Wednesday, September 21, 2011

50 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் அளிப்பது என்பது எதிரிகளைக் குலைநடுங்கச் செய்யும்!


கழகத்தை யாரும் அசைக்க முடியாது என்று கட்டியம் கூறும்-தமிழர் தலைவர் உரை
தஞ்சாவூர், செப். 21- விடுதலைக்கு 50 ஆயிரம் சந்தாக்களைச் சேர்ப்பதன்மூலம் கழகத்தை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது என்ற நிலையை உருவாக்கும் என்றும், எதிரிகளைக் குலைநடுங்கச் செய்யும் என்றும் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.

திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டம்தான். இதற்கு முன்பும் இத்தகு கூட்டங்கள் நடந்ததுண்டு. கூட்டத்துக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் மனந்திறந்து சொன்னது போல - இது ஒரு மன நிறைவான மகிழ்ச்சி மிகுந்த கூட்டம் என்பதில் அய்யமில்லை. (தஞ்சை வல்லத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம்!)

எதைப்பற்றிப் பேசுவது?

சொற்பொழிவாளர்கள் இந்தக் காலகட்டத்தில் எந்தப் பிரச்சினையை முன்னிறுத்தி எப்படிப் பேசவேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப் பட்டது.

1. தைத் திங்கள் முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற தமிழ் அறிஞர் பெருமக்களின் நீண்டகால கோரிக்கையை திராவிடர் கழகத்தின் தொடர் வற்புறுத்தலை ஏற்று, மானமிகு கலைஞர் அவர்கள் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற அருவருப்பான ஆபாசமான புராணத்தைப் பின்னணியாகக் கொண்ட, ஆரியப் பண்பாட்டின் படையெடுப்பைப் புறந்தள்ளி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டத்தை இயற்றினார் - உலகத் தமிழர்கள் உவப்பால் மகிழ்ச்சித் திருவிழாவாகக் கொண்டாடினர்.

பொங்கற் பொன்னாளும் மேலும் பூரிப்படைந் தது. மலேசியாவில் இரண்டு முறை மாநாடு கூட்டி இந்த வேண்டுகோளை முன்வைத்தனர்.

தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமான அரசு!

இந்தத் தமிழ் உணர்வுக்கும், இனப் பண்பாட்டு உணர்வுக்கும் விரோதமாக மீண்டும் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று வீம்புக்குச் சட்டம் செய்த போக்குக் குறித்து முதற்கட்டமாக பிரச்சாரம்; இரண்டாவது கட்டமாக போராட்டம் - வெற்றி கிட்டும்வரை தொடரும். பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் பிரச்சாரம் சுழன்றடிக்க வேண்டும். விரைவில் இதுகுறித்து தலைமைக் கழ கத்தின் சார்பில் வெளியீடு ஒன்றைக் கொண்டு வரு வது என்று முடிவு எடுக்கப்பட்டது. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை மாற்றி அமைத்த ஜெய லலிதாவின் தமிழ் - தமிழின விரோத செயலை தமிழ்த் தேசியவாதிகள் கண்டித்தார்களா? குறைந்த பட்ச விமர் சனம் செய்தார்களா? இடதுசாரிகள் நிலை என்ன என்பதைப் பொதுமக்களுக்கு விளக்கவேண்டும்.

2. தமிழ்நாட்டில் 77,450 நடைபாதைக் கோயில் கள் அரசு அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அவற்றை உடனே அகற்றவேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மூட நம்பிக்கை - ஏன் இரட்டை அளவுகோல்!

3. திருவனந்தபுரம் பத்பநாப சாமிக் கோயில் அறை ஒன்று திறக்கப்படுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி இரவீந்திரன் கூறிய கருத்து கவனிக்கத்தக்கதாகும்.

தேவபிரசன்னம் செய்ததாகவும், அதன்படி குறிப்பிட்ட அறையைத் திறக்கக் கூடாது என்று மன்னர் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தின்மீது நீதிபதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மூட நம்பிக்கையை இதில் கொண்டுவந்து புகுத்தக் கூடாது. அறையைத் திறக்காமல், நகைகளை எப்படி கணக்கிடுவது - பாதுகாப்புத் தருவது என்ற வினாவை எழுப்பியுள்ளார்.

இதே கண்ணோட்டத்தில்தானே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பிரச்சினையையும் அணுக வேண்டும்?

17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமன் பாலம் கட்டினான் என்றும், அந்தப் பாலத்தை இடித்து இந்துக்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவும், சுப்பிர மணிய சாமியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததை ஏற்று, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது எப்படி?

ஒரு இடத்தில் மூட நம்பிக்கை; இன்னொரு இடத்தில் வேறு நம் பிக்கையா? மக்கள் வளர்ச்சித் திட் டத்துக்குக் கேடானது மத நம்பிக்கை - மூட நம்பிக்கை என்பதை வெளிப் படுத்தவேண்டும்.

பி.ஜே.பி.யின் அரசியல் தந்திரங்கள்

4. அடுத்த பிரதமராக பி.ஜே.பி.யின் நரேந்திர மோடியை வேட்பாளராக நிறுத்தக் காய்களை நகர்த்த ஆரம் பித்துவிட்டனர்.

மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தி நரேந்திர மோடி மூன்று நாள் உண்ணாவிரதம் இருக்கிறாராம். ஆடுகளுக்கு ஓநாய் நீலிக் கண்ணீர் வடித்த கதைதான்!

நரேந்திர மோடியின் உண்ணா விரதத்துக்கு அ.தி.மு.க. ஆதரவாம் - அ.தி.மு.க. எம்.பி.,க்கள் இருவர் அந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொள் கிறார்கள் என்றால், அ.தி.மு.க. எங்கே செல்லுகிறது என்பதை விளக்க வேண்டும். இடதுசாரிகளும், சிறு பான்மை மக்களுக்காக அமைப்புகள் வைத்திருப்போரும் சிந்திக்கவேண் டும்.

ஊழல் ஒழிப்பு நாடகம்!

5. அதுபோல ஊழலை முன் னிறுத்தி அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரத நாடகம்பற்றி மக்களி டம் விளக்கவேண்டும்!

அவரின் பின்னணியில் இருப்பவர் கள் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. வகை யறாக்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

யாரை விமர்சித்தாலும் தனி நபர் தாக்குதல் இருக்கக் கூடாது. நமது கருத்துக்கு மாறுபட்டவர்களைக் கூட நாம் எடுத்து வைக்கும் முறை யில் சிந்திக்கச் செய்யவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

எதைப் பேசினாலும் ஆதாரத்து டன் பேசவேண்டும் என்று சொற் பொழிவாளர்களுக்கு எடுத்துரைத்தார்.

விடுதலைக்கு 50 ஆயிரம் சந்தாக்கள்

முக்கியமாக இந்தக் கூட்டத்தில் விடுதலைக்கு 50 ஆயிரம் சந்தாக்கள் சேர்ப்பது என்பது குறித்து விளக் கமும், திட்டங்களும், செயல்முறை களும் முதன்மை இடத்தைப் பிடித்தன.

எப்படி எப்படியெல்லாம் சந்தாக் களைச் சேர்க்கவேண்டும் என்று பல்வேறு கருத்துகளையும், செயல் திட்டங்களையும் தோழர்கள் எடுத் துரைத்ததோடு தங்கள் தங்கள் பங் குக்கு எவ்வளவு சந்தாக்களைச் சேர்த் துக் கொடுக்க முடியும் என்பதையும் தாங்களாகவே முன்வந்து ஆர்வத் துடன் தெரிவித்த பாங்கு மெய் சிலிர்க்கக் கூடியதாக இருந்தது.

குன்னூர் டாக்டர் வழிகாட்டுகிறார்

குன்னூர் டாக்டர் கவுதமன் அவர்கள் ஒரு லட்ச ரூபாய் அளித்து முதன்முதலாக நன்கொடையளித்து இதில் முன்மாதிரியாக ஒளி வீசுகிறார்.

100 ஆண்டு சந்தாவுக்கான தொகை இது. முடித் திருத்தக் கடை கள், செருப்புத் தைக்கும் கடைகள், தேநீர்க் கடைகள் என்று நூறு இடங்களுக்கான ஆண்டு சந்தா இது.

வசதி வாய்ப்புள்ளவர்கள் இந்த வழிமுறையைப் பின்பற்றலாமே! தொண்டில் உயர்ந்தது அறிவு விளக்கங்கள் செய்வதுதானே!

தந்தை பெரியார் கூறுகிறார்!

ஏதோ ஒரு வகையில் நாம் மக் களுக்குப் பகுத்தறிவை உண்டாக்கி விட் டோமேயானால், பிறகு அவர்கள் எல்லா வற்றையும் ஒரே கண்ணாடி கொண்டு பார்த்து உண்மையை உணரக் கூடியவர் களாகி விடுவார்கள் என்றார் பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

விடுதலை செய்யும் தொண்டு

மூட நம்பிக்கை இருளில் சிக்கி சுரண்டும் வர்க்கத்தின் பகடைக் காயாகக் கிடக்கும் மக்களின் முதுகெலும்பை நிமிர்த்தி, தன்மானப் பாட்டையில் வீர நடைபோடச் செய்யும் தொண்டு ஒன்றுதான் மானு டத்துக்கு மகத்தான தொண்டாக இருக்கமுடியும் - அந்தத் தொண் டினை விடுதலை செய்கிறது! ஆம் வேகமாகச் செய்கிறது - வீறு கொண்டு செய்கிறது! வீரமாகச் செய்கிறது!

விடுதலை சந்தாக்கள் சேர்ப்பது என்பது விடுதலையின் பொருளா தார வளர்ச்சிக்காக அல்ல - அந்த விடுதலை விடும் அம்பு சழக்கர் களின் தோளைச் சாய்க்கும் என்பதற் காகத்தான்.

பிறப்பில் வருணாசிரமம் பேசும் வன்கணாளர்களின் வாயையும், வயிற் றையும் கிழிக்கும் ஆற்றல் படைத்த அணுகுண்டு விடுதலை என்பதால் தான்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை!
வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட
மக்களுக்கு வளமை!
ஆண் எஜமானன்
பெண் அடிமை என்னும்
ஏற்பாட்டுக்கு இடி!
பேதமற்ற உலகம் என்னும் புத் துலகுக்குப் பூச்செண்டு வரவேற்பு என் பதுதானே விடுதலை தன் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண் டாடும் கொள்கைகள்.

கண்களைத் திறக்கச் செய்வோம்!

இவை கூடாது என்போர் யார்?
ஒருக்கால் விடுதலையின் விழுமிய செயல்பாட்டை இதுவரை அறியாத வர்களாகக் கூட இருக்கலாம்.

அப்படி நினைத்திருப்பவர்களின் கண்களைத் திறக்கச் செய்யும் புதிய ஏற்பாடுதான் இந்த விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம்.

தோழர்களின் கரைபுரண்ட உற்சாகம்!

தென்மாநிலப் பிரச்சாரக் குழுத் தலைவர் மதுரை எடிசன் ராஜா, மதுரை மண்டல திராவிடர் கழகத் தலைவர் வெ. செல்வம், மதுரை மாநகர முன்னாள் செயலாளர் முருகேசன் முனியசாமி ஆகியோர் விடுதலை சந்தாவுக்கான முதல் தவணையாக ரூ.90 ஆயிரத்தை ஆசிரியர் மானமிகு கி. வீர மணி அவர்களிடம் பலத்த கரவொலிக் கிடையே அளித்தனர்.

கழகத் துணைப் பொதுச்செயலா ளர் துரை. சந்திரசேகரன் தன் சார்பாக ரூபாய் 50 ஆயிரம் அளிப்பதாகக் கூறி தோழர்களிடையே ஆர்வப் பெருக் கைத் தூண்டினார்.

தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஊமை. ஜெயராமன் தருமபுரி மாவட்டத்தின் சார்பில் ஆயிரம் சந்தாக்களைச் சேர்ப்போம் என்ற சூளுரையோடு நிற்காமல், அதன் அறிகுறியாக ரூபாய் அய்யாயிரத்தைத் தமிழர் தலைவரிடம் அளித்தார். தானும், தமது இணையரும் 50 விடு தலை சந்தாக்களை சேர்த்துக் கொடுப்பதாகவும் வாக்களித்தார்.

பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் சிதம்பரத்தில் 5 கடை களில் விடுதலை கிடைப்பதற்கான தொகையை அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் 25 விடுதலை சந் தாக்களை சேர்த்துக் கொடுப்பதாகவும் கூறினார்.

போட்டி போட்டுக் கொண்டு...

கழகச் சொற்பொழிவாளர் முனை வர் அதிரடி க. அன்பழகன் தமது பொறுப்பில் 25 சந்தாக்களுக்கான ரூபாய் 25 ஆயிரம் அளிப்பதாகக் கூறினார். கழக மகளிர் பாசறைத் தலைவர் டெய்சி மணியம்மை தமது பொறுப்பாக 10 சந்தாக்களை அளிப்ப தாகத் தெரிவித்தார்.

கழகத் துணைப் பொதுச்செயலா ளர் டாக்டர் பிறைநுதல் செல்வி 10 சந்தாக்களுக்கான 10 ஆயிரம் ரூபாய்க் கான வரைவோலையைக் கழகத் தலைவரிடம் அளித்தார். மேலும் தமது பொறுப்பில் சந்தாக்களைச் சேகரிக்க இருப்பதாகக் கூறினார்.
மகளிரணி பிரச்சார செயலாளர் கலைவாணி 10 சந்தாக்களுக்கு உறுதி யளித்தார். கோபி கருப்பண்ணன் தம் சொந்தப் பொறுப்பில் ஓர் ஆயுள் சந்தா அளிப்பதாகக் கூறினார்.

வழக்கறிஞர் அருளரசன் முதல் தவணையாக ரூ.2000 அளித்தார். தஞ்சை இரா. பெரியார்செல்வன் 10 சந்தாக்கள் அளிப்பதாகக் கூறினார். மாநிலக் கலைத் துறை அமைப்பாளர் பகுத்தறிவு கலைச்சுடர் மு.அ. கிரிதரன் பெருந்தொகை தமக்கு வர இருப்ப தாகவும், அதில் கணிசமான தொகை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டக் கழகச் செய லாளர் கோ. புத்தன் தம் பொறுப்பில் 50 ஆயிரம் ரூபாய் அளிப்பதோடு, கட லூர் மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் இலக்கை முடித்துக் கொடுப்போம் என்றார். மாங்காடு மணியரசன் 10 சந்தாக்களும், சில்லத்தூர் சிற்றரசு 50 சந்தாக்களுக்கும் உறுதி அளித்தனர்.

அண்ணா சரவணனின்
அரிய திட்டம்


பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் அண்ணா சரவ ணன் அருமையானதோர் கருத்தி னைக் கூறினார்.

தனது உறவினர்கள் அண்மையில் நடந்த பிள்ளையார் ஊர்வலத்தில் கலந்துகொண்டு கூத்தடித்தனர். அத் தகையவர்களின் பட்டியலைத் தயா ரித்து வைத்துள்ளேன்; அந்த 50 பேர் களுக்கான 50 ஆயிரம் ரூபாயை சந் தாவாகக் கொடுப்பதாகத் தெரிவித்த போது பலத்த கைதட்டல்!

பெரியார் முரசு 20 சந்தா; தஞ்சை தமிழ்ச்செல்வன் 50 சந்தா; காஞ்சி கதிரவன் 10 சந்தா; வழக்குரைஞர் பூவை புலிகேசி 10 சந்தா; ஆரூர் க. முனி யாண்டி 10 சந்தா; உடுக்கடி அட்டலிங் கம் 10 சந்தா; இராம. அன்பழகன் 20 சந்தா அளிப்பதாக ஆர்வமுடன் கூறினர். க. பார்வதி 50 சந்தாக்களை சேர்த்துத் தருவதாக உறுதி அளித்தார்.

முடி திருத்தகங்களுக்கு...

பெரியார் பெருந்தொண்டர் சதா சிவம் பட்டுக்கோட்டையில் 20 முடித் திருத்தகங்களுக்கு 20 ஆண்டு சந்தாக் கள் அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தார்.

மாநில மாணவரணி துணைச் செய லாளர் நம்பியூர் மு. சென்னியப்பன் 200 சந்தாக்களைச் சேகரித்துத் தருவதாகக் கூறினார்.

முத்து கதிரவன் 10 சந்தா; வழக் குரைஞர் வீரமர்த்தினி 10 சந்தா; பழனி அருண்குமார் 5 சந்தா; சாக்கோட்டை இளங்கோ 10 சந்தா; திருவாரூர் மண்டல செயலாளர் கோட்டூர் பா. அசோகன் 25 சந்தா அளிப்பதாகக் கூறினார். வேலூர் மண்டல செய லாளர் ஊத்தங்கரை பழ. வெங்கடா சலம் கருத்துகளை எடுத்துரைத்தார்.

வழக்குரைஞர் அமர்சிங் சவால்!

தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் அமர் சிங் இறுதியாக உரையாற்றியபோது, மாநிலத்திலேயே தஞ்சை மாவட்டம் அதிக எண்ணிக்கையில் விடுதலை சந்தாக்களைச் சேர்த்து - அதற்கான பெரும் விழாவை நடத்தும் வாய்ப் பைத் தட்டிப் பறிக்கப் போவது தஞ் சாவூர் மாவட்டம்தான் என்று பலத்த கைதட்டலுக்கிடையே சூளுரைத்தார்.

சபாஷ், சரியான போட்டி!

இப்படி போட்டிப் போட்டுக் கொண்டு சொற்பொழிவாளர்களும், கழகப் பொறுப்பாளர்களும் அறி வித்து சொற்பொழிவாளர் கலந்துரை யாடல் கூட்டத்தை அர்த்தம் உள்ள தாக மாற்றிக் காட்டினர்.

தொடக்கத்தில் கழக மகளிர் பாசறை செயலாளர் பொறியாளர் கனிமொழி கடவுள் மறுப்புக் கூறிட, துணைப் பொதுச்செயலாளர் முனை வர் துரை. சந்திரசேகரன் வரவேற்பு ரையாற்றி, கூட்டத்துக்குத் தலைமை வகித்த கழகத் தலைவருக்குச் சால்வை அணிவித்தார்.

திராவிடர் கழகப் பொதுச்செயலா ளர் கவிஞர் கலி. பூங்குன்றன் பிரச்சா ரப் பொருள்கள்பற்றியும், விடுதலை சந்தா சேர்ப்பின் அவசியம் குறித்தும் பேசினார்.

கழகப் பொதுச்செயலாளர் சு. அறி வுக்கரசு அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு நாடகம் உள்ளிட்ட பிரச்சினை களை எடுத்துக் கூறினார்.

துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலரில் ஆசிரியர் எழுதிய கட்டுரை யைப் படித்துக் காட்டி கழகத் தோழர் கள் உற்சாகத்துடன் பணியாற்றவேண் டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினார்.

தமிழர் தலைவரின் கருத்துரை

கூட்டத்திற்குத் தலைமை வகித்த விடுதலை ஆசிரியர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மிகுந்த மனநிறைவு அளித்த கூட்டம் என்று தனது உரையைத் தொடங்கினார்.

தலை தாழ்ந்த நன்றி- மகிழ்ச்சி!

50 ஆயிரம் விடுதலை சந்தாக் களைச் சேர்ப்பது ஒன்றும் கடினமான தல்ல - எளிதானதுதான் - சாதிக்கக் கூடியதுதான் என்ற நம்பிக்கையை இந்தக் கலந்துரையாடல் கூட்டம் அளித்துள்ளது.

இதற்காக எனது தலை தாழ்ந்த நன்றியை, மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

50 ஆண்டுகள் விடுதலை ஆசிரிய ராக நான் இருக்கிறேன் என்றால், இதைத் தவிர எனக்கு வேறு வழி யில்லை; உண்மையிலேயே விடுதலை யின் எஜமானர்கள் யாரென்றால், நீங்கள்தான் - வாசகர்கள்தான்!

நான் ஒரு பணியாளன்!

உங்களுக்கெல்லாம் நான் ஒரு பணியாளன். தந்தை பெரியார் அவர் களுக்கு நான் ஒரு பணியாளன். இந்தப் பணியைச் செய்வதைத் தவிர வேறு உற்சாகம், மகிழ்ச்சி எனக்கு ஏது?

இந்தச் சாதனையை நாம் செய்து முடித்துவிட்டால், நம்மை யாரும் அசைக்க முடியாது.

இது ஒன்றும் சாதாரணமானதல்ல, உலுக்க வேண்டியவர்களை உலுக்கி எடுக்கும் -

அரசு நூலகங்களுக்கு விடுதலைக் குத் தடையென்றால், அதைப்போல பல மடங்கு சந்தாக்களை அளிக்கத் தமிழர்கள் தயார் என்று அறியும் போது, அரசேகூட யோசிக்கும் - நிமிர்ந்து பார்க்கும்.

பெரியாருக்குப் பிறகு இந்த இயக் கம் இருக்குமா? என்று கேள்வி கேட் டவர்களுக்கு நெறிகட்டும். இன எதிரி களுக்கு நடுக்கத்தைக் கொடுக்கும்.

அண்ணாவைப் பாரீர்!

அண்ணா அவர்கள் குறைந்த கால அளவில்தான் முதலமைச்சராக இருந் தார்.
அந்தக் குறுகிய காலத்திலேயே முத்தான மூன்று சாதனைகளைச் செய்து காட்டினார்.
1. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர்
2. சுயமரியாதை திருமணத்திற்குச் சட்ட வடிவம்
3. இந்திக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை
இந்த மூன்றிலும் அடங்கி இருக்கும் தமிழ் உணர்வு, தமிழன் என்ற உணர்வு - தமிழர்களின் பண்பாட்டு உணர்வுதான் முக்கியம்.
இந்த உணர்வுக்கு எதிரான சட்டம் தான் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்னும் அ.தி.மு.க. அரசின் சட்டம்!

நம்முடைய பிரச்சாரத்தைக் கண்டு அரசாங்கமே திகைக்கவேண்டும்.

வேண்டாத வேலையைச் செய்து விட்டோமே என்று அரசினைச் சிந்திக்குமாறு செய்யவேண்டும்.

பிரச்சாரம் முதற்கட்டம்

முதற்கட்டப் பிரச்சாரம்; இரண் டாம் கட்டம் போராட்டம். இதில் வெற்றி கிட்டும்வரை நமக்கு ஓய் வில்லை. பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!

தமிழ்த் தேசியம் பேசுவோரின் பரிதாப நிலை

தமிழ்த் தேசியம் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் அ.தி.மு.க. அரசின் இந்தச் சட்டம்பற்றி வாய் திறக்காதவர்களாகி விட்டனர். அதை யும் அம்பலப்படுத்துவோம். செத் தாருள் வைக்கப்படும் நிலைக்கு அவர் கள் ஆளாவார்கள் - 50 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் என்பதை ஒரு மாதத்திலேயே நம்மால் முடிக்க முடியும் - முடிக்கவும் வேண்டும்.

கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் விடுதலை சந்தாதாரராக இருப்பது கட்டாயமாகும்.

நம்மால் முடியும்!
நம்மால் முடியாதது
வேறு எவராலும் முடியாது
வேறு எவராலும் முடியாதது
நம்மால் மட்டுமே முடியும்!
என்றார் கழகத் தலைவர்.
மாங்காடு மணியரசன் நன்றி கூற, கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு நிறைவுற்றது.
தொகுப்பு: மின்சாரம்
திராவிடர் கழக சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில், தருமபுரி ஊமை ஜெயராமன், துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி, மதுரை முருகேசன், முனியசாமி, வே. செல்வம், தே. எடிசன் ராஜா ஆகியோர் விடுதலைக்கான சந்தா தொகைகளை முதல் தவணையாக கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களிடம் கரவொலிக்கிடையே அளித்தனர்
(வல்லம், 20.9.2011)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...