Tuesday, January 4, 2011

வருண வரலாறும் - வள்ளுவரின் குடிமையும் (11)


வருண வரலாறும் - வள்ளுவரின் குடிமையும் (11)

உழவர்- உழவு: உழவர் மற்றும் உழவின் இன்றியமையாத தன்மையை நிறுவ, குடியியலில் வள்ளுவர் உழவு என்ற தனித்த அதிகாரமே செய்தார்.  இந்த அதிகாரத்தில் வேளாளர், வேளாண் மாந்தர் ஆகிய சொல் வழக்குகள் இடம் பெறவில்லை. வேளாண்மை என்ற சொல்லாட்சி பிற அதிகாரங்களில் வந்தாலும், அது, உதவி என்ற பொருளில்தான் வந்துள்ளது (கு.212).  இந்த அதிகாரத் தலைப்பை விளக்கும் பரிமேலழகர், சிறுபான்மை வணிகர்க்கும், பெரும் பான்மை வேளாளர்க்கும் உரித்தாய உழுதல் தொழில் செய்விக்குங்காலை, ஏனையோருக்கும் (அரசருக்கும், அந் தணருக்கும்) உரியது என்று, மனுநீதி யின் வழியில் கூறினார்.  ஆனால், வணி கரோ -ஏனையோரோ அன்று உழவுத் தொழில் செய்ததாக, குறளில் ஒளிவு மறைவாகக் கூட குறிப்பு இல்லை.


ஏற்கெனவே உருவாகியிருந்த, உழுவித்து உண்போர் _ உழுது உண்போர் என்ற பிரிவினை, வள்ளுவர் காலத்தில் மேலும் வலுப்பெற்றிருக்கும்.  உழுவித்து உண்போர், மென்மேலும் உயர்ந்த பொருளியல் நிலையையும் - உழுது உண்போர், கூடுதல் நலிவையும் அடைந்திருப்பர். 

பெரும்பாலான நில உடைமை, சிறுபான்மையினரான உழுவித்து உண்போரின் வசம் இருக்க _ பெரும்பான்மையான உழவர்கள், சிறுசிறு நிலங்களுக்குச் சொந்தக் காரர்களாகவோ அல்லது நிலமற்ற விவசாயக் கூலிகளாகவோ மாற்றப்பட் டிருப்பார்கள்.

உழுது உண்போர் நேரடியாக நிலத்தில் பாடுபடுவதில் கிடைத்த குறைந்த வருவாய் அல்லது கூலியை, வைத்து, குடும்பச்சுமையைச் சிரமத்துடன் தாங்கிக் காலந்தள்ளி யிருப்பார்கள்.  அவர்களின் நலிந்த சூழல் காரணமாக, சமூகத்தில் மற்றோ ரைவிடக் குறைவுபட்ட மதிப்பிற்கு உரியவராகவே வாழ்ந்திருப்பார்கள்.  ஆனால் வள்ளுவர், செல்வச் செழிப் புடன் வாழ்ந்த வணிகர்களைப் பெரி தாகப் பேசாதது போல், இவ்வ திகாரத்தில், உழுவித்து உண்பவர் களையும் பெரிதாகக் கருதாமல், உழுது உண்ணும் உழவர்களுக்கே முன்னுரிமை வழங்கி, சிறப்பித்துப் பேசுகிறார்.

பொருளியல் அடிப்படையில் ஏழ்மை நிலையில் இருந்தாலும், உழவரையும் -அவர்கள் செய்யும் வாழ்வாதாரமான உழவுத்தொழிலையும், பெருமைக்குரிய தாய் அவர் உயர்த்திப் பிடித்தார். 

 வேறு எந்தத் தொழில் செய்பவராக இருந் தாலும், உலகத்தார், உணவை உற்பத்தி செய்யும் உழவரின் பின்னால்தான் செல்லவேண்டும் என்றும், உடல் வருத்தம் தரும் தொழிலாக இருந்தாலும், உழவுதான் தலைசிறந்த தொழில் - உழந்தும் உழவே தலை என்றும், உழவை முதன்மைத் தொழிலாகப் பிரகடனம் செய்தார் (கு. 1031).  உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்று மய்யப் படுத்தி, உழவர்களின் வாழ்க்கைதான், உண்மையான வாழ்க்கை என்னும் பொருளில், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்பதான அறிவிப்பையும் வள்ளுவர் செய்தார் (கு.1032, 1033). உழவர் பிறரிடம் சென்று இரக்க மாட்டார்கள்; இரப்போர்க்கு உள்ளதை மறைக்காமல் கொடுக்கும் பண் பாளர்கள் என்று, அவர்களின் மேன்மையை விளக்கினார்(கு.1036).

வள்ளுவர், உழுது உண்ணும் உடல் உழைப்பாளிகளைத்தான் மிகுதியாகப் பேசினார் என்பதை, உழந்தும், கை செய்து ஊண் மாலையவர் (கையால் உழுதொழில் செய்து, உண்பதை இயல்பாகக் கொண்டவர்), உழவினார் கைமடங்கின் (உழவரின் கைகள், உழுதொழில் செய்யவிட்டால்) போன்ற சொல்லாட்சிகள் தெளிவுபடுத்து கின்றன (கு. 1031, 1035, 1036). மேலும், இரு குறட்பாக்களில் உழவு செய்யும் விதத்தை - நிலத்தின் புழுதியை கால் பங்காகும்படி காயவிடுதல் - உழுதல் - எருவிடுதல் - களை எடுத்ததல் -நீர்பாய்ச்சல் - பயிரைப் பாதுகாத்தல் - போன்ற, நடைமுறைத் தொழில் நுட்பங்களைப் பட்டியலிடுகிறார் (கு. 1037, 1038).  சங்க இலக்கியங்களில் வறுமையாளர்களாகச் சில புலவர்களும், பாணர் போன்ற கலைவல்லாரும் காட்டப்பட்டனர். 

உழுது உண்போர், ஒரு காலகட்டத்தில் ஏழ்மைத்துயருக்கு உள்ளனார்கள் என்ற குறிப்பு, இவ் வதிகாரத்தில் தொக்கி நிற்கிறது, சிறிய நிலத்தில் போதுமான வருவாய் இல்லாததாலும் _ உடல் உழைப்பால் கிடைத்த பொருளால், வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத போதும், வறுமை தலைகாட்டுகிறது.  அப்படி, வறுமையுற்றுச் செய்வதறியாது இருப்பவர்களைக் கண்டு, நிலம் என்ற நல்லாள் சிரிப்பாள் என்கிற கருத் தமைவில், இலம் என்று அசைஇ இருப் பாரைக் காணின், நிலம் என்னும் நல்லாள் நகும் என்ற குறட்பாவை, அவ்வதிகாரத்தில் இறுதியில் வைத்து, உழுது உண்பவர் வறுமைக்கு உள்ளா கும் நிலமையைக் காட்டினார் (கு.1040).  அன்று, ஏராளமான நிலப்பரப்பு விவசாயத்திற்குப் பயன்படாமல், தரிசாகவோ _ காடாகவோ இருந் திருக்கும்; அப்படிப்பட்ட நிலைத்தைப் பக்குவப்படுத்தி, பயிர் செய்ய ஏதுவான நிலமாக மாற்றி, தொடர்ந்து தன் முனைப்புடன் உழுது பாடுபட்டு, வறுமையைப் போக்க முயல வேண்டும் என்ற சிந்தனைகூட இந்தக் குறளுக்குள் புதைந்திருக்கலாம்.  இப்படிப்பட்ட வாய்ப்பு இருந்தும், அதை உழவர்கள் பயன்படுத்தாது கண்டு, நிலம் சிரித் தாகவும் கொள்ளலாம். 
உழுதுண்ப வர்கள் வறுமையாளராகும் சூழல் இருந்ததால்தான், உழவு என்ற அதி காரத்திற்கு அடுத்தாக, நல்குரவு (வறுமை), இரவு, இரவு அச்சம் ஆகிய அதிகாரங்களைக் குடியியலில் வள்ளுவர் வைத்தாரோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. (அரசனின் செங்கோன் மையையும், உழைவையும் போற்றுவது, உலகாயதச் (Logayutha) சிந்தனை மரபு என்பது, இங்கே நினைவுகூரத் தக்கதாகும்)

வறுமையாளரின் சார்பாளர்: வறுமையை விடக் கொடுமையானது எதுவென்றால், அது வருமைதான் என்று, கொடுமையின் உச்சமாக வறுமையைக் காட்டினார் வள்ளுவர் (கு.1041). ஏழைசொல் அம்பலம் ஏறாது என்ற, பழமொழிக்கு முன்னோடியாக, நல்லனவற்றையே நன்றாக ஆராய்ந்து கூறினாலும், வறுமையாளனின் பேச்சு, கேட்பார் இன்றிப் பயனற்றுப் போய் விடும் என்றார் (கு.1046).

இல்லா மையைப் பாவி எனச் சுட்டும் வள் ளுவர், ஒருவன் நெருப்புக்குள் கூடத் தூங்கமுடியும்; ஆனால், வறுமை வந்துவிட்டால், நிம்மதியாய் கண்மூடி உறங்க முடியாது என்று வறுமையின் அனலை, உணர்ந்து விளக்கினார் (கு. 1042, 1049). வறுமையாளனுக்கு ஆறுதல் கூறித் தூக்கி நிறுத்தும் வகையில், இன்மை ஒருவருக்கு இளிவு அன்று என்பதை எடுத்துரைத்தார் (கு. 988).  ஒரு வரிடம் கேட்டு (இரந்து) வாங்கித்தான் வாழவேண்டும் என்ற தவிர்க்கமுடியாத நிலை ஏற்பட்டால், தன்னிடம் உள்ளதை ஒளிக்காத - இரப்பவரை இகழ்ந்து எள்ளாத, பண்பாளரை அடையாளம் கண்டு, அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று அறிவுரை கூறினார் (கு. 1051, 1053, 1055, 1057). 

இந்த அறவுரைகள், வறுமையாளனாக இருந்தாலும், அவனது சுயமரியாதையும், மனித மதிப்பும் காக்கப்பட வேண்டு மென்ற உந்துதலில்-ஆதங்கத்தில் உருவானவையாகும், வறுமையாளன், தன் நிலைகருதி பிறரிடம் கோபப்படக் கூடாது என்ற உளவியல் சார்ந்த எச்சரிக்கையையும் அவர் தருகிறார் (கு. 1060).  மேலும், வறுமைப்பட்டவனின் தன்முயற்சியை வலியுறுத்தும் விதத்தில், இரவாமை கோடி உறும் என்று எடுத்துக்காட்டி, நீராகாரம் ஆனாலும், அதைத் தன் சொந்த முயற்சியால் பெற்று, உண்ண வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார் (கு. 1061, 1065).  எக்காரணத்தைக் கொண்டும், தன்னிடம் இருப்பதை மறைத்து, இல்லை என்று சொல்பவர்களிடம் சென்று, இரக்க வேண்டாம் என்று, இருப்பவரை நான் இரந்து கேட்டுக் கொள்கிறேன் என்று, தனது கூற்றாக மீண்டும் ஒருமுறை வள்ளுவர் விடும் உருக்கமான வேண்டு கோள் (கு. 1067), வறுமையாளின் தன் மானத்திற்கு, எவ்வகையிலும் இழுக்கு நேரக்கூடாது என்று எண்ணும் அவரது ஈர நெஞ்சத்தையும், மனிதாபிமானத் தையும் புலப்படுத்துகிறது. 

உடல் உழைப்புப் பாட்டாளிகளான உழவரி டத்தும் - ஏழ்மையில் உழன்றவர்களிட மும் அவர் காட்டிய பரிவும் - அக்கறை யும், அடித்தட்டு மக்களுடன் வள்ளு வருக்கு இருந்த நெருக்கத்தையும் - பிணைப்பையும் உணர்த்துகிறது.  இரந் தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக இவ் உலகு இயற்றியான் என்று, இல்லாவர்களின் சார்பில் நின்று, குடியியலில் அவர் கொடுத்த சாபம் (கு. 1062) _ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், பூமிப்பந்தில் வேறு எந்தச் சமூகச் சிந்த னையாளரிடமும் காணக் கிடைக்காத, மாந்தநேயக் குமுறலின் வெளிப்பாடாகும்!

உதவிய நூல்கள்

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - பழைய, புதிய உரைகள்
திருக்குறள் - பரிமேலழகர் உரை

திருவள்ளுவ மாலை    - வெண்பாக்களின் தொகுப்பு
அசல் மனு தர்மம் - இராமானுஜாச் சாரியர் உரை-1991.
பகவத்கீதை - சித்பவானந்தர் உரை
தொல்காப்பியத் தமிழர் - சாமி. சிதம்பரனார்
தமிழ் இலக்கிய வரலாறு - முனைவர். மு. வரதராசனார்
தொல்காப்பியர் காலத் தமிழர் - புலவர். குழந்தை
தமிழ் இலக்கிய வரலாறு - பேராசிரியர்.  வெள்ளைவாரணர்
தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - முனைவர் ந. சுப்புரெட்டியார்
தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம் - முனைவர். க. நெடுஞ்செழியன்
சாதியும் மதமும் - ஊரன் அடிகள்

கட்டுரைகள்:

தொல்காப்பியம் என்னும் தலைப் பில், முனைவர்.வ.அய்.சுப்பிரமணியன், முனைவர். தமிழண்ணல் மற்றும் தெ. ஞானசுந்தரம் ஆகியோர் எழுதியவை.
மற்றும், இக்கட்டுரையில் எடுத் தாளப்பட்ட சங்க இலக்கியப் பாடல் கள் _ சிலப்பதிகார வரிகள்.

கட்டுரையாளர்:
நந்தா (அ. செல்வராஜ் காந்தி),
மேற்பார்வைப் பொறியாளர் (ஓய்வு),
12, மேற்குத் தெரு  - வ. உ. சி. நகர்,
போடிநாயக்கனூர் - 625 513,
தேனி மாவட்டம். அலைபேசி: 9443382771.
- நந்தா -
(நிறைவு)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...