Thursday, August 25, 2011

தைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் திராவிடச் சமுதாயம் தலைநிமிர்ந்து கொண்டாடி மகிழ்வோம்!

தி.மு.க. தலைவர் கலைஞர் வேண்டுகோள்!

சென்னை, ஆக.25-தைத்திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு திராவிடச் சமுதாயம் தலைநிமிர்ந்து கொண்டாடி மகிழ்வோம் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் உடன் பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது கடிதம் வருமாறு:

உடன்பிறப்பே,

கடந்த மே திங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தது முதல், தி.மு. கழக ஆட்சியில் நடைபெற்ற முக்கிய திட்டங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

தமிழக அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைச் செயலகத்திற்காக ஓமந்தூரார் வளாகத்தில் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடம் தரமாகக் கட்டப்பட வில்லை என்று கூறி அதிலே தொடர்ந்து செயல்பட மாட்டோம் என்றார்கள். பிறகு தற்போது அந்தக் கட்டடத்தில் மருத்துவ மனை அமைக்கப் போகிறோம் என்றார்கள். கழக அரசு அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்விச் சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று கூறி, திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாக பேரவையிலே கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.

அந்தப் பிரச்சினை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று, எதிர்க் கட்சிகள் எல்லாம் எடுத்துக் கூறியும் கேளாமல் அதிலே சரியாக குட்டுப்பட்டுக் கொண்டார்கள். அதனால் கோபமடைந்த ஜெயலலிதா மற்றொரு நடவடிக்கையாக தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு நாளை மீண்டும் சித்திரை மாதம் முதல் தேதிக்கு மாற்றிட பேரவையில் மசோதா ஒன்றினை அறநிலையத் துறை அமைச்சர் மூலமாக தாக்கல் செய்து குரல் வாக்கின் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.

23-1-2008 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் மேதகு ஆளுநர் அவர்கள் தனது உரையிலே செய்த அறிவிப்பில், பெரும் புலவரும், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்று வித்தவருமான மறைமலை அடிகளார் தலைமை யில் அய்நூறுக்கும் மேற்பட்ட புலவர் பெரு மக்கள், 1921ஆம் ஆண்டு சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி, தமிழர்களுக்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி, அய்யன் திரு வள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவதென்றும், அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தார்கள்.

அந்தக் கருத்தினை, 37 ஆண்டுகளுக்கு முன்பே, மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டு, 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடை முறைப்படுத்திட ஆணை பிறப்பித்தார். திருவள்ளு வர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால்; தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடை முறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்தது.

பொங்கல் திருநாள்

எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ் நாட்டு மக்கள்; இனி - தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாக வும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சி யுடன் கொண்டாடும் வகையில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு; வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட; புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும், ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும்; தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர் என பலத்த கைதட்டலுக் கிடையில் அறிவித்தார்.
மறைமலை அடிகள் தலைமையில் தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தப் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவுகள் மூன்று :-

தமிழ் ஆண்டு எனக் கொண்டாடுவது

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண் டாகப் பின்பற்றுவது;
2.அதனையே தமிழாண்டு எனக் கொண் டாடுவது;
3.வழக்கத்தில் திருவள்ளுவர் காலம் கி.மு. 31அய்க் கூட்டினால் திருவள்ளுவராண்டு வரும் என்பதனை மேற்கொள்வது என்பனவாகும்.

அதன் பிறகு 1939ஆம் ஆண்டு திருச்சியில் அகில இந்திய தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில், தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசு வரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், திரு.வி.க., மறை மலை அடிகளார், பி.டி. இராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதி தாசன், பட்டுக்கோட்டை அழகிரி உள்பட பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் தீர்மானித்தது.

ஆளுநரின் அறிவிப்பு வெளிவந்த மறுநாளே தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் விடுத்த அறிக்கையில் தொன்மைக் காலம் தொட்டே சமயம் சார்ந்தும், இயற்கை வாழ்வு சார்ந்தும், மண்ணும் மனிதர்களும் சார்ந்தும் விவசாய வாழ்வு சார்ந்தும் தைத்திங்கள் முதல் திருநாளே தமிழர் வாழ்வு சார்ந்த எழுச்சியும் மகிழ்ச்சியும் ஊட்டுகின்ற திருநாளாகும். மறைமலை அடிகளார் போன்ற மூத்த தனிப் பெரும் தமிழ் அறிஞர்கள் தைத் திங்கள் முதல் நாளைத் தொடக்கமாய்க் கொண்டு அய்யன் திருவள்ளுவர் பெயரில் தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்ததை நடைமுறைப்படுத்த உள்ள முத்தமி ழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி, பாராட்டுகள் என்று தெரிவித்திருந்தார்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் விடுத்த அறிக்கையில், தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று ஆளுநர் உரையில் கலைஞர் அரசு அறிவித்திருப்பது கண்டு உணர்வுமிக்க தமிழர்கள் கொண்டாடிக் கூத்தாடுகிறார்கள். எல்லா தேசிய இனங்களுக்கும் அழிக்க முடியாத சில அடையாளங்கள் உண்டு. தமிழர்களுக்கு நில அடையாளம் இருக்கிறது; இன அடையாளம் இருக்கிறது; ஆனால் கால அடையாளம் மட்டும் குழப்பத்தில் இருந்தது. அந்தக் குழப்ப இருள் உடைந்து விடிந்து இன்று வெளிச்சம் வந்திருக்கிறது. அய்யன் திருவள்ளுவரை கருத்துலகத் தின் அளவுகோலாய்க் காட்டியது திராவிட இயக்கம். இன்று காலத்தின் அளவு கோலாக வும் திருவள்ளுவரைக் கருதச் செய் திருக்கிறது கலைஞர் அரசு. இது சரித்திரத்தைச் சரி செய்யும் சரித்திரமாகும் என்று குறிப்பிட்டி ருந்தார். அந்தக் காலத்திலும் இப்படி தமிழையே வெறுக்கின்ற புலவர்கள் ஓரிருவர் இருந்திருக் கிறார்கள்.

இதோ ஒரு கதை

நக்கீரன் காலத்திலே குயக்கொண்டான் என்று ஒருவர் தமிழ்ச் சங்கத்திலே நடைபெற்ற ஒரு பட்டிமன்றத்திலே ஆரியம் நன்று, தமிழ் தீது என்று சொல்ல - உடனே நக்கீரனுக்கு கோபம் வந்து, தமிழ் தீதென்றும், வடமொழி நன்று என்றும் சொன்ன நீ, சாகக் கடவாய் என்று அறம் பாடினாராம். உடனே குயக்கொண்டான் கீழே விழுந்து இறந்து விடுகிறார்.

உடனே அங்கேயிருந்த சிலர் நக்கீரனைப் பார்த்து குயக்கொண்டாரைப் பிழைக்க வைக்க கேட்டுக் கொண்டார்கள். அதைக் கேட்ட நக்கீரன், ஆரியம் நன்று தமிழ் தீ தென் உரைத்த காரியத்தால் காலன்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையினால் செந் தமிழை தீர்க்க சுவாகா! என்று பாட, குயக் கொண்டான் உயிர் பெற்று எழுந்தானாம். தமிழக அரசின் அறிவிப்பு வந்த நேரத்திலேயே மிகச் சிறந்த தமிழ் ஆய்வாள ரான அய்ராவதம் மகாதேவன் அவர்கள், இன்றைய பஞ்சாங்கங்களை வான நூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் - ஆராய்ந்துத் திருத்திக் கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு? வரலாற்று ரீதியில் பார்த்தாலும், இந்தியாவில் இன்று நடை முறையில் உள்ள பல புத்தாண்டுகளில் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளலாமே என்றார்.

ஆளுநர் உரையிலே செய்யப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து அதே ஆண்டில் 29-1-2008 அன்று 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு சட்ட முன் வடிவை பேரவை முன் நான் அறிமுகம் செய்தேன். 1-2-2008 அன்று இச்சட்ட மசோதா மீதான விவாதம் நடைபெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.எஸ்.எஸ். ராமனும், பா.ம.க. சார்பில் கி. ஆறுமுகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் என். நன்மாறனும், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் வை. சிவ புண்ணியமும், ம.தி.மு.க. சார்பில் மு. கண்ணப்பனும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு. செல்வமும் அந்த மசோதாவினை வரவேற்றுப் பேசி அது நிறைவேறியது. இப்போது மலேசியா நாட்டில் தமிழர்கள் தை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள்.
டாக்டர் மு. வரதராசனார் அவர்கள், முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாளில் புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்து வார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டு பிறப் பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள் என்று விளக்கியுள்ளார்.

இப்படியெல்லாம் போற்றப்பட்ட, பாராட்டப் பட்ட ஒரு முடிவு நடைமுறைப் படுத்தப்பட தி.மு. கழக ஆட்சியிலே சட்டமாகக் கொண்டு வரப்பட்டு 2008ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. தி.மு. கழக ஆட்சியில் நிறைவேற்றப் பட்டது என்றால் அது இருக்கலாமா என்று அதற்கு முடிவு கட்ட அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு மசோதா பேரவையிலே அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பா.ஜ.க. அவசர அவசரமாக வரவேற்றுள்ளது. அதிலிருந்தே இந்தத் தீர்மானத்தின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் மசோதாவை அவையிலேயே இரண்டு கம்யூ னிஸ்ட்களும் எதிர்த்தார்கள் என்ற தகவலை செய்தியாளர்கள் என்னிடம் தெரிவித்து அதுபற்றி கருத்து கேட்டபோது, அவர்களின் தமிழ் உணர் வுக்கு தலை வணங்குகிறேன் என்று பதில் கூறினேன். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், அ.தி.மு.க. அரசின் இந்த முடிவு தமிழ் உணர்வாளர்களை வேதனைப் படுத்தும் வகையில் அமைந் துள்ளது என்றும் திடீரென்று தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை மாதத்துக்கு மாற்றுவது முறையல்ல என்றும் அது மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக அமைந்துவிடும் என்றும் கூறியிருக் கிறார்கள்.

கி.வீரமணி கண்டித்தார்

தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும் இந்த முடிவினை வன்மையாகக் கண்டித்து செய்தியா ளர்களிடம் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மசோதா வின் மீது பேசிய ஜெயலலிதா; கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டம்; தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் தனக்கு மட்டுமே அக்கறை இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை பொது மக்கள் மத்தியில் உருவாக்குவதற்காக, சுய விளம்பரத்திற்காக இயற்றப்பட்டது என்றும், சித்திரை மாதப் பிறப்பை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடிக் கொண்டு இருக்கும் தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக அந்தச் சட்டம் அமைந்துள்ளது என்றும் திருவாய் மலர்ந்துள்ளார். அவரின் இந்தக் கருத்தைத் தமிழ்நாட்டு மக்களே சீர்தூக்கிப் பார்த்து என்ன உண்மை என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.

கருணாநிதியின் துதிபாடிகள்!

மேலும் ஜெயலலிதா தனது பேரவை உரையிலே கழக ஆட்சி நிறைவேற்றிய சட்டம் யாருக்கும் பயன் அளிக்காத ஒன்று என்றும், அந்தச் சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கருணாநிதியின் துதிபாடிகள் அனைவரும் அதனைப் போற்றினர் என்றும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகத்தான் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்று அறிவிக்கப்பட்டதென்றும் பேசியிருக்கிறார். துதிபாடிகள் என்று அம்மையாரால் வர்ணிக்கப் படும் பேறு பெற்றவர்கள் யார் யார் தெரியுமா? நமது பேராசிரியர் அன்பழகனார், அண்ணா பல்கலைக் கழகத்திலும், இந்திராகாந்தி திறந்த வெளி பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தராக இருந்து பெரும்புகழ் பெற்ற வ.செ. குழந்தைசாமி, முனைவர் தமிழண்ணல், முனைவர் வ.அய்.சுப்பிர மணியம், முனைவர் அகத்தியலிங்கம், முனைவர் அவ்வை நடராசன், முனைவர் இரா. நாகசாமி, தவத்திரு ஊரன் அடிகள், அமைச்சராக இருந்த துரைமுருகன், மத்திய இணை அமைச்சராக உள்ள ஜெகத்ரட்சகன்,

பேராசிரியர் கண. சிற்சபேசன், முனைவர் அ. அறிவொளி, முனைவர் சுதா சேஷையன், இலங்கை இ. ஜெயராஜ், முனைவர் சரசுவதி ராமநாதன், வழக்கறிஞர் த. ராமலிங்கம், பேராசிரியர் தி. ராசகோபாலன், முனைவர் இராம. சவுந்தரவல்லி, முனைவர் இரா. செல்வ கணபதி, புலவர் கோ. சாரங்கபாணி ஆகியோர் தான்! நான் என்னை விளம் பரப்படுத்திக் கொள்வதற்காகத்தான் அந்தச்சட் டத்தை நிறைவேற்றினேனாம்! விளம்பரத்தையே விரும்பாத ஜெயலலிதாவின் வகைவகையான புகைப்படங்களோடு 23-8-2011 அன்று மட்டும் அவர்களுடைய அதிகாரபூர்வமான நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் 45 முழுப் பக்க விளம் பரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த லட்சணத்தில் அவர் என்னைப் பார்த்து விளம்பரப்படுத்திக் கொண்டேன் என்கிறார். பேரவையிலே ஜெயலலிதா நாங்கள் எதைச் செய்தாலும் அதைச் சீரழிப்பதே தி.மு.க. வின் வேலை என்று சொல்லி யிருக்கிறார். அது தவறு; தி.மு.க. எதைச் செய்திருந் தாலும், அதைச் சீரழிப்பதுதான் அ.தி.மு.க. வின் வேலை என்பதே சரியாகும்!

அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்து விட்டுப் போகட்டும். நம்மைப் பொறுத்த வரையில் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள். அன்றையதினம் வாழ்விலோர் திருவிழா என்பார்களே, அதைப் போல தமிழகத்தின் ஏழையெளிய மக்களுக்கு - தமிழர்களாகப் பிறந்த மக்களுக்கு - திராவிடச் சமுதாயத்தை தனது இனமென தலை நிமிர்ந்து கூறுகின்ற மக்களுக்கு ஒரு இனிய விழா - இதய விழா- எழுச்சி விழா என்பதை மனதிலே கொண்டு அந்நாளை உவகைப் பொங்கிடக் கொண்டாடி மகிழ்ந்திடுவோம்.
அன்புள்ள,
மு.க.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...