Saturday, April 6, 2019

நோட்டாவிற்கு வேண்டாமே ஓட்டு


சென்னை, ஏப்.6 கருத்து வேறுபாடு உடையவர்கள் தேச விரோதிகள் என பாஜக என்றுமே கூறியதில்லை  என பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.
இதில் உண்மை இல்லை என எல்லோருக்கும் தெரியும். இருப்பினும், இப்போது திடீரென அத்வானி  இப்படி சொல்வதன் அர்த்தம் என்ன?
கடந்த அய்ந்தாண்டு கால மோடியின் ஆட்சியில், பசுவதைத் தடுப்பு என்ற பெயரிலும், கலாச்சார காவலர்கள் என்ற பெயரிலும்  குண்டர்களின் கேட்பாரற்ற வன்முறைத் தாண்டவங்கள் குறிப்பாக வடநாட்டில் நடைபெற்றுள்ளது.  அரசியல் சாசன நிறுவனங்களான தேர்தல் ஆணை யம், சிபிஅய், ஆர்பிஅய், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றைக் கைப்பாவை களாக்கியுள்ளது.
சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்கள், சிந்தனை யாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், எதிர் குரல் எழுப்பும் ஜனநாயகவாதிகள் மீதான கொலை, வன்முறை நடந்துள்ளது. தபோல்கர், குல்பர்க்கி, பன்சாரே, கவுரி லங்கேஷ் போன்ற சிந்தனையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையை வளர்க்கவும்,  வறுமையும், வேலையின்மையும் மக்களை சூறை யாடும் பொருளாதாரக் கொள்கை என அனைத்து நிலைகளிலும் ஒரு வெறுப்பு அரசியல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கொடுமைகளையெல்லாம் கண்டித்து, இன்றைய தினம் பல்வேறு தரப்பட்ட பிரிவினர் மோடி அரசுக்கு எதிராக கண்டனக் குரலை மக்கள் மன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய மக்களவைத் தேர்தல், அரசியல் கட்சிகளுக்கிடையே நடக்கும் வழக்கமான தேர்தல் அல்ல. இந்தியக் குடியரசு, அதன் ஜனநாயகம், மதச்சார் பின்மை, சமுக நீதி, தனி மனித அடிப்படை உரிமைகள் தொடரப் போகின்றதா? அல்லது மடியப் போகின்றதா? என்ற கேள்வியை முன் வைத்து நடக்கும் அக்னிப் பரிட்சை என மேனாள் பல்கலைக் கழக துணை வேந்தர் வசுந்தரா தேவி சொல்கிறார்.
இதே போன்ற கருத்தை, 150 விஞ்ஞானிகள் மக்களை ஒருங்கிணைக்கவும், ஆய்வு மனப்பான்மை வளரவும் வாக் களியுங்கள் என வேண்டுகோள் விடுக் கின்றனர்.
பாஜகவின் வெறுப்பு அரசியலை முடிவுக்கு கொண்டு வருவோம் என ரொமிலா தாப்பர், அருந்ததி ராய் உள்ளிட்ட 200 எழுத்தாளர்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம். என 103 சினிமா இயக்குனர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் வெற்றி மாறன், பா.ரஞ்சித், கோபி நயினார் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
மோடி மீண்டும் பிரதமரானால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு மோடிதான் பிரதமர் என பாஜக தலைவர் அமித் ஷா சொல்வதும், இதுதான் கடைசித் தேர்தல் என்று இன்னொரு தலைவர் சொல்வதும் வெறும் வார்த்தைகளல்ல.
மோடி வெற்றி பெற்றால், சர்வாதிகாரத் துடன், மனு தர்மமும் கார்ப்பரேட் தர்மமும் இரண்டறக் கலந்த புதிய ஏற்பாடு உருவாகும். அரசமைப்புச் சட்டத்தை புறந்தள்ளி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி , ஒரே உணவு, ஒரே நிறம் (காவி) என்ற நிலைக்கு நாடு தள்ளப்படும். சாதிய, பெண்ணடிமை கொடுமையும், மாநில உரிமை தகர்க்கப்பட்டு, ஒற்றை அதிகாரம் என அனைத்தும் மத்தியில் குவிக்கப்படும்.
இந்த அபாயகரமான ஆட்சியை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவராமல் இருக்க உங்களால் முடிந்ததை செய் யுங்கள்; புத்திசாலித்தனமாக வாக்களி யுங்கள் என எழுத்தாளர்கள், கல்வியா ளர்கள், விஞ்ஞானிகள், திரைப்பட கலைஞர்கள் கவலையுடன் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
மக்களின் இந்த உணர்வுகளை புரிந்து கொண்டுதான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரிலேயே, மக்களை நிர்வாணப் படுத்துவது, எரிப்பது, அடித்துக் கொல்வது போன்ற வன்முறைக்கும் அதில் ஈடுபடும் கும்பலுக்கும் எதிராக கடுமையான சட்டம் நிறைவேற்றுவோம் என காங்கிரசு கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
இத்தகைய முக்கியமான சூழலில், இந்த தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நமது வாக்கினை நோட்டாவிற்கு போடுவது எப்படிப் புத்திசாலித்தனமாக இருக்கும்? அது ஆளும் தரப்பிற்கு நாம் மறைமுகமாக ஆதரவளிக்க பயன்படுமே தவிர வேறல்ல.
ஆகவே, நோட்டாவை புறந்தள்ளி, இந்த முக்கியமான தேர்தலில் யாரால் மாற்றத்தை  தர வாய்ப்பு உள்ளது என புரிந்து வாக்களிப்பதே நாட்டிற்கு நல்லது. இன்றைய சூழலில், மத்தியில் காங்கிரசு தலைமையிலான கூட்டணிக்கு இம்முறை வாக்களிப்பதே புத்திசாலித்தனமான முடி வாக இருக்கும்.
-கோ.கருணாநிதி

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...