Sunday, April 10, 2011

இலவசங்கள்: சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் சமூக நீதியின் ஒரு நீட்சியாகும்


மாநிலத்தின் பொருளாதார நிலையிலும், சமூக நிலையிலும் ஏற்பட்டு வரும் மாபெரும் மாற்றங்கள் என்ற காட்சியிலிருந்து தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்படும் இலவசங்களைப் பிரித்துக் காண முடியாது.

ஏழை மக்கள் விவசாயத் தொழிலில் இருந்து மாறுவதற்கு அரசின் உதவி 
அவசியம் தேவை

மாநிலத்தில் விவசாயத் துறை கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், மற்ற இரு துறைகளான தொழில் துறை, அரசு மற்றும் தனியார் பணித் துறை ஆகியவை வேகமான வளர்ச்சியைப் பெற்று வருகின்றன. சோர்வளிக்கும் விவசாயத் தொழிலில் இருந்து, நவீன மயமான, சவுகரியமான விவசாயமல்லாத மற்ற துறைகளுக்கு மாறிக் கொள்வதற்கே மக்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். ஆனால் இவ்வாறு மாறுவது பொதுவாகவும், குறிப்பாக ஏழைகளுக்கும், எளிதில் பாதிக்கப்படுபவர்களுக்கும், துன்பம் நிறைந்ததாகவும், அதிக காலம் எடுத்துக் கொள்வதாகவும் அமையும். எனவே விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலில் இருந்து நவீன தொழில் மற்றும் அரசு, தனியார் பணித் துறைக்கு மாறுவதில் உள்ள துன்பத்தைக் குறைக்கும் வகையில் இச்சூழ்நிலைக்கு உதவி செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பிக் கொண்டிருப்பதில் இருந்து எளிதாகவும், சுதந்திரமாகவும் வெளியேறுவதற்குத் தேவையான நிதி உதவிகளை அளிக்காவிட்டால், அரசு தனது கடமையில் இருந்து தவறிவிட்டதாகக் கூடக் கூறலாம். தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறைக் கொள்கை மிகச் சரியாக இத்திசையிலேயே பயணம் செய்கிறது.

நாட்டின் வளர்ச்சிப் பயன்கள் ஏழைகள் உள்ளிட்ட அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் சமூக நீதிக் கோட்பாடு

பழைய சென்னை ராஜதானியில் 1920 இல் இருந்த நீதிக்கட்சி  ஆட்சியின் முக்கியக் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்த சமூக நீதிதான் தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கொள்கையாகவும் அமைந்திருக்கிறது. அரசுப் பணிகளிலும், கல்வி நிலைய மாணவர் சேர்க்கையிலும் இட ஒதுக்கீடு என்பது முதல்படி. இப் போராட்டம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, 69 விழுக்காடு இடஒதுக்கீடு எட்டப்பட்டபோது உச்ச நிலையை அடைந்தது. அதன் பின்பு அரசின் கவனம் மற்ற துறைகளின் பக்கம் திரும்பியது.

இது எவ்வாறு இயன்றது என்றால், சமூக நீதிக் கொள்கைக்கு ஓர் அகன்ற நடைமுறை சாத்தியமான விளக்கம் அளிக்கப்பட்டதால்தான் என்று கூறலாம். நாட்டு முன்னேற்றத்தின் பயன்களைப் பெறுவதில் இதுவரை சேர்க்கப்படாத, பயன்பெறாத, சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களையும் இணைத்துக் கொள்வது என்பதுதான் சமூக நீதிக் கொள்கையின் பரந்த விளக்கமாகும். அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதைப் போன்றதுதான் இதுவும். அனைத்து மக்களையும் இவ்வாறு சேர்த்துக் கொள்ளாமல், தொடர்ந்து பிரித்து வைத்துப் பயன்களை அவர்களுக்கு அளிக்க மறுப்பதால் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியே தடம் புரண்டு சிதைந்துவிடும் என்ற அச்சத்தால் அனைவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கருதுவது இக் கொள்கை.
மற்றொரு புறம், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் நன்றாக இருக்கத் தேவையானவற்றை அளிப்பதுதான் ஒழுக்க நெறியிலான ஒரு நியாயமான கொள்கையாகும். இந்தப் புரிதலின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளதுதான் சமூக நீதிக் கொள்கை என்பது.

உணவு பற்றிய கவலையிலிருந்து  ஏழைப் பெண்கள் விடுதலை பெற்றுள்ளனர்

அரிசிக்கு அதிகப்படியான மானியம் அளித்தது, உணவு பற்றிய கவலையில் இருந்து ஏழை மக்களையும், தாழ்ந்த நிலையில் உள்ள மக்களையும் விடுவித்து விட்டது. முன்பு நிலவி வந்த பல்வேறுபட்ட பொருள்களின் உற்பத்தி நடைமுறைகளுக்கிடையே இருந்த தொடர்புகளின் அடித் தளமாக விளங்கியது உணவு பற்றிய கவலையே. கிராமப்புற ஏழை மக்கள் உணவு பற்றிய கவலையில் இருந்து மட்டுமன்றி,  இதுவரை இருந்த நிலச்சுவான்தார்களின் பிடிகளில் இருந்தும் விடுதலை பெற்றவர்களாக விளங்கு கிறார்கள். இத்தகைய அதிக அளவில் மானியம் அளிக்கும் நடைமுறை, அரசையே சார்ந்து இருப்பவர் களாக மக்களை ஆக்கிவிடும் என்ற ஒரு வாதமும் முன் வைக்கப்படுகிறது. என்றாலும், அத்தகைய ஏழை கிராம மக்கள், உள்ளூர் நிலச் சுவான்தாரர்களைச் சார்ந்து இருப்பதைவிட அரசைச் சார்ந்து இருப்பது எவ்வளவோ மேலானது.

பெண்களின் வீட்டு வேலை சுமை குறைக்கப்பட்டதால், ஆக்கபூர்வப் பணிகளில் கவனம் செலுத்துகின்றனர்

அன்றாடம் உணவைத் தேடுவது என்ற பெரும் முயற்சியின் தேவை மிகப் பெரிய அளவில் குறைக்கப் பட்டு விட்டதால், குடும்பப் பெண்கள் கூடுதலான சுதந்திரத்தை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களது வீட்டு வேலைச் சுமை மிக்சி, கிரைண்டர் போன்ற பொருள்களின் உதவியால் பெரும் அளவில் குறையவே செய்யும். தொலைக்காட்சிப் பெட்டிகளும் இந்த வகையில் உதவி நிறைந்ததாகவே இருக்கும். இவற்றையெல்லாம் அளிப்பது மக்களைச் சோம் பேறிகளாக ஆக்கிவிடும் என்று கூறுவது முற்றிலும் ஜனநாயக விரோதமானதும், மனிதத் தன்மையே அற்றதுமாகும். பெண்களின் முன்னேற்றத்திற்கும், ஓர் அகன்ற சமூக நீதிச் செயல்பாட்டுக்கும் இது மற்றொரு முக்கியமான நடவடிக்கை என்றே இதனைக் கூறலாம். ஏற்கெனவே பெண்கள் தங்களுக்கான சுய உதவிக் குழுக்களை அமைத்துக் கொள்ளத் தொடங்கி, வங்கிகள் மூலம் நிதி உதவிகளைப் பெறத் தொடங்கிவிட்டனர். வீட்டு வேலைச் சுமைகள் குறைந்துவிட்டபடியால், பெண்கள் கூடுதலான நேரத்தை ஆக்கபூர்வமான பணிகளில் இனி செலவிட முடியும்.

வசதி படைத்தவர்களுக்கும், வசதி அற்றவர்களுக்கும் இடையே இருந்த இடைவெளி குறைக்கப்பட்டது

வசதியுள்ளவர்களுக்கும், வசதியற்றவர்களுக்கும் இடையே இருந்த பெரும் இடைவெளி முதன் முதலாக இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளால் சிறிது குறைக்கப்பட்டது. ஏழை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது இந்த இடைவெளியை மேலும் பெருமளவுக்குக் குறைக்கும். கைப்பேசிகளின் விலை முதலில் சந்தைகளின் சக்திகளால் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அவற்றின் விலை மிகமிகக் குறைந்து வரத் தொடங்கி விட்ட நிலையில், கைபேசிகளை அளிப்பது பற்றி அரசு கவலைப்படத் தேவையில்லை; இப்போது மக்களே அவற்றை வாங்கிக் கொள்ள இயன்றவர்களாக உள்ளனர்.

இலவசங்களுக்காக செய்யப்படும் செலவும் நீண்ட காலப் பயன் தரும் ஆக்கபூர்வமான முதலீடே!

இலவசங்களுக்காகச் செலவிடுவது - உற்பத்திப் பெருக்கம் ஏதுமற்ற முதலீடு என்ற  வாதம்  தவறான, ஏமாற்றும் நோக்கம் கொண்ட வாதமாகும். உண்மை யிலேயே அது மனித ஆற்றல் மீது செய்யப்படும் ஒரு முதலீடே ஆகும். அது உடனடியாகப் பயன்படுபவர் களுக்கு மட்டுமன்றி, தரமான மனித ஆற்றல் என்ற முறையில் நீண்ட கால நோக்கில் முதலாளித்துவப் பிரிவினருக்கும் பயன் தருவதாகும்.

மாநில அரசு தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளது பாராட்டத்தக்கது.

இடைவெளியைக் குறைக்கும் நோக்கம் கொண்ட இத்தகைய அனைத்து முயற்சிகளின் ஒட்டுமொத்த பாதிப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதுடன், இந்த தொழில் மாற்ற நடைமுறையில் ஏழை மக்களும் கூட அதிக அளவு துன்பப்பட மாட்டார்கள் என்று கூறலாம்.  ஜனநாயக முறையில் ஒரு நியாயமான ஆட்சியில் என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ, அவற்றைச் செய்து முடித்துள்ள மாநில அரசு தனது கடமையில் இருந்து தவறவில்லை என்று கூறுவதே நியாயமான தாக இருக்கும்.

ஏழுகோடி மக்களுக்கு செய்யப்படும் செலவு ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகையை விடக் குறைவானதுதான்
இலவசங்கள் என்பது வசதி படைத்தவர்களின் மொழியாகும்.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் தொகைகளை வரிச் சலுகையாக வழங்கப்படுவதில் இந்த வசதி படைத்தவர்களுக்கு அக்கறையோ, கவலையோ, சங்கடமோ ஏதுமில்லை. ஏழு கோடி மக்களுக்கு இலவசங்களுக்காக செலவிடப்படும் இத் தொகை, கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளில் பத்தில் ஒரு பங்கு கூட இருக்காது. அப்படி இருக்கும்போது ஏன் இந்தக் கூச்சலும், கூப்பாடும்?

(கட்டுரை ஆசிரியர் சென்னையைச் சேர்ந்த முன்னேற்றப் பொருளியல் வல்லுநர் ஆவார்.           நன்றி: டெக்கான் கிரானிக்கிள் 9-4-2011            தமிழில்: த.க. பாலகிருட்டிணன்)
ஜே. ஜெயரஞ்சன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...