்று கூறினார் என்றால், அண்ணாவின் இதயத்தில் எது முதன்மை யாகக் குடி கொண்டிருந்தது என்பதை எளிதில் அறியலாம்.

மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள்கூட, தி.மு.க.வுக்கு அரசியல் கொள்கைகளைவிட சமுதாயக் கொள்கைக்குத்தான் முதலிடம் என்று தெரிவித்துள்ளார்.

பகுத்தறிவுப் பாதையில் தி.மு.க.வினர் நடைபோட வேண்டும் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் பொழு தெல்லாம் கட்டளையிட அவர் தவறுவதும் கிடையாது.

அதிமுகவைப் பொறுத்தவரை அது அசல் ஆன்மீக திமுக என்ற நிலையில் உச்சத்தில் இருக்கிறது. காரணம் அதன் பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய அம்மையார் அப்பட்டமாக ஆன்மிகப் பண் பாட்டில் திளைத்து நிற்பதுதான்.

அந்த ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பைத் தகர்க்கத்தான் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது என்பது அந்த அம்மையாருக்குத் தெரியாதா? தெரியும்; ஆனாலும் அந்தக் கொள்கைகளைக் கடைப் பிடிக்காதவராக - கடைப்பிடிக்க முடியாதவராக இருக்கிறார் என்றால் அது திராவிடர் இயக்கத்தில் ஏற்பட்ட ஊடுருவல் என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.

விநாயக சதுர்த்திக்கும், கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்துச் சொல்லும் அளவுக்கும் மண்சோறு தின்பதை ஊக்குவிக்கும் அளவுக்கு ஒரு கட்சி  அக்கட்சியின் தலைமை சென்று விட்ட பிறகும், அண்ணா பெயரை திராவிட என்ற இனச் சுட்டுப் பெயரையும் தரித்துக் கொள்ள அடிப்படை உரிமை உண்டா?

அண்ணாவின் பிறந்த இந்நாளில் இந்தச் சிந்தனை மிக மிக அவசியமே! அனைத்துத் திராவிட அரசியல் கட்சிகளும் பகுத்தறிவுச் சிந்தனைகளை கட்சி மட்டத்தினர் கண்டிப்பாக கடைப்பிடிக்கச் செய்வதற்கும், மக்கள் மத்தியில் அந்தக் கருத்துகளைப் பரப்புவதற்குமான செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல் படுவது மிகவும் அவசியமாகும். இது அண்ணா பிறந்த நாள் சிந்தனையாக அமையட்டும்!

பகுத்தறிவுச் சிந்தனை பரவினால்தான் அரசியலில் கூட ஒரு தெளிவும், வாக்காளர்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வும் ஏற்பட முடியும்.

அண்ணாவின் பிறந்த நாளில் இது தொடர்பாக உரத்த சிந்தனைகள் வெடித்துக் கிளம்பட்டும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...