தமிழக பாஜவின் இணையதளத்தில் பெரியார்
குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதற்கு தலைவர்கள் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தந்தை
பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் நேற்று கருத்து ஒன்று
பதிவிடப்பட்டிருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள்
என்று பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. கடும் எதிர்ப்பை தொடர்ந்து
பாஜக பதிவிட்ட பதிவு நீக்கப்பட்டது. பாஜவின் இதுபோன்ற செயல்களுக்கு
அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப்
பக்கத்தில் பெரியாரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒரு பதிவு
வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, சுட்டுரையில் இருந்து அந்தப்
பதிவு நீக்கப்பட்டது. பாஜகவைக் கண்டித்து தலைவர்கள் வெளியிட்ட கண்டனங்கள்
வருமாறு:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:
பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தை பதிவு
செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பாஜக அப்பதிவை போடுவதற்கு
முன் யோசித்திருக்கலாமே! அந்த பயம் இருக்கட்டும். மரணித்த பிறகும் மருள
வைத்துள்ளார் பெரியார். அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா இல்லை
மண்புழுவாய் பதுங்குமா.
அமைச்சர் டி.ஜெயக்குமார்: பெரியார் ஒரு
சமூக சிந்தனையாளர். சமூகத்தில் அடிதட்டு மக்கள் தலைநிமிர்ந்து நடக்க
வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழு வதும் உழைத்து இன்றும் நம்முடன்
வாழ்ந்து கொண்டி ருப்பவர். அவரது வாழ்க்கை முறையை யாரும் கொச்சைப்படுத்தக்
கூடாது. தமிழக பாஜகவின் சுட்டுரையில் பெரியாரை கொச்சப்படுத்திருப்பது தவறு.
அமைச்சர் செல்லூர் ராஜூ: இந்த சர்ச்சை
குறித்து தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தனது
கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்தை
உருவாக்கிக் கொடுத்தவர் தந்தை பெரியார். அதற்கு உறுதுணையாக இருந்தவர்
பேரறிஞர் அண்ணா. தமிழகம் என்றைக்கும் திராவிட பூமி. இன்றைக்கு பல
மாநிலங்கள் மொழியாலும் மதத்தாலும் பிரிந்து கிடந்தாலும், அனைத்து
சமூகத்தினரும் சகோதரர்களாக இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். அதற்குக்
காரணம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் டாக்டர் கலைஞர்
கருணாநிதி” என்று செல்லூர் ராஜூ கூற, ஒரு நிருபர் அவரை இடைமறித்து, “உங்கள்
கூட்டணிக் கட்சியான பாஜக பெரியார் பற்றி...” என ஆரம்பித்தார். அதற்கு
செல்லூர் ராஜூ உடனே, “யாராக இருந்தாலும், தந்தை பெரியாரைப் பற்றி இழிவாக
பேசினால் அது கண்டிக்கத்தக்கது,” என்று காட்டமாக கூறினார்.
பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ்:
பெரியாரின் நினைவு நாளில் அவர் குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியும், அதன்
அய்.டி. பிரிவும் டிவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து அருவருக்கத்தக்கது.
இது அவர்களின் காமாலைக் கண்களைக் காட்டுகிறது. இந்த செயல் கடுமையாக
கண்டிக்கத்தக்கது.
வைகோ (மதிமுக): பெரியாரை அவமதிப்பது கோழைத்தனமான செயல். பாஜக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
டிடிவி. தினகரன் (அமமுக): பெரியாரின்
நினைவு நாளில் அவரை இழிவுப்படுத்தும் விதமாக தமிழக பாஜகவினர் சுட்டுரையில்
பதிவு செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும்
மறைந்த தலைவர்களைப் பற்றிய இத்தகைய மோசமான தாக்குதல்கள் ஆரோக்கியமான
அரசியலுக்கு நல்லதல்ல.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர்
ஜவாஹிருல்லா: சமூக இழிவுகளை அகற்றவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும்,
சமத்துவத்திற் காகவும் தமிழகத்தில் அயராது பணியாற்றிய பெரியாரின்
நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பாஜவின் பதிவுள்ளது.
எஸ்.டி.பி.அய்.கட்சி தலைவர் நெல்லை
முபாரக்: பெரியாரை இழிவுபடுத்தும் நோக்கத்தோடும், வன்முறை சிந்தனையுடனும்
பெரியார் குறித்த அவதூறு தமிழக பாஜவின் டிவிட்டர் பக்கத்தில்
பதிவிடப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. தமிழக மக்கள்
பெரிதும் மதிக்கக்கூடிய மாபெரும் தலைவரை இழிவுபடுத்திய பாஜக மக்களிடம்
பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இத்தகைய வெறுப்பு அரசியல் செய்து வரும்
பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
No comments:
Post a Comment