Friday, April 27, 2018

சங்பரிவார்களின் தொடர் விடுதலைகள்

ராஜஸ்தான் மாநிலம் பிரபல சுபி (இசுலாமியர்) வழிபாட்டுத்தலத்தில் அக்டோபர் 11, 2007 இல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகி 17 பேர் காயமடைந்தனர். நோன்பு திறக்கும் நிகழ்ச்சியின் போது சுமார் 5,000 பக்தர்கள் கூடியிருந்தபோது திட்டமிட்டு இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தினார்கள்.
டில்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றங்களில் நடந்த விசாரணையின் போது 2010ஆம் ஆண்டு சுவாமி அசீ மானந்தா, முசுலிம்களின் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக தானும், பிறரும் சிலபல வழிபாட்டு இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்யப்போவதாக வாக்குமூலம் அளித்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார். இந்த விவகாரத்தில் அரசு தரப்பு மற்றும் பிரதிவாதி தரப்பு வாதங்கள், சாட்சியங்கள் ஏகப்பட்டது இருப்பதால் நீதிபதிகள் இருமுறை தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில்  மார்ச், 8 2017 அன்று அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்தா உட்பட குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் மீதும் குற்றச்சாட்டுகள் மீதான போதிய சான்றுகள் இல்லாததால் அனைவரையும்  விடுவித்து ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  மகாராட்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் பிணை வழங்கி  சிறப்பு என்அய்ஏ (தேசிய புலனாய்வு அமைப்பு) நீதிமன்றம்  உத்தர விட்டது. 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி, மகாராட்டிர மாநிலம் மாலேகானில் உள்ள நூராஜி மசூதி அருகில் குண்டுவெடித்து 7 பேர் பலியாகினர். இந்த வழக்கில் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், ராணுவ அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் பிரசாத் சிறீகாந்த் புரோகித், சுவாமி தயானந்தா பாண்டே, ராகேஷ் தவாடே, ரமேஷ் உபாத்யாய், ஷியாம்லால் ஷாகு, சிவநாராயணன் கல்சங்கரா, சுதாகர் சதுர்வேதி, சுதாகர் திவிவேதி, ஜெகதீஷ் மாத்ரே மற்றும் சமீர் குல்கர்னி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர்.  இந்த வழக்கில் பிரக்யா சிங் தாக்கூர், ராணுவ அதிகாரி புரோகித் ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரு குற்றவாளிகளான சுதாகர் சதுர்வேதி மற்றும் சுதாகர் துவேதி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த மும்பை சிறப்பு என்.அய்.ஏ. நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அய்தராபாத் மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு பற்றிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் மொத்தம் 8 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. 2 பேர் இதில் தலைமறைவாகிவிட்டனர். ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டார்.
இந்த மோசமான குண்டுவெடிப்பிற்குப் பின் இந்தியாவில் பல இசுலாமிய மசூதிகள் தாக்கப்பட்டன. தொடர்ச்சியாக மோசமான சம்பவங்கள் நடந்தன. இதில் எல்லாவற்றிலும் இந்துத்துவா அமைப்புகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டன.
அய்தராபாத்தில் இருக்கும் மெக்கா மசூதியில்தான் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. மே மாதம் 18ஆம் தேதி 2007இல் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அது வெள்ளிக் கிழமை என்பதால் அதிக அளவில் மக்கள் உள்ளே இருந்தனர். இதில் 9 பேர் மரணம் அடைந்தனர். 58 பேர் காயம் அடைந் தனர். அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அய்ந்து பேர் மரணம் அடைந்தனர்
இதன் முதற்கட்ட விசாரணை அய்தராபாத் காவல்துறை யினரால் செய்யப்பட்டது. அதன்பின் இந்த விசாரணை சிபிஅய் வசம் மாற்றப்பட்டது. கடைசியாக 2011இல் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங் கியது. இந்துத்துவா அமைப்புகளில் தொடர்புடைய பத்து பேர் இந்த வழக்கில் சந்தேகிக்கப்பட்டார்கள்.
கடைசியில் அந்த பத்து பேரில் அய்ந்து பேர் மீது சந்தேகம் வலுத்தது. தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, சுவாமி அசீமானந்தா, பாரத் மோகன்லால், ராஜேந்திர சவுத்திரி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சந்தீப், ராசேந்திரா ஆகியோர் தலைமறைவாயினர். சுனில் ஜோஷி என்ற குற்றஞ்சாட்டப்பட்ட நபர் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே கொலை செய்யப்பட்டு மரணம் அடைந்தார். இந்த வழக்கில் 226 பேர் சாட்சியம் வழங்கினார்கள். 411 ஆவணங்கள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சுவாமி அசீமா னந்தா, பாரத் மோகன்லால் பிணையில் வெளியேறினார்கள். மற்ற நபர்கள் அய்தராபாத் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள். 2017 மார்ச்சில் ராஜஸ்தான் நீதிமன்றம் தேவேந்திர குப்தா உள்ளிட்ட சில பேருக்கு மட்டும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
என்அய்ஏ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் இப்பொழுது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. வழக்கில் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட 5 பேரும் நிரபராதிகள் என்று கூறியுள்ளது. இவர்கள்தான் குற்றம் செய்தது என்பதற்கான ஆதாரம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று அய்தராபாத் என்அய்ஏ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
தீர்ப்பை வாசித்த நீதிபதி ரவீந்திர ரெட்டி, உரிய ஆதாரங்கள் இல்லாததால் இவர்கள் 5 பேரும் விடுவிக்கப்படுவதாக கூறி 5 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து  அந்த நீதிபதி ரவீந்திர ரெட்டி திடீரென ராஜினாமா செய்துள்ளது பலவித அய்யப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியிலோ பிஜேபி காவி ஆட்சி; பெருங் குற்றங்களி லிருந்து சங்பரிவார்க் கும்பல் தொடர்ந்து விடுதலை பெற்று வருவது கவனிக்கத்தக்கதாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...