Wednesday, July 13, 2011

(அ) சத்ய பாபா அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நேரடிப் புலனாய்வு - திடுக்...திடுக்


- மின்சாரம்

ஊரில் இறங்கியவுடன் முதலில் நாம் சந்திப்பது பிச்சைக்காரர்களைத்தான். சத்தியபாபாவால் இதை ஒழிக்க முடிய வில்லையோ என்ற எண்ணம்தான் வந்தது.

இப்பொழுது பிரச்சினை வியாபாரிகளுக்குத்தான். கூட்டம் குறைந்து விட்டது. ஒவ்வொரு கடையிலும் சாயிபாபாவின் படம் உண்டு. சாயி என்றோ பாபா என்றோ அடையாளப் பெயர் இல்லாத கடைகள் கிடையவே கிடையாது.

சாயிபாபா இருக்கும் போது ஒவ்வொரு நாளும் வியாபாரிகள் ஒவ்வொருவரும் அங்கு சென்று அவரைத் தரிசித்துவிட்டுத்தான் கடையைத் திறப்பார்களாம்!

சும்மா சொல்லக் கூடாது! மனுஷன் ஆன்மீகக் குடையின்கீழ் ஊரை நிறுத்தி வைத்திருக்கிறார். (மேல்மருவத்தூர் அம்மாவும் அதே வழியில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்).

பாபாவால்தானே கூட்டம்! அதனால்தானே பிழைப்பு - விசுவாசமாக இருக்கமாட்டார்களா?

ஊரில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்தது, மருத்துவமனை கட்டியது, கல்விக்கூடங்கள் திறந்தது உள்பட பல நல்ல காரியங்களைச் செய்துள்ளார். அந்த விசுவாசத்தோடு மக்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

தன்னை எந்த ஒரு நிலையிலும் ஓர் இந்து மத சாமியாகக் காட்டிக் கொண்டதில்லை. நுழைவு வளைவில் கூட இந்துக் கடவுள்கள் மற்றும் புத்தருடைய உருவம் பொறிக்கப் பட்டுள்ளது.

அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மாத இதழான சனாதன சாரதி (Sanathana Sarathi) யின் அட்டைப்படம் நிரந்தரமானது. அதில் சர்வமதப் படங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். போன்ற சங்பரிவார்கள் உரிமை கொண்டாடும் ஒரு சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுக்கவில்லை என்பது சாமர்த்தியமான அம்சமாகும்.

சமயங்களுக்கு அப்பாற்பட்ட சாயிபாபா என்ற ஒரு நிலையை நிறுவியுள்ளார் என்றே கூற வேண்டும்.

பிரசாந்தி வளாகத்துக்குள் விநாயகர் கோயில் இருக்கிறது ஆல மரத்தடியின்கீழ் நம்ம ஊரில் உள்ள கடவுள்களின் உருவங்கள் சிறிது சிறிதாக அணி வகுத்து நிற்கின்றன. எல்லாவற்றுக்கும் மஞ்சள் பூச்சு!

பார்ப்பன ஊடுருவலை அது வெளிப்படுத்துவதாகக்கூடக் கருதலாம்.

ஆயிரக்கணக்கானோருக்குத் தரிசனம் -அளிக்கும் வகையில் அழகான மண்டபம்! கலை வேலைப்பாடுகள் கண்களைக் கவர்கின்றன!

மதிய உணவு வெறும் 6 ரூபாய்க்கே அளிக்கப்படுவது ஆச்சரியம்தான்! சிற்றுண்டி வெறும் இரண்டே ரூபாய்தான் - நம்ப முடியவில்லையா? (சிக்கனம் கருதி மதிய உணவை அங்குதான் உண்டோம்!)

பல மாநிலங்களிலிருந்தும் ஆண் - பெண் இருபாலர்களும் 15 நாள் தங்கியிருந்து சேவை செய்து திரும்புகின்றனர். -  இந்தச் சேவை பிரசாந்தி நிலையத்தில் மட்டுமல்ல - மருத்துவமனைவரை நீள்கிறது. (மனதைப் பறிகொடுத்துவிட்டால் சேவை செய்வதை ஒரு பாக்கியமாகத்தானே கருதுவார்கள்).

மக்களின் மூடபக்தியை - மூடநம்பிக்கையை ஆழமாக நன்கு பயன்படுத்திக் கொண்டு, வருவாய் நதிகள் கரை புரண்டு வருமாறு செய்தது ஒரு வகையில் சாதனைதான் அல்லது சாமர்த்தியம் என்றுகூட வைத்துக் கொள்ளலாம்.
அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் இந்தப் பாவங்களைப் போக்கிக் கொள்ளும் வகையில் அறப்பணிகளுக்கும் வாய்க்கால் திறந்து விடப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது அங்குள்ள மக்களின், வியாபாரிகளின் கவலையெல்லாம் - முன்பு போல புட்டபர்த்திக்கு மக்கள் வருகை குறைந்து போனால் நம் பிழைப்பு என்னாவது என்பதுதான்.

பாபா சமாதியை எழுப்பி அதனைப் பிரபலம் அடையச் செய்யும் ஒரு திட்டம் இருப்பதாகத் தெரிகிறது.

கதையை அவிழ்த்துவிட வேண்டியதுதானே! சாயிபாபாவைப்பற்றி ஆரம்பத்தில் அவிழ்த்துவிடவில்லையா? அதே பாணியில் பாபா சமாதியின் மகிமையோ மகிமை! அங்கு சென்று தரிசித்தால், கும்பிடு போட்டால், காணிக்கைகளைக் குவித்தால் பிள்ளைவரம் கிடைக்கும், வியாபாரம் பெருகும், மலைபோல் வரும் துயரங்கள் பனிபோல் விலகிவிடும்; வியாதிகள் பஞ்சாய்ப் பறக்கும் என்று ஆங்காங்கே ஆள்களை ஏற்பாடு செய்து பிரச்சாரம் செய்விக்க வேண்டியதுதானே!

(ஒரு கோடி ரூபாய் கொடு. கழுதையை மகான் ஆக்கிக் காட்டுகிறேன் என்று தந்தை பெரியார் சொன்னதை நினைவிற் கொள்க!)

கருநாடக மாநிலம், மாண்டியாவில், புட்டபர்த்தி சாயிபாபா மீண்டும் அவதரிப்பார் என்று இப்பொழுதே அஸ்திவாரம் போட்டு வைத்துள்ளார்கள். ஏதோ ஒரு திட்டமிட்ட மோசடி - சதிப்பின்னல் அரங்கேற்றப்பட உள்ளது (எச்சரிக்கை!).

பக்தி என்பது மனிதனின் மூளையில் மாட்டப்பட்ட விலங்கு என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அடிக்கடி சொல்லுவதைப் புரிந்து கொண்டால், மக்களை, மாக்களாக்கி அடி பணிய வைக்கும் யுக்தியில், கருவியில் பக்திதான் முதல் இடத்தில்!

இதனை எதிர்த்து வெற்றி கொள்வது என்பது எளிதானதல்ல. இதில் வெற்றி கண்டார் ஒரு தலைவர் என்று எண்ணிப் பார்க்கும் பொழுதுதான் தந்தை பெரியார் தம் மகத்துவத்தின் மாண்பு மலைப்பாக இருக்கிறது.

பக்தியின் பெயரால் பகவான் என்று நம்பி பணத்தைத் தருகிறார்கள், அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு மறுப்பாகப் பகுத்தறிவைப் போதித்த தலைவரை பகுத்தறிவுப் பகலவனாகப் போற்றி அன்பளிப்புகளைக் குவித்தது - தந்தை பெரியார் விஷயத்தில் மட்டுமே நடந்திருக்கிறது.

தந்தை பெரியார் தம் கொள்கைகளை ஏற்காதவர்களைக் கூடக் கவர்ந்திருக்கிறார் - மதிக்கும்படிச் செய்திருக்கிறார்.

கடவுளைத் தூக்கி எறிந்து கடுமையாக விமர்சித்து பகுத்தறிவைப் போதித்த இந்தப் பகலவன், ஒழுக்கத்தை வலியுறுத்தியதும், ஒழுக்கத்தின் இலக்கணமாகவே வாழ்ந்து காட்டியதும்தான் அவர்தம் இமாலய வெற்றிக்கும் இணை கூற முடியாத ஒட்டு மொத்த சமூகத்தின் மதிப்புக்கும், விழுமிய காரணங்களாகும்.
ரீஃபார்ம்களை ஆரம்பித்து விடுகிற எல்லா லீடர்களையும் ஒழுங்கு தப்பினவர்கள் என்று சொல்லுவதற்கு இல்லைதான். சாஸ்திர, ஸம்பிரதாய விதிகளாகிற ஒழுங்குகளை இவர்களும் விட்டவர்கள்தாம் என்பதால் இவர்களை ஸனாதன தர்ம பீடங்களான மத ஸ்தாபனங்களில் இருக்கிற நாங்கள் ஒப்புக் கொள்ளத்தான் இல்லை என்றாலும், இவர்கள் Personal Life - இல் (தனி வாழ்க்கையில்) சத்யம், ஒழுக்கம், தியாகம், அன்பு போன்ற பலவற்றைக் கடைப்பிடித்தவர்கள் என்பதை ஆட்சேபிப்பதற்கில்லை. ஓரளவிற்கு படிப்பு, விஷய ஞானம் எல்லாம் உள்ளவர்களாகவும், ஜனங்களை நல்லதில் கொண்டு போக வேண்டும் என்பதில் நிஜமான அக்கறை கொண்டவர்களாகவுமே இந்தச் சீர்திருத்தத் தலைவர்களில் பலர் இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்!!

- இவ்வாறு கூறி இருப்பவர் மறைந்த  காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (தெய்வத்தின் குரல் - 3ஆம் பாகம் பக்கம் 336).

தந்தை பெரியார் அவர்களின் சமகாலத்தோடு வாழ்ந்தவர் என்ற முறையில் அவர் தந்தை பெரியார் அவர்களை மனதிற் கொண்டே இதனைச் சொல்லியிருக்க வேண்டும்.

தந்தை பெரியாரின் சொத்துகள் அவர் காலத்திலேயே அறக்கட்டளையாக ஆக்கப்பட்டு, அவர்களின் மறைவிற்குப் பிறகும் தக்க பாதுகாப்புடனும், வளர்ச்சிப் போக்குடனும், எதிரிகள் பொறாமைப்படும் அளவுக்கும், நாட்டு மக்கள் மதிக்கும் அளவுக்கும் நிர்வகிக்கப்படுவதையும் ஒரு பக்கத்தில் பார்க்கட்டும்!

சாயிபாபா அறக்கட்டளையின் சந்தி சிரிப்பையும், சீர்தூக்கிப் பார்க்கட்டும்.
கடத்தல் பூமியாக புட்டபர்த்தி ஆகிவிட்டது. பாபா பணமா  - கறுப்புப் பணத்தின் கிடங்கா என்று சாதாரண மக்கள் பேசும் நிலைக்கு ஆளாகி விட்டதே!

பாபா பகவான்(?) என்பது உண்மையென்றால் நல்ல நிருவாகி என்பதும் உண்மையானால் இந்தக் கேவலங்கள் நர்த்தனம் ஆடுமா?

ஒருவர் பற்றிய மதிப்பீடு - அவர் இல்லாத காலத்திலும் அவர் நிறுவனம் எப்படி நடைபோடுகிறது என்பதைப் பொறுத்ததாகும் என்பதை நாள்குறிப்பின் முகப்பில் எழுதி வைத்துக் கொள்ளலாம்.

பாபாவின் அறக்கட்டளை உறுப்பினர்கள் என்று வான வீதியில் மிதந்து கொண்டிருந்தவர்களின் யோக்கியதையை.. நாடு தெரிந்து கொள்ளட்டும்!

இதோ புட்டபர்த்தி உள்ளூர் மக்கள் பேசுகிறார்கள்.  (ஒளிப்பதிவு: பெரியார் வலைக்காட்சி) அக்கம் பக்கம் பார்த்துதான் பேசுகிறார்கள். அறக்கட்டளைப் பேர் வழிகள் பொல்லாதவர்கள் என்று கூறுகின்றனர். இதன் காரணமாக பெயர்கள் இங்கு மாற்றிக் கொடுக்கப் படுகின்றன.

முடி திருத்தும் தொழிலாளி

யஜூர் மந்திர் என்று சொல்லப்படுகிற பாபாவின் அறைக்கு இரண்டு பகுதிகள் உள்ளன. அதில் ஒன்றில் இருந்துதான் தங்கம், பணம் ஆகியவை சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இன்னொன்று பற்றி எனக்குத் தெரியாது. தற்போது, பாபாவுக்கு சமாதி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இரவில் மட்டும் பணிகள் நடைபெறுகின்றன. அங்கு ஏதோ சுரங்கம் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அதற்குள் என்ன இருக்கிறது என்பது மர்மம்தான். அதன் அருகில் யாரையும் அனுமதிப்பதில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது. ரத்னாகர் பற்றி மற்றவர்கள் சொல்வது சரியா, தவறா என்று தெரியாது. நடக்கின்ற தவறுகள் அனைத்துக்கும் ட்ரஸ்ட் உறுப்பினர்கள்தான் காரணம் என்று தெரிகிறது.

மரியா அர்ஜென்டினா (இளைஞர்)

சும்மா இங்கே நடப்பவற்றைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறோம் (நான்கைந்து பேர் ஒன்றாக வந்திருந்தனர்). நான் சாய்பாபாவின் பக்தன் அல்ல. நாங்கள் அர்ஜென்டினாவிலிருந்து வந்திருக்கிறோம். எனக்கு சாய்பாபாவின் அருள்வாக்கின் மீது நம்பிக்கை இல்லை. நான் ஒரு கடவுள் மறுப்பாளன்.

லட்சுமண்ணா (40 வயது)

ட்ரஸ்ட்ல  இருக்கிற அத்தனை பேருமே திருட்டுப் பசங்க. 420  - நல்லவங்க யாருமே கிடையாது. சாமியார் சாகறதுக்கும் அவங்கதான் காரணம். சாமியார் 29ஆம் தேதியே செத்திட்டாரு. ஆனா வெளியே வச்சா பிரச்சினை ஆகும்னு சும்மா உள்ளேயே வச்சிருந்தாங்க. லாரியெல்லாம் கொண்டு வந்து பணத்தை எடுத்துட்டுப் போறாங்களே தவிர எல்லாம் சாமிதுதான்.

சாமியோட பி.ஏ. சத்யஜித் மீது கொஞ்சம் நல்ல பேரு இருக்குது. உயிலு, டைரி அதெல்லாம் டிரஸ்ட்காரங்கதான் பண்ணியிருக்காங்க.

இந்த ட்ரஸ்ட்லிருந்து எங்க மண்டலத்திற்கு எதுவுமே செய்யல. அவங்கவங்களுக்குத் தேவையானதை பண்ணிக்கிட்டாங்க. பகவான் இருக்கும் போது கூட எங்களுக்கு ஒண்ணும் பண்ணல. கூலி வேலை செஞ்சுதான் பொழைக்கிறோம்.

மருத்துவமனை பரவாயில்லை. தமிழ்நாடு, கருநாடக மருத்துவர்கள் வந்து போறாங்க. நல்லா நடக்குதுன்னு சொல்றாங்க. அவரு இருக்கும்போது தமிழ்நாட்டுக்காரங்களுக் குத்தான் அதிகாரம் குடுத்திருந்தாங்க. சாமி இருக்கும்போது நல்லது பண்ணனும்னு சொல்வாரே தவிர பண்ணக்கூடா துன்னு சொல்லமாட்டாரு.

ரெங்கன் - இரவு காவலாளி

ஜானகிராமன் மீட்டிங்கில் பேசி பேசி உடம்பு சரியில்லாம போயி, 7 வருசத்துக்கு முன்னாடி மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து முடியாம இறந்துட்டாரு.

சாமிக்கும், அவருடைய தம்பி ஜானகிராமனுக்கும் நல்ல உறவு இருந்துச்சு. ஜானகிராமன் இருக்கும்போது எல்லாருக்கும் நல்லது செஞ்சிருக்காரு. அவரு செத்தாலும் வைகுண்டம்தான். இருந்தாலும் வைகுண்டம் தான். ஒரு வாக்குக் கொடுத்தா தவறமாட்டாரு. யாராவது தவறு செஞ்சா கண்டிப்பாரு. ஆனா, திருப்பிக் கூப்பிட்டு அன்பு காட்டுவாரு.

ட்ரஸ்ட்டுல என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியாது. பகவானுக்கு அப்புறம் ரத்னாகர் வந்தா ட்ரஸ்ட் இப்ப இருக்கிற மாதிரியே நடக்கும். அரசாங்கம் டிரஸ்ட்ட எடுத்துக்கறதப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. நான் இங்க 20 வருசமா இருக்கேன். எனக்கு ஜானகிராமன் நல்லா உதவி செஞ்சிருக்காரு. எம் பசங்களுக்கும் வேலை குடுத்திருக்காரு. நாங்க யாரும் படிக்கல. வேலை செய்யறோம். கூலி குடுக்கறாங்க. அவ்வளவுதான்.

ராமகிருஷ்ணா ரெட்டி (40 வயது) கிருஷ்ணா மாவட்டம்

நாங்க ஜகன்மோகன் ரெட்டி அவர்களின் பாத யாத்திரைக்காக இங்கு வந்திருக்கிறோம். புட்டபர்த்தி சாயி பாபா இருந்த இடத்தில் நாங்களும் இருப்பதே ஆனந்தமாகவும், அதிர்ஷ்டமாகவும் கருதுகிறோம். இங்கு ஏதேதோ நடப்பதாக வரும் செய்திகள் பற்றி என்ன சொல்வது! பொதுவான மனிதனாக தகுந்த சாட்சிகள் இல்லாமல் அதைப்பற்றி நாம் எப்படி கருத்து சொல்ல முடியும்?

மதராஸ் ஸ்வாஸ் தேவ் (35 வயது) சிறீகாகுளம் மாவட்டம்

சாமியார் இருக்கும்போது மனசுக்குக் கவலையா இருந்தாலும் இங்க வந்தா நிம்மதியா இருக்கும். செய்திகள் என்னென்னவோ வருது. அது உண்மையா இல்லாம இருந்தா நல்லாயிருக்குமுன்னு நினைக்கிறோம்.

ஆட்டோ ஓட்டுநர் (நடுத்தர வயது)

இங்கிருக்கிற மருத்துவமனையைப் பொறுத்தவரையில் பாபா இருக்கும்போது பார்த்த மாதிரிதான் இப்பவும் பார்க்கறாங்க. சீனியாரிட்டிபடிதான் மருத்துவம் செய்யறாங்க. நான் இங்க இருக்கிறதுனால மத்ததப் பத்தி எதுவும் தெரியாது.
(இவர் மருத்துவமனையின் முன்புள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருப்பவர்)

தனியார் டி.வி. இளைஞர்

பாபா இருந்தபோது நல்லா இருந்துச்சு. அவரு போன பிறகு, இந்தத் திருட்டுப் பசங்க ஏதேதோ செய்றாங்க. உள்ளிருந்து கொண்டு வந்ததாக 37 லட்சத்த பிடிச்சதா செய்திகள் வந்திருக்கு. வெளிப்படையா இப்படின்னா? உள்ள என்னென்ன நடக்குமோ யாருக்குத் தெரியும்? அரசாங்கம் இந்த ட்ரஸ்ட்ட ஏற்று நடத்தினா இதே பிரச்சினைதான் வரும்.  ட்ரஸ்ட் மெம்பருங்க நல்லவங்களா இருந்தா, உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதில் உறுப்பினர்களாக இருந்தால் நல்லாயிருக்கும். இப்ப இருக்கிற ட்ரஸ்ட்டிங்க மேல எனக்கு நம்பிக்கையே கிடையாது. மத்தியில் உள்ள தமிழ்நாட்டு அமைச்சர்தான் பின்னணியில் இருக்கிறார்.

சாயிபாபா பிறந்த இடம் இன்று சிவன் கோயிலாக இருக்கிறது - அந்தக் கோயிலின் அர்ச்சகர்

இதுதான் சாய்பாபா பிறந்த இடம். இந்த இடம் கொஞ்சம் பிரபலமானவுடன், பாபாவே ஈஸ்வரன் சிலையை இங்கு நிறுவி, பாபாவின் பிறந்த கிழமையான ஒவ்வொரு வியாழக்கிழமையும் அவரே இந்த இடத்திற்கு வந்து பூசைகள் செய்திருக்கிறார். இன்னும் அந்த பூசைகள் தொடர்கின்றன. ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரி அன்று ட்ரஸ்ட் உறுப்பினர்களும், பாபாவால் அழைக்கப்படும் முக்கியஸ்தர்களும் கூடி சிறப்புப் பூசைகள் செய்வது வழக்கம். இப்போது முன்பு போல கூட்டம் வருவதில்லை. அவரு இருக்கும்போது அவருதான் ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்து செஞ்சிக்கிட்டு இருந்தார். இந்திய அளவுல, உலக அளவுல பல முக்கியஸ்தர்கள் இங்க வந்து பாபாகிட்ட ஆசி வாங்கிட்டுப் போயிருக்காங்க. இப்ப அதெல்லாம் பார்க்க முடியலே. இப்பொழுது பாபாவோட சமாதியை சீரடி சாய்பாபா சமாதி போல அமைக்க ட்ரஸ்ட் உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன் மூலமாக எதிர்காலத்தில் கூட்டம் வரலாம். வராமலும் போகலாம்.

அவரு அறையிலிருந்து பணம் போனது பற்றி எனக்குத் தெரியாது. எனக்குத் தனிப்பட்ட முறையில் சம்பளம் ஏதுமில்லை. பக்தர்கள் தருகிற காணிக்கையில்தான் இதை ஒரு சேவையா செஞ்சுட்டு இருக்கேன்.

பாபாவின் அப்பா பெயர்: பெத்த ரங்கம்மா ராஜூ

அம்மாவின் பெயர் : சிறீவதி மேசுகாரு

வளர்ப்பு அம்மா : கர்ணம் சுப்பம்மா

பாபாவின் குடும்பம் ராஜூலு வகையைச் சார்ந்தது. ட்ரஸ்ட் தொடர்ந்து நடைபெறுவது சாய்பாபாவின் ஆசியில்தான் இருக்கிறது. இப்பொழுது ட்ரஸ்ட் உறுப்பினர்கள் பற்றி பல செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. எனக்குத் தெரிந்தவரை ரத்னாகர் வல்லவர். அவரது வீட்டுக்கு அருகில்தான் எனது வீடும் இருக்கிறது. இந்தக் கோயிலினுள் பிராமணர்களைத் தவிர வேறு யாரும் நுழைய முடியாது. ட்ரஸ்ட் உறுப்பினர்கள்கூட நுழைய முடியாது. இங்கு பிராமணர்கள்தான் தொடர்ந்து அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனர்.

பழ வியாபாரி (65 வயது)

பாபா இருந்த வரையில், அவர் இந்த ஊருக்கு பல நன்மைகள் செய்திருக்கிறார். அவர் இறந்த பிறகு, புட்டபர்த்தியில் வியாபாரம் நன்றாக இல்லை. ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறோம். எனக்குத் தெரிஞ்சு ட்ரஸ்ட் உறுப்பினர்கள் எதுவும் செய்ய மாட்டாங்க. எனக்குப் படிப்பறிவு இல்ல. எந்தவித வசதியும் இல்ல. இந்த ஊரப்பத்தியும், எதப் பத்தியும் கவலைப்படாம ஆசிரமத்தில் இருக்கிறவங்க தான் கிடைச்சவரைக்கும் சுருட்டிக்கிட்டுப் போறாங்க. அவரு இருந்த வரையில் இங்க திருட்டுப் பயமே இல்லை. ஆனா, இப்ப ஆசிரமத்திலேயே திருடு போகுது. ஆட்டோவுல, கார்ல, எதுல கிடைக்குதோ அதுல திருடிட்டுப்  போறாங்க. அவரு இருந்த போது யார வேணும்னாலும் கூப்பிட்டுப் பேசுவாரு. கஷ்டம்னா ஏதாவது உதவி பண்ணுவாரு. ஆனா, இப்ப ஆசிரமத்துக்குள்ளேயே போக முடியல. ஏன்னா, பணமும் நகையும்தான் அவுங்க கண்ணுக்குத் தெரியுது. உள்ளூர்க்காரங்க யாரும் அவங்க கண்ணுக்குத் தெரியல.

குமார் - கல்லூரி மாணவர்
(சாயிபாபா நிறுவிய கல்லூரியிலேயே படிக்கிறார்)

சாயிபாபா பல நல்லது செஞ்சிருக்காரு. இனிமே என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியாது. நாங்களும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்போட இருக்கோம். ஆசிரமத்துல நடக்கிறதுபத்தி எங்களுக்குத் தெரியாது?

ஜனக்கம்பள்ளி கூலித் தொழிலாளி (இளைஞர்)

ட்ரஸ்டிலிருந்து பணம் நகை வெளியே போறது உண்மைதான். அதுதான் தினம் தினம் பத்திரிகையில் போட்டோவோட செய்தி வருதே. முன்னாடி இங்க வந்து கூலி வேலை செஞ்சிட்டுப் போனோம். இப்ப, அந்த மாதிரி இல்லை. உள்ளூர்க்காரங்களே வேலை இல்லாம இருக்காங்க. அருகில் இருந்த மற்றொரு இளைஞர் குறுக்கிட்டு, இதெல்லாம் ஏண்டா சொல்றே? என்று கூற விஜயகுமார், எனக்கென்ன பயம்? ட்ரஸ்ட்லிருக்கிறவங்க எல்லாம் திருட்டுப் பசங்கதான் என்கிறார் அழுத்தமாக.

அவரோட சகோதரி மகள் சேத்னா ராஜூ தனது உயிருக்கு ஆபத்து என்று கூறியது உண்மைதான். சேத்னா ராஜூ பாபா கூடவே இருந்தவர். அதனால், அவருக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும். ஆகவே, ரத்னாகரை அவர் தட்டிக் கேட்டிருக்கிறார். பாபாவையும் ட்ரஸ்ட்ல இருக்கிறவங்கதான் கொலை செய்து இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமா உணவு மூலமாகவும், மருந்துகள் மூலமாகவும் விசம் கொடுத்துக் கொன்றுவிட்டார்கள் என்று ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

மேலும், ஊரில் திருமணம் ஆகாத இளம் பெண்களின் திருமணச் செலவுக்கு 2 லட்சமும், வேலை இல்லாத ஏழை விவசாய இளைஞர்களுக்கு ஒரு லட்சமும் கொடுப்பதாக பாபா அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பலருக்குப் பிடிக்கவில்லை. அவருடைய அறையிலிருந்து பணம் பறி போனது அவர் கோமாவில் இருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாற்றி வைத்துவிட்டார்கள். ஆனால், வெளியில் கொண்டு செல்ல இயலவில்லை. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.

80 வயது கேரளவாசி

நான்  இங்கே வந்து 40 ஆண்டுகள் ஆகிறது. பகவான்தான் என்னை இங்கே வரச் சொன்னார். இப்ப, எனக்கு வேலை எதுவும் கிடையாது. எனக்கு 3 பையன்கள். அவங்கதான் எல்லாத்தையும் கவனிச்சிக்கிறாங்க. மூணு பேரும் ட்ரஸ்ட்லேயே வேலை பார்க்கிறாங்க. பகவான், இந்த ஊருக்கு நிறைய காரியங்கள் செஞ்சிருக்காரு. முதல்ல . . இங்க குடிக்கிறதுக்குத் தண்ணீர் இல்ல. அவருதான் கொண்டு வந்தாரு. வீடு இல்லாதவங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்காரு. இப்ப அதெல்லாம் நடக்காது. அதான், சாமி இல்லையே. அவங்கவங்க சவுகரியத்தைப் பார்த்துட்டு,  அவங்கவங்க போறாங்க. நான் வரும்போது ஆசிரமம் இல்ல. பிறகுதான் ஒவ்வொன்னா தொடங்கினாரு.  நான் ஓய்வு பெற்ற பிறகு, சாமி என்னைப் பார்த்து, என்ன வேணும்னு கேட்டாரு. நான் ஒன்றும் வேண்டாம்னு சொல்லிட்டேன்.

சாமி இருக்கும்போது எல்லாம் செஞ்சாரு. இப்ப இருக்கிற நிலைமையில எதுவும் சொல்ல முடியாது. பத்திரிகையில ஏதேதோ வருது. ஆனா, அதப்பத்தி எதுவும் சொல்ல முடியாது. நான் சாமிகிட்ட விபூதி வாங்கியிருக்கேன். பிறகு, நிறையப் பேர் வந்து நாங்களும் அந்த மாதிரி செஞ்சு காட்றோம்னு சொன்னாங்க. எனக்கு நினைவு இல்லை. எனக்குப் படிப்பு கிடையாது. நாலஞ்சி மொழி தெரியும். இப்ப எதுவும் சொல்றதுக்கு இல்ல. அவ்வளவுதான் சமாச்சாரம்.

இப்ப ரத்னாகரைப் பற்றி பேப்பர்ல என்னென்னவோ வருதுன்னு சொல்றாங்க. எல்லாரும் ரத்னாகர் மேலதான் சொல்றாங்க.

அலெக்சி பரோஸ்கி - ரஷ்ய இளைஞர்

நான் ரஷ்யாவில் பிறந்தேன். பல ஆண்டுகள் இந்தோனேசியாவில் வாழ்ந்தேன். தற்போது நேபாளில் இருந்து இந்தியா வந்துள்ளேன். மீண்டும், நேபாள் சென்று விசாவை நீட்டித்துக் கொண்டு, மீண்டும் புட்டபர்த்தி வர இருக்கிறேன். காரணம், புட்டபர்த்தி உலக அளவில் சிறப்புப் பெற்ற இடம். சாய்பாபா நீண்ட காலமாக இங்கு இருந்துள்ளார். நான் சாய் பகவானின் அருளை நம்புகிறேன். மற்றவர்கள்  இடத்தில் இல்லாத ஒரு சக்தி அவரிடம் உள்ளது. நான் அதில் உறுதியாக இருக்கிறேன்.

அவர் கடவுளாகவே இருந்தாலும், அவருக்குப் பல நோய்கள் இருந்தன. காரணம், நமது உடல் அய்ந்து பூதங்களால் ஆனது. இயற்கையின்படி இது நிகழ்ந்துள்ளது. இதை மக்கள் அறியாமல், தங்கள் வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள போராடுகின்றனர். (பக்திக் கிறுக்கு இந்தியாவுக்கு மட்டும் சொந்தமா?)

சைக்கிள் பழுது பார்ப்பவர்

சாய்பாபா இறந்த பிறகு, வெளிநாட்டுக்காரங்க வருவது குறைந்து போய் வியாபாரம் படுத்துவிட்டது. அவரு 20 நாட்களுக்கு முன்பே இறந்து போய் _ பின்னர் இறந்ததாக அறிவித்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பாபாவைப் பொறுத்தவரையில் இந்து, முசுலிம், கிருஸ்துவர்னு பேதம் பார்க்கிறதில்ல. அவருக்கு எல்லாரும் ஒண்ணுதான்.

ஒரு முடிச்சை அவிழ்க்க வேண்டும்  என்று புட்டபர்த்திக்கு நேரில் சென்று தகவல்களைத் திரட்டிய அந்தத் திராவிடர் கழகப் படையினர் யார்? கவிஞர் கலி. பூங்குன்றன், செந்தில், உடுமலை வடிவேலு, பாஸ்கர் ஆகியோர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...