Tuesday, August 23, 2011

பாபர் மசூதி இடிப்பும் ஹவாலா பணமும்

1992 டிசம்பர் - 6 அன்று - அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்ந்தெடுத்து, 450 ஆண்டு வரலாறு படைத்த சிறுபான்மையின மக்களான முஸ்லீம்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியைப் பட்டப் பகலில் பகிரங்கமாக பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரட்டப்பட்டு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., சங்பரி வார் வெறிக் கும்பல் இடித்துத் தரைமட்டமாக்கியது.

விளம்பரம் பெற்ற பெருந் தலைவர்களே முன் னின்று இந்தக் கேவலமான நாச வேலையைச் செய்தனர்.

உலகத்தின் முன் இந்தியா தலை குனிந்து நிற்க வேண்டிய அவலம்! அதைவிடக் கேவலம் இத்தகைய குற்றங்களைச் செய்தவர்கள் 19 ஆண்டுகள் கடந்த பிறகும்கூடத் தண்டிக்கப்படாததுதான்.

அந்தக் கேவலத்துக்கும், அவலத்துக்கும் பொட்டு வைத்தது போன்றது இந்தியன் குற்றவியல் சட்டம் 147, 153(ஏ) 153(பி) 295, 295 (ஏ) 505, 120 (பி) என்ற பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களில் அத்வானி உள்துறை அமைச்சராகவும் அடுத்துத் துணைப் பிரதமராகவும் பதவி வகித்தார் என்பதுதான்.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்தான் பிற் காலத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்ச ராகவிருந்த முரளி மனோகர் ஜோஷி.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே, மறுபக்கத்தில் மிகக் கொடிய குற்றங்களை செய்தவர்களை 19 ஆண்டு காலமாக நடமாட விட்டுள்ளனரே! வெட்கப்பட வேண்டாமா?

இப்பொழுது இன்னொரு அதிர்ச்சியூட்டக் கூடிய ஒரு தகவல் கசிந்துள்ளது. பாபர் மசூதி இடிப்பில் ஹவாலா பணம் பயன் படுத்தப்பட்டுள்ளதாக சி.பி.அய். கண்டுபிடித்துள்ளது.

ஊழல், ஊழல் என்று ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின்மீது சேற்றை வாரி இறைக்கும் பா.ஜ.க., இதன் மூலம் மிகக் கேவலமாக அம்பலப்பட்டுள்ளது.

வழக்கம்போல பாரதிய ஜனதா கட்சி தம் கருத்தைத் தெரிவித்துள்ளது. பல்வேறு ஊழல் குற்றச் சாற்றுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு, மக்களின் கவனத்தைத் திசை திருப்ப இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக பா.ஜ.க., தலைவர்கள் கருதுகிறார்களாம்.

பா.ஜ.க. தவிர மற்றவர்கள்மீது சி.பி.அய். குற்றம் கூறினால் அவையெல்லாம் சரி; ஆனால் பா.ஜ.க.மீது சொன்னால் மட்டும் வீண் பழி என்று சொல்லும் பா.ஜ.க.வின் பித்தலாட்டத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

லிபரான் ஆணையம் பாபர் மசூதி இடித்தவர்களின் பட்டியலில் 68 பேர்களைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளது. அதில் வாஜ்பேயியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. வாஜ்பேயியை எப்படி குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கலாம்? என்று நாடாளுமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டனர்.

இது எந்த வகையான யோக்கியத்தில் சேர்ந்தது? விசாரணை ஆணையம் - இவர்கள் யார் யாரைச் சுட்டிக் காட்டுகிறார்களோ அவர்களைத்தான் விசா ரணை ஆணைய நீதிபதிகள் சேர்க்க வேண்டுமா?

இந்த யோக்கியதையில் உள்ளவர்கள்தான் ஊழலைப் பற்றி உரக்கக் கத்துகிறார்கள். யாரோ ஒருவரைப் பிடித்து விளம்பரக் காற்றை ஊதி ஊதிப் பெருக்க வைத்து, இவர்தான் காந்தி அவதாரம் என்று தங்கள் கையில் வசதியாக சிக்கியுள்ள ஊட கங்களைப் பயன்படுத்திப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அடாவடித்தனமாக நடந்து கொள்வதன் மூலம் எதையும் சாதித்து விடலாம் என்று இந்தக் கூட்டம் நினைப்பதாகத் தெரிகிறது.

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளைக் கைது செய்க இந்தப் பிரச்சினையில் ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சி.பி.அய். கூறியுள்ளது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்க என்று மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்.

அரசியல் நோக்கத்தாடு வேண்டுமென்றே பட்டினிப் போராட்டத்தை நடத்திட அவர்களுக்குத் தைரியம் இருக்கும்போது, உண்மையின் அடிப்படையில் வீதிக்கு வந்து பொது மக்கள் ஏன் போராடக் கூடாது?

19 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட மிகப் பெரிய குற்றத்தை செய்த பா.ஜ.க. சங்பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரா விட்டால் - நாட்டில் சட்டத்துக்கும், நீதிமன்றத்துக்கும் எந்தவித மரியாதையும் இருக்காது - இருக்கவே இருக்காது.


விடுதலை தலையங்கம் 23-08-2011

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...