Monday, January 3, 2011

செய்தியும் - சிந்தனையும்

ஞானம் பிறந்தாச்சோ!

கருநாடக மாநிலத்தில் சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் வரும் 6ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இச்சூழலில் பெங்களூருவில் கருநாடக மாநில பா.ஜ.க. செயற்குழுக் கூட்டம் 30.12.2010 அன்று நடைபெற்றது. பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளர் அருண்ஜெட்லி கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது:

கருநாடகத்தில் நடந்து வரும் ஊராட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. நடக்கவிருக்கும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

நில மோசடி புகார் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகளுடன் விவாதம் நடத்திட பா.ஜ.க. தயாராக உள்ளது.

அரசின் அழைப்பை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே வேளை அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்தால், அப்போது ஏற்படும் சூழ்நிலைகள் குறித்து பா.ஜ.க. செயற்குழு மீண்டும் கூடி விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று அருண்ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஆகா, எப்படிப்பட்ட ஞானோதயம்! கருநாடக மாநிலத்தில் சட்டப் பேரவையை சுமுகமாக நடத்திட எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டுமாம்.

சட்டசபையில் விவாதம் நடத்தத் தயாராம்.

இந்தப் புத்தி 2ஜி அலைக்கற்றை தொடர்பான பிரச்சினையில் எங்கே மேயப் போயிற்று? எத்தனை முறை மக்களவைத் தலைவர் மீராகுமார் அழைப்புக் கொடுத்திருப்பார் - எத்தனை முறை எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசியிருப்பார்?

நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி எத்தனை முறை வேண்டுகோள் விடுத்திருப்பார்?

காதில் போட்டுக் கொண்டதுண்டா?

நாடாளுமன்றம் காலையில் கூடும்; பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும், இடதுசாரிகளும் சடங்காச்சாரம் போல, எந்திரத் தன்மையில் எழுந்து நிற்பதும், கூச்சல் போடுவதும், சபாநாயகரை முற்றுகையிடுவதும்... இத்தியாதி இத்தியாதி முண்டா தட்டுதல்களும், முழக்கங்களும்தானே நடைபெற்றன.

ஒரு நாளா, இரு நாள்களா? 23 நாள்கள் இந்தக் கதியில்தானே அதோகதியாய் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஆக்கப்பட்டன.
சபாநாயகர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்; அந்தக் குரல் கெஞ்சும் தோரணையில்கூட இருந்ததுண்டு.

ஏற்றுக் கொண்டார்களா? தாங்கள் நினைப்பது - விரும்புவது மட்டுமே (2ஜி அலைக்கற்றைப் பிரச்சினையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை) நடைபெற்றாக வேண்டும்; மாற்று யோசனைக்கே இடமில்லை என்று எப்படி வறட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள்?

அமளிக்காடாக அவை ஆக்கப்பட்டதே! இதனால் மக்கள் வரிப் பணம் பாழ் எவ்வளவு தெரியுமா? ரூபாய் 146 கோடி!

ஊழல் நடந்து விட்டது, மக்கள் வரிப் பணம் நாசமாகி விட்டது என்று காரணம் கூறி, நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் செய்ததன் மூலம் 146 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணம் பாழாக்கப்பட்டதே

நாடாளுமன்றத்தைத்தான் நடக்கவிடவில்லை - அந்த நாள்களுக்கான தினப்படி, சம்பளம் இவற்றை வேண்டாம் என்று சொல்ல முன் வந்தார்களா?

தங்கள் கட்சி ஆளும் மாநிலத்தில் சட்டப் பேரவையை சுமுகமாக நடத்திட எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் - விவாதம் நடத்திட முன் வரவேண்டும்.

அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தங்கள் கட்சி (பா.ஜ.க.) நாடாளுமன்றம் சென்று விவாதத்தில் ஈடுபடாது - சுமுகமாக அவைகள் நடைபெற ஒத்துழைக்காது -பலே, பலே எப்படிப்பட்ட நேர்மையான எண்ணம் - எப்படிப்பட்ட ஜனநாயக நடைமுறை? தலைவலியும், திருகுவலியும் தனக்கு வந்தால்தானா? இவர்களை எல்லாம் மக்கள் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது மக்கள் பிரச்சினையைப் பற்றிப் பேசுவதற்குத்தானே - விவாதிப்பதற்குத்தானே?

அதை விட்டுவிட்டு நாடாளுமன்றத்தை வீதிமன்றமாக - போராட்டம் நடத்தும் களமாக மாற்றுவது எந்த ஊர் ஜனநாயகம்- நாடாளுமன்ற நடைமுறை? கருநாடக மாநில சட்டப் பேரவையைச் சுமூகமாக நடத்திட எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுக்க பா.ஜ.க.,வுக்குக் கடுகு மூக்கு அளவுக்காவது தகுதி உண்டா? எல்லாம் ஒரு குலத்துக்கொரு நீதி என்னும் மனுதர்மச் சிந்தனைதானா?

- கருஞ்சட்டை -


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...