Monday, May 2, 2011

அய்.நா. அமைத்த நிபுணர் குழு என்ன சொல்கிறது? - 1


(இலங்கைப் போரின்போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றி அய்.நா. அமைத்த நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கை விவரம்)

இலங்கைப் போரின்போது இலங்கை ராணுவத்தினால்  இழைக்கப் பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை செய்வதற்காக, அய்க்கிய நாடுகள் அவை அமைத்த நிபுணர் குழு தனது விசாரணையை நடத்தி முடித்து 26-4-2011 அன்று தனது அறிக் கையை அய்.நா. பொதுச் செயலாள ரிடம் அளித்து உள்ளது.

இலங்கை ராணுவம் பெரும் அளவில் போர்க்குற்றங்கள் புரிந்துள்ள தாகவும், மனித உரிமை மீறல்களைச் செய்திருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவித்திருப்பது உலகெங்கும், குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும் பதற் றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி யுள்ளது. ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசினை அய்க்கிய நாடு கள் நீதிமன்றம் விசாரித்து தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கட்சி பாகுபாடு இன்றி அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப் புகளும்  போராட்டங்கள், ஆர்ப்பாட் டங்களை நடத்தி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

அய்.நா.வின் நிபுணர் குழு அளித் துள்ள அறிக்கையில் என்னதான் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை சுருக்கமாக இப்போது பார்க்கலாம். இந்தக் குழுவின் அறிக்கையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் கீழே மொழி மாற்றம் செய்யப்பட்டு அளிக்கப்படுகிறது.

குழுவின் பணி பற்றிய திட்டம்

குழுவிற்கு அளிக்கப்பட்ட பணியில் உண்மையைக் கண்டறிவது அல்லது புலன் விசாரணை செய்வது என்பது அடங்காது. பல மனித உரிமை ஒப்பந் தங்களில் சிறீலங்கா கையொப்ப மிட்டுள்ளது என்பதால், அனைத்துலக மனிதநேய, மனித உரிமை சட்ட மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து தண்டிக்கக் கடமைப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற  நீடித்த போரின் சோக விளைவுகளால் துன்பமடைந்தவர்களின் உரிமைகள் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இக் குழு ஆலோசனை தெரிவித்துள்ளது. பொதுவாகப் போர்களின் போது, பெண்கள், குழந்தைகள், முதியோர் பெரிதும் துன்பத்திற்கு உள்ளாவார்கள் என்ற நியதிக்கு இலங்கையும் விதிவிலக்காக இருக்கவில்லை.

உண்மையாக இருக்கும் என்று கருதப்படும் குற்றச்சாற்றுகள்


அனைத்துலக மனித நேய  மற்றும் அனைத்துலக மனித உரிமை சட்டங் கள் பெரும் அளவில் இலங்கை அரசி னால் மீறப்பட்டுள்ளன. அக்குற்றங் களில் சில போர்க் குற்றங்கள் மற்றும் மனிதஇனத்துக்கு எதிரான குற்றங் கள் என்று கருதப்படத் தக்கவை.

2008 செப்டம்பர் மற்றும் 2009 மே 19 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், வன்னிப் பகுதியில்  தனது ராணுவ நடவ டிக்கைகளை தீவிரப்படுத்திய இலங்கை அரசு பெரும் அளவில் பரந்த நிலப் பரப்பில்  விமானம் மற்றும் கவச வாகனங்களின் மூலம் குண்டுகள் போட்டதனால் போருக்குத் தொடர்பற்ற அப்பாவி பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் கொல் லப்பட்டனர்.  வன்னி மக்களை முழுவதுமாக அடக்கி ஒடுக்கும் வகையில் இந்த ராணுவ நடவடிக்கை அமைந்திருந்தது.

போர் நடக்கும் பகுதியின் அளவு நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டு வந்த நிலையில், 330,000 பொதுமக்கள் அப்பகுதியில் சிக்கிக்கொண்டு ராணுவத்தின் குண்டு வீச்சில் இருந்து தப்பிக்க இங்கும் அங்கும் ஓடிச் சென்றனர். அரசோ ஊடகங் களையும், மற்ற விமர்சகர்களையும் அச் சுறுத்தி எந்தச் செய்தியையும் அவர்கள் வெளியிட்டுவிடாதபடி பார்த்துக் கொண் டது. அரசின் வெள்ளை வேன்களில் மக்கள் கடத்திச் செல்லப்பட்டனர்;  அப்படிக் கடத்திச் செல்லப்பட்டவர்கள் காணா மலேயே போயினர். பெரும்பாலான பொது மக்களின் சாவு போரின் இறுதிக் கட்டத்தின் போது அரசு ராணுவத்தினால்  போடப்பட்ட குண்டுகளினால் நேர்ந்தவைதான்.

மருத்துவமனைகள்மீது குண்டு மழை பொழிந்த இலங்கை அரசு முன்னிலையில் இருந்த மருத்துவ மனைகள் மீதும் அரசு அடிக்கடி குண்டு மழை பொழிந்தது. வன்னியில் இருந்த அனைத்து மருத்துவமனைகள் மீதும் விமானம் மூலமும், கவசவாகனங்கள் மூலமும் குண்டுகள் வீசப்பட்டன. அவற் றில் சில மருத்துவமனைகள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகின. இத்த னைக்கும் அந்த இடத்தில் மருத்துவமனை உள்ளது என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும்.

பொதுமக்களுக்கு உணவு, மருந்துகள் கிடைக்காமல் அரசு பார்த்துக் கொண்டது

போர்ப் பகுதியில் இருந்த பொது மக்களுக்கான உணவு, மருந்து போன்ற மனிதநேய உதவிகள் கிடைக்காதபடி அரசு பார்த்துக் கொண்டது, ஏற்கெனவே மக்கள் பட்டு வந்த துன்பத்தைப் பெருக்குவதாக அமைந்தது. இதற்காக போர்ப் பகுதியில் இருக்கும் பொதுமக்களின் எண்ணிக் கையை அரசு வேண்டுமென்றே குறைத்துக் கூறியது. 2009 ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் பத்தாயிரக்கணக் கான மக்கள் உயிரிழந்தனர். இறுதிக்கட்டப் போரின் போது ஒருசில நாட்களில் நடந்த படுகொலையில் பொது மக்களில் பலர் அடையாளம் தெரியாதபடி இறந்து போயினர்.

சந்தேகப்பட்டவர்கள் எந்தவித விசாரணையுமின்றி கொல்லப்பட்டனர்

போர் முடிந்த பிறகு, போர்ப் பகுதியை விட்டு உயிர் பிழைத்து வந்த மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் இதர அடிப்படை வசதிகளை அளிக்காமல் அரசு மேலும் அவர்களைத் துன்புறுத்தியது. அவ்வாறு உயிர் பிழைத்து வந்த பொதுமக்களில் விடுதலைப் புலிகள் இருக்கிறார்களா என்று சோதனை செய்யும் பணி வெளிப் படையாகவோ, வெளியாட்கள் காணும் படியோ நடைபெறவில்லை.

சந்தேகத்தின் மீது பொதுமக்களிடமிருந்து பிரித்து வைக்கப் பட்டவர்கள் எந்த வித விசாரணை யுமின்றி கொல்லப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளா யினர். மற்றவர்கள் காணாமலேயே போய் விட்டனர். இந்த விவரங்களெல்லாம் பாடம்  கற்றுக்கொண்டு பரிகாரம் தேடுவதற்கான ஆணையத்தின் (Lessons Learnt and Reconciliation Commission)  முன் சாட்சியம் அளித்தபோது காணாமல் போனவர்களின் மனைவிகளும், உறவினர் களும் கூறியவையாகும்.

புலம் பெயர்ந்த மக்கள் அனைவரும் கம்பி வேலியிடப்பட்ட முகாம்களில் அடைக்கப்பட்டனர். இந்த முகாம்களில் கணக்கில்லாமல் மக்கள் கால்நடைகளைப் போல் அடைக்கப்பட்டதால் அவர்களின் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்தது. அடிப்படை தேவைகளான தண்ணீர், உணவு, மருந்து போதுமான அளவில் வழங்கப்படவில்லை. சமூக பொருளாதார உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. இதன் காரணமாக பலர் தேவையின்றி உயிரிழக்க நேர்ந்தது. இந்த முகாம்களில் இருந்த மக்களில் சிலர் விசா ரணை என்ற பெயரில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

லங்கை  அரசின் மனித உரிமை மீறல்களை விசாரணைக் குழு வகைப்படுத்திக் கூறியுள்ளது

மொத்தத்தில், இலங்கை அரசு கீழ்க் கண்ட அய்ந்து தலைப்புகளிலான உரிமை மீறல்களைச் செய்துள்ளது என்ற குற்றச்சாற்றுகள் உண்மையானவை என்று இந்தக் குழு கண்டுபிடித்துள்ளது.

1) பரவலாக குண்டுகள் வீசியதன் மூலம் போருக்கு தொடர்பற்ற பொது மக்களைக் கொன்றது.

2) மருத்துவமனைகள் மற்றும் மனித நேய அமைப்புகள் மீது குண்டு வீசியது.

3)  மனிதாபிமான உதவிகளைச் செய்ய மறுத்தது.

4) போரின்போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பி உயிர் பிழைத்தவர்கள் ஆகிய வர்களின் மனித உரிமைகள் மீறப்பட் டுள்ளன. இம்மக்களில் புலம் பெயர்ந்த பொது மக்களும், விடுதலைப் புலிகள் என்று சந்தேகப்பட்ட மக்களும் அடங்குவர்.

5) போர் நடக்கும் எல்லைக்கு வெளியே நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள். ஊடகத் தினர் மற்றும் அரசை விமர்சித்த மற்றவர் களும் இதில் அடங்குவர்.

மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்று நடவடிக்கை மேற்கொள்வது

அனைத்துலக மனிதநேய அல்லது மனித உரிமை சட்ட மீறல்களுக்குப் பொறுப்பேற்று நடவடிக்கை மேற்கொள்வது ஒருவர் தனது விருப்பத்தின்படி மேற் கொள்வது அல்லது மேற்கொள்ளாமல் இருக்கக் கூடியதல்ல. உள்நாட்டு, அனைத் துலக சட்டங்களின்படி அது ஒரு கடமை யாகும். இந்த சட்ட மீறல்கள் பற்றி தீவிர மான விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவற்றிற்குப் பொறுப்பானவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும், இலங்கை ராணுவ தளபதிகளோ அல்லது மூத்த அரசு அதிகாரிகளோ, யாராக இருந்தாலும் அவர்கள் மீது  அனைத்துலக சட்டங்கள் படி குற்றம் சுமத்தப்பட்டு குற்றவியல் வழக்கு தொடரப் படவேண்டும்.

உரிமை மீறல்களில் தனக்கு உள்ள பங்கு, பொறுப்பை அரசு ஒப்புக் கொள்ள வேண்டும்

இவ்வாறு உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்பது என்பதில் உண்மை யைக் கண்டறிவது, பாதிக்கப்பட்டவர் களுக்கு நியாயம் வழங்குவது, அவர்களுக்குப் பரிகாரம் செய்வது ஆகியவையும் அடங்கும்.

குடிமக்களின் உரிமைகள் மீறப்பட்டதில் தனக்கும் பங்கும் பொறுப்பும் உண்டு என்பதை அரசு ஒப்புக் கொள்வதும் இதில் அடங் கும். அய்க்கிய நாடுகள் அவையின் கொள்கையைக் கருத்தில் கொண்டு, பொறுப்பேற்று நடவடிக்கை எடுப்பது என்பது, அனைவருக்கும் பொருந்தும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண் டும் என்றோ அல்லது அயல்நாடுகளில் கடைபிடிப்பது போன்று இருக்க வேண்டும் என்றோ  இந்தக் குழு கூறவரவில்லை.

அதற்கு மாறாக,  தேசிய மதிப்பீடுகள், பெரும்பாலான குடிமக்கள் பங்கேற்பு, அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்கும்  நடைமுறை அமைய வேண்டியதன் தேவையை இக்குழு வலியுறுத்துகிறது.

என்றாலும், இந்த தேசிய நடை முறையும் அனைத்துலக தரத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டியது அவசி யம்.

எனவே  பொறுப்பேற்று நட வடிக்கை மேற்கொள்ளும் சிறிலங்கா வின் அரசின் நடைமுறை அனைத் துலக தரம் மற்றும் ஒப்பிடத் தக்க அனுபவங்கள் ஆகியவற்றின்படி மதிப்பிடப்படுவதுடன்,  இறுதிக்கட்டப் போரின் போது பாதிக்கப்பட்டவர்கள் உண்மையை அறிவதற்கும், நியா யத்தைப் பெறுவதற்கும், பரிகாரங்கள் பெறுவதற்கும் தங்களுக்கு உள்ள உரிமைகளை அறிந்துகொள்வதற்கு எந்த அளவுக்கு அனுமதிக்கப்படு கிறார்கள் என்பதை வைத்தும் மதிப்பிடப்படும்.

உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்று நிவாரணம் வழங்கும் இலங்கை அரசின் நடைமுறை தவறானது

முன்னிருந்த நிலையை ஏற் படுத்தும் வகையில் நீதி வழங்குவதை வலியுறுத்தி உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்று பாதிக்கப்பட்டவர் களுக்கான பரிகாரங்களை  வழங்கு வதில் ஒரு சமநிலையைக் கடைப்பிடிக்க விரும்புவதாக அரசு தெரிவித்துள்ளது. முன்னிருந்த நிலையை ஏற்படுத்தித் தரும் நீதி மற்றும் தண்டிக்கும் நீதி ஆகியவற்றிடையே ஒன்றைத் தேர்ந் தெடுப்பது என்று கூறுவது ஒரு தவறான பகுப்புக்கு வழிகோலிவிடும். இரண்டுமே தேவையானவைதான்.

உண்மை, நீதி மற்றும் நிவாரணம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களை மய்யமாகக் கொண்டு உண்மையாகப் பொறுப் பேற்பதில் தீவிரவாதத்திலிருந்து குடிமக்களைப் பாதுகாக்க முன்பிருந்த அரசுக் கொள்கைகள் தவறிவிட்டன என்ற குழப்பமான அரசியல் பொறுப்புக் கண்ணோட்டத்தை  அளிப்பதால்,  முன்னிருந்த நிலையிலான நீதி வழங் குவது என்ற அரசின் கருத்து தவ றானது என்று இக்குழு கருதுகிறது.
(தொடரும்)
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...