Friday, April 27, 2018

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கெட்டிப்படுத்தப்பட வேண்டும்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள் எனப்படும் பட்டியலினத்தவருக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத் தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.
இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த் தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடி யினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள்  தலைமையில் ஒரு கமிட்டியை நாடாளுமன்றம் அமைத்தது. அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989இல் தாழ்த் தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995இல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.
பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் இராணு வத்தினர் நடத்திய தாக்குதல், பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது. இந்தச் சட்டத்தைக் காவல்துறையினர் தங்களுக்கு எதிரானதாகவே நினைத்தனர். இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.
ஆனால் இந்தச் சட்டத்தை நீர்த்துப் போகும் வகையில் 29.3.2018அன்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பைக் கூறியது. அதில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் புகார்களில் அரசு அதிகாரிகளை உடனடியாக கைது செய்யக்கூடாது; அவர்களின் மேலதிகாரிகளின் அனுமதிபெற்று உரிய விசாரணைக்குப் பின்பே கைது செய்ய வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, வடமாநிலங்களில் முழு அடைப்புப் போராட்டம் மற்றும் வன்முறைகள் வெடித் தன. இதில் 15-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். குஜராத்தில் குதிரை சவாரி செய்ததற்காக  இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டத்திலுள்ள டிம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் ரத்தோட்  தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். இவர் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டுத் தன் தந்தைக்கு உதவியாக வயலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்குச் சொந்தமான வயலைப் பார்வை யிட குதிரையில் சென்றுவந்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்கள் குதிரையில் செல்வது பிடிக்காத அந்தப் பகுதியின் ஆதிக்கச் ஜாதி இளைஞர்கள், "இனிமேல் நீ குதிரையில் செல்லக் கூடாது; இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்" என்று மிரட்டியுள்ளனர்.
இதைப் பொருட்டாக எடுத்துக்கொள்ளாத பிரதீப் வழக்கம்போல் குதிரையில் சென்றுள்ளார். ஆனால் வயலுக்குச் சென்று வீடு திரும்பாத பிரதீப், கடந்த மார்ச் 31ஆம் தேதி பிணமாக மீட்கப்பட்டார். பிரதீப்பையும்,  குதிரையையும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு சிலர் கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து பிரதீப்பின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கொலைக்குக் காரணமானவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என பிரதீப்பின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வேறு ஜாதியைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் சொந்தமாகக் குதிரைகளை வாங்கவோ வளர்க்கவோ கூடாது என ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த மக்கள் தடை விதித்துள்ளதாகவும்,  பிரதீப் குதிரையில் சென்றதால் கொலை செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செத்துப் போன பசுவின் தோலை உரித்த தாழ்த்தப் பட்ட தோழர்கள் சங்பரிவார் கும்பலால் கொல்லப்பட்டனர் என்பதையும் மறந்து விடக் கூடாது.
இன்னும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை இருக்கிறது. தாழ்த்தப்பட்டவர் இறந்து போனால் பிணத்தைத் தூக்கிச் செல்லும்போதும், புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும் இடத்தில்கூட இன்னும் பிரச்சினை இருக்கிறது.
இந்த வெட்கம் கெட்ட நிலையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.
உச்சநீதிமன்றம் சொன்னாலும், தேவைப்பட்டால் சட்டத் திருத்தம் செய்தாவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நீர்த்துப் போகச் செய்யாமல் பார்த்துக் கொள்வது அவசியம். சுதந்திர நாடு என்று சொல்லிக் கொண்டு இன்னும் தீண்டாமைக்கு இடம் கொடுப்பது வெட்கக் கேடான தாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...