Thursday, September 15, 2011

மனிதத்தின் மறுபெயர் அண்ணா!

மனிதத்தின் மறுபெயர் அண்ணா!

இன்று அறிஞர் அண்ணாவின் 103ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழா. அறிஞர் அண்ணா ஒரு பல்கலைக் கொள் கலன். பல்வேறு பரிமாணங்களில் தனது ஆற்றல் முத்திரையைப் பதிப்பித்த அற்புத மாமனிதர்; எந்த நிலையிலும் தன்னை உயர்த்திய, தனக்குத் தன்மானமும், இனமானமும் சொல்லிக் கொடுத்த அறிவு ஆசானாம் அய்யாவை மறக்காது, குருபக்தி கொண்ட நன்றிப் பெருக்கின் நாயகன்.

பதவியை மேல் துண்டாகவும், கொள்கையை இடுப்பு வேட்டியாகவும் கொண்ட கொள்கைக் கோமான்..

இவை ஒருபுறம் எப்போதும் வரலாற்றுக் கல்வெட்டுக்களாக இருப்பவை.

அண்ணா அவர்களின் மனிதம் - மனிதநேயம் - ஈடு இணையற்றது. இளைய தலைமுறை - இன்றைய தலைமுறை கற்க வேண்டிய கற்கண்டுப் பாடங்கள்.

நம் நாட்டில் உள்ள கோவா, டையு, டாமன் போன்ற பகுதிகள் போர்த்துக்கீசியரால் வளைக்கப்பட்டு, அவர்களின் ஆதிக்கத்தின்கீழ் போர்ச்சுக்கல் நாட்டினை உள்ளடக்கி இருந்தபோது, பிரெஞ்சு இந்தியாவில் விடுதலை - மற்றும் இணைப்புப் போன்ற போராட்டங்கள் நடைபெறுவதுபோல, கோவா பகுதியிலும் நடந்தது. பிறகு இணைந்தன அப்பகுதிகள்.

அந்தப் போராட்ட காலத்தில் கொலைக் குற்றத்திற்கு ஆளாகி, போர்ச்சுக்கல் நாட்டுச் சிறையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் நாளை எதிர்பார்த்து துன்பக் கடலில் வீழ்ந்து துடித்துக் கொண்டிருந்தார் ஒரு கோவா இளைஞர்! 1967 இல் ஆட்சிக்கு வந்த அண்ணா அமெரிக்கா, அய்ரோப்பா போன்ற பகுதிகளில் சுற்றுப் பயணம்  செய்தபோது, வாட்டிகன் நகருக்கு ரோமன் கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவர் என்று அழைக்கப்படும் போப் அவர்களைச் சந்திக்க விரும்பிச் சென்றார்.

பலருக்கும் வியப்பு! என்ன கடவுள், மதம், இவற்றுக்கு எதிரான இவர் போப்பிடம் ஆசி வாங்கச் சென்றுள்ளாரே என்ற பேச்சு. எங்கெங்கும் சில அரை வேக்காடுகளின் அவசரகோல விமர்சனங்களும் வீசப்பட்டன! அண்ணா, போப் அவர்களைச் சந்தித்தபோது, இந்தியாவில் போர்த்துகீசிய போராட்டம் நடந்தபோது, வாலிபன் ஒருவன் தூக்குத் தண்டனைஅளிக்கப்பட்டு சிறையில் போர்ச்சுகல்லில் அவதியுறுவதை விளக்கி, போப் கருணை காட்டி விடுதலை செய்யச் சொன்னால், போப் ஆண்டவரின் மதக் கொள்கையை ஏற்று நடக்கும் அந்த போர்த்துக்கீசிய அரசு அதனை அலட்சியம் செய்யாது, அந்த இளைஞனை விடுதலை செய்து, அவனை வாழ வைக்கும் என்று மனித நேயம் பொங்க ஒரு வேண்டுகோளை மிகுந்த அன்புடனும், அடக்கத்துடனும் போப் உள்ளத்தைக் உருக்கும் வண்ணம் கூறினார்.

போப் அதனை ஏற்று, பரிந்துரை செய்தார். சில மாதங்களுக்குப் பிறகு தூக்குத் தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, அந்த வீரன் விடுதலை ஆனான். சென்னையை நோக்கிப் பயணம் செய்தான்.  தன்னை யார் என்றே தெரியாத ஒரு மாமனிதர் தனக்கென இவ்வளவு பெரிய சர்வதேசத் தொண்டறத்தைச் செய்துள்ளாரே என்று நன்றி பொங்க ஓடோடி வந்தார்.

ஆனால் அண்ணாவோ, உயிருடன் இல்லை - அவர் நன்றி சொல்ல வந்தபோது!

அண்ணாவின் நினைவிடம் அமைந்த கடற்கரையில் சென்று தனது கண்ணீரை அவர் நினைவிடத்தில் காணிக்கையாக்கி, அந்தோ வங்கக்  கடலோரத்தைக் கடந்து துயரக் கடலில் துடித்த வண்ணமே சென்றார் அந்த விடுதலை பெற்ற வீரர்!

இப்படி ஒரு மாமனிதம் - அண்ணா என்ற பகுத்தறிவாளரைத் தவிர வேறு எவரிடம் காண முடியும்?

ஆன்மீகம் கொலைகளை நிகழ்த்துகிறது.  நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்கிறார் சங்கராச்சாரியார். பகுத்தறிவோ, குற்றம் புரிந்தாலும் கூட மனிதத்தை முன்னிறுத்தி ஏவுகிறது!

இதற்குப் பெயர்தான் மானிடம். இன்று நம் நினைவில் அந்த மானிட நேயத்தின் மறுபெயர்,

அண்ணா!  அண்ணா!!  அண்ணா!!!

 

1 comment:

புகல் said...

/* மனிதத்தின் மறுபெயர் அண்ணா! */
உறுதியாக, வழிமொழிறேன்
மேலும் உலக அறிஞர் நாள் என்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாட
எதேனும வழிவகை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...