Monday, August 29, 2011

திருத்தணி தொடங்கிக் கொடுத்திருக்கிறது


திருத்தணி நகரத்தில் காஞ்சீபுரம் மண்டல திராவிடர் கழக மாநாடு நேற்று (28.8.2011) எழுச்சியுடன் நடைபெற்றது. பக்தி வெள்ளம் பெருக்கெடுத்தோடும் பகுதி இது. முருகனின் அறுபடை வீடு என்று தல புராணம் எழுதி வைக்கப்பட்ட ஊர்.

முருகனைத் தரிசித்தால் அந்தக் கணத்திலேயே பாவங்கள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்து ஓடி விடுமாம்; (பாவங்களைச் செய்ய யார்தான் பயப்படுவார்கள்?)நாள்தோறும் பக்தர்கள் அங்கு வந்த வண்ணமாகவே இருப்பார்கள். வழி நடையாக அந்தக் கல்லு முதலாளியைத் தரிசிக்க வருவார்கள்.அப்படிப்பட்ட அந்த ஊரிலே, முதன் முதலாக, இதற்குமுன் இப்படியொரு காட்சியை அவ்வூர் மக்கள் கண்டிலர் என்று சொல்லும் அளவுக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியுடன் கூடிய கழக மண்டல  மாநாடு வரலாற்றில் என்றும் நிலைக்கும் செப்பேடாக சிலா சாசனமாக நடைபெற்றது.மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி பல செயல் விளக்கக் காட்சிகளுடன் நடைபெற்றதால், ஊர் மக்களுக்கு, வெளியூர்களிலிருந்து வந்த பக்தர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு அறிவு விருந்தாக அமைந்திருந்தது.வழி நெடுக கோயில்களுக்குப் பஞ்சம் இல்லை என்றாலும் சிறு அசம்பாவிதமும் இல்லாமல் பக்தர்களும், கோயில் அர்ச்சகர்களும்கூட வெளியில் வந்து பேரணியைப் பார்த்தனர் என்றால் அது திராவிடர் கழகத்தின் கொள்கை சார்ந்தவுணர்வும் பண்பாடும், கட்டுப்பாடும் எத்தகைய மாண்பினை உடையவை என்பதைப் பறைசாற்றுவதாக இருந்தது.இரண்டாவதாக திறந்த வெளி மாநாடு. முக்கிய தலைப்புகளை உள்ளடக்கிய கருத்தரங்கம்! அனைவரும் அரிய கருத்துகளை உணர்ச்சியுடன் எடுத்து வைத்தனர். கழகத் தலைவரே பாராட்டும் அளவுக்குத் தோழர்களின் உரை அமைந்திருந்தது.விடுதலையை அரசு நூலகங்களில் நிறுத்துமாறு அண்ணா தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் முதல் உத்தரவாகப் போட்டது 2012 மார்ச்சு முடிய அரசு நூலகங் களுக்கு விடுதலை வழங்கிட அரசு ஆணையிருந்தும், அதைப்பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், கலைஞர் அரசில் எது நடந்தாலும், அது அகற்றப்பட வேண்டுமே என்ற உந்துதலாலும், விடுதலை ஏட்டின் வழியாக பகுத்தறிவு, இனநலம் உள்ளிட்ட முற்போக்குச் சிந்தனைகள் மக்கள் மத்தியில் பரவினால், அது தமது ஆட்சிக்குப் பாதகமாக இருக்கும் என்று எண்ணிய பரிதாபத்தால் இத்தகைய முயற்சியில்  இன்றைய அரசு ஈடுபட்டு இருக்கலாம்.விடுதலையை நிறுத்திவிட்டு துக்ளக் இதழை அரசு நூலகங்களில் வழங்க  புதிய ஆணையைப் பிறப்பித்த தன் மூலம் இந்த அரசுக்கும் திராவிட இயக்க கொள்கை களுக்கும், அண்ணாவின் சிந்தனைகளுக்கும் சற்றும் இடமில்லாத ஒன்று (பெயர் மட்டும் அண்ணா தி.மு.க.) என்பதை அய்யப்பாட்டுக்குச் சிறிதுமின்றி அப்பட்டமாகக் காட்டிக் கொண்டு விட்டது.இந்த நிலையில் விடுதலை சந்தா சேர்ப்பு இயக் கத்தைத் தொடங்கி வைத்தார் - 50 ஆண்டு காலமாக விடுதலை ஆசிரியராக இருந்துவரும் (1962-2012) இதற்குமுன் யாரும் படைத்திராத இந்தச் சாதனையைப் படைத்துள்ளார் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள். மளமளவென்று கழகத் தோழர்கள் விடுதலை சந்தா சேர்ப்பினை ஓர் இயக்கமாகவே நடந்திடத் தொடங்கி விட்டனர்.நேற்று மாநாட்டில் விடுதலை சந்தா வழங்கும் விழாவும் இணைக்கப்பட்டு இருந்தது. திருவள்ளூர் மாவட்டம் சார்பாக 100 சந்தாக்கள்; அரக்கோணம் மாவட்டம் சார்பாக 100 சந்தாக்களும் நேற்றைய மாநாட்டில் முதல் தவணையாக வழங்கப்பட்டுள்ளன.மண்டலம் வாரியாக மாநாடுகள் நடத்தப்பட்டு சந்தாக்கள் வழங்கப்படும் நிகழ்ச்சி தொடரப்பட உள்ளது.இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் களத்தில் இறங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.விடுதலையால் பலன் பெறாத ஒரு தமிழன் நாட்டில் இருக்க முடியுமா? குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள், கல்வி, வேலை வாய்ப்புகள் பெற்றதும், சமூக சிவில் உரிமைகளும் பெற்றதும் கழகத்தாலும், விடுதலையாலும் அல்லவா?கல்வி ஓடையிலிருந்து ஆரிய முதலைகளை வெளி யேற்றியதில் விடுதலைக்கு உள்ள பங்கு சாதாரண மானதுதானா?வீடு வீடாகச் செல்லுவோம்! அலுவலகம், அலுவலக மாகச் செல்லுவோம், கதவைத் தட்டுவோம்! விடுதலை யின் வீரப் பிரதாபங்களை சாதனை மலர்களைத் தொடுத்துச் சொல்லுவோம்.நன்றி மறந்த மக்களா நம் தமிழர்கள்? இல்லை - இல்லை ஒருக்காலும் இல்லவே இல்லை! யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்; நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது என்பது வெறும் வார்த்தை களல்ல! - நிதர்சனமானவை என்பதைக் காட்ட வேண்டாமா கறுஞ்சட்டை சேனையே!திருத்தணி மாநாடு தீரத்தைக் காட்டியிருக்கிறது - அது மற்ற மற்ற பகுதிகளிலும் தொடரட்டும்! தொடரட்டும்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...