6.05.2018 ஞாயிறன்று
தாராபுரம் - கணியூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப் பெற்ற திராவிடர்
மகளிர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்கள்
இந்தக் கால கட்டத்தில் அதி
முக்கியத்துவம் வாய்ந்தவை - கருத்தூன்றிக் கவனித்து செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டியவைகளே!
முதல்
தீர்மானம் அன்னை மணியம்மையார் அவர்களின்
நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும்
2019 மார்ச்சு 10 முதல் நடத்துவது குறித்ததாகும்.
தந்தை
பெரியார் என்ற சகாப்தம் - தமிழின
மக்களுக்குத் தாய்ப் போன்ற பாதுகாப்பு
அரண்! அவர் ஒரு சகாப்தம்
- கால கட்டம் - திருப்பம் என்றார் அறிஞர் அண்ணா
தந்தை
பெரியார் அவர்கள் மறைந்து 44 ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் சிந்தனைகளால், தேவைகளால் நாளும் நினைக்கப்படுகிறார் - தேவைப்படுகிறார் - ஏன்
விமர்சிக்கவும் படுகிறார். விமர்சனங்களை தந்தை பெரியார் போல்
இன்முகத்துடன் வரவேற்றவர்கள் யாருமிலர்.
பாராட்டும்போது
மகிழ்வதும் இல்லை என்பதால் தூற்றப்படும்
போது துன்பப்படுவதும் இல்லை என்ற இதயத்துக்குச்
சொந்தக்காரர். இன்றைக்குத் தமிழர்கள் பெற்றுள்ள ஒவ்வொரு உரிமையும், அனுபவிக்கும்
ஒவ்வொரு பொருளும், அவர் உழைப்பால் நம்
மக்களுக்குக் கிடைத்த அறுவடைச் செல்வம்,
அதனைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள்
அய்யாவைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது ஒரு சகாப்தம்
ஒரு திருப்பம் என்ற தீர்க்கமான கருத்தினைப்
பதிவு செய்திருக்கிறார். அவர் ஒரு தனி
மனிதராக இல்லவே இல்லை. நாட்டின்
பொதுவுடைமைச் சொத்தாகவே இருந்து வந்திருக்கிறார். அவர்தம்
உயர் சிந்தனையின் உச்ச - பழுத்த கனியான
கருத்து கடவுள் மறுப்பு தான்
- பொதுவுடைமையின் எல்லை நாத்திகம் தான்
என்பதே!
ஆனாலும்
பக்திச் சிறைக்குள் சின்னாபின்னமாகச் சிக்கிய குடிமகன்(ள்)கூட தந்தை பெரியார்தம்
ஒட்டு மொத்த சமுதாயத் திற்கான
தலைவர் என்று ஏற்றுக் கொள்ளுவதில்
எந்த விதமான சிந்தனைத் தடையும்
இல்லை. இல்லவே இல்லை. அவர்
சிலைமீது ஒரு தூசு விழுந்தாலும்
பொறாத மக்களாக எழுந்து வந்தனரே
- அவர்கள் எல்லாம் கடவுள் மறுப்பாளர்களா?
அதையும் தாண்டி ஒவ்வொரு தமிழ்
மகனின் உள்ளத்திலும், இல்லத்திலும் தந்தை பெரியாரின் தொண்டெனும்
சுவடு ஆழமாகவே பளிச் சென்று
பதிந்திருக்கிறது. உயர் எண்ணங்கள் மலரும்
சோலையாய், மண்டைச் சுரப்பை உலகு
தொழும் ஏற்றம்மிக்க மாமனிதராய் ஒளி வீசும் மாபெருஞ்
சக்தியாம் தந்தை பெரியாரை 95 ஆண்டு
காலம் வாழ வைத்தார் ஒருவர்
என்றால், அந்த ஒருவரும் இந்தச்
சமுதாயத்தின் மிகப் பெரிய நன்றியறிதலுக்கு
உரியவர் தானே!
ஆம்
அந்த ஒருவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார். அவர்கள்
தன்னை வருத்திக் கொண்டு, இன்னும் சொல்லப்
போனால் தனக்கென்று ஒரு தனி வாழ்வு
உண்டு என்று கிஞ்சிற்றும் நினைக்காமல்,
தன் வாழ்வு எல்லாம் அந்தச்
சகாப்தத் தலைவரின் ஆயுளை நீடிக்கச் செய்வது
மட்டுமே என்பதிலே கண்ணும் கருத்துமாக இருந்த
உன்னதச் செவிலித்தாய் அவர்.
"கொடுத்தால்
சாப்பிட்டு விடுவார், கூப்பிட்டால் வந்து விடுவார்!" என்பது
தந்தை பெரியார் அவர்களைப் பற்றிய அன்னையார் அவர்களின்
அனுபவ சொற்களாகும்.
கட்டுப்பாடற்ற
சிந்தனை, கட்டுப்பாடற்ற உழைப்பு கட்டுக்குள் தன்
வாழ்வை சிறைப்படுத்திக் கொள்ளாத பேராண்மையுடைய தலைவரை
அவர்தம் பொதுத் தொண்டின் ஒப்பிலா
உயர்வு - தேவை கருதி நீண்ட
காலம் வாழ்விக்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தார்.
அதற்காக தம் வாழ்க்கையையே கருப்பு
மெழுகுவர்த்தியாக்கிக் கொண்டார் என்ற பெருமைக்குரிய உன்னதத்
தாய் நமது அன்னையார் அவர்கள்.
அறிவுலக
ஆசான் அய்யாவின் நூற்றாண்டு விழாவை நடத்திப் பார்க்க
வேண்டும் என்று அளப்பரிய ஆசை
கொண்ட அன்னையார் அவர்கள், அதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே
தமது 59ஆம் வயதிலேயே மறைவுற்றார்
என்பது தமிழர்களுக்கு ஏற்பட்டு விட்ட கெட்ட வாய்ப்பே!
எளிமையின்
இலக்கணம் அவர் - ஆடம்பரம் என்றால்
என்ன என்ற "அகரத்தை"க்கூட அறியாதவர்! அதே
நேரத்தில் அய்யாவின் கொள்கையில் சிறு வயது முதற்கொண்டே
ஊட்டமும், ஊற்றமும், ஊக்கமும் கொண்டவர்.
அதனால்தான்
அய்யா அவர்களின் மறைவிற்குப் பிறகு அவர்கள் கண்ட
இயக்கத்தையும், அய்யா அவர்கள் தொலை
நோக்கோடு உருவாக்கிய அறக்கட்டளைகளையும் காத்துப் புரந்தந்த பலமான கரையல்லவா - கறையில்லா கடமையின் உருவகமல்லவா அவர்.
மருத்துவமனைகளில்
ஆதரவற்ற நிலையில் விட்டுச் செல் லப்பட்ட அந்த
மழலைகளை (யார் பெற்ற பிள்ளைகளோ!)
அணைத்து அரவணைத்து அவர்களுக்கு தங்கள் பெயர்களையே தலைப்பெழுத்தாக்கி
(ஈ.வெ.ரா.ம)
வளர்த்தெடுத்து, கல்வி ஒளி தந்து
ஆளாக்கிய அந்தக் கருணை உள்ளத்தை
என்னவென்று சொல்லுவது!
தந்தை
பெரியார் மறைந்த கால கட்டத்தில்,
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
"விடுதலை"யின் ஆசிரியர் கி.
வீரமணி மற்றும் கழக முக்கிய
பொறுப்பாளர்கள் எல்லாம் மிசா கைதிகளாக்கப்பட்டு
நெருக்கடி நிலை என்ற ஓர்
இருண்ட காலம் கவ்வியபோது, உடல்
நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், ஓயாதுழைத்து, திட்டமிட்டுக் கொடுக்கப்பட்ட தொல்லைகள், நெருக்கடிகள், சவால்களை எல்லாம் சந்தித்து, அய்யாவைக்
காத்தது போல அவர்கள் கண்ட
அந்த இயக் கத்தையும் கட்டிக்
காத்த அந்தக் கருணைக் கடலுக்கு,
கடமையின் வடிவத்திற்கு நூற்றாண்டு விழாவை உலகமே திரும்பிப்
பார்க்கும் வகையில் செய்து காட்ட
வேண்டாமா?
இராம்லீலாவுக்கு
எதிராக இராவண லீலாவை நடத்தி,
இந்தியத் துணைக் கண்டத்தையே குலுங்கச்
செய்து புதிய இனமானப் புறநானூற்றை
வடித்துக் காட்டிய வீராங்கனையல்லவா அவர்!
அத்தகு
வரலாற்று மாணிக்கப் பேழையின் நூற்றாண்டு விழாவை கொள்கைத் திருவிழாவாக,
ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஒளி
யேற்றும் கொள்கைப் பரப்பு வைபவமாக, மகளிர்
வரலாற்றுத் திசையில் புரட்சிக்கர மைல் கற்களை நிர்மாணிக்கும்
நிகரற்ற சீலமாகக் கொண்டாடிட வேண்டாமா?
திராவிடர்
கழகத் தலைமைச் செயற்குழு மற்றும்
கணியூர் மகளிர் மாநாட்டில் எடுக்கப்பட்ட
அந்தத் தீர்மானத்தைச் செயல்படுத்தத் திட்டமிடுவோம்.
அன்னையாரின்
நூற்றாண்டு விழாவைத் தொடங்கும்முன் கழகப் பாசறைக்கு மகளிர்
எண்ணிக்கையை வளர்த்து மாபெரும் சக்தியாக வார்த்தெடுப்போம்!
அன்னையாரின்
நூற்றாண்டையொட்டி நாம் நடத்தவிருக்கும் விழாவின்
பேரணியில் கருப்புடை மகளிர் பாசறையின் அணி
வகுப்பைக் கண்டு ஆரியத்தின் தலை
வெடித்துச் சிதற வேண்டும்.
எந்த
ஒரு கொள்கையும் மகளிரிடத்தில் முதலில் போய்ச் சேர
வேண்டும் என்று நினைத்தார் அன்னை
மணியம்மையார்; அவர்களின் நூற்றாண்டில் அதனைச் சாதித்து முடிப்பதுதான்
அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய
மாபெரும் மரியாதையாக, நினைவுச் சின்னமாக இருக்க முடியும்.
கணியூர்த்
தீர்மானத்தை காலத்தின் உச்சியில் கொண்டு போய் நிறுத்துவோம்
வாரீர் வாழ்க பெரியார்! வெல்க
அன்னையாரின் கனவுகள்
No comments:
Post a Comment