Tuesday, May 3, 2011

தட்டிக் கேட்க ஆள் இல்லையா?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான பொதுக் குழுவின் அறிக்கைபற்றி சர்ச்சை இப்பொழுது நாட்டில் தலைதூக்கி நிற்கிறது. பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக இருக்கக்கூடியவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார்.

நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்று தேவையில்லை; பொதுக் கணக்குக் குழுதான் விசாரணை நடத்தும் அதிகாரம் படைத்ததாயிற்றே என்ற கருத்துக்கூட தொடக்கத்தில் எழுந்தது. அதனை ஏற்றுக் கொள்வது போலக்கூட முரளி மனோகர் ஜோஷி கருத்துத் தெரிவித்ததுண்டு.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்தான் தலைவராக இருப்பார்; பொதுக் கணக்குக் குழுவிற்கோ எதிர்க்கட்சிக்காரர் தலைவராக இருப்பார் என்று சொல்லப்பட்ட போதும், பா.ஜ.க. உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள்  நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைத்தே தீர வேண்டும் என்று வலியுறுத்தி, நாடாளுமன்றத்தையே நடக்கவிடாமல் நிலை குலையச் செய்து விட்டனர். அரசும் அதனை ஏற்றுக் கொண்டு நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றையும் அமைத்து விட்டது.

பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக இருக்கக் கூடிய பா.ஜ.க.வைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி ஆப்பினை அசைத்துவிட்ட  குரங்கின் நிலைக்கு ஆளாகி விட்டார்.

21 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவில் 11 பேர் - குழுத் தலைவரின் அறிக்கைக்கு எதிராகத் திரண்டு விட்டனர்.

ஆண்டு வருமானம் ஒன்பதாயிரம் பெறும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது பிறப்பிக்கப்பட்ட ஆணையை திராவிடர் கழகம் எதிர்த்து, ஒத்தக் கருத்துள்ள சமூகநீதியாளர்களை ஒன்று திரட்டி வீதிக்கு வந்து போராடியது - வெற்றியும் பெற்றது. 

அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி அம்பாசங்கர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அதில் குழுத் தலைவரின் அறிக்கைக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தன்னிச்சையாகக் குழுத் தலைவர் அறிக்கையினை அளித்தார்.

திராவிடர் கழகம் சென்னைப் பெரியார் திடலில் மாநாடு ஒன்றினைக் கூட்டி, குழுத் தலைவர் அம்பாசங்கரின் அறிக்கையினை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தியது; தீர்மானமும் நிறைவேற்றியது.

அதனை முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களும் ஏற்றுக் கொண்டு, அம்பா சங்கர் அளித்த அறிக்கையினை ஏற்க மறுத்து, புதிய ஆணை ஒன்றைப் பிறப்பித்தார்.  2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைப் பிரச்சினை தொடர்பான முரளி மனோகர் ஜோஷியின் அறிக்கைக்கும் அந்த நிலைதான் ஏற்படப் போகிறது; ஏற்படவும் வேண்டும்.

முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் சுட்டிக் காட்டியதுபோல ஜனநாயகத்தைப் பற்றி வாய் நீளம் காட்டும் பா.ஜ.க. - தன் நடவடிக்கையில் அதற்கு மதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாமா?

மாறுபடும் உறுப்பினர்களின் கருத்துகளை அறிக்கையின் பின் இணைப்பில் சேர்த்திருக்க வேண்டாமா? மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி பேசும் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்.

பொதுக் கூட்ட மேடையில் பேசுவதுபோல அரசியல் நெடியோடு அறிக்கையை வெளியிடுவது - இதுபோன்ற குழுக்களை பொருளற்றதாக ஆக்கிவிடத்தான் செய்யும்.

இதில் இன்னொன்றும் முக்கியமானது - பொதுக் கணக்குக் குழுவால் அதிகார பூர்வமாக அறிக்கை வெளியிடப்படாத நிலையில், அதன் அறிக்கை எப்படி ஊடகங்களில் வெளிவந்தது? அதற்கான பொறுப்பை ஏற்று, குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜோஷி விலகி இருக்க வேண்டாமா?

2ஜி தொடர்பான தலைமைத் தணிக்கைக் குழுவின் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதற்கு முன்பாக ஏடுகளில் கசிந்தது. இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டதுண்டா?

இத்தகைய உத்தமப் புத்திரர்கள் தான் ஊழலைப் பற்றிப் பேசுகிறார்கள்; சட்டத்தின் ஆட்சிபற்றி சத்தம் போட்டுக் குரல் கொடுக்கிறார்கள்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் செத்தவன் கையில் வெற்றிலை கொடுத்ததுபோல நடந்து கொள்வதுதான் இதற்கெல்லாம் காரணம்.

தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால், தம்பி (பா.ஜ.க.) சண்ட பிரசண்டம் செய்ய மாட்டானா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...