Wednesday, September 21, 2011

லஞ்ச ஒழிப்புவீராதி வீரர்கள்!

லஞ்ச ஒழிப்புவீராதி வீரர்கள்! 

கருநாடகத்தை ஆளும் பா.ஜ.க. உலகத்திலேயே நேர்மைக்காக நோபெல் பரிசு அளிக்கப்பட வேண்டிய ஓர் ஆட்சிதான் - ஆமாம், நம்பித் தொலையுங்கள்.

கருநாடக மாநில லோக் அயுக்தா அமைப்பின் தலைவராக இருந்த சந்தோஷ் ஹெக்டேயின் அறிக்கை காரணமாக முதல் அமைச்சர் எடியூரப்பா பதவியை விட்டு விலகி ஓடும்படி நேர்ந்தது.

சந்தோஷ் ஹெக்டேயின் பதவிக் காலம் முடிந்த நிலையில், அந்தப் பதவிக்குப் புதிய நீதிபதியை மாநில பா.ஜ.க. முதல்வர் நியமித்தார்.

அப்படி நியமிக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டில் எப்படிப்பட்டவர் தெரியுமா? 4000 சதுர அடி உள்ள இரண்டு வீட்டு மனைகள் ஏற்கனவே அவரிடம் உள்ளன.

இவை போதாது என்று நீதிமன்ற ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகளிலும் தனக்கு ஒதுக்கீடு செய்து கொண்ட ஒரே ஒரு உத்தமரைத்தான் தேடிப் பிடித்து லோக் அயுக்தாவுக்கு நியமித்துள்ளனர். உத்தமபுத்திரர்கள் என்று மார்தட்டும் பி.ஜே.பி. அரசு நியமனம் செய்தது.

இப்படிப்பட்டவர்கள் அதிகாரத்தில் இருந்தால் தானே தங்களின் சுருட்டல் கலையை ஜோராகச் செய்திட முடியும்.

பிரச்னை முற்றி வெடித்ததால் சிவராஜ் பாட்டில் ராஜினாமா செய்து நடையைக்கட்டும் நிலை ஏற்பட்டது.

இந்தச் செய்தி ஒரு பக்கம் உலாவிக் கொண்டிருக்க இன்னொரு செய்தியும் நாட்டிலே தலை தூக்க ஆரம்பித்து விட்டது.

அதுதான் எல்.கே.அத்வானியின் ரதயாத்திரை. இதற்கு ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் அனந்த குமார். இவர்தான் கருநாடக மாநிலத்தில் எடியூரப்பாவை பதவியில் இருந்து கல்தா கொடுப்பதற்குக் காரணம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

பாரதீய ஜனதாவின் கட்டுப்பாடும், நேர்மைப் பண்பும் இத்தியாதி... இத்தியாதி திசைகளில்தான் பயணிக் கின்றன.

இப்பொழுது அனந்த குமார் மீதும் ஊழல் குற்றச் சாற்றுகள் ஓஹோ என்று மேலே கிளம்பியிருக்கின்றன.

அரசியல் தரகர் என்று கூறப்படும மீரா ராடியா விவ காரத்தில் அனந்த குமாருக்குத் தொடர்பு இருக்கிறதாம். வீட்டு வசதித் துறையில் 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஊழல் செய்ததாக அனந்தகுமார் மீது குற்றச் சாற்று இருக்கிறதாம். இதனை எடியூரப்பாவும் அவரது கூட்டாளிகளும் பெரிது படுத்தப் போவதாக அவாள் ஏடான தினமலரே இன்று அக்கம் பக்கம் பார்த்துத் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்குச் சொந்தமான அறைகளைத் திறக்கத் திறக்க புதையல்கள் கிடைத்துக் கொண்டே இருப்பது போலவும், புட்ட பர்த்தியில் சாயிபாபாவின் பிரசாந்தி பங்களாவின் அறைகளைத் திறக்கத் திறக்க அதிர்ச்சியூட்டும் வகையில் பணக் கத்தைகளும், பட்டுப் புடவைகளும், லேடீஸ் கைப் பைகளும் கிடைத்தது போலவும், பி.ஜே.பி.யைச் சேர்ந்த வர்களின் சமாச்சாரங்களைத் தோண்ட ஆரம்பித்தால் திடுக்கிட வைக்கும் ஊழல்களின் எலும்புக் கூடுகளும், மண்டை ஓடுகளும் திபு திபு என்று கிடைக்க ஆரம்பிக் கின்றன.

சவப்பெட்டி இறக்குமதியிலேயே ஊழல் புரிந்த புருடர்கள் அல்லவா இவர்கள்! வேறு எதில்தான் ஊழல் செய்யத் தயங்குவார்கள்?

நாட்டில் ஊழலை ஒழித்துக்கட்ட  மகாவிஷ்ணுவின் 11 ஆவது அவதாரம் எடுத்துள்ளது நாங்கள்தான் என்பது போல இந்த ஊழலின் ஊற்றுக் கண்கள் மார் தட்டுவதுதான் நல்ல தமாஷ்!

அன்னா ஹசாரே என்ற ஒருவரை காந்தி போல ஜோடித்து, உண்ணாவிரதம் இருக்கச் செய்தனர். அவர் மீதுள்ள ஊழலோ ஊளை நாற்றம் எடுத்தது. அறக் கட்டளை நிதியை எடுத்துப் பிறந்த நாள் விழா கொண்டாடிய மகாமகா உத்தமர் அவர்.

கெஞ்சிக் கூத்தாடி மத்திய அரசின் தாவாயைப் பிடித்து கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.

நாட்டின் ஊடகங்கள் (பெரும்பாலும் பார்ப்பனர் சார்புடையவைதான்) எல்லாம் ஊதி ஊதி ஹசாரேயின் உண்ணாவிரதத்தை உலகெங்கும் பரப்பின.
இதன் நோக்கம் இதனால் கிடைக்கக்கூடிய அரசியல் அறுவடையை பி.ஜே.பி. அனுபவிக்க வேண்டும் என்பதுதான்.

என்னதான் சாமர்த்தியம் காட்டினாலும் ஹசாரேயைச் சுற்றி நிற்பவர்கள் காவிக் கூட்டத்தினர் என்பது அம்பலமாகிவிட்டது.

ஊழல் ஒழிப்புக்காக மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படம் ஹசாரேயின் உண்ணாவிரதக் கூட்டத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து கோஷங்கள் எங்கிருந்து முகிழ்த்தன?

அத்வானியின் ரத யாத்திரையாக இருந்தாலும் சரி, ஹசாரேயின் உண்ணாவிரதமாக இருந்தாலும் சரி, ஓநாய் மோடியின் மூன்று நாள் உண்ணாவிரதமாக இருந்தாலும் சரி - இவற்றின் நோக்கம் வரக்கூடிய மக்களவைத் தேர்தல் - சில மாநிலங்களில் நடக்க இருக்கும் சட்ட மன்றத் தேர்தல்தான்.

புலி பசுத்தோல் போர்த்தி வருகிறது. பொது மக்களே உஷார்!  உஷார்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...