Saturday, September 24, 2011

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 40


நமது நாட்டில் நமக்கு உள்ள உரிமைக்குத் தக்கவாறு  பொறுப்புள்ள மனிதர்களாக இருக்க வேண்டிய நிலைக்கு ஏற்றவாறு, நாம் வெறும் கனவு காண்பவர்கள் அல்ல, குற்றங்குறை களைக் கூறிக் கொண்டிருப்பதையே தொழிலாகக் கொண்டவர்களும் அல்ல என்பதையும்,  என்ன கேட்கிறார்களோ அதைப் பற்றி தீவிரமாக இருக்கக் கூடிய, நடைமுறை சாத்தியங்களைப் புரிந்து கொண்ட மனிதர்கள்தான் நாம் என்பதை இந்த மாநாட்டில் நாம் மேற்கொள்ளும் விவாதங்களின் மூலம் எடுத்துக் காட்ட வேண்டும். நடைமுறை சாத்தியங்களைப் புரிந்து கொண்ட, ஆக்கபூர்வ கருத்து கொண்ட மக்களால் தொடங்கப்பட்டுள்ள இந்த மாநாட்டில் நமது விவாதங்களை நாம் கவுரமாகவும், ஓர் ஒழுங்கு முறையிலும் நடத்த முடியும் என்பதில் எனக்கு எந்த வித அய்யமும் இல்லை.

நமது நாட்டில் உள்ள மிகப் பழமை யானதும், மரியாதைக்குரியதுமான குடும்பங்களில் ஒன்றினைச் சேர்ந்த ஒருவரை இந்த மாநாட்டில் நமது தலைவராக நாம் தேர்ந்தெடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். பிறப்பினால் மட்டுமன்றி, அவர் நமது பல்கலைக் கழகத்தால் அளிக்க இயன்ற மிக உயர்ந்த கல்வியைப் பெற்றிருப்ப வரும் ஆவார். தான் கொண்டிருக்கும் பொது நல உணர்வினாலும், அரசியல் நுண்ணறிவுத் திறனாலும் பேரரசின் சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்று, மாநிலத்தின் நில உடைமைதாரர்களின் பிரதிநிதியாக மிகச் சிறந்த முறையில் பணியாற்றியவர் அவர். அவரது தலைமையின் கீழ் இந்த மாநாடு பெரு வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அன்பர்களே,  இந்த மாகாணத் திலேயே நடைபெறும்  இந்த முதல் பார்ப் பனர் அல்லாதார் மாநாட்டிற்கு வருக வருக என மறுபடியும் ஒரு முறை தங் களனைவரையும் வரவேற்கிறேன். இப்போது இம்மாநாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உங்களது பணியை ஆற்றும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த உரையின் தமிழாக்கத்தை திரு. மீனாட்சிசுந்தர முதலியார் படித்தார். இந்த மாநாட்டின் தலைவராக திரு இராமநாராயண அய்யங்கார் இருக்க வேண்டும் என்று ராவ் பகதூர் ஏ.டி.திரு வேங்கடசாமி முதலியார் முன்மொழிந்தார்.  உடுமலைப் பேட்டை கான் சாஹிப் சையத் திவான் அப்துல் ரஸாக் அவர்களும், திரு. பி.கே.ஏப்பன் அவர்களும் வழி மொழிந் தார்கள். இந்தத் தீர்மானம் அவையினரின் பலத்த கையொலிக்கிடையே நிறைவேற்றப் பட்டது. அதன் பின்னர் தலைவர் பொறுப் பேற்றுக் கொண்டு தனது தலைமை உரையை ஆற்றினார்.

தலைமையுரை


இந்த மாநாட்டின் தலைவராக தேர்ந்தெடுத்து என்னைப் பெருமைப் படுத்தியதற்காக உங்களுக்கெல்லாம் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்.  நமது வரலாற்றில் முதன் முறை யாக பல்வேறுபட்ட பார்ப்பனர் அல்லதார் சமூகங்களின் உறுப்பினர்களாக நாம் நமக்கு மிகவும் ஆர்வம் அளிக்க இயன்ற செய்திகளைப் பற்றி விவாதிக்க நமது சொந்த மாநாட்டினை நடத்திக் கொண்டி ருக்கிறோம்.

இந்த மாநாடு நடத்தப்படுவதற்கான காரணங்கள்

இந்திய நாட்டின் சார்பாக பேசும் உரிமையை எப்போதும் தாங்களாகவே எடுத்துக் கொள்ளும் நம்மை விமர்சிப் பவர்கள், ஏற்கனவே நம்மை பிரிவினை வாதிகள் என்று குற்றம் சாட்டிவிட்டனர். தாங்களே இந்திய நாடு என்றும், தங் களின் நலன்களே இந்தியாவின் நலன்கள் என்றும் கருதுவதையும், பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் அவர்களது குணம், இந்த மாகாண மக்கள் தொகை யின் மிகப் பெரும்பான்மையான மக்கள் வெள்ளத்தின் சார்பாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்பதைக் காண முடியாத குருடர்களாக ஆக்கி விட்டது.

இத்தகைய ஏமாற்று வேலைகள் பற்றி எவரும் எந்த கேள்வியும் கேட்காமல்  அமைதியாக இருந்த காலம் மாறிவிட்டது; அவ்வாறு அமைதியாக இருந்ததற்காக நாமெல்லாம் துன்பப்பட நேர்ந்தது என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம். பார்ப்பனர் அல்லாத சமூகங்கள் எப்போ துமே ஒரு பொதுவான சமூக ஒழுங்கு முறை அமைப்பின் கீழ் இருந்தது இல்லை. அவர்களிடையே எந்த வித ரகசிய அரசியல் நோக்கம் கொண்ட உறவுகளும் இருந்தது இல்லை.  தனிப்பட்டவர்களும்,  சமூகப் பிரிவுகளும் எந்த வித நோக்கமும் இன்றி சமூக நீரோட்டத்தில் மிதந்து சென்றன. அதன் விளைவால், அவர்களது நிலைக்கும் நலன்களுக்கும் பேரழிவு நேர்ந்தது. இவ்வாறு நடைபெற்ற நிகழ்வு ஒன்றும் வியப்பளிக்கக்கூடியதல்ல.  

எவருடனும் ஒன்று சேராத வழிவழி வந்த பூசாரிக் கூட்டத்தின்  இரும்புப் பிடியின் கீழ், மூடநம்பிக்கைப் பழக்கவழக்கங்களில் போற்றி வளர்க்கப்பட்ட பார்ப்பனர் அல் லாத சமூகங்களின் பெரும்பாலோருக்கு வேறு வழி எதுவும் தெரிந்திருக்கவில்லை.  கல்வியறிவு என்னும் நீரூற்றை நெருங்கும் உரிமையோ, வாய்ப்போ அவர்களுக்கு இருக்கவில்லை. ஒவ்வொரு துறை பற்றிய கல்வி அறிவையும் வேறு எவரும் பெற்று விடாதபடி  பார்ப்பனர்கள் தங்கள் கைகளி லேயே வைத்திருந்தனர். தங்களைத் தவிர்த்த இந்திய மக்கள் அனைவரும் தங்களுக்கு நிரந்தர அடிமைகளாக இருக்கும் வண்ணம் பழைய  வேத,  சாத்திர, புராணங்களுக்கான விளக்கம் அளித்து வந்தனர்.

உண்மையிலேயே அனைத்து பிரிவு மக்களுக்கும் பொது வான உரிமை படைத்த இந்தியாவின் பழமையான இலக்கியங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் படி திறந்து விடப்பட்டு இருந்திருக்குமேயானால், இன்றைய இந்தியாவின் நிலை பெரிதும் மேம்பட்டதாகவே இருந்திருக்கும். சலுகை அளிக்கப்பட்ட ஒரு ஜாதி அல்லது பிரிவு மக்களுக்காக தனியாக முத்திரையிடப் பட்ட நூலாக வேதங்கள் பூட்டி வைக்கப் படவேண்டும் என்பது அவற்றை இயற்றி யவர்களின் நோக்கமல்ல என்பதை வேதயாடங்களிலிருந்து மேற்கோள் காட்ட என்னால் முடியும்.

பழமையான இந்திய ஆன்மிக ஊற்றின் ஆழத்தி லிருந்தும், பண்டைய இந்திய பாரம் பரியத்திலிருந்து வந்த அறிவுக் கருவூலத்திலிருந்தும், சுதந்திரமாகப் பருக அனைத்துப் பிவு மக்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்னமும் சொல்லப் போனால், பார்ப்பனர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவில் இருந்த ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் ஏறக் குறைய அப்போது நிலவிய இலக்கியம், அறிவியல், கலை மற்றுத் தத்துவ பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன என்றே கூறலாம்.

ஒவ் வொரு சமூகமும் சந்தித்தே தீர வேண்டிய, காலப் போக்கில் சமுகத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களின் காரணமாக, பண்டைய இந்தியாவில் வேதங்களைப் பயில் வதையே தொழிலாகக் கொண்ட வர்கள்,  தங்களைத் தவிர மற்ற சமூக மக்கள் எவரும் வேதங்களைப் பயின்று பயன் பெறக்கூடாது என்று வேதங் களில் கூறப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தனர். அதனால் ஆங்கி லேயர்கள் இந்தியாவுக்கு முதன் முதலாக வந்தபோது, மிகவும் மோச மான அறியாமை நிலையில், பல்வித மூடநம்பிக்கைகளைக் கொண்டவர் களாக நமது முன்னோர்கள் இருந் ததைக் கண்டனர்.

படிப்படியாக, ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பெற்ற வெற்றிகளைத் திரட்டி,  தங்களின் அதிகாரத்தை உறுதியாக நிலை நாட்டியபோதுதான், பூசாரிகளி டம் அடிமைப்பட்டு, இழிவான மூட நம்பிக்கைகளைக் கொண்டிருந்த மக்களை அவற்றிலிருந்து விடுவித்து மேம்படுத்தும் கருத்துகளையும், உண்மைகளையும் மக்களுக்குச் சொல்ல வேண்டியதன் அவசியத்தைப் பற்றி நமது மன்னர்கள் உணர்ந்து கொண்டனர்.

இவ்வாறு மக்களை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்ட வரலாற்றைப் பற்றி மிக விரிவாகக் காண வேண்டிய தேவையில்லை. என்றாலும் அரசியல் காரணங்களுக் காக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள நான் விரும்புகிறேன். 
  தமிழில்: த.க. பாலகிருட்டிணன் 
(தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...