Sunday, July 21, 2019

வெளிநாடுகளின் சிறைகளில் 8,189 இந்திய கைதிகள்

பல்வேறு வெளிநாடுகளின் சிறைகளில் இந்தியர்கள் 8,189 பேர் கைதிகளாக அடைக்கப்பட்டி ருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி. முரளிதரன் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த மே மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி, வெளிநாடுகளின் சிறைகளில் இந்தியர்கள் 8,189 பேர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருபவர்களும் இதில் அடங்குவர். அதிகப்பட்சமாக சவூதி அரேபியா நாட்டின் சிறைகளில் 1,811 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கடுத்து அய்க்கிய அரபு அமீரகம் நாட்டின் சிறைகளில் 1,392 பேரும், நேபாள நாட்டின் சிறைகளில் 1,160 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், பல்வேறு நாடுகளிலும் தனிநபர் ரகசியம் தொடர்பாக வலுவான சட்டங்கள் இருப்பதால், அந்நாடுகள் சிறைகளில் கைதி களாக இருப்போர் குறித்த விவரங்களை வெளியிடுவதில்லை.
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம், அந்நாட்டு அரசிடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் குறித்த தகவலை தெரியப்படுத்தி, அவர்களுக்கு பொது மன்னிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் விடுதலை பெற்று தரப்படுகிறது.  2016ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையிலும், இந்தியர்கள் 3,087 பேருக்கு பொது மன்னிப்பு அல்லது தண்டனை குறைப்பு ஆகியவற்றை வளைகுடா பிராந்தியத்தில் உள்ள நாடுகள் வழங்கியுள்ளன என்று அந்தப் பதிலில் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு ரூ.4.60 கோடி விடுவிப்பு
புதுடில்லி, ஜூலை 21  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு (சிஅய்சிடி) கடந்த நிதியாண்டில் ரூ.4.60 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் ஏ.விஜயகுமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிசங்க் மாநிலங்களவையில் வியாழக்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதில் விவரம்:  செம்மொழிகள் உள்பட அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பது அரசின் கொள்கையாகும். தமிழ் செம்மொழியை ஊக்குவிக்கவும், மேம்படுத்துவதற்காகவும் சென்னையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஅய்சிடி) எனும் பெயரில் தனியாக ஒரு நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனம் செம்மொழித் தமிழை ஊக்குவிப்பதற் காக தமிழ்ப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் இருக்கை அமைத்துள்ளது.  சிஅய்சிடி நிறுவனத்திற்கு கடந்த அய்ந்து ஆண்டுகளில் மூலதன மானியம் உள்பட மானியத் தொகை விடுவிக்கப்பட்ட விவரம் வருமாறு: 2014-_15-இல் ரூ.8 கோடி, 2015_-16-இல் ரூ.11.99 கோடி, 2016_-17-இல் ரூ.5 கோடி, 2017-_18-இல் ரூ.10.59 கோடி, 2018_-19-இல் ரூ.4.65 கோடி ஆகும். மேலும், சிஅய்சிடி நிறுவனம் சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு தொல்காப்பியர் விருது, குறள்பீடம் விருது, இளம் அறிஞர் விருது ஆகிய பெயர்களில் குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...