திருச்சுழி, ஏப்.3- தி.மு.க. வேட்பாளர்கள் உசிலம் பட்டி தொகுதி-எஸ்.ஓ.இராமசாமி, திருமங்கலம் தொகுதி மு.மணிமாறன், திருச்சுழி தொகுதி-அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை ஆதரித்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நேற்றைய (2.4.2011) பிரச்சாரக்கூட்டங்களில் ஆற்றிய உரை வருமாறு:
நம் சந்ததியினர் பிள்ளைகள் எல்லாம் ஆடு, மாடுகள் மேய்க்க வேண்டும் என்று சொல்பவர் ஜெயலலிதா; நம் இனத்துப் பிள்ளைகள் எல்லாம் படித்து பட்டதாரிகளாக, பகுத்தறிவுச் சிந்தனை உள்ளவர்களாக ஆக வேண்டும் என்று நினைப்பவர் முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்.
அனைவர்க்கும் அனைத்தும்
நம் சமுதாயத்திற்காக பாடுபடவேண்டுமானால் எந்த அணியை ஆதரிக்க வேண்டும்-ஏன்? திராவிட முன்னேற்றக் கழக அணியை ஆதரிக்க வேண்டும் என்று தெளிவாக மக்கள் முடிவு எடுத்து இருக் கிறார்கள். தலைவர்கள் காமராசர் போன்றவர்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக நல்வாழ்வு உண்டாக்குவதற்காக, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர்கள் - சட்டம் செய்தார்கள்.
மாற்றியது-தி.மு.க ஆட்சி!
இதுதான் உன் தலையெழுத்து, இதற்கு மேல் ஆசைப்படாதே, நீ படிக்க வேண்டும் என்று நினைக்காதே, நீ பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டும் என்று எண்ணாதே, நீ உத்தியோகத்திற்குப் போக வேண்டும் என்று நினைக்காதே, என்று சொல்லுவது ஆதிக்கவாதி களின் உயர் ஜாதிக் காரர்களின் கருத்து. அதை மாற்றிய ஆட்சிதான் தி.மு.க ஆட்சி. இவர்களைப் பற்றி கவலைப் பட்டவர்கள் வேறு யாராவது உண்டா? கலைஞர் ஆட்சிபோன்று வேறு எந்த நாட்டிலாவது சமதர்ம ஆட்சி உண்டா? ஆத்தா, காலரா எல்லாம்
அன்றைக்கு அம்மைநோய் வந்தால் அடி யோடு போய்விடுவார்கள். காலரா வந்தால் காணாமல் போய்விடுவார்கள். ஆத்தா வந்தாள், முத்துப் போட்டுவிட்டாள் என்று சொல்லு வார்கள்.
இன்றைக்கு முனிசிபாலிட்டிக்குள்ளேயே, பஞ்சாயத்து போர்டுக்குள்ளேயே விடுவதில்லை. ஹெல்த் ஆபிசர்கள் (ழநயடவா டிககஉநச) கண்காணித்து வருகிறார்கள். இன்றைக்கு அந்த அளவிற்கு மருத்துவம் வளர்ந்து இருக்கிறது.
பட்டினிச்சாவு உண்டா?
இன்றைக்கு தமிழ்நாட்டில் எங்கேயாவது பட்டினிச்சாவு உண்டா? அன்றைக்கு அந்த அம்மா ஆட்சியிலே மன்னார்குடியிலே பட்டினிச் சாவு இருந்தது. இன்றைக்கு இருக்கிறதா?
பப்ளிக் தேர்வு கமிஷனில், அலுவலகத்தில் அந்த அம்மா ஆட்சியில் வேலை இல்லாமல் பலர் இருந்தார்கள்; பேன் குத்திக்கொண்டுதான் இருந் தார்கள். 5 ஆண்டுகளுக்கு வேலை கிடையாது. மின்சாரத்திற்காக தொலைநோக்கோடு ஏதாவது திட்டம் செய்து இருந்தாரா? இல்லையே!
மின்வெட்டு, மின்வெட்டு என்று இன்றைக்கு இவர்கள் பேசலாமா? வெளிநாட்டுத் தொழிற் சாலைகள் அதிகரித்ததால் மின்சாரம் அதிகரித்து இருக்கிறது. மின்சாரம் உற்பத்தி செய்யாமல் மின்வெட்டு, மின்வெட்டு என்றால் யாரை ஏமாற்ற அந்த அம்மையார் நினைக்கிறார்?
ஒரு கதை சொல்லுவார்கள்...
ஒருவன் தன் தந்தையையும், தாயையும் கொலை செய்துவிட்டான். இரண்டு பேரையும் கொலை செய்துவிட்டு அவன் நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிபதி அவர்களிடம் சொல்கிறான், அய்யா நீதிபதி அவர்களே, நான் ஓர் அனாதை, எனக்கு தாய், தந்தை இல்லை, என்னைத் தூக்கில் போட்டுவிடாதீர்கள் என்று சொல்லுவதைப் போல், இந்த அம்மையார் மின்வெட்டு, மின் வெட்டு என்று சொல்லுகிறார். அந்த மாதிரி மின்வெட்டு திட்டம் உருவாக்கியதே இந்த அம்மையார்தானே!
ஆகவேதான் தி.மு.க கூட்டணிக்கு வாக்க ளியுங்கள் என்று வேண்டுகிறோம்.
தி.மு.க சொன்னதைச் செய்யும் கட்சி
சொன்னதைச் செய்யும் முறை இருக்கிறதே, அதை அரசியல்வாதிகள் கலைஞர் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். கலைஞர் அவர்கள் கல்வெட்டு போன்று அதைச் செதுக்கி இருக்கிறார்கள்.
இவை எல்லாம் முடியுமா என்பவர்கள் கலைஞரிடம் பாடம் கற்றுக்கொள்ளலாம். தி.மு.க ஆட்சி என்றால் சொன்னதைச் செய்பவர் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. அதனால்தான் கலைஞர் அவர்கள் பல சமுதாய மறுமலர்ச்சியைக் காணுகிறார்.
சொன்னதைச் செய்யாதவர் ஜெயலலிதா
சேடப்பட்டி முத்தையா அவர்கள் சொன்னது போல், சொன்னதைச் செய்யாதவர் உண்டு, மறுத்துக் கூறுபவர் உண்டு என்றால் அதுதான் அந்த அம்மையார் ஆட்சி-அவர் தான் ஜெய லலிதா அம்மையார்.
கலைஞருக்கு ஒரு வரலாறு இருக்கின்ற மாதிரி, அந்த அம்மாவிற்கும் ஒரு வரலாறு உண்டு. தான் சொன்னதை, இன்னொரு தேர்தல் அறிக்கையில் மறுக்கக்கூடியவர் ஜெயலலிதா.
அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு துரோகம் செய்தவர்
சொன்னதற்கு மாறாக, அண்ணாவுக்குத் துரோகம், எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் துரோகம், தலைவர்களுக்குத் துரோகம் செய்தவர் இந்த அம்மையார். பெரியாரையும், மற்றவரையும் விடுங்கள், ஏனென்றால் அவர்கள் பற்றி அந்த அம்மாவுக்குத் தெரியாது. ஆகவே, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
அண்ணாவைப் பற்றியும் தெரியாது. கட்சியின் பெயரில்தான் அண்ணா இருக்கிறார், கொடியில் தான் அண்ணா இருக்கிறாரே தவிர, அ.தி.மு.க கட்சியில் அண்ணா அவர்களின் கொள்கை இல்லை. அந்த அம்மா கடைசியாக, முடிக்கும்போது அண்ணா நாமம் வாழ்க என்கிறார். அண்ணாவுக்கு போட்ட நாமம் வாழ்க என்று அர்த்தம். ஒவ்வொரு துறையிலும் பல சாதனைகளைச் செய்தவர் கலைஞர்.
பார்ப்பன இனமாயிற்றே!
பார்ப்பன சங்கத்தினர் ஜெயலலிதாவை ஆதரிப்பதாக அறிக்கை விடுத்து இருக்கிறார்கள். இனம் இனத்தோடு சேரும் என்பது இதிலிருந்தே தெரிகிறது. எனவே, அவர்கள் திருவாரூரை ஆதரிக்க மாட்டார்கள், சீறீரங்கத்தைதான் ஆதரிப்பார்கள் நாம்தான் திருவாரூரை ஆதரிக்க வேண்டும், வெற்றி பெறச் செய்ய வேண்டும். எனவே இப்போது நடப்பது இரண்டு தொகுதிகளுக்கான போராட்டம் அல்ல, இரண்டு வேட்பாளர்களுக்கான போராட்டம் அல்ல. இரண்டு இனத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம். இரண்டு கலாச்சாரத்திற்கும் இடையே போராட்டம்.
வேலை வாய்ப்பை தர மறுத்த ஜெயலலிதா
இந்த ஆட்சியில்தான் பல தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன. அந்த அம்மா ஆட்சியில் வரவில்லை. ஏனென்றால் ஆட்சி நடத்துகிறவர் களிடம் நல்லுறவு இல்லை, நல்லிணக்கம் இல்லை. மத்திய அரசை மதிக்காதவர்.
சென்னை, மதுரை மற்ற பகுதிகளை இன்றைக்கு சுற்றிப் பாருங்கள். ஏகப்பட்டதொழிற்சாலைகள் இருக்கின்றன. இளைஞர்கள் படித்துவிட்டு, பெற் றோர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்பதால், இளைஞர்களுக்குப் பண உதவித்திட்டம். அந்த அம்மா ஆட்சியில், வேலை நியமனத்தடை உத்தரவுகள் போட்டாரே. இல்லை என்று எவராவது மறுத்துச் சொல்லுங்கள் பார்ப்போம்.
அம்மா ஆட்சியின் சாதனை-வேதனை
பெண்ணாக இருந்தும்கூட பெண்களுக்கு உள்ள திட்டங்களைத் தடுத்து நிறுத்தி, வரக்கூடிய திட்டம் எதையும் செய்யாமல் இருந்தார்களே அதுதான் இந்த அம்மா ஆட்சியின் சாதனை-வேதனை!
வைகோவை பொடாவில் தள்ளியவர் ஜெயலலிதா
இங்கே நம்முடைய நாகராசன் அவர்கள் பொடாவில் ஏன் கைது செய்யப்பட வேண்டும்! தமிழனின் உரிமையைக் கேட்டதற்கு பொடா சட்டமா? பொடாவில் சகோதர் வைகோ எவ்வளவு சங்கடத்தை அனுபவித்து இருப்பார்?
கலைஞரின் மரியாதையைப் பாரீர்!
வைகோ, பொடாவில் சிறையில் இருந்தபோது, வேகாத வெயிலிலும் நீதிமன்றம் சென்று, அவரை ஜாமீனில் எடுக்கத் துடித்தவர் கலைஞர் அல்லவா?
எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் அண்ணன் தம்பிகள் நாங்கள். திராவிடர் இயக்கம் என்றால் சாதாரணமா? இதற்கு ஒரு வரலாறு இல்லையா?
வைகோ அவர்கள் எவ்வளவு பெரிய தியாகம் செய்து இருக்கிறார். திருமங்கலம் வரும்போதே நினைத்துக்கொண்டு வந்தேன். திருமங்கலத்தில் இடைத்தேர்தல் வந்தபோது, அந்த அம்மா சகோதரர் வைகோவைப் பார்த்து, விட்டுக் கொடுங்கள் என்று கேட்டார்.
ஏன் தெரியுமா? இதிலே வெற்றி பெற்றால், ஆட்சிக்கு விரோதமாக மக்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக, வெற்றி வாகை தானாக வந்துவிடும் என்று நினைத்தார் அந்த அம்மையார்.
பதினொன்று இடைத்தேர்தல்களில், ஒரு தேர்தலிலாவது வெற்றி பெற முடிந்ததா? வைகோ அவர்கள் இன்றைக்கு தேர்தலைப் புறக் கணிக்கிறேன் என்று முடிவெடுத்து இருக்கிறார். நான்கூட வேண்டுகோள் விடுத்தேன்.
வைகோவின் பெருந்தன்மை
கூட்டணி தர்மம் என்றால், தார்மீக அடிப் படையில் எந்தக் கட்சி எம்.எல்.ஏ இறந்தாரோ, அந்தக் கட்சி எம்.எல்.ஏதான் இடம்பெற வேண்டும். காங்கிரஸ் எம்.எல்.ஏ., இறந்தால் காங்கிரசுதான் எம்.எல்.ஏ; அதே மாதிரி தி.மு.க., எம்.எல்.ஏ., இறந்தால் தி.மு.க எம்.எல்.ஏ., ஆனாலும் விட்டு கொடுத்து பண்பாட்டைக் காப்பாற்றினார்.
வைகோவின் பெருந்தன்மையால் திருமங்கலம் தொகுதியை விட்டுக் கொடுத்தார். உங்களுக்குத் இன்றைக்கு இடம் இல்லை என்று அவமானப் படுத்தி அனுப்பி விட்டாரே, அந்த அம்மையார்.
இதிலிருந்து அந்த அம்மையாரை நீங்கள் தெரிந்து, புரிந்து அடையாளம் காண வேண் டாமா? தனிமைப்படுத்திக் காட்ட வேண்டாமா? சிந்தியுங்கள், வாக்காளப் பெருமக்களே! வைகோ இப்பொழுது வருத்தப்படுகிறாரே, இவர் மேலேதான் தவறு. அவர் மேல் இல்லையே!
சென்னாரெட்டி பட்டபாடு
வைகோ போல, சென்னாரெட்டி இந்த அம்மாவிடம் பட்டபாடு-இவர்களைப் போல நிறைய பேரை சொல்லலாம்.
இன்றைக்கு இந்த அம்மா ஊழலைப்பற்றி பேசுகிறாரே-14 வருடமாக ஊழல் வழக்கு இருக்கிறதே அதைப் பற்றி அவரின் கருத்து என்ன?
மதவாதத்தை ஒழித்து மத்தியில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணியின் சார்பில் மதுரையில் சேது சமுத்திரத் திட்ட துவக்க விழாவை நடத்தினோம்.
அம்மா ஆட்சி வரக்கூடாது
தான் சொன்னதைத் தானே மறுத்தவர்கள் அரசியலில் இந்த அம்மாவைப் போல வேறு யாரும் இல்லை. எங்குப் பார்த்ததாலும் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், இதுதான் வளர்ச்சி; சமுதாய மறுமலர்ச்சி-இந்த ஆட்சியில். ஏமாறாதே, ஏமாறாதே என்று உங்களுக்கு எச்சரிக்கை விட்டு, அம்மாவின் ஆட்சி வரக் கூடாது. என்பதற்காகத்தான் நாங்கள்-கருப்புச் சட்டைக்காரர்கள் சொல்லுகிறோம்.
தாய்மார்கள் ஏராளமாக இருக்கிறீர்கள். எல்லா இடங்களிலும் மகளிர் 33 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிக்கொண்டு இருக் கிறார்கள். ஆனால், காரியாபட்டியில் வந்து உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் 50 சதவிகிதம் தாண்டி இடஒதுக்கீட்டை எடுத்துக்கொண்டு இருப்பதைக் கண்டு பெரியார் எவ்வளவு வென்றிருக்கிறார்; அண்ணா, கலைஞர் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள்; இந்த ஆட்சி சமுதாயப் புரட்சிக்கு எவ்வளவு வித்திட்டு இருக்கிறது என்பதை பெருமையுடன் எண்ணிப்பார்க்கிறோம்.
நம்பிக்கைக்குரிய தம்பி தங்கம் தென்னரசு
முதல்வர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் நம்பிக்கைக்குரிய தம்பியாக தங்கம் தென்னரசு திகழ்கிறார். அவரை உங்கள் தொகுதி வேட் பாளராகப் பெற்றிருப்பதற்கு நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
கலைஞர் ஆட்சியை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கிராம மக்களும் பாராட்டி, நன்றி செலுத்துகிறீர்கள். எனவே தங்கம் தென்னரசுவை வேட்பாளராகப் பெற்றிருப்பது பெருமைக்குரிய ஒன்று . அவர் சாதனையின் சரித்திரக் குறியீடு.
பெரியார், அண்ணா விரும்பியது
நம்முடைய அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பள்ளிக் கல்வித்துறையில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு அதிகமாக மாணவர்கள் செல்கிறார்கள். கல்வித் துறையில் ஏற்பட்ட புரட்சியைத்தான் பெரியார் மிகவும் விரும்புவார். காமராசர், அண்ணா, கலைஞர் என்று வரிசையாகப் பெருகி இன்றைக்கு ஒரு லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுது கிறார்கள் நம்மவர்கள் என்றதும், பெரியார், நம்ப முடியவில்லையப்பா என்று என்னிடம் சொன்னார். இன்று 9 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள் என்றால், அவரின் சாதனை அது!
234 தொகுதிகளிலும் கலைஞர்தான் வேட்பாளர்
மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தொடங்கி மாபெரும்
புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார் தமிழ்நாட்டில். எனவே, தங்கம் தென்னரசு திருச்சுழி அல்ல, தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியில் நின்றாலும் வெல்வார். 234 தொகுதிகளிலும் கலைஞரின் சாதனை வேட் பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
பெண்கள் 80 சதவிகிதம் வரை கல்வி அறிவில் சிறந்து விளங்குகிறார்கள். வந்திருக்கிறார்கள். இந்த அணி கலைஞர் தலைமையில் உள்ள அணி. இந்த நாட்டிலே 100 சதவிகிதமாக கல்விப்புரட்சி ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறோம்.
அந்த அம்மா குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து ஆடு, மாடு கொடுத்து, கோல் எடுத்துக்கொண்டு செல்லுவதற்காக நிற்கிறார். கலைஞரோ படிக்கச் சொல்கிறார். தமிழர்களுக்கு யார் தேவை?
ஒரு காலத்தில் எல்லாம்பார்ப்பனர்கள்
கல்விக்கூடங்களில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருந்ததை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் ஆக்கியும், குடும்பத்தில் ஆண்-பெண் இருவரும் ஆசிரியராகப் பணிபுரியவும் தங்கம் தென்னரசு வித்திட்டுருக்கிறார். ஒரு இடத்திலும் ஊழல் கிடையாது.
ஒரு காலத்தில் ஆசிரியர் என்றால், பார்ப்ப னர்கள்தான்; தந்தி வந்தால்கூட மூன்று மைலுக்கு அப் பால் இருந்து வருவார்கள். படிக்க நம்மவர்களுக்குத் தெரியாது.
படிக்காத, படிக்கத் தெரியாத காரணத்தால் கருமாதி பத்திரிகையில் கருப்புமை வைத்து இருப்பார்கள்-கருப்பைப் பார்த்தவுடன் சாவு விழுந்துவிட்டது என்று நினைப்பதற்கு. இன்றைக்கு அப்படியா? என்றார் தமிழர் தலைவர்.
No comments:
Post a Comment