Tuesday, August 6, 2019

ஜாலியன்வாலாபாக் படுகொலையும் பாஜகவும்

இன்றைய பாஜகவில் உள்ளவர்களின் முந்தைய வரலாறுகளைப் பார்த்தால் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் எந்த அளவு கொடுமைகள் செய்தார்கள், செய்தவர்களுடன் உறவாடினார்கள் என்பது பளிச் சென்று தெரியும்.
இன்றைய மற்றும் முந்தைய மோடி அரசில் உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்துறை அமைச்சராக இருந்த அரம்சிம்ரத் கவுர் பாதல் தாதாவின் தந்தை சுந்தர் சிங் மஞ்சுதா (17 பிப்ரவரி 1872 - 2 ஏப்ரல்  1941) இந்தியா முழுவதும் சுதந்திரப்போராட்டம் பெரிய அளவில் வெடித்துக் கிளம்பிய போது கல்சா நேசனலிஸ்ட் கட்சி என்ற ஒன்றை துவக்கி ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்.
முக்கியமாக இந்தியா முழுவதும் சுயாட்சி முழக்கங்கள் எழுந்ததன் காரணமாக இந்தியர்கள் அடங்கிய அரசுகள் மாகாணங்களில் அமைந்தன. ஆனால் சுந்தர் சிங் மஞ்சுதாவின் கல்சா கட்சி சார்பில் ஆங்கிலேயர்களிடம் இந்த முழக்கத்தை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இவரின் ஆங்கிலேய பாசம் எந்த அளவிற்கு அதிகமானது என்றால் 13.4.1919-அன்று நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை; அந்தப் படுகொலையை முன்னின்று நடத்திய ஜெனரல் மைக்கேல் ஓ டயரை அன்று மாலையே தனது அரண்மனைக்கு அழைத்து விருந்து கொடுத்தார். ஜாலியன்வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஜாலியன் வாலாபாக்கிற்கு அருகிலேயே கூடாரம் அமைத்து சிகிச்சை  பெற்றுக் கொண்டிருந்தனர். எங்கும் மரண ஓலம், அன்று இரவு லாகூரிலிருந்து சென்ற சிறப்பு மருத்துவர் சுமித் என்பவர் கூறுகிறார்: "நான் இரவு 2 மணிவரை சிகிச்சை அளிக்கும் போது 13 பேர் தொடர்ந்து மரணமடைந்தார்கள்" என்றார். அதாவது  பகல் 11 மணிக்கு நடந்த இந்த கோர நிகழ்வால் மறுநாள் வரை மரண ஓலம் அமிர்தசரஸ் முழுவதும் ஒலித்தது.  ஆனால் அந்த மண்ணின் மக்களுக்காகக் கட்சி நடத்திய இன்றைய மத்திய அமைச்சர் அரம்சிம்ரத் கவுரின் மூன்றாம் தலைமுறை தாத்தா கொலைகார ஜெனரல் டயருக்கு இரவு விருந்து அளித்துக் கொண்டிருந்தார். இவர்களது அரசியல் பின்னணி தெரிந்தும் இவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படுகிறது என்றால் அது பாஜகவால் மட்டுமே முடியும். காரணம், அவர்களின் பின்புலம் அப்படியாகப்பட்டது.
ஜெனரல் டயர் இங்கிலாந்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் "ஜாலியன்வாலாபாக் நிகழ்வு ஒன்றும் மிகக் கொடியது அல்ல, அங்குள்ள அரசியல் தலைவர்களே இதை நியாயப்படுத்தினார்கள்" என்று கூறினார். ஜெனரல் டயரை உத்தம் சிங் என்ற சீக்கிய இளைஞர் லண்டன் சாலையில் வைத்து அவரை சுட்டுக் கொலை செய்து நீதிமன்றத்தில் சரணடைந்து 1931-ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.
ஜெனரல் டயரைக் கொலை செய்த பிறகு அவரது பையில் இருந்த ஒரு பொட்டலத்தை எடுத்து பிணமாகக் கிடந்த டயரின் உடல் மீது தூவினார்.  அதே காலக்கட்டத்தில் அந்தமான் சிறையில் இருந்து கொண்டு "நான் இனிமேல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடமாட்டேன்" என்று 27 கடிதங் களுக்கு மேலாக ஆங்கிலேய அரசுக்கும், அய்ந்தாம் ஜார்ஜ் மன்னருக்கும் கடிதம் எழுதிக்கொண்டு இருந்தவர் இவர்களால் வீர் என்ற பொருத்தமில்லாத அடைமொழியுடன் அழைக்கப் படும் சாவர்க்கர் ஆவார்
நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்ஜித் சிங்மான் ஜாலியன்வாலாபாக் நூற்றாண்டு நினைவு நாள் குறித்த விவாதத்தின் போது இந்த விவரங்களை வெளிப்படுத்தினார். மற்றவர்களைப் பார்த்து தேசத்துரோகிகள் என்றும், வெள்ளைக்காரனுக்கு வெண் சாமரம் வீசியவர்கள் என்று  வெட்கம் கெட்ட முறையில் வாய் நீளம்காட்டும் சங்பரிவார்க் கூட்டத்தின் மோசடிகளுக்கு இது ஓர் எடுத்துக்காட்டே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...