Saturday, June 25, 2011

திராவிடர் ஆட்சி என்பதால் எதிர்ப்பு!

தி.மு.க. ஆட்சி என்னதான் நல்லது செய்தாலும் திராவிடர் ஆட்சி என்பதால் எதிர்ப்பு! பேராசிரியர் க.அன்பழகன் படப்பிடிப்பு!

காஞ்சிபுரம், ஜூன் 24-காஞ்சிபுரம் நகர தி.மு.க. சார்பில் தி.மு.கழக உயர்நிலை செயல் திட்டக் குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை விளக்கி காஞ்சிபுரம் வணிகர் வீதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றுகையில், கலைஞர் அவர்கள் இலவசமாக தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கியபோது எதிர்த்தவர்கள், நீதிமன்றத்திற்குச் சென்றவர்கள் இப்போது ஜெயலலிதா அறிவித் துள்ள இலவச திட்டங்களை வரவேற்பது ஏன் என்று கேள்வி எழுப்பியதோடு. தி.மு.கழகத்தின் மூலம் தமிழினத்தின் பெருமையை காப்பாற்றுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், ஆரியத்துக்கு சவாலாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் கொள்கைகளை காப்பவராக இருப்பதால்தான் தலைவர் கலைஞர் அவர்களை எதிர்க்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

காஞ்சிபுரம் நகர தி.மு.க. சார்பில் தி.மு.கழக உயர்நிலை செயல்திட்டக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை விளக்கி காஞ்சிபுரம் வணிகர் வீதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:- தி.மு.க. வெறும் அரசியல்கட்சி அல்ல. நாம் பெரிய அரசியல் இயக்கம். புத்தர் தோற்றுவித்த இயக்கத்தைப் போல தமிழ் இயக்கம், இன உயர்வு இயக்கம், பகுத்தறிவு இயக்கம், அறிவியல் இயக்கம். பெரியார்-அண்ணா ஊட்டிய உணர்வுகளை உள்ளத்தில் தாங்கி இன்றைக்கு திராவிட முன் னேற்றக் கழகத்தை கலைஞர் வழி நடத்தி வருகிறார்.

ஒரு அரசியல் கட்சி என்பதிலே தி.மு.க. தோற்றிருக்கலாம். ஆனால், சமுதாய இயக்கம் என்ற முறையில் நாம் தோற்கவில்லை. யாரும் தோற்க முடியாது. தொடர்ந்து நாம் இந்த சமுதாயத்திற்காகப் போராடுவோம்.

இந்த சமுதாய உணர்வை நம்மிடத்திலே மறக்காமல் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான், இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதாவுக்கு நன்றிகூட சொல்ல விரும்புகிறேன். ஏதோ ஒரு காரணத்தால், எப்படியோ மக்களை மயக்கி வெற்றி பெற்ற காரணத்தால் நாங்கள் சமுதாயத்துக்குத் தொண்டு செய்யக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு அதிகமாகி இருக்கிறதே தவிர குறைந்து போய் விடவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததால், ஏதோ நாம் வீழ்ச்சியடைந்ததாக நீங்கள் நினைக்க வேண்டாம். ஜெயலலிதா இல்லையென்றால், இன்னொருவரை வைத்து எந்த கூட்டம் நம்மை வீழ்த்துவதிலே அக்கறையாக இருக்கிறதோ அது வெற்றி பெறும்.

ஜெயலலிதா இல்லையென்றால், ஒரு சுப்பு லட்சுமியை வைத்து வீழ்த்துவார்கள். ஒரு மகா லட்சுமியை வைத்து நம்மை வீழ்த்துவார்கள். அல்லது வேறுயாரையாவது வைத்து வீழ்த்து வார்கள். வீழ்த்துவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. இதில் லாபம் அடைவதாக ஜெயலலிதா நினைத் தார். ஜெயலலிதாவை வைத்து லாபம் அடைபவர் வேறு சில பேர். இன்றைக்கு நீங்கள் எண்ணிப் பார்த்தால்கூட ஜெயலலிதாவை விட அதிக சந்தோஷப்படுபவர் யார் தெரியுமா? சோ. மிகப் பெரிய வெற்றியைக் கொண்டாடுபவர் யார் தெரி யுமா? வைத்தியநாதன். மிகப் பெரிய வெற்றி யாருக்குத் தெரியுமா?

பத்திரிகையில் தினமும் நம்மை கேலி செய்து எழுதுகிறார்களே அவர் களுக்குக் கிடைத்த வெற்றி. கூலிக்கு எழுதினாலும் கூட, அவர்கள் உள்ளத்தில் இருக்கிற உணர்வு திராவிட இனம் தலை தூக்கி விடக்கூடாது என்பதுதான்.

கருணாநிதி என்றால் வெறும் கருணாநிதி என்றா நினைக்கிறார்கள். கருணாநிதி என்றால் 88 வயது ஆனவர் என்றா நினைக்கிறார்கள். இல்லை - ஒரு பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரர் - திராவிட இனத்துக்குச் சொந்தக்காரர். பெரியார் வழியை காப்பாற்றக் கூடியவர். அண்ணா வழியில் நிற்பவர். ஆரியத்துக்கு சவாலாக இருப்பவர். வைதீகத்தை வேரறுக்கக் கூடியவர். வடமொழி செல்வாக்குப் பெறுவதற்கு மாறாக தமிழ் மொழியின் பெருமையை நிலைநாட்டக் கூடியவர்.

அவரல்லவா தமிழகத்தில் ஆட்சியில் இருக் கிறார் என்று எண்ணுகிறபோது, அவர்கள் மனதிலே கருணா நிதியாகத் தெரியவில்லை. இராவணனாகத் தெரிகிறார் கருணாநிதி. அதனால் அவர்கள் எதிர்க்கிறார்கள்.

கலைஞர் இலவசம் கொடுத்தால் குற்றம்! ஜெயலலிதா கொடுத்தால் குற்றம் இல்லையா?

நாம் ஆட்சிக்கு வந்த அடுத்த 6 மாதத்தில் இருந்தே தொடங்கினார்கள். கலைஞருடைய ஆட்சி, கலைஞரு டைய சாதனைகளைப் பற்றி எதை எழுதினார்கள். ஒவ்வொரு ஏட்டிலும் இனாம் கொடுத்தே மக்களை வளைத்து விடு கிறார்.யார் பணத்தில் இருந்து இனாம்களைத் தருகிறார். இலவசங்களை யார் பணத்திலிருந்து தருகிறார்கள்? மக்கள் அரசாங்கத்துக்கு செலுத்திய வரிப்பணத்தில் இருந்துதானே தருகிறார்கள். மக்களின் வரிப்பணம் தானே இலவசமாகப் போகிறது. இலவசமாக பொருள்களைக் கொடுத் துக் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக ஆக்கு கிறார்கள். உழைப்பவர்களை உழைக்காதவர்களாக மாற்றலாமா? ஆக இலவசங்களைக் கொடுத்து மக்களை கெடுக்கிறார் கருணாநிதி என்று எழுதினார்கள்-கேலி செய்தார்கள். இலவசமா நாட்டைக் காக்கும் என்று கேட்டார்கள்.

இப்போது அம்மா இலவசம் கொடுக்கிறார். அந்த ஏடுகளில் எல்லாம் மகிழ்ச்சியாக எழுது கிறார்கள். பாராட்டுகிறார்கள். கொண்டாடு கிறார்கள். எல்லோருக்கும் கொடுப்பார்கள் என்கிறான். ஊர் ஊராகக் கொடுப்பார்கள் என் கிறான். அவங்க கொடுக்கவில்லை என்றால் நாங்கள் வாங்கிக் கொடுப்போம் என்கிறான்.

கலைஞர் இலவசமாகக் கொடுத்தால் அது குற்றம். ஆனால், அந்த அம்மா கொடுத்தால் அது குற்றம் இல்லையாம். நாங்க தொலைக்காட்சிப் பெட்டி 100க்கு 80 பேருக்கு கொடுத்தோம். இன்னும் 20 சதவிகிதம் பேருக்கு தர வேண்டும்.அந்த பாக்கி இருக்கிறவர்களுக்குக் கொடுக்காமல் நிறுத்துவது அந்த அம்மாவுக்கு மகிழ்ச்சி. அவர் கொடுத்தார். நான் நிறுத்தி விட்டேன் பார் என்று சொல்லுகிறார் அந்த அம்மா.

அடுத்தவர்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்துக் கெடுத்தாலே அதிலே ஒரு சந்தோஷம். நாம் வரவழைத்து வைத்திருந்த 20 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகளை கல்விக் கூடங்களுக்குத் தரப்போகிறேன். மருத்துவமனை களுக்குத் தரப் போகிறேன். அனாதை இல்லங் களுக்குத் தரப் போகிறேன் என்று அவர் சொல்லி யிருக்கிறார்.

நாம் ஒருவருக்குக் கொடுத்தால் அவர்கள் வேறு ஒருவருக்குக் கொடுப்பதாகச் சொல்கிறார். விருந்தில் 100 பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். சாப்பாடு போடுகிறோம். கடைசி 15 பேருக்கு இன்னும் பந்தியில் பரிமாறவில்லை. பந்தியில் உட்கார்ந் திருக்கிற 15 பேருக்கு பரிமாறப் போனால் தெருவில் இருக்கிற பிச்சைக்காரனுக்குக் கொடுப்பேன் என்கிறார்.பந்தியில் உட்கார்ந்திருக்கிற 15 பேர் ஏமாறுவது அந்தம்மாவுக்கு கவலையில்லை. அது பார்ப்பன பந்தி இல்லை. பார்ப்பன பந்தியாக இருந்தால் அவர் கவலைப் பட்டிருப்பார். இது நம்பவங்க பந்தி.

குடிசையில் இருக்கிறவன், வண்டி ஓட்டுபவன், உழவு மாடு வைத்திருப்பவன். அவன் எல்லாம் பெறக்கூடிய தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தி விட்டார்கள். நாம் இலவசம் கொடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றவர்கள்! இப்ப அந்தம்மா கிரைண்டர், மிக்சி, மின்சார விசிறி தரப் போகிறேன் என்று கூறியுள்ளார். இது இலவசம் இல்லையா? நாங்கள் தொலைக்காட்சி கொடுத்தபோது உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்குப் போட்டனர்.

அந்த வழக்கில் வாதாடியபோது, அரசாங்க பணத்தை இலவசத் திட்டங்களுக்குச் செல வழிக்கிறார். இது முறையல்ல. நிறுத்த வேண்டும் என்று கூறினார். அதற்கு உச்ச நீதிமன்றம் பொது மக்கள் நலனுக்கு நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ள அரசியலைப் புரிந்து கொள்ள ஜன நாயகத்தில் பங்கேற்க இப்படி தொலைக்காட்சிப் பெட்டி ஏழைகளுக்குக் கிடைக்குமானால், நல்லதே தவிர கெடுதல் அல்ல . பொது அறிவும் வளரும். எனவே தொலைக்காட்சிப் பெட்டி மக்களுக்குத் தரலாம். இதில் தவறில்லை என்று உச்சநீதிமன்றமே உத்தர விட்டது.

இந்த அம்மையார் அதை நிறுத்திவிட்டு கிரைண்டர்,மிக்சி,மின்விசிறி கொடுக்கப் போகிறேன் என்கிறார். அது கொடுக்கிறபோது மக்கள் வாங்கிக் கொள்ளட்டும். நாங்கள் யாரும் இலவசம் கொடுக்கக் கூடாது என்று கூறவில்லை.

இலவசம் கொடுக்கிறவர்கள் அக்ரஹாரத்துக்கு மட்டும் கொடுத்துவிட்டு நிறுத்தி விடாதீர்கள். எல்லாத் தெருவுக்கும் கொடுங்கள். உங்கள் சொந்தம் அந்த இடத்தோடு முடிந்துவிட்டது என்று சொல்லாதீர்கள். நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியுரிமை உண்டு. பாட்டாளிகளுக்கும், தாழ்த்தப் பட்டவர்களுக்கும் அந்த உரிமை உண்டு. அடித்தட்டு மக்களுக்கு அந்தப் பலன் கிடைக்க வேண்டும் என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

சமச்சீர் கல்வியை நிறைவேற்ற விடாமல் அக்கிரமம் புரியும் அ.தி.மு.க. அரசு!

சமச்சீர் கல்வி என்பது அவரவர் படிப்பதில் தர வேறுபாடு இருக்கிறது. வசதியான மாணவர்கள் படிக்கிற மெட்ரிக் பள்ளிகளில் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள முடிகிறது. கிராமத்து மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் அந்த அளவுக்கு வாய்ப்பு இல்லை.பாடப் புத்தகங்கள் வேறு வேறாக உள்ளது. அவர்களது பாடத்திட்டம் வேறு. இவர்களது பாடத் திட்டம் வேறு. அனைவருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என்று பொது வுடமைக் கட்சியினர் கூறினார்கள். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் வலியு றுத்திக் கூறினார்.

கலைஞர் அதைத் தானாகக் கொண்டு வந்து விடவில்லை. அதற்குரிய அறிஞர்களை நியமித்து 2 ஆண்டுகாலம் ஆலோசனை நடத்தி எப்படிப்பட்ட பாடங்களைச் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழு அமைத்து அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப் படையில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமுல்படுத்த ஆணையிட்டார்.ஆனால், செம் மொழி மாநாட்டில் கலைஞரால் உருவாக்கப்பட்ட ஒரு பாடல்; அந்தப் பாடல்களில் உள்ள வரிகள் எல்லாம் தமிழ் இலக்கியத்தில் உள்ள வரிகள்; கலைஞருடைய சொந்த எழுத்து அல்ல; சொந்தக் கருத்து அல்ல;அந்தப் பாடல் வருகிற காரணத்தால் அதை அழிக்க வேண்டும்; கடந்த ஆண்டு முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளில் மட்டும் சமச்சீர் கல்வியைக் கொண்டு வர முடிந்தது. செய்ய முடிந்தது. செய்தோம்.மற்ற வகுப்புகளுக்கு எல்லாம் பாட நூல்களைத் தயாரித்து கடந்த மூன்று நான்கு மாதங்களாக அச்சிட்டு மாணவர்களுக்கு விநி யோகிக்கத் தயாராக உள்ளது.

அந்த அம்மையார் கலைஞர் கருணாநிதிக் காகத்தான் சமச்சீர் சல்வித் திட்டத்தை எதிர்க்கிறார் என்று கூட நான் நினைக்கவில்லை. சமச்சீர் கல்வி என்பது அக்ரஹாரத்தில் உள்ளவர்களுக்குப் பிடிக் காது.

அவன் ஒரு காலத்தில் வேத பாடசாலை எனக்கு மட்டும்தான் என்றான். அவனுக்கு ஒரு வாய்ப்பு இருக்குமானால், அவன் கையில் சட்டம் இருக்கு மானால், கல்லூரிகளில் படிப்பதற்கு பிராமணர் களுக்கு மட்டுமே தகுதி என்று சொல்லுவான். இந்தக் காலத்திலே அப்படிச் சொல்லிவிட்டு எவனும் உயிரோடு தப்ப முடியாது.ஆனால், அவன் மனப்பான்மை; அவன் எழுதி வைத்த மனுதர்ம சாஸ்திரத்தில் இருக்கிறது. உழவுத் தொழிலை தவறியும் பிராமணன் செய்யக் கூடாது. சமஸ்கிருதக் கல்லூரிக்கு தவறியும் சூத்திரன் வரக்கூடாது. வேதம் பிராமணர்களுக்கு மட்டும்தான். உழைப்பு சூத்திரர்களுக்கு மட்டும்தான். ஆக, இப்படிப்பட்ட கேவலமான கருத்து - தெய்வத்தின் பெயரால் சொன்னார்கள். அதைவிட அக்கிரமம் ஒன்றும் கிடையாது. எந்த தெய்வமும் இவ்வளவு மோசடி செய்து பழகி இருக்காது. அக்ரஹாரத்திலா தெய்வங்கள் எல்லாம் பிறந்தது. ஆதி திராவிடர் காலனியில் கூட தெய்வங்கள் பிறந்திருக் கிறது. மாரியம்மாள், காளியம்மாள், முத்தாலம்மன் ஆகிய இந்த அம்மன்கள் எல்லாம் அக்ரஹாரத்தில் பிறக்கவில்லை.

இந்த தெய்வங்கள் எல்லாம் உழவன் தோட் டத்தில், கிராமங்களில் பிறந்தது. கடவுள் பெயரால், சாஸ்திரத் தின் பெயரால் சமூகத்தை கொள்ளைய டித்தார்கள். சுரண்டினார்கள். ஆதிக்கம் செலுத்தி னார்கள். அவர்களுடைய மனப்பான்மையே கரு ணாநிதியின் நல்லாட்சியை தாங்கிக் கொள்ள முடிய வில்லை. சாஸ்திரத்தில் ஒரு வரி இருக்கிறது. சூத் திரன் ஆட்சி நடத்துகிற நாட்டில் பிராமணன் குடியிருக்கக் கூடாது. என்று நான் சொல்லவில்லை. மனுஸ் மிருதியில் எழுதி இருக்கிறார்கள்.

ஏன் சொன்னான் என்றால் ஆண்டால் சத்ரியன் ஆள வேண்டும். இல்லை என்றால் பிராமணன் ஆள வேண்டும். சூத்திரன் அடிமை வேலைக்கு மட்டுமே உரியவன். ஆக அப்படிப்பட்ட தவறான போக்கு தமிழ்நாட்டில் ஊறிப்போன காரணத்தினால்தான் தி.மு.க. ஆட்சி மக்களுக்கு எவ்வளவுதான் நன்மை செய்தாலும்கூட அதை வீழ்த்த வேண்டும்; அந்த ஆட்சி தொடர்ந்து நீடித்து விடக்கூடாது. கரு ணாநிதி கை ஓங்கி விடக் கூடாது. கருணாநிதிக்குப் பின்னால் மறுபடியும் தமிழன் என்ற சொல்லி ஒரு ஆட்சி வரக்கூடாது என்று அப்படிப்பட்ட ஒரு மனப்பான்மை இந்த நாட்டில் ஊறிப் போயிருக் கிறது.

நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்வேன். எங்களுக்காக அல்ல; எனக்கோ, கலைஞருக்கோ இனி உங்கள் ஆதரவைப் பெற்று அன்பழகன் அமைச்சர் ஆக வேண்டும். கலைஞர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று அதற்காக நான் பேசவில்லை. தமிழனுடைய மானத்தை எவனிடமும் அடமானம் கொடுத்து விடாதீர்கள். நம்முடைய இன வர லாற்றை மறந்து விடாதீர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் நம்முடைய இனத்தின் பெரு மையை காப்பாற்றுங்கள் என்று கூறி விடை பெறுகிறேன் -இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...