Wednesday, February 13, 2008

மோடியின் வெற்றி: காங்கிரஸ் செய்யவேண்டியது என்ன?



தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து, கர்நாடகத்தில் 7 நாள் ஆட்சி என்ற கேலிக் கூத்தால் அவமானப்பட்ட பா.ஜ.க.,வுக்கு குஜராத்தில் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது என்பது, உற்சாக பானத்தை அருந்தியவன் போல திடீர் மகிழ்ச்சி வெள்ளம் பீறிட்டுக் கிளம்புவது இயல்பானது-தான்.

குஜராத் சட்டப்பேரவையின் மொத்த இடங்கள் 182.

இதில் மோடியின் கட்சியான பா.ஜ.க., 117 தொகுதிகளையும், காங்கிரஸ் 59 தொகுதிகளையும், அதனுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மூன்று தொகுதிகளையும், அய்க்கிய ஜனதா தளம் ஒரு தொகுதியையும், சுயேச்சைகள் இரு தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

காங்கிரஸ் முன் இருந்ததைவிட சற்றுக் கூடுதலான இடங்-களை இம்முறை பெற்றுள்ளது. என்றாலும், இது அதற்கு ஆறுதலாக அமையவில்லை.

மோடிக்கு எதிரான வாக்குகளை, காங்கிரஸ் ஒரு சிறப்பான முற்போக்குக் கூட்டணி அமைத்து - 2004 இல் தமிழ்நாட்டில் கலைஞர் அவர்கள் ஒரு அருமையான அரசியல் வியூகம் அமைத்து, பல கட்சிகளையும் ஒருங்கிணைத்து, உழைத்து, தமிழ்நாடு மற்றும் புதுவை உள்பட 40 மக்களவைத் தொகுதி-களையும் கைப்பற்றியது போல செய்திடத் தவறியதனால்தான் இந்த தோல்வி காங்கிரசுக்கு!

மோடியைத் தோற்கடிக்க அனைத்துக் கட்சிகளையும் ஒருங் கிணைத்து, பொது வேட்பாளர்களை (இடங்களைப் பகிர்ந்து கொண்டு) நிறுத்தியிருந்தால் வெற்றி, இப்படி கானல் நீராக ஆகி இருக்காது!

செல்வி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மொத்தம் உள்ள 182 இடங்களில் 166 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும்கூட, அது போட்டியிட்ட 14 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழக்கக் காரணமாக அமைந்துவிட்டது.

இந்த 14 தொகுதிகளில், ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோற்றதற்குக் காரணம் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மோடி எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்துவிட்டது.

50 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் சுமார் 5000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியா-சத்தில்தான் தோல்வி அடைந்து உள்ளனர்.

மாயாவதி கட்சி (பகுஜன் சமாஜ்) தனது வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளைப் பிரித்ததே இதற்கு முக்கிய காரணம். தாழ்த் தப்பட்ட சமுதாய வாக்குகள், முஸ்லிம்களில் ஒரு பகுதியினர், பார்ப்பனர் போன்ற முன்னேறிய ஜாதியினர் - இவர்கள் எல்லாம் மோடிக்கு எதிரான வாக்குகளை, பகுஜன் சமாஜ் கட்சிக்கே போட்டனர்!

பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாது படுதோல்வி அடைந்தது என்றாலும், காங்கிரசு பெரும்பான்மை பெரு வதைத் தடுத்து இருக்கிறது என்பதே ஆய்வாளர்-களின் கருத்து.

காங்கிரஸ் பிரச்சாரத்தில், மோடியை மரண வியாபாரி என்று திருமதி சோனியா காந்தி பேசியது (அவரது உரையை தயாரித்தவர்களின் மாபெரும் தவறு அது) எதிர்மறை விளைவை உருவாக்கி, பூமராங் ஆகிவிட்டது!
தேர்தல் பிரச்சாரம் என்பது சர்க்கஸ் கம்பியில் வித்தைக்காரன் நடப்பதுபோல! விழிப்போடு செய்யவேண்டும்.

மோடியின்மீது இருந்த வெறுப்பு, எதிர்ப்பு, கசப்பு உணர்வுகளை சரியான வகையில் ஒருமுனைப்படுத்தி, ஒரு வெற்றிகரமான கூட்டணியை அமைக்கத் தவறியதால்தான் மோடி மீண்டும் வந்து, அரசியல் ஆணவத்து-டன் பேசும் நிலை ஏற்பட்டு விட்டது!

மற்ற காரணங்கள் சாதாரணமானவை.

மீண்டும் ஒரு இந்துத்துவா ஆட்சி உருவாகி, சிறுபான்மைச் சமுதாயத்தவர்களான இஸ்லாமியர், கிறித்தவர்களின் பாது காப்பைக் கேள்விக்குறியாக்கிவிட்டது!

பா.ஜ.க., முக்கியத் தலைவர்களுக்கு உள்ளுக்குள் மோடியின் வெற்றி உற்சாகத்தினை தரவில்லை. ஆனால், அத்வானி, ஆர்.எஸ்.எஸ்., கூட்டாளிகளுக்கு இது பெரிய உள்காயத்தை ஏற்படுத்தியுள்ளது!

காங்கிரசின் தலைமை, இந்த அமெரிக்-காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டு, இடதுசாரிகள் மற்றும் முற்-போக்குச் சிந்தனையாளர்களின் ஆதரவினை இழக்காமல், 2009 வரை அய்ந்தாண்டுகால ஆட்சியைத் தொடர்ந்து நடத்திடவேண்டும்.

விலைவாசி போன்றவற்றில் மிகவும் கவனத்துடன் கட்டுப்படுத்தி மத்திய ஆட்சி-யாளர்-கள் நடந்துகொள்ளவேண்டும். இத்-தோல்வியை, ஒரு வகையில் காங்கிரசை ஒரு சுய பரிசோதனை செய்துகொள்ள கிடைத்த வாய்ப்பாகவே கருதிடவேண்டும்.

உடனடியாக அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (ருஞஹ)யின் முக்கியத் தலைவர்-களையும் டில்லியில் கூட்டி, அதன்  பொதுத் திட்டத்தை மேலும் தீவிரமாக செயல்படுத்த உறுதி எடுத்துக் கொண்டு, அதில் உள்ள கட்சிகளையும், இடதுசாரி முற்போக்குச் சிந்தனையாளர்களையும் அரவணைத்து, 2009 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதே ஒரு வியூகம் வகுத்து, இந்தக் கூட்டணி யினை மிகவும் வெற்றிக் கூட்டணியாக்க ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் சிற்பியான முதல்வர் கலைஞர், லாலுபிரசாத் போன்றவர்களிடம் நன்கு ஆலோசித்து, வரும் 2009-இல் மதவெறி சக்திகளுக்கு, ஜாதி வெறி சக்திகளுக்கு இடம் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள இப்போதே பணிகள் (2008 முதலே) தொடங்கிடவேண்டும்.

தோல்விகளை அனுபவங்களாகக் கொண்டு, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதே சிறந்தது!

விழுவது தவறல்ல; விழுந்தவுடன் எவ்வளவு விரைவில் எழுந்து நிற்க முடியுமோ அவ்வளவு விரைவாக எழுவதே முக்கியம்.
அதுவும் அரசியலில் மிகமிக முக்கியம்!


கி. வீரமணி
ஆசிரியர்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...