Monday, January 3, 2011

பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள்

24, 25-1938 திறனாய்வு -முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

இன்றைக்கு இருக்கிற இளைய தலைமுறை பெற்றிருக்கிற கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, கல்வி உயர்நிலை, சமுதாய அந்தஸ்து எல்லாம் பெரியார் - பெரியாரின் இயக்கம் போட்ட பிச்சை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

பெரியார் பெற்றுத்தந்த சுகவாழ்வு- அவர் அதற்காக பட்ட கஷ்டங்கள் என்ன என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தமிழனின் இல்லத்திலும் அவர் எந்த இயக்கத்தில் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் - ஆனால் பெரியார் படம் - பெரியார் நினைவு இருக்க வேண்டும்.

குடிஅரசு 13.3.1938இல் வந்த தலையங்கத்தின் ஒரு பகுதியான இதை ஊன்றிப் படித்து எவ்வளவு துயரம், துன்பம், சிரமம் தாங்கிப் பெரியார் என்னும் மாமனிதர் தன் சுகதுக்கங்களைத் துறந்து இதனைச் செய்திருக்கிறார் என்பதற்கான ஆதாரமான இதனை மனதில் ஒவ்வொருவரும் நிலைநிறுத்த வேண்டும்.
காங்கிரசின் பொறுமையும், அகிம்சா தர்மமும் யாரையும் விட நமக்கு நன்றாய்த் தெரியும். காங்கிரஸ் சரித்திரத்தில் அகிம்சை என்ற பேச்சு வந்து புகுந்தது முதல் நாளது வரை எந்தச் சந்தர்ப்பத்தில் தங்களுக்குத் திருப்பி அடிக்கச் சக்தியிருந்த காலத்தில் அகிம்சை தர்மத்தைக் காட்டி வந்தது என்று ஏதாவது ஒரு சிறு உதாரணத்தை எடுத்துக் காட்டுமா என்று கேட்டுகின்றோம்.

காங்கிரஸ் காலித்தனம் செய்யாத கூட்டமுண்டா?

இதுவரை சுயமரியாதைக்காரர்கள் சுமார் 3000, 4000 பொதுக் கூட்டங்கள் கூடி 500 முதல் 20,000 ஜனங்கள் கொண்ட கூட்டம் வரையில் பேசியிருக்கலாம். இவற்றுள் காங்கிரஸ்காரர்கள் வந்து காலித்தனம் செய்யாத செய்ய முயற்சித்துப் பார்க்காத, செய்து பார்க்கலாமா என்று எண்ணாத கூட்டங்கள் ஒரு 10 அல்லது 20 கூட இருக்காது என்று சொல்லலாம். மற்றபடி காலித்தனங்கள் செய்ய நேர்ந்த ஒவ்வொரு கூட்டத்திலும் கல்லு, மண்ணு, கோழிமுட்டை, சாணி எறியப்பட்டதும், குடிகாரர்களுக்குக் கள்ளு வாங்கிக் கொடுத்துக் கூப்பாடு போடச் செய்ததும், சிறுபிள்ளைகளை விட்டு ஜே போடச் செய்து கலவரம் செய்வதும், அனாவ சியமான கேள்விகள் கேட்டு காலித்தனம் செய்வதும், சுயமரியாதைக் கூட்டம் நடக்கு மிடத்தில் பக்கத்தில் வேறு கூட்டம் போட்டுக் கூப்பாடு போடுவதும், பக்கத்தில் தப்பட்டை மேளம் அடித்து தொல்லை விளைவிப்பது சமீபத்தில் நின்றுகொண்டு ஜனங்களைக் கூட்டத்துக்கு வரவொட்டாமல் தடுத்து திருப்பி அனுப்புவதும், துண்டு நோட்டீசு களை கொண்டு வந்து கூட்டங்களில் விநியோகித்து கலாட்டா செய்வதுமான பல அற்பத்தனமான காரியங்களாகும்.

எப்படிப்பட்ட இழிமகனும் செய்யத் துணியாத கேவல செய்கைகளும் செய்து தான் வந்திருக்கிறார்கள் என்றாலும் இந்த 3000, 4000 கூட்டங்களில் ஒரு கூட்டமாவது கலவரத்தினால் கலைக் கப்பட்டு விட்டதென்றோ பேச்சுக்கள் முடிந்து தலைவர் முடிவுரை நடந்து தலை வருக்கும் கூட்டத்துக்கும் வந்தனோப சாரம் சொல்லி முடிக்கப்படாத கூட்டம் ஏதாவது ஒன்றை ருஜு செய்தால் ரூ.1000 சன்மானம் கொடுக்கிறோம் என்று விளம்பரம் செய்கிறோம்.

முன்சொன்னபடி சுயமரியாதைக் கூட் டங்களில் எவ்வளவு காலித்தனமும் கலாட் டாவும் நடந்திருந்தாலும் சுயமரியாதைக்காரர் கள் ஒரு ஆளையாவது ஒரு சிறு பையனையாவது அடித்தார்கள். கையால் தொட்டுத் தள்ளினார்கள் என்றாவது நிரூ பித்து விட முடியாது. ஏனெனில், தோழர் ஈ.வெ.ரா. இருக்கும் கூட்டங்களில் எல்லாம் தோழர் ஈ.வெ.ரா. எவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டாலும் சமாளித்து சுயமரியாதைக் காரர்களையே கண்டிப்பதின் மூலம் எதிரிகள் வெட்கப்படும்படிச் செய்து அடக்கி காரியம் முடித்து வரப்பட்டிருக்கிறது.

உதாரணமாக ஒரு மாத காலத்தில் 34 இடங்களில் காங்கிரஸ் காலிகள் கலகம் நடத்தி இருக்கிறார்கள். அவைகள் காங்கிரஸ் பத்திரிகைகளிலேயே வந்திருக்கின்றது. காஞ் சிபுரத்தில் தோழர்கள் ஈ.வெ.ரா., அண்ணாத் துரை ஆகியவர்கள் பேசும்போது காங்கிரஸ் காரர்கள் காலித்தனம் செய்தார்கள்.

தஞ்சாவூர் மாநாட்டின்போதும் போடப் பட்ட பொதுக் கூட்டத்தில் ஈ.வெ.ரா. பேசும் போது காங்கிரஸ்காரர்கள் பலருக்குக் கள்ளை வாங்கி ஊற்றிக் கலவரம் செய்தார்கள். கைகலக்கும்படியான நிலைமை ஏற்பட்டது. உடனே தோழர் ஈ.வெ.ரா. சுயமரியாதைக் காரர்களைக் கோபித்துக் கொண்டதால் காங்கிரஸ் காலிகள் தங்கள் இஷ்டம் போல் கூப்பாடு போட்டு அவர்கள் வாய் வலித்ததால் தானாக அடங்கினார்கள் - அன்று அது கார ணமாய் இரவு 10 மணி வரை கூட்டம் நடந்தது.

நீடாமங்கலம் நிகழ்ச்சி

தமிழகத்தில் சிலர் திராவிட இயக்கம் குறிப்பாகத் திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது? தந்தை பெரியார் பெரிதாக என்ன செய்து விட்டார் சமூகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு என்று அறியாமை யாலோ அல்லது தெரிந்தோ கேட்பது வழக்கம். அவர்களுக்கு விடையளிக்கும் நிகழ்ச்சியாக அமைவது நீடாமங்கலம் நிகழ்ச்சியாகும்.

நீடாமங்கலம் காங்கிரஸ் அரசியல் மாநாட் டில் ஆதி திராவிடத் தோழர்களுக்கு நேரிட்ட கொடுமையை ஆதாரபூர்வமாக ருஜுக்களு டன் கொடுமைக்கு ஆளானவர்களின் அறிக் கைகளோடு குடிஅரசு எடுத்துக்காட்டியது உண்மையிலேயே ஒரு பெருங்கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அத்தோடு அய்யாவின் மொழியில் கூறுவதானால் காங்கிரசின் உடுக்கைகளுக்குக் கிலி பிடித்து விட்டது. காங்கிரஸ் சிகாமணிகளின் யோக்கியதையும் இவர்களுக்குத் தாளம் போடும் தன்னலக் காரரின் வண்டவாளமும் வெளிப்பட்டுச் சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டது.

நீடாமங்கலம் கொடுமைக்கு ஆளான வரின் குரலில் சொன்னால் உண்மையில் இன்றும் கேட்பவர்களின் நெஞ்சம் பதை பதைக்கும். நீடாமங்கலத்தில் நடந்த தென் தஞ்சை மாவட்ட அரசியல் மாநாட்டில் ஆதி திராவிடத் தோழர்கள் சிலர் சாப்பாட்டுப் பந்தியில் கலந்து கொண்டதற்காக அவர் களைத் துன்புறுத்தி மொட்டையடித்துச் சாணி ஊற்றிக் கொடுமை செய்துள்ளனர்.

அதில் பாதிக்கப்பட்ட தோழர் தேவ சகாயம் 26.1.1938 அன்று ஈரோட்டில் ஆற்றிய உரை 30.1.1938இல் வெளியானது.

ஆண்டமாரே! நாங்கள் நீடாமங்கலம் காங்கிரஸ் கூட்டத்திற்கு வேடிக்கை பார்க்கப் போனோம். அங்கு எல்லோரும் சாப்பாட் டிற்குப் போகும்போது எங்களையும் கூப்பிட் டார்கள். நாங்களும் சாப்பாட்டிற்குப் போனோம். பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எங்களை ஒரு சபாபதி உடையார் என்பவர் வந்து தலைமயிரைப் பிடித்து இழுத்து ஏண்டா பள்ளப் பயல்களா? உங்களுக்கு இவ்வளவு ஆணவமா, இந்தக் கூட்டத்தில் வந்து உட்கார்ந்து சாப்பிடலாமா? என விறகுக் கட்டையால் அடித்தார்கள். அடி பொறுக்க மாட்டாமல் சிலர் ஓடி ஆற்றில் விழுந்து அக்கரைக்குப் போய்விட்டார்கள். நாங்கள் சிலர் அடிபட்டு வீட்டிற்குப் போய் விட்டோம். மறுநாள் நாங்கள் வயலில் அறுவடை அறுத்துக் கொண்டிருக்கும்போது கூட்டத் தில் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டது யார்? அவர்களைக் கொண்டு வா என்று கிருஷ்ணமூர்த்தி அய்யர் வந்து சொன் னார். நான் போனேன். அப்போது அய்யர் அவனைச் சும்மா கொண்டு வருகிறாயா? அடிபடவாவை என்று சொன்னார். தலை யாரி மாணிக்கம் தடிக்கம்பால் அடித்துக் கொண்டு வந்தார். அடி பொறுக்க மாட்டாமல் ஓட ஆரம்பித்தேன். என்னைப் பிடித்துக் கொண்டு வந்து விளா மரத்தில் கட்டி வைத்து மறுபடி 10 அடி தடிக்கம்பால் அடித்தார். நாட்டாமைக்காரர் அடைக்கலம், நாட்டாமை ராமன் ஆகியவர்களை அய்யர் கூப்பிட்டு இவனை அவிழ்த்துக் கொண்டு போய் மொட்டை அடித்துச் சாணியை ஊத்தி விடு என்று சொன்னார். அந்தப் பிரகாரம் பாரியாரிமகன் ஆறுமுகம் மொட்டை அடித் தார். தலையாரி மாணிக்கம் சாணி ஊத்தி னார். பிறகு நாங்கள் தலையை முழுகிவிட்டு வீட்டிற்குப் போய்விட்டோம்.

குடிஅரசு ஏட்டில் மட்டுமல்லாது, விடு தலை ஏட்டிலும் இச்செய்தி வெளியாயிற்று. ஆனால் அதைக் காங்கிரஸ் தோழர்கள் அடியோடு மறுத்துக் கூறியதுடன் அவற்றைப் பொய்யாக்கிக் காட்டத் தப்பான வழிகளில் முயற்சித்தனர். இச்செய்தி வெளியான 15 நாள் கழித்து, அடிபட்டு- உதைபட்டு மொட்டை அடித்துச் சாணி அபிடேகம் செய் யப்பட்ட ஆதிதிராவிடர் பலரைப் பிடித்துக் கொண்டு வந்தும் மிரட்டி, அம்மாதிரியான செயல் ஒன்றுமே நடக்கவில்லையென்று எழுதிக்கொண்டு, அதில் அவர்களது கையெ ழுத்து வாங்கி அதில் சேராதவர்கள் புகைப் படத்தையும், வாக்குமூலத்தையும் பத்திரிகை களில் போட்டு மக்களை ஏமாற்றப் பார்த்த துடன் விடுதலை பத்திரிகை பொய் யான சேதியை வெளிப்படுத்திற்று என்று தலைப்புக் கொடுத்து தினமணி முதலிய பத்திரி கைகள் பிரச்சாரம் செய்தன.

எனவே உள்ளத்தை உருக்கும் வகையில் குடிஅரசு இதைக் கண்டித்துத் தலையங்கம் எழுதியது. அதில் உள்ள இக்குறிப்பிடத்தக்க வரிகள் அன்றைய நாளில் தாழ்த்தப்பட்டவர் இருந்த நிலையைத் தெற்றென விளக்கும்.

ஆதிதிராவிடர்கள் நிலைமை பழைய கால அடிமைத் தன்மையே ஆகும். அங்குள்ள நிலங்களில் உள்ள மரங்கள் எப்படி அந்த நிலக்காரனுக்குச் சொந்தமோ, அதுபோலவே அந்த நிலம் விற்கப்பட்டால் எப்படி மரமும் வாங்கினவனுக்குச் சேருமோ அது போலவும் ஒவ்வொரு நிலத்துக்கும் சில ஆதி திராவிட மக்கள் அடிமைகளாக இருந்து பூமி கைமாறியவுடன் அவர்களும் கூடவே பூமியை விலைக்கு வாங்கினவனுக்கு அடிமையாவது இன்றும் வழக்கம்.

(தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...