Friday, April 27, 2018

சென்னை சிறப்புக் கூட்டம் சொல்லும் செய்தி!

சென்னை பெரியார் திடலில் நேற்று (27.2.2018) மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் ‘‘நீட்: அடுத்த கட்ட நகர்வு'' எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் ஜஸ்டிஸ் டாக்டர் ஏ.கே.ராஜன், ஜஸ்டிஸ் அரிபரந்தாமன் ஆகியோர் அரிய கருத்துகளை எடுத்து வைத்தனர்.
‘நீட்' அதன் உருவாக்கம், நீதிமன்ற தீர்ப்புகள், மாநில சட்டமன்றத்தின் அதிகாரம், மத்திய அரசின் போக்கு இவற் றைக் குறித்து ஆழ்ந்த சட்ட அறிவோடு கருத்துகளை எடுத்து வைத்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக இரு மசோதாக் கள் நிறைவேற்றப்பட்டன (1.2.2017). ‘நீட்'டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோருவதுதான் அந்த மசோதாக்கள்.
ஓராண்டு ஓடிய பிறகும், அந்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராதது ஏன்? என்ற கேள்வி முக்கியமானதாக இருந்தது.
சட்டம் இயற்றுவதில் மூன்று நிலைப்பாடுகள் உண்டு.
1. மத்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டம்
2. மாநில அரசு இயற்றும் சட்டம்
3. இரண்டு அரசுக்கும் உரிய சட்டம்
மூன்றாவதைப் பொதுப் பட்டியல் என்று வழக்கத்தில் சொல்லப்படுவதே தவறு என்று சிறப்புக் கூட்டத்தில் கூறப்பட்டது. ஒத்திசைந்து நிறைவேற்றப்படும் சட்டம் என்றே இதற்குப் பொருள் என்று திராவிடர் கழகத் தலைவர் கூறி வருவதை ஜஸ்டிஸ் திரு.அரிபரந்தாமன் அவர்கள் வழி மொழிந்தார்.
இந்த நிலையில், சட்டாம் பிள்ளைத்தனமாக பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடந்து வருவது சட்ட விரோதமானது - நியாய விரோதமானது என்பதே இந்த சட்ட அறிஞர்களின் ஆணித்தரமான கருத்தாக இருந்தது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ‘நீட்டே' கூடாது என்பதுதான் நிலைப்பாடாகும். இந்தியாவிலேயே அரசு மருத் துவக் கல்லூரிகள் 24 இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவராகும் வாய்ப்புக்காக மாநில அரசின் நிதியில் நடத்தப்படுவதாகும்.
குரங்கு அப்பம் பிரித்த கதையாக இதில் மத்திய அரசு தலையிடுவதே தவறாகும் - அப்படித் தலையிடுவதற்கு
எந்தவிதமான நியாயமும் மத்திய அரசின் பக்கம் கிடையாது.
மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு ‘நீட்' இந்தியா முழுவதற்கும் பொது என்று சொல்லிவிட்டு, ‘எய்ம்ஸ்', ‘ஜிப்மர்' மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு ‘நீட்' தேர்வு எழுதத் தேவையில்லை என்று ஏற்பாடு செய்திருப்பது அசல் மனுதர்மம் அல்லவா?
இந்தப் பிரச்சினையில் நீதிமன்றங்கள் நடந்துகொள்ளும் போக்கு கவலையளிப்பதாகவும், சட்டத்திற்கு உட்படாமலும் இருப்பதை சிறப்புக் கூட்டத்தில் பேசிய மூவரும் ஒருமனதாக முன்மொழிந்து, வழிமொழிந்தனர்.
ஜஸ்டிஸ் டாக்டர் ஏ.கே.ராஜன் அவர்கள் அவ்வையாரின் ‘நல்வழி' நூலிலிருந்து ஒரு பாடலை எடுத்துக் காட்டினார்.
‘வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை'
நீதியை நடுநிலை பிறழ்ந்து  சென்றால், இவை எல் லாம் நடக்கும். இந்தப் பாடலை ஒவ்வொரு நீதிபதியும் படித் திருக்கவேண்டும். நினைவில் வைத்திருப்பதும் அவசியம் என்றார். (கருத்து எப்படியோ இருந்தாலும், தீர்ப்பு ஓர்ந்து போய் விடக்கூடாது என்பதுதான் முக்கியம்).
என்ன கொடுமையென்றால், மருத்துவ மேற்படிப்புக்குரிய (Post Graduate) 10 ஆயிரம் இடங்களில், மண்டல் குழுப் பரிந்துரையின்படி 27 சதவிகித அடிப்படையில், 2700 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்திருக்கவேண்டும்.
ஆனால், கிடைத்ததோ 165 இடங்கள்; டிப்ளமோ 18 இடங்கள்தான். இதில் தமிழ்நாட்டுக்கு ஓர் இடம்கூடக் கிடையாது என்பது கொடுமையிலும் கொடுமை!
சமூகநீதிக்கு வித்திட்ட மண்ணுக்கு இத்தகைய அநீதியா? அபராதமா? இந்த நிலையில்தான், தொடர்ந்து ‘நீட்'டை எதிர்த்துத் தமிழ்நாடு பல வடிவங்களில் போராட்டங்களையும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்குகள், மாநாடுகளையும் நடத்தி வந்துள்ளோம்.
அடுத்த கட்டமாக வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி இந்தி யாவின் தலைநகரமான டில்லியில் ஆர்ப்பாட்டம், கருத் தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதைத் திராவிடர் கழகத் தலைவர் நேற்றைய கூட்டத்தில் அறிவித்தபோது, பலத்த கரவொலியுடன் மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும், தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் டில்லியில் அணிவகுத்தால், வெற்றி நிச்சயம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உறுதி செய்யப்பட்ட சமூகநீதியை நிலை நாட்டும் அடிப்படைப் பிரச்சினையாகும்.
ஒன்றிடுவோம் - வென்றிடுவோம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...