பொது அறிவு எனும் பட்டறிவு-மரணக் குறிப்பு (Obituary)
படிப்பறிவு வேறு; பகுத்தறிவு வேறு, பட்டறிவு (Comman sense) வேறு. இம்மூன்றும் வெவ்-வேறானவை! ஆனால் ஒன்றுக்கொன்று நெருங்கிய உறவுள்ளவை!
மனிதகுலம் தழைத்தோங்க, இவை ஆற்றிய, ஆற்றி வரும் தொண்டு வார்த்தைகளால் வருணிக்க முடியாத மலையளவு ஆகும்!
இங்கிலாந்தின் ‘லண்டன் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான ஒரு சிறந்த சிந்தனைச் சிதறல்தான் மேலே காட்டியுள்ள தலைப்புடன் வெளிவந்துள்ள இந்தக் குறிப்புரையாகும்!
ஆங்கிலத்தில் உள்ள அதன் சுவையோடு அப்படியே என்னால் தரமுடியாது என்றாலும் கூடுமான வரை முயன்று வெற்றி பெற்றிருப்பதாகவே கருதுகிறேன்; எனவேதான் நமது வாசக நேயர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று நமது மிகப் பெரும், பழம்-பெரும் நண்பரான பட்டறிவு (Comman sense) மறைவுற்றமைக்காக இரங்கல் தெரிவிக்க அனைவருமே கூடியுள்ளோம்!
அவர் எவ்வளவு நீண்ட காலமாக நம்முடைய நண்பராக இருந்து வழிகாட்டினார் என்பதை சரியாக நினைவு கூர முடியவில்லை. காரணம் நீண்ட காலத்திற்கு முன்பே இந்த அதிகாரிகள் வர்க்கத்தின் சிகப்பு நாடாவால் காணாமற் போகும்படி செய்யப்பட்டு விட்டார்! எனவே சரியான வயது கூட ஆதாரங்களுடன் நாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பில்லை.
ஆனால் அவரை நாம் எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கும் வண்ணம் நமக்கு மிக அருமையான பல பாடங்களை அவர் கற்றுக் கொடுத்துள்ளார். அவற்றின் மதிப்பினை நாம் இப்போதும், எப்போதும் உணர்ந்து கொண்டே இருப்போம் என்பது உறுதி.
மழையிலிருந்து எப்படி தப்பித்து வரமுடிகிறது; வாழ்க்கை என்பது எப்போதுமே ஒரு நியாயமாக நடப்பது அல்ல; அது போல சில நேரங்களில் நாம் நம்மை நொந்து கொள்ளும் நிலையில் அது என் தவறாகக் கூட இருக்கலாம் என்பது போன்ற பட்டறிவுச் சிந்தனைகளையொட்டிய பழக்க வழக்கங்களை நாம் பெற்றுள்ளோம்!
பொருளாதாரத்தில் சம்பாதிப்பதற்கு உட்பட்டு செலவழித்தல், நம்பக் கூடிய காரண காரியங்கள் அவர்கள் குழந்தைகள் அல்லர், வயது வந்தவர்கள் என்று உணர்ந்து அதற்கேற்ப நமது அணுகுமுறைகள் என்ற நடைமுறை வாழ்க்கைமூலம் பட்டறிவின் வாழ்வு நீண்டு வளர்ந்து வந்தது.
ஆனால் அவரது உடல் நலம் திடீரென்று கெட ஆரம்பித்தது எப்போது என்றால், திட்டமிட்டே, நல்ல எண்ணத்தோடு அவை இருந்த போதிலும் கூட சமூகம் சுமக்கமுடியாத கட்டுப்பாடுகளை அவரது இடத்தில் அமர்த்தி வைத்தபோதுதான்! 6 வயது பெண்ணின் கன்னத்தில் பாலுணர்வு உந்துதலால் முத்தம் கொடுத்த குற்றத்தை ஒரு சிறுவன் இழைத்தான் என்றும், மதிய உணவுக்குப் பின் வளர் இளம் பிராயத்தினர் (Teen agers) வாய் கொப்பளிக்க மவுத் வாஷ் திரவத்தைப் பயன்படுத்தினர் என்றும், வகுப்பில் அடங்காப் பிடாரியாக நடந்த ஒரு மாணவனைப் பள்ளியை விட்டு வெளியே அனுப்பினர் என்பது போன்ற (பட்டறிவுக்கு முரணான கொள்கைகளால்) (அவரது) பட்டறிவின் உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமாகியது!
அவரது வாழ்வு மிகவும் பிடிமானமற்றதாக ஆனது எப்போது தெரியுமா?
வீட்டில் ஒழுங்காக வளர்க்கத் தவறிய பெற்றோர்களின் குழந்தைகளை ஆசிரியர்கள் தங்களது வகுப்பறைகளில் ஒழுங்கீனத்தைக் கண்டித்து தண்டித்து முறைப்படுத்திய ஒரே காரணத்திற்காக, பெற்றோர்களால் ஆசிரியர்கள் தாக்கப்பட்டபோது!
அதன் உடல் நிலை மேலும் மோசமானதாக ஆனதற்கு முக்கிய காரணம், மாணவர்கள் வெப்பத்தினால் தாக்கப்பட்டு (தோல் வியாதி வராமல் தடுக்க)விடக்கூடாது என்பதால் சூரிய ஒளி படும்படி மாணவர்களின் உடலில் மருந்து திரவம் தடவவும், ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரையை (இது இதய நோய் தடுப்பு - இதய ரத்தக்குழாய்கள் அடைபடாமல் தடுக்க அவசர சிகிச்சைக்கான அவசர முதல் உதவி) ஆசிரியர்கள் தாங்களே செய்யாமல், பெற்றோர்கள் அனுமதி பெற்ற பிறகே செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டபோதும், ஒரு மாணவி, கருத் தரித்துள்ள செய்தியையோ, அல்லது அவளுக்கு நடந்த கருச்சிதைவு (Abortion) பற்றியோ ஆசிரியர்கள் உடனே பெற்றோர்களுக்குத் தகவல் அறிவிக்க முடியாமல் இருந்தபோதும்தான். (இவை இங்கிலாந்தில் சர்வ-சாதாரணமான நிகழ்வுகளாகிவிட்டன.)
பட்டறிவு என்ற மனிதருக்கு இனியும் நாம் வாழ வேண்டுவது அவசியம்தான் என்ற மன உறுதி பறந்தோடி விட்டது எப்போது தெரியுமா?
மத அமைப்புகள் வெறும் பொருள் சம்பாதிக்கும் வணிக மய்யங்களாகி வருவதாலும், குற்றம் புரிந்த கிரிமினல்கள் அவர்களால் பாதிக்கப் பட்டவர்களை விட நல்ல முறையில் நடத்தப்பட்ட போதும்!
பட்டறிவுக்கு சரியான அடி, உதை, குத்து கிடைத்தது_ ஏனெனில் கொள்ளைக்காரர்களிடம் இருந்து அவர் (பட்டறிவு) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளமுடியவில்லை_ அதுவும் சொந்த வீட்டிலேயே.
அதோடு மட்டுமா? அந்தக் கொள்ளைக்காரன் அடி வாங்கிய இவர் மீதே தன்னைத் தாக்கி காயப் படுத்திவிட்டான் என்று (பொய்) வழக்கைப் போட்ட போது, பட்டறிவு தன்னம்பிக்கையை அடியோடு இழந்துவிட்டது!
அதை விடக் கொடுமை, பட்டறிவு இறுதி வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து இனி நாம் வாழ்வது அர்த்தமற்றது என்ற எண்ணத்தைத் தனக்குள்ளே ஏற்படுத்திக் கொண்டது எப்போது தெரியுமா?
கொதிக்கும் காபி ஒரு கப் வாங்கி (அவரது கவனக் குறைவால்) தனது தொடை மீதுள்ள துணியின் மேல் ஊற்றி தொடையில் காயமேற்படுத்திக் கொண்டமைக்காக, ஆடை மீது வழக்குப் போட்டு பெரும் நஷ்ட ஈட்டுத் தொகை பெற்ற (நியாயமற்ற) போக்கினைக் கண்டபோது! பட்டறிவு என்னும் இவரது தாய்தந்தையர் இவருக்கு முன்பே மரணமடைந்துவிட்டனர். அவர்களின் பெயர் உண்மை மற்றும் நம்பிக்கை என்பவை ஆகும். இவருக்கு தனது துணைவியார் (Discretion) யுக்தானுச்சாரம் நிலைமைக்கேற்ப நடக்கும் தன்மையர் என்பவர் மூலம் பொறுப்பு (Responsibility) என்ற ஒரு மகளும், பகுத்தறிவு (Reason) என்ற ஒரு மகனும் உண்டு.
பட்டறிவின் மற்றொரு துணைவியார் நான்கு பிள்ளைகளைப் பெற்றதால்_ மேற்கூறிய ‘பொறுப்பு’ என்ற மகளுக்கும் ‘பகுத்தறிவு’ என்ற மகனுக்கும் நான்கு (வேறுதாய் வயிற்று) (Step Brothers) சகோதரர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் பட்டியல் இதோ.
1. “எனது உரிமைகள் எனக்குத் தெரியும்’’ என்று கூறுவோர்.
2. “இப்போதே அது எனக்கு வேண்டும்’’ என்று (அடம் பிடிக்கும்) கூறும் நிலையோர்.
3. “என்னைக் குற்றம் சொல்லாதீர்; வேறு சிலரைத்தான் நீங்கள் குறை கூறவேண்டும்’’ (கடமை தவறியதைச் சுட்டிக் காட்டும்போது) என்று கூறுவோர்.
4. “என்ன செய்வது? நான்தான் பாதிக்கப்பட்டவன்’’ என்று (குற்றம் சாற்றப்படும்போது) கூறுபவர்.
பட்டறிவின் இறுதி ஊர்வலத்தின் போது அதிகமானோர் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் அவர் மரணம் அடைந்து-விட்டார் என்பதே பலருக்குத் தெரியாது!
நீங்கள் அவரை இன்னமும் நினைத் திருக்கிறீர்கள் என்றால் அருள் கூர்ந்து இதை மற்றவர்களுக்குக் கூறுங்கள்.
இல்லையெனில் அவர் இறந்து-விட்டதை அறியாத பெரும்பான்மையில் நீங்களும் ஒருவராகி விட்டு, ஒன்றும் செய்யாமல் கைகட்டி வாய் பொத்தி வாழும் வாழ்க்கை வாழுங்கள்!
சிங்கப்பூர் பெரியார் சேவை மன்றத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரும், சிறந்த பகுத்தறிவுப் பேராசிரியருமான டாக்டர் ரத்தினகுமார் அவர்கள், நேற்று அவருக்கொரு நண்பர் லண்டனிலிருந்து அனுப்பினார் என்று கூறி இந்த அற்புத சிந்தனை ஓவியக்கட்டுரையை (ஆங்கில நகலை) தந்ததைப் படித்தேன்; சுவைத்தேன். அத்தேனை நீங்களும் பருகிப் பயன்பட தந்துள்ளேன். படித்துப் பயனடையுங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...
-
உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும்...
No comments:
Post a Comment