Friday, September 30, 2011

ஏழு வருடம் தண்டனையாம்!


ஏழு வருடம் தண்டனையாம்!


உச்சநீதிமன்றத்தில் நீரோமன்னன் என்று அழைக்கப்பட்ட குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி புதிய சட்டம் ஒன்றைப் பிறப்பித்துள்ளார். புதிய சட்டத் திருத்தத்தின்படி குஜராத் மாநிலத்தில் பசுவைக் கொன்றால் ஏழு வருடம் தண்டனை விதிக்கப்படும்.
பசுக்கள், காளைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்ல, முறையான அமைதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் கொண்டு செல்ல முடியாது. இதற்கு அனுமதி வழங்க தனி அமைப்பு உருவாக்கப்படும். விவசாய பயன்பாட்டுக்குத் தவிர மற்ற காரணங்களுக்குக் கொண்டு செல்ல முறையான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இதை மீறி யாராவது பசுக்களையோ, காளைகளையோ கொண்டு செல்லுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குஜராத் சட்டப் பேரவையில் இதற்கான சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது.
மோடி ஆளும் மாநிலத்தில் பசுக்களைக் கொன்றால்தான் குற்றமே தவிர மனிதர்களைக் (குறிப்பாக சிறுபான்மை இன மக்களை) கொன்றால் குற்றம் கிடையாது. 2002இல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப் பட்டார்களே - இதுவரை தண்டனை கிடையாதே! நர வேட்டையை பின்னணியில் இருந்து இயக்கிய நரேந்திரமோடி எதுவும் நடக்காதது போல ராஜ நடை போட்டுத் திரிகிறாரே! அடுத்த பிரதமருக்கான வேட்பாளர் என்று பாரதீய ஜனதாவால் முன்னிறுத்தவும் படுகிறாரே!
பிரதமர் பதவிக்கு இவரை எதிர்த்து நிறுத்தப்படுபவர் - இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் கொன்ற வராக இருக்கவேண்டும் போலும்!
உணவு பழக்கம் என்பது தனி மனிதனைப் பொறுத்தது. இதைச் சாப்பிட வேண்டும்; இதைச் சாப்பிடக் கூடாது என்று கூறுவதற்கு இவர்கள் யார்?
பசு - கோமாதா - பசுவின் உடலில் லட்சுமி வாழ்கிறாள் என்று இவர்களே எழுதி வைத்துக் கொண்டு மற்றவர்கள்மீது திணிப்பதற்கு இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?
எருமை மாட்டை வெட்டலாம்; ஆட்டை வெட்டலாம். ஆனால் பசுவை உணவுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்பது இவர்களின் இந்துத்துவா கொள்கை! இந்துத்துவாவை மற்றவர்கள்மீது, கிறித்தவர்கள்மீது, முசுலிம்கள்மீது, மதச்சார்பற்றவர்கள்மீது திணிக்கலாமா?
இந்தக் கூட்டம் ஆட்சிக்கு வருவது எவ்வளவுப் பெரிய ஆபத்து என்பது விளங்கவில்லையா? அனைவருக்கும் உண்ண உணவுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாத ஆட்சியாளர்கள், உணவு உண்ணுவோரின் கையைத் தட்டி விடலாமா?
மக்களுக்கு ஒரு வகையான மலிவாகக் கிடைக்கும் சத்துணவு மாட்டுக்கறிதானே? பசுவின் மீது இரக்கப்படும் இந்த ஷைலக்குகள், மனிதர்கள்மீது இரக்கப்படாதது - ஏன்? ஆம், மதம் அத்தகைய மிருக உணர்வைத்தான் உற்பத்தி செய்யும்; மனித உணர்வுகளை மரித்துப் போகச் செய்யும்.
இந்து மதத்தை அமெரிக்காவுக்கே சென்று பரப்பிய பிதாமகன் என்று விவேகானந்தரை சொல்கிறார்கள் அல்லவா!
அந்த விவேகானந்தரை பசு பாதுகாப்புச் சங்கத்தின் பிரசாரகர் ஒருவர் நேரில் சந்தித்து ஒரு வெளியீட்டைக் கொடுத்தார் - அப்பொழுது இருவர்க்குமிடையே நடந்த உரையாடல் முக்கியமானது.
சுவாமிஜி: உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன?
பிரசாரகர்: நாங்கள் கசாப்புக்காரரிடமிருந்து கோமாதாவைக் காப்பாற்றுகிறோம்.
சுவாமிஜி: உண்மையில் இது நல்ல காரியம்தான் இந்தச் செலவிற்கு உங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?
பிரசாரகர்: உங்களைப் போன்ற பெரியவர்கள் கருணையுடன் தரும் நன்கொடைகளால்தான் இந்தக் காரியங்கள் சிறப்பாக நடக்கின்றன.
சுவாமிஜி: மத்திய இந்தியாவில் இப்பொழுது பயங்கரமான பஞ்சம் மக்களை வாட்டுகிறதே! அந்தப் பஞ்சத்தில் ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் செத்துப் போனதாக இந்திய அரசாங்கம் வெளியிட்டிருக்கிறதே, உங்கள் சங்கம் இந்தப் பஞ்சத்தில் மக்களைக் காப்பாற்ற ஏதாவது செய்ததா?
பிரசாரகர்: நாங்கள் இது போன்ற பஞ்சங்களிலும், துன்பங்களிலும் உதவுவதில்லை; இந்தச் சங்கம் பசு மாதாவைக் காப்பாற்றுவதற்கு மட்டும்தான் அமைக்கப்பட்டுள்ளது.
சுவாமிஜி: இந்தப் பஞ்சத்தில் உங்களுடைய சகோதரர்களும், சகோதரிகளுமாகிய ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் சாவின் கொடிய பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள். வசதி இருந்தும், அவர்களுக்கு உணவு கொடுத்துக் காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமை என்பதை நீங்கள் நினைக்கவில்லையா?
பிரசாரகர்: அதை நாங்கள் செய்ய வேண்டியதில்லை. இந்தப் பஞ்சம் அவர்களின் கர்மத்தின் விளைவாக, பாவங்களின் விளைவாக வந்திருக்கிறது. கர்மம் எப்படியோ அப்படியேதான் பலனும்.
இப்படி உரையாடல்கள் தொடர்கின்றன.
பசு நமது அன்னை என்று பிரசாரகர் சொன்னபொழுது விவேகானந்தர் சொன்னார்:
ஆமாம் பசு நம் தாய்தான்; பசுதான் நம் அன்னை என்பது எனக்கு இப்போது புரிகிறது. இல்லையென்றால் நம்மைப் போன்ற இவ்வளவு அறிவு நிறைந்த பிள்ளைகளை வேறு யார் பெற முடியும்? - என்றார் கேவலமாக, கிண்டலாக.
(ஆதாரம்: சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடம் வெளியிட்ட - விவேகானந்தரின் ஞானதீபம் சுடர் தொகுப்பு)
இந்து மதத்தின் தத்துவத்தைக் கரைத்துக் குடித்தவராக கூறப்படும் விவேகானந்தரின் இந்தக் கருத்துப்பற்றி மோடி முதல் ராமகோபாலன் வரை என்ன கருத்துக் கொண்டிருக் கிறார்கள்? இதற்குப் பதில் சொல்லி விட்டு பசுவதைத் தடுப்புச் சட்டம் செய்யலாமே!

6 comments:

dondu(#11168674346665545885) said...

//குஜராத் சட்டப் பேரவையில் இதற்கான சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது.//

எதிர்க்கட்சியினர் மயிர் பிடுங்கினார்களா?

டோண்டு ராகவன்

Anonymous said...

எது கொடுப்பதாக இருந்தாலும் முதலில் இந்துமத வெறியர்களைத்தான் தண்டிக்க வேண்டும். வேத, இதிகாச, புராண உபநிடதங்கள், மனுஸ்மிருதி மற்றும் புத்த – சமண மத இலக்கியங்கள் அனைத்தும் பண்டைய ‘இந்துக்கள்’ மாட்டுக்கறி தின்னும் உலகளாவிய பழக்கத்தைக் கொண்டவர்களே என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன

Anonymous said...

பிரம்மா பசுவைப் படைத்ததே வேள்வியில் கொல்லத்தான் என்று கூறும் மனுஸ்மிருதி, ‘உலக நன்மைக்காக வேள்வியில் கொல்லப்படும் பசுவை பிராமணன் உண்ணலாம்’ என்றும் தெரிவிக்கின்றது. அதிலும் யாக்ஞவல்கியர் எனும் உபநிடத முனிவர், கன்றுக்குட்டி இறைச்சியைப் பற்றி ஆனந்த விகடனின் சாப்பாட்டு ராமன்களைப் போல ரசனையுடன் விவரிக்கிறார்.

Anonymous said...

மாட்டுத் தலையை வைத்து ஆர்.எஸ்.எஸ். கொன்ற மனிதத் தலைகள்தான் இந்நாட்டின் மாபெரும் அவமானம். கேவலம் மாட்டிற்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் இந்து மத வெறியர்கள்தான், ஆயிரக்கணக்காக முசுலீம்களின் உதிரத்தைக் குடித்தவர்கள் என்பது வரலாறு.

Anonymous said...

கணிப்பொறி வேலைக்காக நம்மூர் அம்பிகள் ஈக்களாய் ஒட்டிக் கொள்ளும் அமெரிக்காவில்தான் சிகாகோ நகரம் உள்ளது. இறைச்சிக்காக நவீன ஆலைகளில் தினமும் பல்லாயிரம் மாடுகள் கொல்லப்படும் இந்நகரம் ‘உலகின் கொலைக்களம்’ என்றழைக்கப்படுகிறது. ஆதலால் கோமாதாவைக் கொலை செய்யும் அமெரிக்காவிற்கு இந்துக்கள் போகக் கூடாது என இந்து முன்னணி தடை போடுமா?

Anonymous said...

பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் தூக்கிச் செல்வதற்குப் பறையர்களையும், சக்கிலியர்களையும் அழைப்பது ஏன்? பூதேவர்களான பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா பஜனை பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் – செத்த கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை நிரூபிக்கட்டும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...